தமிழ்நாட்டில் அகழாய்வுகள் கண்டுபிடிப்புகள் தொடர்புடைய செய்திகள் 2024

TNPSC PAYILAGAM
By -
0
 
ARCHAEOLOGICAL DISCOVERIES

தமிழ்நாட்டில் அகழாய்வுகள் கண்டுபிடிப்புகள் தொடர்புடைய செய்திகள்


HISTORY OF TAMIL SOCIETY RELATED ARCHAEOLOGICAL DISCOVERIES TNPSC NOTES IN TAMIL

தமிழ் நிலமானது மிகத் தொன்மை வாய்ந்தது.  தமிழின் தொன்மையும், தமிழரின் பண்பாட்டையும், அறிவியல் பூர்வமாக நிறுவ வேண்டும் என்றால் முறையான அகழ்வாய்வுகள் அவசியமாகும்.

ஆய்வு அறிவிப்பு   - 20.01.2022    
 
ஆய்வுக்கான ஏழு இடங்கள் 

     பண்டைய தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில்

1. கீழடி (கொந்தகை, அகரம் மணலூர்), சிவகங்கை மாவட்டம்- எட்டாம் கட்டம்
2. சிவகளை, தூத்துக்குடி மாவட்டம் - மூன்றாம் கட்டம்
3. கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம் - இரண்டாம் கட்டம்
4. மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம் - இரண்டாம் கட்டம்
5. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் - முதல் கட்டம்
6. துலுக்கர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் - முதல் கட்டம்
7. பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம் - முதல் கட்டம்

1. கீழடி 

நோக்கம் : இதுவரை கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானங்களின் தொடர்ச்சி மேற்பட்ட சமூக மக்கள் வாழ்ந்ததற்கான சான்று,அரிய தொல்பொருட்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுகளுடன் கொண்டிருந்த வணிக தொடர்பு கொண்டதற்கான கூடுதல் சான்றுகளை தேடும்,நகர நாகரிக கூறுகளை வெளிப்படுத்தும் நோக்கில் எட்டாம் கட்ட ஆய்வு அகழ்வாய்வு நடைபெறும்

அமைவிடம்: தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி ஊராட்சியில் உள்ள கீழடி கிராமத்தின் பள்ளிச்சந்தை திடல் மேட்டுப்பகுதியில் உள்ளது.

கீழடி அகழாய்வின் கால வரிசை:

முதல் கட்டம்: கீழடியில் ஆனி மாதம், தி.பி 2046 ஆம் ஆண்டு(சூன்,2015) வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழு முதல் கட்ட அகழ்வாய்வைத் தொடங்கியது.

இரண்டாம் கட்டம் : தி.பி 2047,மன்மத ஆண்டு, மார்கழி மாதம் (2 சனவரி, 2016) அன்று இரண்டாம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இதில் மருத்துவ குடுவைகள், பழங்கால உறை கிணறுகள், தொழிற்சாலை, அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன.இரண்டாம் கட்ட அகழாய்வின் முடிவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன. இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியபோது 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்டம்: மூன்றாம் கட்ட அகழாய்வு தி.பி 2048, தை மாதம் (சனவரி, 2017) முதல் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் தலைமையில் நடைபெற்றது. இப்பணி தி.பி 2048, புரட்டாசி மாதம் (30 செப்டம்பர் 2017) முடிந்தது. மூன்றாம் கட்டப் பணியில் 400 சதுர மீட்டர் அளவுக்கு 16 குழிகள் தோண்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

நான்காம் கட்டம்: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ள, தமிழ்நாடு அரசு, பிப்ரவரி, 2018-இல் ரூபாய் 55 இலட்சம் ஒதுக்கி ஆணையிட்டுள்ளது.நான்காம் கட்ட அகழாய்வு பணிகள் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்றது.

