Tamil Nadu Government Schemes -ஸ்டார் 2.0 திட்டம்

TNPSC  Payilagam
By -
0


 

ஸ்டார் 2.0 திட்டம்

  • இத்திட்டத்தின் மூலம், பதிவுத்துறையில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தேவையான கணினி வசதிகளுடன் கூடிய மூன்று இணையதள தொடர்பு வசதிகள் (3 types of connectivity) கொடுக்கப்பட்டு, மாநில தகவல் தரவு மையத்துடனும் (State Data Centre), புனேயில் உள்ள பேரிடர் மீட்பு தரவு மையத்துடனும் (Disaster Recovery Centre at NIC, Pune) இணைக்கப்பட்டுள்ளது. 
  • பொதுமக்களே இணையவழி ஆவணங்களை உருவாக்கும் எளிய வழி முறை, பதிவுக்குதாக்கல் செய்ய வேண்டிய ஆதாரங்களை முன்பே அனுப்பி சரி பார்க்கும் முறை, இணையவழி முன் அனுமதி பெற்று நேரவிரயமின்றி சரியான நேரத்திற்கு சார்பதிவாளர் அலுவலகம் வரும் வசதி, பதிவுக்குப் பின் நிலம் மற்றும் கட்டிடத்தைப் பொறுத்து மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டிய ஆவணங்களின் நிலையை இணையவழி உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதி, ஒரே வருகையில் ஆவணங்களை பதிவு செய்து உடனுக்குடன் வழங்கும் வசதி ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
  • இத்திட்டத்தின் மூலம், ஆவணப்பதிவு தொடர்பான எல்லா சேவைகளும் கணினி வழியாக அவர்கள் இருப்பிடத்திலேயே வழங்கப்படுவதால், பொதுமக்கள் பதிவுத்துறை அலுவலகங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டியது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

முன்சரிபார்ப்பு முறை

  • சொத்தினை கிரையம் பெறும் போது சொத்தினை வாங்குபவர் முழு தொகையையும் விற்பவருக்கு செலுத்திவிட்டு ஆவணம் தயார் செய்து கையொப்பம் இட்டு பதிவுக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யும் போது சொத்து குறித்த உரிய ஆதாரங்கள் இல்லை என்று திருப்பி அனுப்பும் போது சொத்தினை வாங்கியவர் மிகவும் பாதிக்கப்படுகின்றார். மீண்டும் சொத்தினை விற்றவரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ஆவணப்பதிவிற்கு அழைத்து வருவது மிகவும் கடினமான செயலாக உள்ளது.
  • இந்நிலையை தவிர்க்க முன்சரிபார்ப்பு என்ற புதிய முறை நாட்டிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை மூலம் ஆவணப்பதிவிற்கு முன்பே வரைவு ஆவணம், சொத்து குறித்த உரிய ஆதாரங்களை இணையதளம் மூலம் அனுப்பினால் அது சார்பதிவாளரால் சரி பார்க்கப்பட்டு தேவையான முத்திரைத் தீர்வை மற்றம் பதிவுக் கட்டண விவரங்களுடன் மனுதாரருக்கு திருப்பி இணையவழி அனுப்பப்படும். உரிய ஆதாரங்கள் இல்லை எனில் அவ்விவரமும் இணையவழியே தெரிவிக்கப்படும். இவ்வாறு சரி பார்த்த பின் ஆவணம் பதிவு செய்யும் நாள் மற்றும் நேரத்தை முன்னரே இணையவழி பதிவு செய்து அந்த நாளில் ஆவணப் பதிவை மேற்கொள்ளலாம்.

ஆவணப்பதிவு தொடர்பான குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (email)

  • பொதுமக்களுக்கு சேவைகளின் நிலை குறித்த குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் உடனுக்குடன் அனுப்பும் வசதி செய்யப்பட்டுள்ளது. வரைவு ஆவணம் சார்பதிவாளரால் சரி பார்த்தவுடனும், பதிவுக்குப் பின் ஆவணம் திரும்ப அளிக்க தயாராக உள்ள போதும், ஆவணம் நிலுவை வைக்கப்படும் போது அதற்கான காரணமும், வில்லங்கச்சான்று மற்றும் சான்றிட்ட நகல் திரும்ப அளிக்க தயாராக உள்ள போதும், மதிப்பு குறைவு காரணத்திற்காக தனித்துணை ஆட்சியர்களுக்கு அனுப்பப்படும் போதும், இன்னபிற நிலைகளிலும் குறுஞ்செய்தி வழி பொதுமக்களுக்கு தகவல் அளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இணையவழி கட்டணமில்லா வில்லங்கச்சான்று பதிவிறக்கம் செய்தல்

