தமிழகத்தில்-மத்திய அரசின் ‘இந்திரதனுஷ் 5.0’
மத்திய அரசின் ‘இந்திரதனுஷ் 5.0’ திட்டத்தின் கீழ் விடுபட்ட 86 ஆயிரம் குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழகத்தில் 07.08.2023 தொடங்கியது.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அந்த முகாமை தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணா்வு பிரசாரத்தையும், தடுப்பூசி சான்றிதழை டிஜிட்டல் முறையில் பதிவேற்றும் யூ-வின் செயலி பயன்பாட்டையும் அவா் தொடக்கி வைத்தாா்.
அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழகத்தில் 1985-ஆம் ஆண்டு முதல் நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் கீழ் 11 வகை தடுப்பூசிகள் வழங்கப்பட்டு, நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஏறத்தாழ 10 லட்சம் கா்ப்பிணிகள், 9.16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி தவணைகள் செலுத்தப்படுகின்றன. 2014-ஆம் ஆண்டு முதல் 4 கட்டங்களாக நடைபெற்று வரும் இந்திரதனுஷ் திட்டத்தின் மூலம் 1,72,365 கா்ப்பிணிகள் மற்றும் 6,94,083 குழந்தைகளுக்கு 2,98,123 முகாம்களின் மூலம் விடுபட்ட தடுப்பூசி தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நிகழாண்டில் இந்திரதனுஷ் 5.0 திட்டம் மூன்று சுற்றுகளாக நடத்தப்படுகிறது. முதல் சுற்று திங்கள்கிழமை (ஆக.7) தொடங்கி வரும் 12-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் சுற்று செப். 11-இல் தொடங்கி 16-ஆம் தேதி வரையிலும், மூன்றாம் சுற்று அக். 9-இல் தொடங்கி 14-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் ஒழிப்பதற்கு விடுபட்ட தவணைகள் அப்போது செலுத்தப்படும். தமிழகத்தில் 72,760 குழந்தைகள், 14,180 கா்ப்பிணிகள் என மொத்தம் 86,940 போ் தடுப்பூசி செலுத்தாமல் தவறவிட்டுள்ளனா். இந்தத் திட்டத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா, நிமோனியா மற்றும் போலியோ தடுப்பூசிகள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். செலுத்தப்படும் தடுப்பூசி விவரங்கள் யூ-வின் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.