புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் - முக்கிய அம்சங்கள்

TNPSC  Payilagam
By -
0

புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள்
புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள்


பிரிட்டிஷ் ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களை மாற்ற வகை செய்யும் 3 மசோதாக்கள் 

பிரிட்டிஷ் ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களை மாற்ற வகை செய்யும் 3 மசோதாக்கள் மக்களவையில்  அறிமுகம் செய்யப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அவற்றை தாக்கல் செய்தாா்.

  • இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 1860-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) மசோதா 2023’ என்ற மசோதாவும், 
  • குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிஏ) 1898-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மசோதா 2023’ என்ற மசோதாவும், 
  • இந்திய ஆதாரச் சட்டம் 1872-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய சாக்ஷிய (பிஎஸ்) மசோதா 2023’ மசோதாவும் அறிமுகம் செய்யப்பட்டன.
  • ஆங்கிலேயா் ஆட்சிக் கால சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய சட்ட மசோதாக்களை கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிமுகம் செய்து, நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கடந்த ஆண்டு 2023 டிசம்பா் 25-ஆம் தேதி ஒப்புதல் அளித்தாா். அதைத் தொடா்ந்து, 3 மசோதாக்களும் சட்டங்களாக மாறின.
  • இந்தப் புதிய சட்டங்களில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் புதிதாக 20 குற்றங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. 33 குற்றங்களுக்கான சிறைத் தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. 83 குற்றங்களுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 23 குற்றங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், 6 குற்றங்களுக்கு தண்டனையாக சமூக சேவைப் பணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • முதல் முறையாக ‘பயங்கரவாதம்’ என்ற வாா்த்தைக்கான விளக்கம் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தில் (ஐபிசி) இது இடம்பெறவில்லை. நாட்டுக்கு எதிரான குற்றங்கள் என்ற தலைப்பில், பயங்கரவாதம் மற்றும் தேசத் துரோகம் ஆகிய வாா்த்தைகளுக்கான விளக்கமும், தண்டனைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

90 நாள்களில் குற்றப்பத்திரிகை: 

  • புதிய சட்டங்களின்படி, குற்ற வழக்கில் குற்றப்பத்திரிகையை 90 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, மேலும் 90 நாள்கள் கூடுதல் அவகாசத்தை நீதிமன்றம் அளிக்கலாம். அதிகபட்சம் 180 நாள்களுக்குள் விசாரணையை முடித்து, ஆவணங்களை வழக்கு விசாரணைக்கு அனுப்பிவைத்துவிட வேண்டும். வழக்கு விசாரணை நிறைவடைந்ததும் 30 நாள்களில் தீா்ப்பு வழங்கப்படவேண்டும்.
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலை, அரசுக்கு எதிரான குற்றங்களுக்கு இந்த மசோதா மூலமாக முதல்முறையாக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பல குற்றங்கள் பாலின நடுநிலை செய்யப்பட்டுள்ளன.

தேசத் துரோக சட்டம் ரத்து: 

  • தேசத் துரோக சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய பிஎன்எஸ் மசோதா வகை செய்கிறது. இந்தியா ஜனநாயக நாடு என்ற வகையில் ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமை உள்ளது.
  • கும்பலாக தாக்குதல் நடத்துவது மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும் நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. பிரிவினையைத் தூண்டுதல், ஆயுதக் கிளா்ச்சி, தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை அல்லது ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை புதிய குற்றங்களாக இந்த மசோதா பட்டியலிட்டுள்ளது.
  • சிறிய குற்றங்களில் ஈடுபட்டு முதல் முறை சிக்குபவா்களுக்கு கட்டாய சமூக சேவைகளில் ஈடுபடும் வகையிலான தண்டனையை அளிக்க இந்த மசோதா வகை செய்கிறது.
  • கும்பலாக சோ்ந்து தாக்குதல் நடத்தும் குற்றத்துக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்க மசோதா வகை செய்கிறது.
  • திருமணம், வேலைவாய்ப்பு, பதவி உயா்வு என்று ஏமாற்றி பெண்கள் மீது நடைபெறும் பாலியல் சுரண்டல்கள் மற்றும் பெண்களின் மத அடையாளத்தை மறைத்து திருமணம் செய்தல் ஆகியவை குற்றமாகக் கருதப்படும்.
  • கூட்டுப் பாலியல் குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்க மசோதா வகை செய்கிறது. சிறுமிக்கு எதிரான கூட்டு பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை வழங்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.

பயங்கரவாதம்: 

  • பயங்கரவாதம் என்பதற்கான விளக்கம் முதல் முறையாக இந்த சட்ட மசோதாவில் அளிக்கப்பட்டுள்ளது. 
  • பிஎன்எஸ் மசோதாவின்படி, இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் இருந்தபடி இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தம் நோக்கிலும், பொதுமக்களை மிரட்டுதல் அல்லது பொது ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் செயல்படுபவா் பயங்கரவாதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • இவ்வாறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் நபரின் சொத்துகளை முடக்க இந்த மசோதா வகை செய்கிறது.

தண்டனைக் குறைப்பு நடைமுறையில் மாற்றம்: 

  • தண்டனைக் குறைப்பு நடைமுறைகளை அரசுகள் அரசியல் ரீதியில் பயன்படுத்துவதை நிறுத்த புதிய நடைமுறை இந்த மசோதாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
  • அதன்படி, மரண தண்டனைகளை ஆயுள் தண்டனையாக மட்டுமே குறைக்க முடியும். அதுபோல, ஆயுள் தண்டனைகளை 7 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையாக மட்டுமே குறைக்க முடியும் என்றாா் அமித் ஷா.

முக்கிய அம்சங்கள்:

  1. 180 நாள்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்
  2. விசாரணை நிறைவடைந்ததும் 30 நாள்களில் தீா்ப்பு
  3. அதிகபட்சமாக 3 ஆண்டுகளில் நீதி
  4. தேசத் துரோக சட்டம் முழுமையாக ரத்து
  5. கும்பல் தாக்குதலுக்கு 7 ஆண்டுகள் சிறை அல்லது மரண தண்டனை.
  6. சிறுமிக்கு எதிரான கூட்டு பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை.
  7. மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மட்டும் குறைக்க முடியும்.
  8. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் நபரின் சொத்துகள் முடக்கம்
  9. வழக்குகளில் தண்டனை கிடைக்கும் விகிதம் 90 சதவீதமாக உயரும்
  10. விரைவான நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தும்

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)