மரபுக்கவிதை -தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன்
TNPSC NOTES VAANITHASAN TAMIL PDF: வாழ்வும் பணியும்:கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் ‘அரங்கசாமி என்ற எத்திராசலு’ இவர்தம் புனைப்பெயர் ‘ரமி’ என்பதாகும். புதுச்சேரி மாநிலத்திலுள்ள வில்லியனூரைச் சேர்ந்தவர். இவர்தம் பெற்றோர் அரங்க திருக்காமு, துளசியம்மாள். இவரின் காலம் 22.7.1915 முதல் 7.8.1974.
வாணிதாசனின் இயற்பெயர் ரங்கசாமி. இது வாணிதாசனின் தந்தை திருக்காமுவின் தந்தை பெயர். வாணிதாசனின் பாட்டனார் பிரெஞ்சு அரசில் மேயராக இருந்தவர். செல்வமும் செல்வாக்கும் மிகுந்த குடும்பம் வாணிதாசனுடையது. ரங்கசாமி என்பது பாட்டனாரின் பெயராக இருந்ததால், குடும்பத்தில் உள்ளவர்கள் ரங்கசாமி என்று பெயர்சொல்லி அழைக்கத் தயங்கினர். எனவே வைணவக் குடும்ப மரபிற்கேற்ப எத்திராசலு என்னும் செல்லப் பெயரால் அழைக்கப்பெற்றார்.
இவர், கவிஞரேறு, தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த், தமிழ்நாட்டுத் தாகூர் என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார். கவிஞர் வாணிதாசன் கவிதைகள் என்னும் தலைப்பில் வெளிவந்த தொகுப்பில் இயற்கையைப் பற்றிய கருத்துக்கள் இவரின் பாடல்களில் மிகுதியாக காணப்பட்டதால் இவரை தமிழகத்தின் வேர்ட்;ஸ்வொர்த் என்று பாராட்டினார்கள்.
இந்த கவிதை தொகுப்பு பெரும்புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மக்களிடம் பகுத்தறிவைத் தூண்டுவதே தன் பாடல்களின் நோக்கமாகக் கொண்டிருந்தார் என்பது இவருடைய மற்றுமொரு சிறப்பாகும்.
வாணிதாசன் தமிழ்மொழி மட்டுமல்லாமல் பிரெஞ்சு, தெலுங்கு, உருசியம், ஆங்கில மொழிகளிலும் புலமைப்பெற்றவர் ஆவார். இவர் பாவேந்தர் பாரதிதாசனின் சீடர். இவருடைய பாடல்கள் 'தமிழ்க் கவிதைக் களஞ்சியம் வெளியிட்ட 'புதுத்தமிழ்க் கவிமலர்கள்" என்ற நூலிலும், ஏனைய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன. பிரெஞ்சு மொழியாற்றலைப் பயன்படுத்தி, "தமிழ் - பிரெஞ்சு கையரக முதலி" என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
1954 ஆம் ஆண்டு "செவாலியர்" என்ற பட்டத்தை பிரெஞ்சு குடியரசுத் தலைவர் இவருக்கு வழங்கியுள்ளார். 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தவர். பிரெஞ்சு மொழியில் வல்லவர். இவருக்கு "கவிஞரேறு", "பாவலர் மணி" என்ற பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். இவருடைய பாடல்களில் இயற்கை புனைவு இயற்கையாகவும், மிகுதியாகவும் வந்தமைந்திருக்கும். வாணிதாசனின் கவிதை வளத்தை உணர்ந்த தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் திரு. வாணிதாசன் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும்' என்று கூறினார். மயிலை சிவமுத்து இவரைத் "தமிழ்நாட்டுக் தாகூர்" எனப் புகழ்ந்துரைத்தார். தமிழக அரசுக் கவிஞரான இவரின் நூல்கள் அனைத்தும் இந்திய அரசால் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளது.
TNPSC NOTES VAANITHASAN TAMIL PDF: கல்வியும் பணியும்:1922 ஆம் ஆண்டு வில்லியனூர் திண்ணைப் பள்ளியில் எத்திராசலு சேர்க்கப்பெற்றார். ஆனால், விளையாட்டின் மீது மோகம் கொண்டு பள்ளிக்குச் சரியாக செல்லாமல் இருந்தார். அவரது தந்தை பள்ளி ஆசிரியர் திருக்காமு ஒரு பொறுப்புள்ள அரசு அலுவலர். மேலும் தாயில்லா பிள்ளை என்பதால் எதையும் வெளிக்காட்டாமல் பொறுத்துக் கொண்டார்.
