தேசிய உயர் கல்வித் திட்டம் (Rashtriya Uchchatar Shiksha Abhiyan)
தேசிய உயர் கல்வித் திட்டம் (Rashtriya Uchchatar Shiksha Abhiyan) என்பது இந்திய அரசின் கல்வித் துறை அமைச்சகத்தால் 2013-ல் தொடங்கப்பட்ட இந்தியாவில் உயர்கல்விக்கான முழுமையான வளர்ச்சித் திட்டமாகும். நாடு முழுவதிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு மூலோபாய நிதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் மத்திய அரசால் துவக்கப்பட்டது. மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய பகுதிகள் மூலம் மத்திய அமைச்சகத்தால் நிதி வழங்கப்பட்டு, மத்திய திட்ட மதிப்பீட்டு வாரியத்தின் ஒருங்கிணைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வமைப்பு கல்வி, நிர்வாக மற்றும் நிதி முன்னேற்றங்களைக் கண்காணிக்கும். மொத்தம் 316 மாநில பொது பல்கலைக்கழகங்கள் மற்றும் 13,024 கல்லூரிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும்.
தேசிய உயர் கல்வித் திட்டம் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் சமமான வளர்ச்சியை வழங்குவதையும், உயர்கல்வி அமைப்பில் உள்ள பலவீனங்களைச் சரிசெய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2017-ல் 12ஆவது திட்டத்தின் இறுதிக்குள் மொத்த உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 32% ஆக உயர்த்துவதே இதன் இலக்காகும்.