ஐந்தாம் கட்டம் : 2019ஆம் ஆண்டு சூன் மாதத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆர். சிவானந்தம் தலைமையில் ஐந்தாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை தொடங்கியது. இப்பணிகள் நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு நடக்கும். இதில் 15 அகழிகளை தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அகழாய்வு கண்டுபிடிப்புகள் தொடர்புடைய செய்திகள்:

கீழடியைப் பொறுத்தவரை தொடர்ந்து தொல்லியல் பொருட்கள் கிடைத்துவரும் பகுதியாக இருந்து வருகிறது. 2019 -20ல் நடந்த அகழாய்வில் 25க்கும் மேற்பட்ட தாழிகள் உட்பட பல தொல்லியல் பொருட்களும் கலைப் பொருட்களும் கிடைத்தன.

இந்த முறை நடந்த அகழாய்வில் பல மணிகள், பானை ஓடுகள், கூரை ஓடுகள் போன்றவை கிடைத்திருக்கின்றன. இங்குள்ள தரைகள் செங்கல் கற்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. இரு கற்களை இணைக்க களிமண்ணும் சுண்ணாம்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அகரம் தளத்தில் நடந்த அகழாய்வில் சில நாட்களுக்கு முன்பாக சுடுமண்ணால் ஆன அடையாளம் தெரியாத ஒரு விலங்கின் உடல் பாகத்தின் உருவ பொம்மை கிடைத்தது. பத்து சென்டிமீட்டர் அலகமும் நான்கு சென்டிமீட்டர் உயரமும் கொண்ட அந்த பொம்மை எந்த விலங்கைக் குறிக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும் இதே அகரம் பகுதியில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரராயன் காசுகளும் கிடைத்தன.

இந்த ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் மட்டும் விலங்கு உருவ பொம்மை, சுடுமண்ணால் ஆன பெண் முகம், செம்பு நாணயங்கள், புகைப்போக்கி குழாய் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி, யானை தந்தம், சங்கு ஆகியவற்றால் ஆண அணிகலன்களும் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.


2. சிவகளை - மூன்றாம் கட்டம் ஆய்வு
       
நோக்கம் :தண் பொருநை ஆற்றங்கரையில் (தாமிரபரணி ஆற்றங்கரை) வாழ்ந்த தமிழ் சமூகத்தினரின்  பண்பாடு 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டதற்கான சான்றுகளை தேடி அகழ்வாய்வு நடைபெறும்.

அமைவிடம்: தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், சிவகளை ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது தூத்துக்குடியிலிருந்து 30 கிமீ, திருவைகுண்டத்திலிருந்து 10 கிமீ மற்றும் ஏரலிருந்து 6 கிமீ தொலைவிலும் உள்ளது. 

அகழாய்வு கண்டுபிடிப்புகள் தொடர்புடைய செய்திகள்:

சிவகளையில் 2000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொல்லியல்களத்தை சிவகளையைச்சார்ந்த, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியர் மாணிக்கம் என்பரால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு தற்பொழுது சிவகளையில் 25 மே 2020 முதல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு முதற்கட்ட அகழாய்விறௌகு ரூபாய் 58 இலட்சம் ஒதுக்கி அகழாய்வு நடைபெற்றது.தற்பொழுது இரண்டாம் கட்ட அகழாய்விற்கு ரூபாய் 34 இலட்சம் ஒதுக்கி சிவகளையை சுற்றியுள்ள ஒன்பது இடங்களில் நடைபெற்று வருகின்றன

கண்டுபிடிப்புகள் :

ஆதிச்சநல்லூருக்கு அருகில் உள்ள சிவகளையும் ஈமத் தாழிகள் புதைக்கப்பட்ட இடம்தான். இதுவும் ஆதிச்சநல்லூரும் தொடக்க இரும்பு காலத்தை அதாவது கி.மு. 8 முதல் கி.மு. 9 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை. ஆதிச்சநல்லூரையும் சிவகளையையும் ஒரே நிலப்பகுதியாகவும் கருத முடியும். இந்த சிவகளை புதைமேடு கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கருக்குப் பரந்து கிடக்கிறது. இந்த அளவுக்கு மிகப் பெரிய புதைமேடு இருக்கிறதென்றால், அதற்கு அருகில் உள்ள பராக்கிரமபாண்டிய புரம், மூலக்கரை போன்ற பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சிவகளையில் சிவகளைப் பரம்பு, பேட்மாநகரம், ஸ்ரீ மூலக்கரை ஆகிய இடங்களில் 15க்கும் மேற்பட்ட ஆய்வுக் குழிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் 5 தாழிகள் மூடியுடன் கண்டெடுக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை தவிர, நூல் நூற்க உதவும் தக்கிளி, புகைப்பான், கருப்பு - சிவப்பு மண்பாண்டங்கள், பழங்கால மற்றும் இடைக்கால கருவிகள், எலும்புகள், நடுகற்கள் உள்ளிட்டவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