1924 ஆம் ஆண்டு கவிஞரின் தந்தை வில்லியனூர் எனப்படும் மையப்பள்ளியில் தனது மகனைச் சேர்த்தார். அங்கு பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டன. ரங்கசாமி எனப்படும் எத்திராசலுவின் தந்தை பணி காரணமாக பாகூருக்கும், புதுச்சேரிக்கு மாற்றப்பட்டார். அப்போது புதுச்சேரியில் நான்காம் வகுப்பு பயின்று வந்த ரங்கசாமிக்கு பாவேந்தர் பாரதிதாசன் அவரது வகுப்பு ஆசிரியர். மேலும் சி.சு.கிருஷ்ணன் எல்லப்ப வாத்தியார், முத்துக்குமாரசாமி பிள்ளை ஆகியோர் ரங்கசாமியின் தமிழார்வத்தை வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
1928 ஆம் ஆண்டு பதின்மூன்றாவது வயதில் மைய இறுதித்தேர்வில் (செர்த்திமிகா தேர்வு) புதுவை வட்டாரத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 1932 - ல் பிரெஞ்சு மொழிக்கல்வி முதல் பகுதி சான்றிதழ் தேர்வை எழுதி அதிலும் நல்ல மதிப்பெண்களை எடுத்தார்.
1934 - ல் பிரவே என்னும் தமிழ் பண்டிதர் தேர்வு எழுதுவோருக்காக பாவேந்தர் பாரதிதாசன் தனிப்பட்ட வகுப்பு நடத்தி வந்தார் அதில் பயின்ற ரங்கசாமி இத்தேர்விலும் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்கு தகுதியானார்.
1935 ஆம் ஆண்டு தமது இருபதாம் வயதில் தம் சிற்றன்னையின் தமையன் மகள் ஆதிலட்சுமியை மணந்தார். ஆண்களும், பெண்களுமாக மொத்தம் ஒன்பது குழந்தைகளைப் பெற்றிருந்தார் கவிஞர் வாணிதாசன். சௌந்திரராசலு, புரட்சிப்பாவலர் தி.தேவிதாசன், கவிதைச் செல்வர் கல்லாடன் ஆகியோர் இவருடன் பிறந்தவர்கள். மாதரி, ஐயை, எழிலி, முல்லை, இளவெயினி, நக்கீரன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருங்கிள்ளி முதலியோர் வாணிதாசனின் பிள்ளைகள் ஆவார்.
பிறகு, 1937 ஆம் ஆண்டு அப்போதைய புதுவை நகரமேயர் இரத்தினவேலு பிள்ளை என்னும் பெரியவரின் பரிந்துரையின் பேரில் உழவர்கரையை அடுத்த தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய ரங்கசாமி, மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளையொட்டி பாரதி நாள் இன்றடா! பாட்டிசைத்து ஆடடா! எனத் தொடங்கும் முதல் கவிதையை மதுரையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த சி.பா.ஆதித்தனாரின் திங்கள் இதழான தமிழன் இதழுக்கு எழுதியிருந்தார். இக்கவிதையின் வாயிலாக தழிழ்ச்சமூகத்தில் கவிஞராக அறிமுகமான ரங்கசாமி, தன்பெயரிலுள்ள முதல் மற்றும் இறுதி எழுத்தைச் சேர்த்து இவ்விதழுக்கு தொடர்ந்து "ரமி" என்னும் புனைப்பெயரில் கவிதைகளை அனுப்பினார். இப்பெயரில் பெரிதும் திருப்தியாகாத தமிழன் நிர்வாகம் வாணிதாசன் என்னும் புனைபெயரில் எழுதுமாறு கேட்டுக்கொண்டது. இதனை ஏற்ற ரங்கசாமி அன்றிலிருந்து வாணிதாசன் ஆனார். இவரது கவிதைகளை விகடன், கவிதை, காதல், குயில், செண்பகம் தமிழன், திருவிளக்கு, நெய்தல், பிரசன்ன விகடன், பொன்னி, மன்றம், முத்தாரம், முரசொலி, திராவிட நாடு போன்ற தமிழ் இதழ்கள் வெளியிட்டன.
TNPSC NOTES VAANITHASAN TAMIL PDF: பாரதிதாசன் - வாணிதாசன்:
நான்காம் வகுப்பு ஆசிரியர், பிரவே தேர்வு பயிற்சி ஆசிரியர் என்னும் நிலைகளைத் தாண்டி ரெட்டியார் பாளையத்தில் ஆசிரியராக இருந்த காலத்தில் பாரதிதாசனோடு உணர்வுகளால் ஒன்றிப்போனார் வாணிதாசன். இவ்வாறு நெருங்கிய தொடர்பு ஏற்பட்ட 1944 ஆம் ஆண்டு முதல் பாரதிதாசனோடு எப்போதும் இருப்பவராய் வாணிதாசன் மாறிப்போனார். 1944 ஆம் ஆண்டு காரைக்காலிலுள்ள குறும்பகரம் பள்ளியில் பணியாற்றியபோது "விதவைக்கொரு செய்தி" என்னும் தலைப்பில் அமைந்த நான்கு வெண்பாக்கள் அறிஞர் அண்ணா நடத்திய திராவிட நாடு இதழுக்கு அனுப்பி வைத்தார். அவ்விதழின் முகப்பு அட்டையிலேயே வாணிதாசனின் கவிதை வெளியிடப்பெற்றது. இக்கவிதையைப் படித்த அறிஞர் அண்ணா வாணிதாசனைப் பாராட்டினார். தமிழன் இதழின் ஆசிரியர் கோ.தா.சண்முகசுந்தரம் அவர்கள் ஒரு கடிதமும் ரூபாய் 10 பரிசுத்தொகையும் அனுப்பினார். கவிஞரின் தந்தை 1945 ஆம் ஆண்டு மீண்டும் பாகூருக்கு மாற்றப்பட்ட பொழுது சென்னையில் வித்துவான் பட்டம் பெற்றார். இதன்மூலம்; 1948 ல் தான் பயின்ற அதே புதுச்சேரி கலவைக் கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றுதால் வாணிதாசன் அங்கும் பேராசானாகத் திகழ்ந்தார்.