  • பொதுமக்கள் இணைய வழி கட்டணமில்லா வில்லங்கச்சான்று 1987-ம் ஆண்டிலிருந்து பதிவிறக்கம் செய்யும் வசதி 11.06.2014-ல் துவக்கப்பட்டு, பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இத்திட்டத்தின் மூலம் 3 கோடியே 66 லட்சம் வில்லங்கச்சான்றுகள் இணைய வழி பதிவிறக்கம் செய்யப்படுள்ளன. தற்போது மேலும் 12 ஆண்டுகளுக்கான தரவுகள் கணினிமயமாக்கப்பட்டு 1975 முதல் நாளது வரை பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உடனடி பட்டாமாறுதலுக்காக வருவாய்த்துறை தரவுடன் இணைப்பு

  • தற்போது நடைமுறையில் உள்ள பட்டாமாறுதல் படிவம் (படிவம் 6) அனுப்பும் வசதி கணினி மயமாக்கப்பட்டு ஆவணப்பதிவுக்குப் பின் பட்டாமாறுதல் விவரங்களை இணையவழி வருவாய்த்துறைக்கு உடனுக்குடன் அனுப்பி அங்கிருந்து இணையவழி பெற்ற ஒப்புகைசீட்டு எண்ணுடன் பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் ஒப்புகை சீட்டு வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆவணப்பதிவு முடிந்தவுடன் உடனே வருவாய்த்துறைக்கு பட்டா மாறுதல் விவரங்கள் அனுப்பப்பட்டு அதற்கு ஆதரவாக குறுஞ்செய்தி வழி விண்ணப்ப எண் விவரம் ஆவணதாரருக்கு அனுப்பப்படும்.
  • வருவாய்த்துறையால் புல எண் முழுவதும் பரிமாற்றம் செய்யப்பட்டால், இரு வாரங்களுக்குள்ளும், உட்பிரிவு செய்யப்பட வேண்டிய நிலை இருப்பின் நான்கு வாரங்களுக்குள் உட்பிரிவு செய்யப்பட்டு பட்டா மாறுதல் செய்யப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
  • இவ்வசதி தற்போது கிராம புல எண்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவை விரைவில் நத்தம் மற்றும் நகரபுல எண்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

இணையவழி சான்றொப்பமிட்ட (Digitally Signed) வில்லங்கச்சான்று மற்றும் ஆவண நகல் பெறுதல்

  • தற்போது நடைமுறையில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று வில்லங்கச்சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல் பெறும் வசதியுடன் இணையதளம் வழி விண்ணப்பித்து அதற்கான கட்டணத்தை இணையதளம் வழி செலுத்தி சம்மந்தப்பட்ட சார்பதிவாளரின் இலக்கச் சான்றொப்பமிட்ட வில்லங்கச்சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகலை விண்ணப்பதாரரின் மின்னஞ்சலுக்கு அனுப்பும் புதிய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியால் வில்லங்கச்சான்று மற்றும் சான்றொப்பமிட்ட ஆவண நகல் பெற சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

மோசடிப் பதிவுகளை தடுத்தல்

  • ஆவணப்பதிவின் போது மோசடிப் பத்திரப்பதிவுகளை குறைக்கும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்தவுடன் சொத்தின் உரிமையாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும், தற்போதைய ஆவணப்பதிவின் போது முன் ஆவணப்பதிவின் போது பெறப்பட்ட சொத்தின் உரிமையாளரின் கைரேகையை ஒப்பீடு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் ஆள்மாறாட்டங்கள் பெரும் அளவில் தவிர்க்கப்படும்.

ஒருங்கிணைந்து இணையவழி கட்டணங்களை செலுத்துதல்

  • இணைய வழி மற்றும் நேரடியாகவும் (Online and online linked offline) பதிவுத்துறைக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தும் முறை மென்பொருளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு தற்போதுள்ள 6 வங்கிகளுடன் மேலும் 5 வங்கிகளை சேர்த்து திட்டமானது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் பாரத மாநில வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி, பரோடா வங்கி, அலகாபாத் வங்கி, ஐடிபிஐ வங்கி, சிண்டிகேட் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யூனியன் வங்கி, விஜயா வங்கி ஆகிய 11 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தற்போது அனைத்து கட்டணங்களையும் செலுத்தலாம்.

இது மட்டுமின்றி, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 102 5174-ல் சேவை மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் இச்சேவைகள் குறித்த விவரங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)