3. மயிலாடும்பாறை - இரண்டாம் கட்டம் ஆய்வு

நோக்கம் : புதிய கற்காலம் மனிதர்கள் தங்களது வேளாண்மை நடவடிக்கைகளை தமிழகத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கொண்டிருந்தனர் என்பதை நிரூபிக்கும் நோக்கத்துடன் இத்தளம் அமையும்.

அமைவிடம்: தமிழ்நாட்டின்,, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், தொகரப்பள்ளி கிராமத்திலிருந்து மேற்கு திசையில், 3 கி.மீ. தொலைவில் உள்ள குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. கிருஷ்ணகிரி - போச்சம்பள்ளி நெடுஞ்சாலையில், அமைந்துள்ள இவ்வூர் கிருஷ்ணகிரியிலிருந்து 18.2 கி.மீ தொலைவிலும், பர்கூரிலிருந்து 13.5 கி.மீ. தொலைவிலும், குட்டூரிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது.

அகழாய்வு கண்டுபிடிப்புகள் தொடர்புடைய செய்திகள்:

மயிலாடும்பாறை 2021 ஆகழாய்வினை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை முன்னெடுத்துள்ளது. இரா.சிவானந்தம், தலைமையிலான இந்த அகழ்வாய்வுக் குழுவில், மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல், சீ.பரந்தாமன், ஆர்.வெங்கடகுரு பிரசன்னா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த அகழாய்வு 2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடித்தது

கண்டுபிடிப்புகள் :

கிருஷ்ணகிரியில் உள்ள மயிலாடும்பாறையைப் பொறுத்தவரை, அந்தப் பகுதி புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. அடுத்ததாகப் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பொருட்களும் இங்கு கிடைத்துள்ளன. குறிப்பாக மிக நீளமான வாள் ஒன்று கிடைத்துள்ளது. இங்கு கிடைத்துள்ள பானைகள் பெரும்பாலும் சக்கரங்களைக் கொண்டு வனையாமல், கையால் வனையப்பட்டவையாக உள்ளன.

இங்கு கிடைத்த மட்கலன்கள் (ceramics), இரும்புப் பொருட்கள் (iron objects), பாறை ஓவியங்கள் (rock art), நடுகற்கள் (memorial stones), மற்றும் கல்வெட்டுகள் வாயிலாக 1. நுண்கற்காலம் (Microlithic age), 2. புதிய கற்காலம் (Neolithic age), 3. இரும்புக்காலம் (Iron Age age), 4.வரலாற்று தொடக்க காலம் (Early Historic age), மற்றும் 5. வரலாற்று காலம் (Historic age) என்ற ஐந்து பண்பாட்டு வரிசைகள் (five cultural sequences) அடையாளம் காணப்பட்டதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது

4. கங்கைகொண்ட சோழபுரம் - இரண்டாம் கட்டம் ஆய்வு

நோக்கம் : முதலாம் இராசேந்திரனின் நகரமைப்பு மற்றும் மண்ணில் புதைந்துள்ள கட்டுமானங்களை வெளிக்கொணர்ந்து அரண்மனையில் வடிவமைப்பினை தெரிந்து கொள்வது நோக்கமாகும்.

அமைவிடம்: மாளிகைமேடு என்பது அரியலூர் மாவட்டத்தில், கங்கைகொண்டசோழபுரத்திற்கு அருகில் உள்ள சிற்றூர். இவ்வூரின் கிழக்கே முதலாம் இராசேந்திரனால் எழுப்பப்பட்ட செங்கற்களால் ஆன மாளிகை தமிழகத் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்டது.