கவிஞர் வாணிதாசன் கவிதைகளில் பாவேந்தர் பாரதிதாசனின் செல்வாக்கு மிகுதியாக இருப்பதைக் காணலாம். பாரதிதாசன் என்னும் ஆலமர நிழலின் கீழ் சிக்கிய ஒரு செடியாகவே கவிஞர் வாணிதாசனைச் சிலர் கருதுவர். பாரதிதாசன் பாதையில் வெற்றி நடைபோடும் முன்னோடிக் கவிஞராகத் திகழ்ந்த வாணிதாசன் தமிழறிந்த பெரியோர்களால் ‘தமிழ்நாட்டுத் தாகூர் என்றும் தமிழ்நாட்டின் வேர்ஸ்வொர்த் என்றும்’ புகழ்மாலை சூட்டப்பெற்றார். அத்தோடு, தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்கள் தமிழிலக்கிய வரலாற்றில் வாணிதாசனுக்கென என்றும் தனிஇடம் இருந்தே தீரும் என ஒரு உண்மை வாசகத்தை உரக்கச் சொன்னார்.
பொதுவுடைமையைப் பற்றி மிகுதியாகப் பேசும் கவிஞரேறு அவர்கள், காலத்திற்கு ஏற்றார் போல் கோலத்தை மாற்றும் இயல்புடையவராக ஒருபோதும் வாழ்ந்ததில்லை என்பதனை, ‘கோடி கொடுப்பினும் கொள்ளையிற் கோடல்’ என்னும் அவரது புதிய கொன்றைவேந்தன், சிரித்தநுணா போன்ற கவிதைத் தொகுப்புகளில் இடம்பெற்ற கவிதைகள் நமக்கு நன்கு எடுத்துரைக்கின்றன.
TNPSC NOTES VAANITHASAN TAMIL PDF: கவிஞரேறு வாணிதாசனின் இலக்கியப்பணி:தமிழன் இதழ் மூலம் தொடங்கிய வாணிதாசனின் இலக்கியப் பயணம் திராவிட நாடு இதழின் மூலம் சிறப்பான புரட்சிக்கவிஞராய் அவரை தமிழ்ச்சமூகத்தின் முன் அவரது கவிதை அடையாளப்படுத்தியது. இதனால் முரசொலி, முத்தாரம், மன்றம், தென்றல் போன்ற திராவிட இயக்கப் பத்திரிக்கைகள் அவரின் கவிதைகளை கேட்டு வாங்கி வெளியிட்டன.
சுதேசமித்திரன், ஞாயிறுமலர், தினமணி (யேவழையெட ர்நசயடன) ஆகிய இதழ்களில் கவிஞரின் படைப்புகள் பற்றி மதிப்புரைகள் வெளிவந்துள்ளன. 1950 இல் புதுச்சேரியில் பாரதிதாசன் நடத்திய கவியரங்கில் முதல்பரிசை முடியரசனும், இரண்டாம் பரிசை வாணிதாசனும் பெற்றனர். அரசியல் மீது ஏற்பட்ட ஆர்வத்தினால் புரட்சியாளர் பெரியாரின் தன்மான இயக்கத்தில் பாரதிதாசன் முழக்கமிட்டதால் அவரின் சமுதாய உணர்வு அவரின் பரம்பரை கவிஞர்களையும் அதில் இணைத்துக்கொண்டது. அதன்வாயிலாக வாணிதாசன் புரட்சிக்கவிதைகளை சுயமரியாதை இயக்கத்துக்காக எழுதினார். இதனை சுயமரியாதை ஏடுகள் வெளியிட்டுள்ளன. இதே ஆண்டில் கோயமுத்தூர் முத்தமிழ் மாநாட்டில் கவிதைபாடி வெள்ளிக்கிண்ணம் ஒன்றையும் பரிசாகப் பெற்றுள்ளார். இந்நிகழ்வில் நாவலர் சோமசுந்தர பாரதியார், அறிஞர் அண்ணா, பாரதிதாசன், கலைஞர் மு.கருணாநிதி, நாவலர் இரா.நெடுஞ்செழியன் முதலானோர் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். இதுபோன்று பல்வேறு அறிஞர்களோடு ஏற்பட்ட தொடர்பினால் இவ்வாண்டில் சென்னை வாழ் தமிழ் அறிஞர்களுடனும் குறிப்பாக, மயிலை சிவ.முத்து, புலவர் தா.அழகுவேலன், புலவர் நா.அறிவழகன், செந்நீர்க்குப்பம் செங்கல்வராயன் ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினையும் வாணிதாசன் பெற்றார்.
