பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டுத் திட்டம்
- பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டுட் திட்டம் (PMJJBY) இந்திய அரசு உறுதுணையாக இருக்கும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஆகும். இத்திட்டம் முதன்முதலில் 2015-ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் பட்ஜெட் உரையின் போது அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியால் பிப்ரவரி 2015-இல் அறிவிக்கப்பட்டது.
- பின்னர் பிரதமர் நரேந்திர மோதியால் 9 மே அன்று கொல்கத்தாவில் முறைப்படி துவக்கிவைக்கப் பட்டது. மே 2015 வரை இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 20% மட்டுமே ஏதோ ஒரு வகையான காப்பீட்டைக் கொண்டிருந்தனர். இத்திட்டம் அந்த சதவிகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு துவக்கப்பட்டது.
- பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டுட் திட்டம் - இல் வங்கிக் கணக்கு வைத்துள்ள, 18 முதல் 50 வரை நிரம்பியுள்ளவர்கள் சேரலாம். இதற்கு வருடாந்திர சந்தா ரூ.330. இந்தக் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப் படுகிறது. இந்தச் சந்தாக் கட்டணம் சந்தாதாரரின் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே முன்கொடுத்த ஒப்புகையின் மூலம் எடுத்துக் கொள்ளப்படும். எந்த ஒரு காரணத்தினாலும் சந்தாதாரர் இறக்க நேரிட்டால் அவரது வாரிசு (Nominee) க்கு ரூ. 2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
- இத்திட்டம் பிரதமரின் ஜன் தன் திட்டதுடன் இணைக்கப்படும். ஆரம்பத்தில் பெரும்பாலான ஜன் தன் வங்கிக் கணக்குகள் பணம் எதுவும் கணக்கில் வரவு வைக்கப்படாத கணக்குகளாக இருந்தன. இத்தகைய திட்டங்களை இணைப்பதன் மூலம் பூச்சியம் நிதி உள்ள கணக்குகளைக் குறைக்க அரசு இலக்கு வைத்துள்ளது.
- வங்கிக் கணக்குள்ள எவரும் இணைய வங்கிச் சேவையின் மூலம் அல்லது வங்கிக் கிளைக்கு நேரில் சென்று ஒரு படிவத்தை நிரப்புவதன் மூலம் வருடத்தின் எந்த காலத்திலும் இத்திட்டத்தில் சேரலாம்.