சுதந்திர தின விழாவில் தமிழக அரசு விருதுகள்: 2023

TNPSC PAYILAGAM
By -
0


சுதந்திர தின விழாவில் தமிழக அரசு விருதுகள்: 2023

15.08.2023 சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில், தமிழக அரசு சார்பில் பல விருதுகள் வழங்கப்பட்டன.

அரசு பள்ளி மாணவர்களுக்கான, காலை உணவு திட்டத்தை நிர்வகிப்பதற்கும், கண்காணிப்பதற்கும், 'மொபைல் ஆப்' உருவாக்கி, உணவு தயாரிப்பு மற்றும் வினியோகத்தை, மின்னணு தகவல் பலகை வழியே கண்காணித்து மேம்படுத்தியதை பாராட்டி, இந்த விருதை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, இணை தலைமை நிர்வாக அதிகாரி ரமண சரஸ்வதி பெற்றார்.

ஆதரவற்ற நோயாளிகளுக்கு, சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில், சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த, சென்னை மருத்துவக் கல்லுாரி முதல்வர் தேரணி ராஜன்; கோவை மாவட்டத்தில், அரசு பள்ளி குழந்தைகளுக்கு, பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்திய, கோவை புறநகர் போலீஸ் எஸ்.பி., பத்ரிநாராயணன் ஆகியோருக்கும், முதல்வரின் நல் ஆளுமை விருதுகள் கொடுக்கப்பட்டன.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ்செல்விக்கு, தமிழக அரசின் துணிவு மற்றும் சாகச செயலுக்கான 'கல்பனா சாவ்லா விருது' வழங்கப்பட்டது.இவர் ஜப்பானிய மொழி பயிற்றுவிப்பவராக பணிபுரிந்து வருகிறார். நேபாள நாட்டில் அமைந்துள்ள 'லொபுட்சே' சிகரத்தை, கடந்த ஏப்.,19ல் ஏறியுள்ளார். இமாச்சலபிரதேசம் லடாக்கில் உள்ள, 'கங்கியாட்சே' மலையை, 2022 ஏப்., 16ல் ஏறினார்.இவரது துணிவான செயலை பாராட்டி, இந்த ஆண்டுக்கான, கல்பனா சாவ்லா விருது இவருக்கு வழங்கப்பட்டது. விருதுடன், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

அப்துல் கலாம் விருது : வேலுார் தொழில்நுட்ப பல்கலையில், கணினித் துறையில் பேராசிரியராக பணிபுரியும் வசந்தா கந்த சாமிக்கு, அப்துல் கலாம் விருதை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.இவர் ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சி பணியில், 50 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பல்வேறு துறைகளில், அவரது ஆய்வுகள் விரிவடைந்துள்ளன. 136 புத்தகங்களை வெளியிட்டதுடன், கருத்தரங்குகளில், 724 ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அணு அறிவியல் ஆராய்ச்சி வாரியம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் போன்ற பல ஆராய்ச்சி திட்டங்களில், பணியாற்றி உள்ளார்.ஐ.ஐ.டி.,களில் இட ஒதுக்கீட்டு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என போராடியதற்காக, அவருக்கு தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது, 2006ம் ஆண்டு வழங்கப்பட்டது.இந்த ஆண்டு, டாக்டர் ஆ.பெ.ஜெ., அப்துல் கலாம் விருதும் பெற்றார். விருதுடன், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

சிறந்த மருத்துவருக்கான விருது : சென்னையை சேர்ந்த ஜெயகுமாருக்கு வழங்கப்பட்டது.இவர், 30 ஆண்டுகளாக, சென்னையில் உள்ள அரசு மறுவாழ்வு மருத்துவமனையில், இயக்குனர் மற்றும் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார்.இந்நிறுவனத்தில், 3,000க்கும் மேற்பட்ட, கை கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை, மதிப்பீடு செய்தல், செயற்கை உடல் உறுப்புகளை பொருத்துதல், அறுவை சிகிச்சை செய்தல், போன்ற பணிகளை செய்துள்ளார்.போலியோ நோயால் பாதிக்கப்பட்ட, 622 பேரையும், மூளை முடக்குவாதத்தால் பாதிப்படைந்த, 51 பேரையும், அறுவை சிகிச்சை வழியே, மறுவாழ்வு பெறச் செய்துஉள்ளார்.

சிறந்த சமூக பணியாளர் விருது  : கன்னியாகுமரி மாவட்டம், சாந்தி நிலையத்திற்கு, சிறந்த நிறுவனத்துக்கான விருது; கோவை மாவட்டம், மயிலேரிபாளையம் 'உதவும் கரங்கள்' நிறுவனத்தை சேர்ந்த ரத்தன் வித்யாசாகருக்கு, சிறந்த சமூக பணியாளர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த தனியார் நிறுவனத்துக்கான விருது : மதுரை டெடி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு அளித்த, சிறந்த தனியார் நிறுவனத்துக்கான விருது; மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக செயல்படும், சிறந்த மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கான விருது, ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த சமூக சேவகர் விருது : கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, ஸ்டான்லி பீட்டருக்கு வழங்கப்பட்டது.இவர் கடந்த, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, பீட்டர் அமைதி நிறுவனம் வழியே, சமூக சேவை செய்து வருகிறார். பெண்களுக்கும், சமுதாயத்திற்கும் தொண்டாற்றி வருவதை் பாராட்டி, விருது வழங்கப்பட்டது.

சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும், 'கிராமத்தின் ஒளி' என்ற தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. மகளிர் முன்னேற்றத்துக்காக, 2013ம் ஆண்டு சின்ன சேலத்தில் துவக்கப்பட்ட இந்நிறுவனம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை, சமூகத்தில், பொருளாதாரத்தில், உயர்வடைய செய்துள்ளது.

முதல்வரின் மாநில இளைஞர் விருதுகள் : ஏழு பேருக்கு வழங்கப்பட்டன: சமூக சேவையில் இளைஞர்கள் ஈடுபடுவதை ஊக்கப்படுத்த, சுதந்திர தின விழாவில், 15 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, முதல்வரின் 'மாநில இளைஞர் விருது' வழங்கப்படுகிறது. விருதாளர்களுக்கு, பாராட்டு சான்று, பதக்கம், 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படும். நேற்று சுதந்திர தின விழாவில், ஏழு பேருக்கு, மாநில இளைஞர் விருதை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

விருது பெற்றவர்கள் விபரம்:
  1. நீலகிரி மாவட்டம், தஸ்தகீர்: அப்துல் கலாம் தொண்டு நிறுவனம் வழியே செய்த சேவைகளுக்காக, விருது வழங்கப்பட்டுள்ளது
  2. திருச்சி மாவட்டம், தினேஷ்குமார்: சிறார் வன்கொடுமை மற்றும் அதை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்
  3. ராணிப்பேட்டை மாவட்டம், கோபி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை வைத்து, ரத்ததானம் செய்துள்ளார். பள்ளி, கல்லுாரிகளில் 20,000 மரக்கன்றுகள் நட வைத்து, உலக சாதனை படைக்க வழிவகுத்தார்
  4. செங்கல்பட்டு மாவட்டம், ராஜசேகர்: மலையேற்றத்தில் இவரது சாதனைகளைப் பாராட்டி, விருது வழங்கப்பட்டது. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உள்ளார்
  5. சென்னை, விஜயலட்சுமி: இவர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், ரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்துள்ளார். பேரிடர் நிவாரணப்பணிகளில் பங்கேற்றுள்ளார்
  6. மதுரை மாவட்டம், சந்திரலேகா: கைவிடப்பட்ட குழந்தைகளை மீட்டு, அவர்களை தத்தெடுப்பதற்கான முன்னெடுப்புகளை எடுத்துள்ளார்
  7. காஞ்சிபுரம் மாவட்டம், கவிதா தாந்தோனி: இவர் ஸ்ரீபெரும்புதுாரில் 300க்கும் மேற்பட்ட, இருளர் பழங்குடியினருக்கு உதவி உள்ளார். முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டங்களில், முக்கியப் பணியாற்றி உள்ளார்.
காவல் பதக்கம்  : போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் கடத்தல் தடுப்பில் சிறப்பாக பணியாற்றிய, காவல் துறையில் ஆறு பேருக்கு, நேற்று சுதந்திர தின விழாவில் காவல் பதக்கம் வழங்கப்பட்டது.

வடசென்னை சட்டம் - ஒழுங்கு கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க், கோவை புறநகர் எஸ்.பி., பத்ரிநாராயணன், தேனி எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ், சேலம் ரயில்வே டி.எஸ்.பி., குணசேகரன், நாமக்கல் போலீஸ் எஸ்.ஐ., முருகன், முதல் நிலை காவலர் குமார் ஆகியோருக்கு, காவல் பதக்கத்தை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள்:

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு, சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை மாநகராட்சியில், சிறந்த மண்டலங்களாக, முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட, 9வது மண்டலம்; இரண்டாம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட, 5ம் மண்டலத்துக்கு முறையே, 30 மற்றும் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சிறந்த மாநகராட்சிகளாக, திருச்சி, தாம்பரம் மாநகராட்சிகள் முதல் இரண்டு இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டன. அவற்றின் மேயர் மற்றும் கமிஷனரிடம், முறையே, 50, 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் வழங்கினார்.

சிறந்த நகராட்சிகளாக, முதல் மூன்று இடங்களுக்கு, ராமேஸ்வரம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு முறையே, 30, 20,10 லட்சம் ரூபாய் பரிசு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.

சிறந்த பேரூராட்சிகளாக, முதல் மூன்று இடங்களுக்கு, விக்கிரவாண்டி, ஆலங்குடி, வீரக்கால்புதுார் பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு முறையே, 20, 10, 6 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது..

SOURCE : Dinamani
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)