TNPSC NOTES VAANITHASAN TAMIL PDF: கவிஞரேறு வாணிதாசனின் படைப்புகள்:
கவிஞரேறு வாணிதாசன் 1935 - ல் எழுதத்தொடங்கிய பாரதி நினைவு நாள் கவிதை முதல் தனிப்பாடல்கள் பாடுவதோடு நில்லாமல் குறுங்காப்பியங்களைப் புனைவதிலும் ஆர்வம் காட்டியுள்ளார். ஏனெனில், 1949 ஆம் ஆண்டு முதன் முதலில் புதுக்கோட்டை செந்தமிழ் நிலையத்தின் வாயிலாக ‘தமிழச்சி’ என்னும் குறுங்காப்பியத்தை வெளியிட்டார். இந்நூல் ‘கொடி முல்லை’ என்னும் காப்பியத்திற்கு பின்னர் எழுதப்பட்ட நூலாக இருந்தாலும் முதலில் வெளியிடப்பட்டது தமிழச்சி என்னும் நூலாகும். பிறகு, 1950 - ல் கொடிமுல்லை காப்பியத்தை செந்தமிழ் நிலையத்தாரே வெளியிட்டனர். இவை இரண்டும் சீர்திருத்தக்காப்பியங்களாகும்.
1951 - இல் ‘பெரிய இடத்துச் செய்தி’ என்னும் மொழி பெயர்ப்புக் கதையை வெளியிட்டார். 1952 இல் ‘வாழ்க்கை’, ‘பட்டிக்காட்டுப் பெண்’ ஆகிய தொடர்கதைகளை மே இதழில் வெளியிட்டார். அதே ஆண்டில் தொடுவானம் என்னும் இசைப்பாடல்களையும் எழுதினார். இவை இசைத்தமிழுக்குப் பெருமைசேர்க்கும் வகையில் அமைந்திருந்தது என்பர். 1954 - ல் எழிலோவியம் என்னும் கவிதைத்தொகுப்பு வெளியிடப்பட்டது. இந்நூல் ஞாயிறு, மலை, முகில், காடு, கடல், சேரி, நிலை என்னும் எட்டு இயற்கை பொருள்களையும் பூந்தொட்டி, நூல், விளக்கு, முதுவைப்பருவம் குறித்த தனித்தனிப் பாடல்களாகவும் அமைந்திருந்தது. 1956 - ல் 88 பாடல்களைக் கொண்ட வாணிதாசன் கவிதைகள் வெளியிடப்பட்டது. அப்போது அவரது புகழ் தமிழின் உச்சத்திற்கு சென்றது. இயற்கை, இன்பம், மக்கள், புரட்சி, தமிழ், பூக்காடு, இசைக்குரியார் போன்ற ஏழு உட்தலைப்புகளின் கீழ் பகுக்கப்பட்டு வெளியிடப்பட்டதுதான் இந்தக் கவிதைத் தொகுப்பின் சிறப்பாகும்.
TNPSC NOTES VAANITHASAN TAMIL PDF:கட்டுரைகள்:
- ’கருங்காலம்’ இன்பக் கலைமலர் இதழ் 12, (1954)
- பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கைச் சிறுகுறிப்பு, நித்திலக்குவியல் - குவியல் 3 முத்து 2. (1964)
- பாவேந்தரோடு நான் சில நினைவுகள் அரும்புகள், மொட்டுகள், மலர்கள் - முருகு சுந்தரம், சிவகங்கை (1980)
- கவிதையில் வினாவும் - விடையும் நேர்முகம் காணல் - கவிச்சித்தர். க.பொ.இளம்வழுதி கவிதை ஏட்டில் வெளிவந்தது. (1974)
- சிறுகதை – ‘வேனிற் காலத்திற்கு’ – கலைமன்றம் இதழில் வெளிவந்தது.
- மொழிபெயர்ப்பு (நாடகம் - பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு)
- .காதல் எங்கே மூலம் விக்டர் யூகோவின் ஆன்ழெல்லோ, புதுப்பணக்காரன்
- புதினம் - பெரிய இடத்து செய்தி, வாழ்க்கை மூலம் குய்தெமொசானின் புதினங்கள்
மேலும், கவிஞரால் வெவ்வேறு காலங்களில் பொங்கலுக்காகப் பல்வேறு இதழ்களுக்கு எழுதப்பெற்ற பொங்கல் வாழ்த்துப் பாடல்கள் ஒரு நூலாக தொகுக்கப்பெற்று 1958 - ல் பொங்கல் பரிசு என்னும் பெயரில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ‘தீர்த்த யாத்திரை’ என்னும் நூல் கதைகளைச் சொல்லும் பாணியில் ஒரு கவிதை நூலாக வெளியிடப்பட்டது. இதனை கதைப்பாடல் என்றும் அழைப்பார்கள். பிறகு கவிரேறுவின்,
- 1958 - ல் இன்ப இலக்கியம்
- 1959 - ல் குழந்தை இலக்கியம்
- 1963 - ல் சிரித்த நுணா - தொகுப்பு நூல்
- 1963 - ல் இரவு வரவில்லை - தொகுப்பு நூல்
- 1963 - ல் பாட்டுப் பிறக்குமடா - தொகுப்பு நூல்
- 1963 - ல் இனிக்கும் பாட்டு குழந்தைகளுக்கா என்னும் பல படைப்புகள் வெளிவந்தன.
