Central Government Schemes -இந்தியாவில் பெண்களுக்கான நலத்திட்டங்கள்

TNPSC  Payilagam
By -
0


இந்தியாவில் பெண்களுக்கான நலத்திட்டங்கள்
 

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 15 (3) - ஆனது பெண்களுக்கு சாதகமான பாகுபாடு காட்டுவதை அனுமதிக்கிறது. சம உரிமை அளிக்கும் சட்டத்தின் கீழ் வரும் இந்தப் பிரிவானது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கும் எந்தவொரு சிறப்புச் சலுகைகளையும் தடை செய்யாது என தெளிவுபடுத்தியுள்ளது

இந்தியாவில் குறைந்த வருமானம் பெறும் பெண்களுக்கு கடன் கிடைக்க 1993 ஆம் ஆண்டில் ராஷ்டிரிய மகிலா கோஷ் (RMK) (பெண்களுக்கான தேசிய கடன் நிதி) அமைக்கப்பட்டது.'தாய் மற்றும் குழந்தை கண்காணிப்பு அமைப்பு  (MCTS), இந்திரா காந்தி மத்ரித்வா சஹ்யோக் யோஜனா (IGMSY) (இந்திரா காந்தி மகப்பேறு உதவித் திட்டம்), நிபந்தனையோடு கூடிய மகப்பேறு நன்மை திட்டம் (CMP), அத்துடன் இளம்பருவ சிறுமிகளை மேம்படுத்துவதற்கான ராஜீவ் காந்தி திட்டம் (RGSEAG) ஆகியவை இந்திய அரசால் தொடங்கப்பட்ட சமீபத்திய திட்டங்களில் அடங்கும்

பிரதான் மந்திரி மத்ரித்வ வந்தனா யோஜனா (பிரதம மந்திரி பெண்கள் மகப்பேறுத் திட்டம்) (PMMVY) 

இந்திரா காந்தி தாய்மை நலத்திட்டம் (IGMSY), நிபந்தனையோடுகூடிய மகப்பேறு உதவி (CMB) என்பது தேசிய அரசாங்க நிதியுதவி திட்டமாகும். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு 19 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு முதல் இரண்டு பிரசவத்திற்கான நிதியுதவி செய்யும் திட்டமாகும். அக்டோபர் 2010 இல் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டம் பயனாளர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் உறுதிப்படுத்த உதவுவதற்காக பணத்தை வழங்குகிறது. மார்ச் 2013 நிலவரப்படி, நாடு முழுவதும் 53 மாவட்டங்களில் இந்த திட்டம் வழங்கப்படுகிறது

இளம்பெண்ணுரிமைக்கான ராஜீவ் காந்தி திட்டம் - சப்லா

இளம்பெண்ணுரிமைக்கான ராஜீவ் காந்தி திட்டம் - சப்லா (Sabla) என்பது 2012 இல் தொடங்கப்பட்ட திட்டமாகும்.. இது இளம் பெண்களுக்கான திட்டமாகும்.

இந்த திட்டம் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு தொகுப்பான பல நன்மைகளை வழங்குகிறது.

இந்த திட்டம் ஆரம்பத்தில் 200 மாவட்டங்களில் சோதனைகாக செயல்படுத்தப்பட்டது.

இதன் நோக்கம் இளம் பெண்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்த உதவவுதற்காகவும், கூடுதல் ஊட்டச்சத்து வழங்கவும், கல்வி, சுகாதாரக் கல்வி, வாழ்க்கைத் திறன் மேம்பாடு மற்றும் தொழில் பயிற்சி என பல்வேறு சேவைகளை வழங்குகிறது.

ராஷ்டிரிய மகிலா கோஷ்

ராஷ்டிரிய மகில கோஷ் திட்டம் (பெண்களுக்கான தேசிய கடனுதவி திட்டம்) 1993 ல் இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. குறைந்த வருமானம் உள்ள பெண்களுக்கு சிறு தொழில் செய்வதற்கான கடனுதவி செய்வது இதன் நோக்கம் ஆகும்

பிரியதர்ஷினி

ஏப்ரல் 2011 இல் தொடங்கப்பட்ட பிரியதர்ஷினி, ஏழு மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கு சுய உதவிக்குழுக்களை அணுகுவதற்கான ஒரு திட்டமாகும்

குழந்தைகளுக்கான தேசிய செயல் திட்டம்

குழந்தைகளுக்கான தேசிய செயல் திட்டம் 2017 இல் தொடங்கப்பட்டது, இந்த திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.

டிஜிட்டல் லாடோ (Digital Laado):

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce & Industry) (FICCI) மற்றும் கூகுள் டிஜிட்டல் அன்லாக்டு (Google Digital Unlocked)  இரண்டும் இணைந்து கணினி எண்மத் தளங்களில் பெண் குழந்தைகள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், வலுபெறவும் அதிகாரமளிப்பதற்கான முன்னெடுப்பை தொடங்கியது.

இந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, வீட்டு வேலைகளின் காரணமாக 65% பெண் குழந்தைகள் உயர்கல்வியை கைவிடுகிறார்கள்.

இந்த திட்டம் ஒரு நாடு தழுவிய முயற்சியாகும், இதில் ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கும் உலகளாவிய தளத்துடன் இணைவதற்கும் அவர்களின் திறமை மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் கற்பிக்கப்படுகிறது.

கணினி வலையத்தோடு இணைந்த நிலையிலும் இணைப்பற்ற நிலையிலும் உலகில் எங்கிருந்தும் இந்த நன்மைகளைப் பெற பெண் குழந்தைகள் தங்களை பதிவு செய்து கொள்ள முடியும்

கிஷோரி சக்தி யோஜனா

கிஷோரி சக்தி யோஜனா (kishori sakthi yojana) என்பது வளரிளம் பருவப் பெண்களுக்கான இந்திய அரசின் நலத்திட்டம் ஆகும். இது முன்னர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் வளரிளம் பருவப் பெண்களுக்கான தேசிய இயக்கம் என்ற பெயரில் அறியப்பட்டது.2006-07 ஆம் ஆண்டு முதல் இதற்கெனத் தனி நிதி ஒதுக்கப்பட்டது.

இத்திட்டம் 11 முதல் 18 வயதுடைய சிறுமியருக்கானது. இத்திட்டத்திற்கென்று புதிய உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட மாட்டாது. ஏற்கனவே இருக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட வசதிகளைக் கொண்டே இத்திட்டம் நிறைவேற்றப்படும். ஓர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு 1.1 இலட்ச ரூபாய் ஒதுக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் வளரிளம் பருவப் பெண்கள் தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களைச் சரியாகப் புரிந்து கொள்தல், சமூகத்தில் தங்கள் கடமையையும் அதை நிறைவேற்ற உதவும் ஆற்றல் மூலங்களை அறிதல், ஊட்டச்சத்துள்ள உணவு உண்ணல், திருமண வயதை அறிதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்

சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)

சுகன்ய சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியன்று துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும்.இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.

திட்டத்தின்படி 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம்.

ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 1000 இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும்வரை பணம் செலுத்த வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 150000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். ஆண்டுக்கு 7.6 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.இக்கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமானவரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

முதிர்வு தொகையை 21ஆம் ஆண்டு இறுதியில் பெறலாம். மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு பெண் குழந்தைக்கு வயது 10 அடையும் வரை அவர் பெயரில் கணக்கைத் தொடங்கலாம்.

ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.

பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், தங்கள் குழந்தையின் பெயரில், பிறப்புச் சான்றிதழுடன் கணக்கைத் தொடங்கலாம்.

ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ்கணக்கைத் தொடங்கலாம்.


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)