அகழாய்வு கண்டுபிடிப்புகள் தொடர்புடைய செய்திகள்:

கங்கை கண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திரச் சோழனின் அரண்மனை அமைந்திருந்ததாகக் கருதப்படும் மாளிகை மேடு பகுதியில் தற்போது அகழாய்வு நடத்தப்பட்டுவருகிறது. இங்கு ஏற்கனவே நடந்த அகழாய்வில் சோழர் காலத்து அரண்மனையின் அடிப்பகுதியின் ஒரு பகுதி வெளிப்பட்டது. தற்போது, அரண்மனையின் அமைப்பைப் புரிந்துகொள்ளும் வகையில் ஏதாவது ஒரு பகுதியின் முழுமையையும் வெளிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கு ஆங்கில எழுத்தான 'T' வடிவில் ஒரு பெரிய சுவர் கிடைத்துள்ளது.

மிகப் பெரிய ஆணிகளும் கிடைத்துள்ளன. "இந்த அளவுக்கு ஆணி பெரிதாக இருக்கிறதென்றால், அங்கு இருந்திருக்கக்கூடிய கதவு போன்ற மரப் பொருட்களின் உயரத்தையும் அகலத்தையும் புரிந்துகொள்ளலாம்" என்கிறார் மாநிலத் தொல்லியல் துறையின் துணை இயக்குனரான ஆர். சிவானந்தம். இங்குள்ள அரண்மனை இரட்டைச் சுவர்களால் கட்டப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த மாளிகை சுமார் ஒன்றரைக் கி.மீ. பரப்பளவுக்கு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த மாளிகையின் மதில் சுவர் காணப்படுகிறது. ஏற்கனவே 2008ல் இங்கு நடந்த அகழாய்வில் இந்த மதில் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. இவை தவிர, கொக்கிகள், சீன நாட்டுப் பானை ஓடுகள் போன்றவையும் கிடைத்திருக்கின்றன. டெரகோட்டா உருவங்களும் கிடைத்திருக்கின்றன.

5. துலுக்கர்பட்டி - முதல் கட்டம் ஆய்வு

அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இருந்து தென்கிழக்கு 6 கிலோமீட்டர் தொலைவில் நம்பி ஆற்றின் இடது கரையில் துலுக்கர்பட்டி அமைந்துள்ளது.

நோக்கம்: செறிவுமிக்க தொல்லியல் தளத்தின் உருவாக்கம், குடியேற்ற முறை மற்றும் தொல்பொருட்களின் தன்மை ஆகியவற்றை கண்டறிவது.நம்பி ஆற்றின் கரையில் இரும்புக்கால பண்பாட்டின் வேர்களை தேடுவது.
   
அகழாய்வு கண்டுபிடிப்புகள் தொடர்புடைய செய்திகள்:

ஏப்ரல் 2022-இல் இத்தொல்லியல் களத்தில் பாசி, மணிகள், குவளை மற்றும் உடைந்த பானை ஓடுகள் ஆகியன கண்டெடுக்கப்பட்டன

6. வெம்பக்கோட்டை - முதல் கட்டம் ஆய்வு

அமைவிடம்: தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், வைப்பாற்றின் இடதுகரையில் உள்ள வெம்பக்கோட்டை கிராம ஊராட்சியின் மேட்டுக்காடு மற்றும் உச்சிமேடு பகுதியில் 25 ஏக்கர் பரப்புளவில் உள்ளது. இது சிவகாசிக்கு தெற்கே 15 கிலோ மீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான விருதுநகருக்கு தென்மேற்கே 50 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

நோக்கம்: நுண் கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து வந்ததற்கான அடையாளங்களை வெளிப்படுத்துகின்றன.காலவரிசையாக தொடர்ச்சியாக நிலவிய நிலவியல் உருவாக்கத்தின் பின்னணியில் அதிக எண்ணிக்கையிலான நுண்கருவிகளை சேகரிப்பது ஆகும்.