1970 - ல் எழிலோவியத்தைப் போன்ற எழில் விருத்தம் என்னும் நூல் தீ.வீரபத்திர முதலியார் எழுதிய விருத்தப்பாவியலுக்கு இலக்கியமாகப் பாடப்பட்ட நூலாகவும், பல்வேறு பாட்டரங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பாகவும் 1972 - ல் பாட்டரங்கப்பாடல்கள் என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டது.
1971 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆக, கவிஞரேறு வாணிதாசன் 22 வயதிலிருந்து 56 வயது வரை (1937 - 1971) ஏறத்தாழ 34 ஆண்டுகள் ஆசிரியராகவும், தென்னாற்காடு மாவட்ட தமிழ்க் கவிஞர் மன்றத்தின் நிரந்தரத் தலைவராகவும் பணியாற்றுள்ளார் என அறியமுடிகிறது.
1972 இல் தென்னாற்காடு மாவட்டத்தின் தமிழ்க் கவிஞர்கள் மன்றத்தாரால் பொன் மோதிரம் வழங்கப்பட்டு, பிறகு 1973 இல் புதுவைத் தமிழ்ச் சங்கத்தால் வெள்ளிக் கேடயமும் வழங்கியதோடு, 1974 ஆகஸ்ட் திங்கள் ஏழாம் நாள் மறைந்த கவிஞர் வாணிதாசனின் பாட்டரங்கப் பாடலுக்கு 1975 இல் ரூபாய் 2000 பரிசு வழங்கிச் சிறப்பித்தது. கவிஞரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப் பட்டதோடு ரஷ்ய மற்றும் ஆங்கில மொழகளோடு 14 இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கபட்டது.
TNPSC NOTES VAANITHASAN TAMIL PDF: வாணிதாசனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்:
1. இரவு வரவில்லை – (1963)
2. இன்ப இலக்கியம் – (1958)
3. இனிக்கும் பாட்டு – (1965)
4. எழில் விருத்தம் – (1970)
5. எழிலோவியம் – (1954)
6. குழந்தை இலக்கியம் – (1959)
7. கொடி முல்லை – (1950)
8. சிரித்த நுணா – (1963)
9. தமிழச்சி – (1949)
10. தீர்த்த யாத்திரை – (1959)
11. தொடுவானம் – (1962)
12. பாட்டரங்கப் பாடல்கள் – (1972)
13. பாட்டு பிறக்குமடா – (1963)
14. பெரிய இடத்துச் செய்தி – (1951)
15. பொங்கற்பரிசு – (1958)
16. வாணிதாசன் கவிதைகள் - முதல் தொகுதி – (1956)
17. வாணிதாசன் கவிதைகள் - இரண்டாம் தொகுதி (1981)
18. வாணிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதி (1984)
19. விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ – (1989)
TNPSC NOTES VAANITHASAN TAMIL PDF: சிறப்பு பெயர்களும் விருதுகளும்:
கவிஞர் வாணிதாசன் மயிலை சிவமுத்து என்பவரால் தமிழ்நாட்டுத்தாகூர் என முதன்முதலில் அழைக்கப்பெற்றார். கவிஞரேறு, பாவலர் மணி, பாவலர் மன்னன், புதுமைக் கவிஞர், தமிழகத்தின் வேர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் போன்ற சிறப்புப் பெயர்களும் இவருக்குண்டு.
தமிழக அரசு கவிஞரின் தமிழ்த் தொண்டைப் பாராட்டி இவரது குடும்பத்திற்கு ரூபாய் 10000 பரிசு வழங்கியதோடு, இவரது படைப்புகளை நாட்டுடமையாக்கி இவருக்கு பெருமையும் சேர்த்துள்ளது.
இவருடைய கவிதைகள் உருது, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 34 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், தான் வாழ்ந்த வீட்டிற்குப் "புரட்சி அகம்' என்று பெயர் வைத்தார். வாணிதாசனைப் போற்றும் வகையில், புதுவை அரசு இவர் வாழ்ந்த சேலியமேட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு வாணிதாசன் பெயரைச் சூட்டி அவரைச் சிறப்பித்துள்ளது.
TNPSC NOTES VAANITHASAN TAMIL PDF:வாணிதாசன் கவிதைகள்: கவிதைக்குக் கற்பனை கண்களைப் போன்றது. உயர்ந்த உணர்ச்சிகள் ஊற்றெடுப்பதற்குரிய சிறந்த நிலைக்களன்களைக் கற்பனை மூலம் அமைத்துத் தருவதே கவிதை என்பர். கவிஞனுடைய உள்ளத்தை நிழற்படம் போல படம் பிடித்துக் காட்டும் ஆற்றலுடையது கற்பனை. கற்பனையின் சிறப்புக்கு உறுதுணையாக விளங்குவன உவமை உருவகம் போன்ற அணிகள். அவற்றோடு ;நயமிகு சொல்வடிவம்’ ஐம்பொறிகள் வாயிலாக ஒருவன் நகர்ந்து பெறத்தக்க கருத்துக்களை உணரச் செய்யும் ஆற்றலுடையது. இவ்வியல்புகள் கவிஞர் வாணிதாசனுடைய கவிதைகள் முழுவதும் நிறைந்துள்ளன.
