தமிழ்நாடு அரசின் வீட்டுத் திட்டங்கள்
நோக்கம்
- நாட்டின் வீட்டுப் பற்றாக்குறையை போக்கும் விதமாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தான் மத்திய அரசு, அனைவருக்கும் வீடு, ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் நகரங்கள் என மூன்று திட்டங்களுக்கான வெவ்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து இந்த வாரம் குறைந்த வருவாய் ஈட்டும் மக்களுக்கான வீட்டுத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது.
அம்பத்தூர் வீட்டுத் திட்டம்
- குறைந்த வருவாய் ஈட்டுவோருக்காக சென்னை அம்பத்தூரில் 2,300 வீடுகள் கொண்ட திட்டம் உருவாக்கப்படவுள்ளது. வீட்டின் விலை 20 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு மொத்தம் ரூ. 380 கோடி செலவிடப்படவுள்ளது. இந்தத் திட்டம் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்படும்.
அரசு அலுவலர்களுக்கு வீடு
- அரசு அலுவலர்களுக்கென தனியான வீட்டுத் திட்டமும் இத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சி’,‘டி’ பிரிவு அரசு அலுவலர்களுக்கு சென்னையில் வீடு கட்டித் தரப்படவுள்ளது. இதற்காக பாடிகுப்பம், வில்லிவாக்கம் பகுதிகளில் இடம் ஒதுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடங்களில் 500 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. இந்தத் திட்டத்தையும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் செயல்படுத்தும். இதில் உருவாக்கப்பட உள்ள வீடுகள் இரண்டு படுக்கை அறை வசதிகள் கொண்ட வீடுகளாகும். ரூ. 225 கோடி செலவில் இந்தத் திட்டம் உருவாக்கப்படவுள்ளது.
மக்களுக்கான வீடுகள்
- அனைத்துத் தரப்பு மக்களுக்கான வீட்டு வசதித் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய வீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன. இந்தத் திட்டங்களுக்கு ரூ. 674 கோடியே 96 லட்சம் செலவிடப்படவுள்ளது.
- தொலைநோக்குத் திட்டம் 2023-ன்படி சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் நகராட்சிகளிலும் இந்த நடப்பு நிதியாண்டில் மாநில அரசின் நிதி உதவியுடன் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தோடு நலிவுற்ற பிரிவினருக்கான வீடுகள் கட்டப்படவுள்ளன. இந்தத் திட்டம் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்படவுள்ளன. இத்திட்டம் உத்தேசமாக ரூ. 457 கோடி 50 லட்சம் செலவில் உருவாக்கப்படவுள்ளன.