அகழாய்வு கண்டுபிடிப்புகள் தொடர்புடைய செய்திகள்:

2 மீட்டர் உயரம் கொண்ட வெம்பக்கோட்டை தொல்லியல் மேட்டுப் பகுதியில் கற்காலம் முதல் மத்தியகாலம் வரை மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இத்தொல்லியல் மேட்டின் மேற்பரப்பில் கற்கால மட்பாண்டங்களின் சில்லுகள், மணிகள், வேலைப்பாடுகளுடன் கூடிய சங்கு வளையல்கள், சுடுமண் வட்டுகள், இரும்பு கசடுகள் போன்றவை கிடைத்துள்ளன.

7.  பெரும்பாலை - முதல் கட்டம் ஆய்வு

அமைவிடம்: தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியம், பெரும்பாலை ஊராட்சியில் அமைந்துள்ளது. பெரும்பாலை தொல்லியல் களம் பென்னாகரம்-மோளையானூர் செல்லும் சாலையில், பென்னாகரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும், தர்மபுரியிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் பாலாற்றின் இடது கரையில் உள்ளது. இத்தொல்லியல் களத்தில் முதல் கட்ட அகழாய்வு மேற்கொள்ள தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்
   
நோக்கம் : பாலாற்றின் ஆற்றங்கரையில் இரும்பு கால பண்பாட்டின் வேர்களை தேடுவது.

அகழாய்வு கண்டுபிடிப்புகள் தொடர்புடைய செய்திகள்:

75 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரும்பாலை தொல்லியல் மேடு தரை மட்டத்திலிருந்து 3 மீட்டர் முதல் 4 மீட்டர் வரை உயரம் கொண்டது. இத்தொல்லியல் களத்தின் மேற்பரப்பில் கருப்பு சிவப்பு மட்பாண்ட ஓடுகள், சிவப்பு பானை ஓடுகள் கிடைத்துள்ளன.செம்மனூர் சிவன் கோயில் எதிரே ஈமக்காடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதியில் கால்வாய் வெட்டும் போது 50 கல் வட்டங்கள் கிடைத்துள்ளன.

தமிழ்நாட்டில் முப்பது இடங்களில் தொல்லியல் களங்கள்:

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தனியாகவும் மற்றும் இந்தியத் தொல்லியல் துறையுடன் இணைந்தும், தமிழ்நாட்டில் முப்பது இடங்களில் தொல்லியல் களங்களை அகழ்வாய்வு செய்துள்ளது. அவைகளின் விவரம்:

வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய தொல்லியல் களங்கள்
  • ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் - ஆண்டு 1876
  • ஆனைமலை,கோயமுத்தூர் மாவட்டம், ஆண்டு, 1969
  • கோவலன் பொட்டல்,மதுரை மாவட்டம், 1980
  • திருத்தங்கல்,விருதுநகர் மாவட்டம், 1994 – 1995
  • தேரிருவேலி -இராமநாதபுரம் மாவட்டம், 1999 – 2000
  • கொடுமணல் தொல்லியற் களம்,- ஈரோடு மாவட்டம், 1992-1993, 1996–1997 & 1997-1998
  • மாங்குடி,திருநெல்வேலி மாவட்டம், 2001 – 2002
ஆரம்பகால தொல்லியல் களங்கள்
  • வசவசமுத்திரம் தொல்லியல் களம்,காஞ்சிபுரம் மாவட்டம், 1969 – 1970
  • கரூர் மாவட்டம், 1973 – 1979 & 1994 – 1995
  • அழகன்குளம் தொல்லியல் களம்-இராமநாதபுரம் மாவட்டம், 1986-1987, 1990–1991, 1992-1993, 1994-1995, 1996–1997 & 1997- 1998
  • கொற்கை அகழாய்வுகள்-தூத்துக்குடி மாவட்டம், 1968 – 1969
  • தொண்டி -இராமநாதபுரம் மாவட்டம், 1980
  • பல்லவமேடு தொல்லியல் களம் -காஞ்சிபுரம் மாவட்டம், 1970 – 1971
  • போளுவம்பட்டி தொல்லியல் களம் -கோயம்புத்தூர் மாவட்டம், 1979 – 1980 & 1980 – 1981
  • பனையகுளம்,-தருமபுரி மாவட்டம், 1979 – 1980
  • பூம்புகார்,-நாகப்பட்டினம், 1994 – 1995 & 1997 – 1998
  • திருக்கோவிலூர் -விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம், 1992 – 1993
  • மாளிகைமேடு-கடலூர் மாவட்டம், 1999 – 2000
  • பேரூர்,-கோயம்புத்தூர் மாவட்டம், 2001 –2002
மத்தியக்கால தொல்லியல் களங்கள்
  • குரும்பன்மேடு,-தஞ்சாவூர் மாவட்டம்] 1984
  • கங்கைகொண்ட சோழபுரம்,-அரியலூர் மாவட்டம், 1980 – 1981 & 1986 – 1987
  • கண்ணனுர் - துறையூர் ஊராட்சி ஒன்றியம்[24], திருச்சிராப்பள்ளி மாவட்டம், 1982 – 1983
  • பழையாறை - தஞ்சாவூர் மாவட்டம், 1984
  • பாஞ்சாலங்குறிச்சி-தூத்துக்குடி மாவட்டம், 1968 - 1969
  • சேந்தமங்கலம்-கள்ளக்குறிச்சி மாவட்டம் 1992 – 1993 & 1994 – 1995
  • படவேடு-திருவண்ணாமலை மாவட்டம், 1992 – 1993
அண்மைய கால அகழ்வாய்வுகள்
  • ஆண்டிப்பட்டி,-திருவண்ணாமலை மாவட்டம், 2004-2005
  • மோதூர்,-தருமபுரி மாவட்டம்,
  • மரக்காணம், விழுப்புரம் மாவட்டம், 2005-2006
  • பரிகுளம்,-திருவள்ளூர் மாவட்டம், 2005-2006
  • நெடுங்கூர் -கரூர் மாவட்டம், 2006-2007
  • மாங்குளம்,-மதுரை மாவட்டம், 2006-2007
  • செம்பிகண்டியூர்-நாகப்பட்டினம் மாவட்டம், 2007-2008.
  • தரங்கம்பாடி- நாகப்பட்டினம் மாவட்டம்
  • கீழடி அகழாய்வு மையம் -சிவகங்கை மாவட்டம் 2015 - 2019
  • மயிலாடும்பாறை தொல்லியல் களம் - கிருஷ்ணகிரி மாவட்டம் 2022 -
  • துலுக்கர்பட்டி தொல்லியல் களம் - திருநெல்வேலி மாவட்டம் 2022 -
  • வெம்பக்கோட்டை தொல்லியல் களம் - விருதுநகர் மாவட்டம் - அகழாய்வுப் பணிகள் துவக்கப்படவில்லை
  • பெரும்பாலை தொல்லியல் களம் - தருமபுரி மாவட்டம் - அகழாய்வுப் பணிகள் துவக்கப்படவில்லை 

தமிழ்நாட்டில் அகழாய்வுகள் கண்டுபிடிப்புகள் தொடர்புடைய செய்திகள் 2024:

மூன்றாம் கிருஷ்ணன் இராட்டிரக்கூட மன்னன் கன்னரதேவனின் கல்வெட்டு:
  • வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இராட்டிரக்கூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் கன்னரதேவனின் இரு கல்வெட்டுகள் சிதிலமடைந்து காணப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் தொல்லியல் துறையினரும் வருவாய் துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர். 
  • அப்பொழுது வள்ளிமலை கோயில் அருகில் சிதிலமடைந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. 
  • அந்த கல்வெட்டுகளில், கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் கிருஷ்ணன் இராட்டிரக்கூட மன்னன் கன்னரதேவனின் வெற்றியைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கல்வெட்டுகளில் தமிழிலும், கன்னடத்திலும் ஓரே செய்தியைக் குறிப்பிடுகிறது.