தாய் மொழிப் பற்றும் தமிழுணர்வும்
பைந்தமிழ் பற்றுமிக்க பாவலரேறு வாணிதாசன், தன் தாய்மொழிப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக,
“கொண்டு வா யாழை! குழந்தையைப் பாடவிடு!
பண்டைத் தமிழ்வீரம் பாடட்டும்; கேட்போம்!
அரசர் மடிமேல் அரும்புலவர் செந்நாவில்
ஓங்கி வளர்ந்த உயர் தமிழை பாடட்டும்.” (பாட்டரங்கப் பாடல்கள். ப.4)
என்ற பாடல் வரிகளால் தமிழுணர்வை வெளிப்படுத்துகிறார். மேலும்,
“அடிமை மலைபிளக்கும் உளி எங்கள் தமிழே
ஆண்மைக்கும் வலிமைக்கும் உரமெங்கள் தமிழே”
என்று அவர் முழங்கும் போது, மொழிப்பற்றின் உணர்வினை அவரின் கவிதைகள் வாயிலாக வெளிப்படுகின்றதை அறிய முடிகிறது. “ஓங்குக ஓங்குகவே – தமிழ் உலகோடே உயர்வாக நிலை பெற்று நீடுழி” எனத் தாய் மொழிப்பற்றும், “இந்த நாட்டில் பழக்கத்தால் உயர்வு தாழ்வு உண்டாகிறதே தவிர படைப்பினால் இல்லை” எனச் சமுதாய சீர்திருத்த நோக்கமும், ஏழை பணக்காரன் இல்லாத பொதுவுடைமை நிலையும் உருவாகவேண்டும் என கவிஞர் வாணிதாசன் தன் படைப்புகளின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார். எனவே, கவிஞர் வாணிதாசன் பொருளுக்கோ, புகழுக்கோ விரும்பிக் கவிதைகள் எழுதும் மனப்போக்குடையவர் அல்லர். அவர் ஒப்பற்ற கொள்கையுடைய உன்னத கவிஞர் என அறியமுடிகிறது.
இயற்கை வர்ணனை
“உண்ணத் தெவிட்டா இயற்கை
ஓவியப் பேரெழில் சோலை! - (எழில் விருத்தம் 6:3)
பொங்கிச் சீறி அலையெழுப்பிப்
போரைச் செய்யும் கடல்! - (எழில் விருத்தம் 2:5)
என இயற்கையின் எழிலை எல்லையில்லா மகிழ்வோடு பாடியிருக்கும் கவிஞர், அதனை மனித வாழ்க்கைக்கும் பயன்படுத்திக் காட்டுகிறார். இத்தகைய பாடல்களில் கவிஞரின் கலையழகு கவினுற்று விளங்குவதை காணமுடிகிறது. மேலும், ‘நல்லுழவன் இன்றேல் வேலுயர்த்தி அரசாளும் எந்நாளும் என்றும் விடியாதே எனச் சொல்லி விடிய வரும் காலை’ என்பன போன்ற கருத்தோவியங்களை இவரது காலைப் பாடல்களில் கண்டுணரலாம்.
“இல்லடங்கா திருக்கின்ற அளங்காலை எருமை’
இரவினிலே ஒன்றிரண்டு கட்டுகயிறறுத்தே
கொல்லையிலே பயிர்மேயும் கொட்டகையைக் குறுகும்!
கொடுமைக்கும் அழிவுக்கும் நீ பொறுப்பா இரவே?
என்னும் வாணிதாசனின் இன்பச் சுவையூட்டும் ‘இரவு’ கவிதையானது உள்ளுறையுவமம் அமைந்து சிறக்கிறது. இதுபோன்று ஆறு, மலை, கடல், நிலவு, வானம், மரம், செடி, கொடி என இப்பிரபஞ்சத்தில் வியாபித்து நிற்கும் அனைத்து இயற்கையழகையும் கற்பனை வடிவில் கண்முன் திரையிட்டுக் காட்டும் திறனனைத்தும் கவிஞரேறுவின் கவிதைகளில் இயல்பாக இடம்பெற்றுள்ளது எனலாம். அதனால்தான், வாணிதாசன் மேலைநாட்டுக் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் அவர்களோடு இணைத்துப் பேசபட்டார். இவரது ‘எழிலோவியம்’ என்னும் கவிதைத் தொகுப்பானது முழுவதும் இயற்கை வர்ணனையில் அமைந்து சிறக்கிறது.