அகழாய்வில் -செப்பு நாணயங்கள்

  • கடலூர் மாவட்டத்தின் உளுந்தம்பட்டு பகுதியிலுள்ள தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் நடைபெற்ற கள அகழாய்வில் 2 சோழ பேரரசு காலத்தையும், 1 விஜயநகர பேரரசு காலத்தையும் சேர்ந்த 3 செப்பு நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • சோழ கால நாணயத்தின் ஒருபுறத்தில் ஒருவர் கையில் மலர் ஏந்தி நின்றவாரும், அவரது இடது பக்கத்தில் 4 வட்டங்களும், மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன.
  • விஜயநரக கால நாணயத்தின் ஒருபுறத்தில் தேவநாகி எழுத்தில் ஸ்ரீநீலகண்டா எனவும் மற்றொரு புறத்தில் காளைஉருவமும், பிறையும் உள்ளன.
  • மொத்தம் 3 நாணயங்கள் கண்டுஎடுத்தனர் . அதில் 2 நாணயங்களில் சோழர் காலத்தை சேர்ந்த  தேவநாகரி எழுத்துக்களில் “ஸ்ரீராஜராஜ” என பொறிக்கப்பட்டுள்ளது மற்றும் மீதம் இருந்த ஒரு நாணயத்தில்  விஜயநகர காலத்தை சேர்ந்த   தேவநாகரி எழுத்துக்களில் “ஸ்ரீநீலகண்ட “என பொறிக்கப்பட்டுள்ளது தென் பண்ணை ஆற்றுபடுகையில் தொடர்ந்து சங்க காலம் முதல் சோழர் காலம் வரை பழங் கால மக்கள் வாழ்ந்தற்கான தொல்லியல் தடயங்கள் கண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

வெம்பக்கோட்டை அகழாய்வில் திமிலுடன் கூடிய காளை உருவம் கண்டுபிடிப்பு:
  • விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் அகழாய்வு நடந்து வருகிறது. இதில் பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்து வருகின்றன. 
  • இங்கு கிடைக்கும் பொருட்கள் அடிப்படையில் இப்பகுதியில் பழங்காலத்தில் தமிழர் நாகரிகம் சிறந்தோங்கி இருப்பது தெரியவந்துள்ளது. 
  • இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வின் போது, சுடுமண்ணால் ஆன திமிலுடன் கூடிய காளை உருவம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், முன்னோர்கள் பல்வேறு வீர விளையாட்டுக்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார்.

2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பானை ஓடுகள் கண்டறியப்பட்டன:

  • கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் குறியீடுகளுடன் கூடிய சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. 
  • விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியா் ரமேஷ், முனைவா் பட்ட ஆய்வாளா் இம்மானுவேல், உளுந்தாம்பட்டு பள்ளி மாணவா்கள் பிரதாப், வெற்றி, கோபி ஆகியோா் கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் மேற்புற களஆய்வு மேற்கொண்டனா். இதில் கீறல் குறியீடுகளுடன் கூடிய கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், வட்ட சில்லுகள் கிடைத்தன. இதுகுறித்து ரமேஷ், இம்மானுவேல் ஆகியோா் கூறியதாவது: தமிழ்நாட்டில் குறியீடுகளுக்கு அடுத்து காணக் கிடைக்கும் வரிவடிவம் தமிழ்-பிராமி எழுத்து வடிவமாகும். இதை பண்டைத் தமிழ் எழுத்துகள் என்றும், ‘தமிழி’ என்றும் ஆய்வாளா்கள் குறிப்பிடுகின்றனா். இந்தியாவில் கிடைக்கப்பெற்ற வரி வடிவங்களில் காலத்தால் தொன்மையானது சுமாா் 4,500 ஆண்டுகள் பழமையான சிந்துவெளி நாகரீக வரி வடிவங்களாகும். சிந்துவெளி பண்பாடு மறைந்த காலத்துக்கும் ‘தமிழி’ எழுத்துகள் தோன்றியதற்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த வரி வடிவத்தை குறியீடுகள், கீறல்கள் என்று ஆய்வாளா்கள் அழைக்கின்றனா்

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)