“விளைவயல் பொட்டல் என்ற
வேற்றுமை கருதாது என்றும்,
ஆளித்துயிர் ஓம்பு கின்றாய்
அன்னையே! முகிலே! வாழி!” - (எழிலோவியம்.ப.28)
என்று மேகத்தைப் பாடும் கவிஞர், சமதர்மக் கொள்கையின் மேல் தான் கொண்டுள்ள மோகத்தையும் பாடத் தவறவில்லை எனலாம். அதனால்தான், “வீட்டோரத் தோட்டத்து வேலியிலே தொங்கும் சுரைக்காய்கள் மீட்டாது மாட்டிவைத்த மெல் யாழாம்.” (வாணிதாசன் கவிதைகள்1. ப.3) என்றும், “காட்டுப் பூனைப் பல்லாம் கார்முல்லை நீளரும்பு” எனவும், “பெண்தலை கோதி எடுத்திடு பேன் போல் பிய்த்தனம் என்றுடல் களைகள்” எனவும், “இலவங்காய் வால்முளைத்துப் பறப்பதைப் போல் கிள்ளை நெட்டாகக் கல்வீட்டுப் புறச்சுவரைத் தாவும்” என புதுமுறையில் உவமை உருவகம் அமைத்து இயற்கையழகை கற்பனை நயத்தோடு பாடுவதில் வல்லவராக வாணிதாசன் வாழ்ந்துள்ளார்.
கற்பனை ஓவியங்கள்
“யார் அவள்? அவளே தான்! யாழ் கிடப்பதைப் போல்
தமிழ்நூல் தனியே படிப்பா ரின்றிக்
கிடப்பதைப் போலக் கிடக்கின்றாள் கிள்ளை!
வேர்மேல் தலைவைத்து மெல்லுடலை நீட்டி
நீர்க்கெண்டை நோக்கி விழிக் கெண்டை பாயக்
கிடக்கின்றாள். கார்காணாத் தோகை கிடப்பதைப்போல்
கண்ணைத்’ திறக்காது கல்லிற் செதுக்கி வைத்த
வண்ணச் சிலைபோல் என் வாழ்வரசி மரத்தடியில்
எண்ணம் எழுந்தோட விழியேங்க நறுஞ்சாந்துக்
கிண்ணம் கிடப்பதைப் போல் கிடக்கின்றாள்.” - (இன்பஇலக்கியம்.ப.30)
என்ற பாடல் வரிகளால் எடுத்துரைக்கும் கவிஞர், தன்னை ஏங்க வைத்த அக்கன்னியை படம் பிடித்துக் காட்டும் கற்பனை ஓவியத்தினை கிராமிய மனதோடு வர்ணித்துக் காட்டியுள்ளார் எனலாம்.
சமுதாயச் சிந்தனைகள்
“எட்டிப்பழமோ பறைச்சி இதழ்? – மன
இன்பத்திற்கு ஏதடி ஜாதி மதம்?
மொட்டு பலவகை ஆனாலும் - அதன்
முருகுதரும் சுவை ஒன்று என்றான்” - (வாணிதாசன் கவிதைகள் 1 – ப.66)
என்ற பாடல் வரிகளால், சாதிப் பாகுபாட்டையும் சமய வேறுபாட்டையும் கடுமையாகச் சாடும் சமதர்மக் கவிஞராக வாணிதாசன் தன் கவிதை மூலம் தன்னை காட்சிப்படுத்தியுள்ளார்.
மூடநம்பிக்கையை எதிர்த்தல்
நாள் பார்த்தல், கோள் பார்த்தல் போன்ற மூட நம்பிக்கைகளை வேரோடு களையவேண்டுமென வீறுகொண்டு எழுந்த எழுச்சிக் கவிஞர் தன்னுடைய பெருவிருப்பத்தினை,
“கடைக் காலக் கொள்கையிது: வீணர் சூழ்ச்சி
ஆள்வினையை நம்பாது மக்கள் வீழும்
அளறுமிகு முள்நிறைந்த பாட்டை” - (கொடிமுல்லை.ப.11)
என்ற பாடல் வரிகளால் இவ்வாறு எடுத்துரைக்கிறார்.
பொருளியல் பொதுவுடைமைச் சிந்தனைகள்
20 ஆம் நூற்றாண்டுக் கவிதைகளில் மிகச்சிறந்த பொதுவுடைமைச் சிந்தனையை பொருளாதார காரணங்களை முன்வைத்துப் பாடிய கவிஞர்களின் முக்கியமானவர் கவிஞரேறு வாணிதாசன் ஆவார். பழைய மரபுகளை கட்டுடைத்து புதுப்பொலிவுடன் எதனையும் எழுதித் தீர்க்கும் திறனுடைய அவர்,
“கூப்பிடு வாழ்வோர் அனைவரையும் கூப்பிடடி!
காப்பெதற்கு? கார் தந்த செல்வம் விளைபொருள்கள்!
சாப்பாட்டைத் தேக்காதே! சுண்டை அதன் விளைவாம்!
பங்காக்கி உண்போம் பசியேறு பின் நாட்டில்!” - (வாணிதாசன் கவிதைகள்1 – ப.4)
எனப்பாடி பொதுவுடைமை வேட்கையை வெளிப்படுத்துகிறார். மேலும்,
“கொடுமையடா மண்ணில் சிலருண்டு வாழல்
கூழுக்கும் வழியற்றுப் பாட்டாளி தாழல்
உடைமை பொதுவாக்கி வாழ்வோம் இந்நாட்டில்
ஊரை விளைப்போரை வேர்கல்விச் சாய்ப்போம்”
என்ற பாடல் வரிகளால், சமூகத்தில் அனைத்தும் பொதுவுடைமையாக இருத்தல் வேண்டும் என்ற புரட்சி முழக்கத்தினையும் எழுச்சியோடு இயற்றியுள்ளார்.
பெண் விடுதலை
காதல் மணம், பெண் விடுதலை ஆகிய கொள்கை வழி நின்று பல உன்னத கருத்துக்களை தன் கவிதைகளால் வெளிப்படுத்திய கவிஞரேறு வாணிதாசன்,
“காய்தாங்கும் கொடியாம் அன்னை
கண்ணிமை எனினும் ஒக்கும்
தாயினை இழந்தார் வானத்
தன்துளி காணாப் புன்செய்”
என்ற பாடல் வரிகளால் தாய்மையினை மிக அழகான கவிப்புலமையோடு தெளிவுபடுத்தியுள்ளார்.
TNPSC NOTES VAANITHASAN TAMIL PDF :மறைவு:22.07.1915 ஆம் நாளன்று பிறந்து எந்நாளும் இயற்கையின் அழகை ரசித்தவரை 07.08.1974 ஆம் ஆண்டு இயற்கை ரசிக்க அழைத்துக் கொண்டது.
TNPSC NOTES VAANITHASAN TAMIL PDF மரபுக்கவிதை : பாரதிக்கு ஒரு பாரதிதாசன்;. பாரதிதாசனுக்கோ பல தாசர்கள். அவர்களில், சூரியனாய் சுடர்விட்டுப் பிரகாசிப்பவர் சுரதா. பவுர்ணமி நிலவாய் பவனி வந்தவர் வாணிதாசன் ஆவார். ஏனெனில், விண்மீனை, ‘தைத் திங்கள் குளம் பூத்த பூவோ? தமிழ் வேந்தர் வெளியிட்ட சின்ன காசோ? மைத்தடங்கண் மடமாதர் உதிர்த்துப் பின்னர் மாலைக்குத் தேர்ந்தெடுக்கும் முல்லைப் பூவோ? எனப்பாடும் கவிஞர், நாளைய தமிழகம் எப்படி இருக்க வேண்டுமென்று கனவு கானும் பொழுது ‘தமிழ் முரசம் கேட்குதடி, அதோ கேள் பெண்ணே! ஜாதி, மதம், கட்சி எல்லாம் ஒன்றாம் அங்கே! தமிழ் நாட்டைத் தமிழ்த் தலைவர் ஆளக் கண்டு தோளெல்லாம் பூரிக்கும் தமிழ்க்கூட்டம் பார்! எனப்பாடி பரவசம் அடைந்துள்ளார்.
உழவர்களின் நிலை உயர வேண்டும் என நினைத்து கவிஞரேறு வாணிதாசன் ‘காட்டைத் திருத்திக் கழனி வளைத்துக் கடுமழை குளிரால் மேனி இளைத்து வாட்டும் பசிநோய் மாள நெல் விளைத்து வழங்கி நலிந்து பின் புழுங்கும் உழவனிங்கு விழித்தெழ ஊதாயோ சங்கே! என தமிழ்ச்சமூகத்தை தன் கவிதைகளின் வாயிலாக எழுச்சியூட்டியுள்ளார்.
‘தமிழச்சி’ என்ற காவியத்தில் சொல்லுவார் – ‘படித்திட வேண்டும் நீங்கள் பல தொழில் உணர வேண்டும்; படித்திடில் உணவுப் பஞ்சம் படிப்படியாக நீங்கும்; படித்திடில் சாதிப் பேச்சுப் பறந்திடும் அறிவும் உண்டாம்; படித்திடில், அடிமை ஆண்டான் எனும் பேச்சும் பறக்கும் அன்றோ’ என கல்வியின் மேன்மையைப் பாடி மனித சமுதாயத்தை உச்சிக் குளிரச் செய்துள்ளார்.
அத்தோடு நில்லாமல், பொதுவுடைமை, பகுத்தறிவு, பெண்ணியம் முதலான கொள்கைகளைப் போற்றியவர் வாணிதாசன். மொழி, இன, நாட்டுணர்வுக்கும் குரல் கொடுத்தவர். தமிழ் மரபுக் கவிதை வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர்.
இயற்கைக் கவிஞர், புதுமைக் கவிஞர், கவிஞரேறு, தமிழ்நாட்டுத் தாகூர் என்றெல்லாம் போற்றப்படும் இவருக்கு, தமிழக அரசு பாவேந்தர் விருதும், பிரெஞ்சுக் குடியரசு செவாலியர் விருதும் வழங்கிச் சிறப்பித்தது இவரிடம் வெளிப்பட்ட படைப்பெழுச்சியே..