பட்டினப்பாலை (Pattinappalai) என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் . பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர். கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும்.
- திணை = நெய்தல் திணையும் பாலைத் திணையும்
- துறை = பொருள்வயின் பிரியக் கருதிய தலைவன் செலவழுங்குதல்(செலவழுங்குதல் = செல்லாது விடுதல்)
- பாவகை = இடையிடையே ஆசிரியப்பா அமைந்த வஞ்சி நெடும் பாட்டு
- அடி எல்லை = 301
- பாடிய புலவர் = கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- பாட்டுடைத் தலைவன் = சோழன் கரிகாலன்
பெயர்க்காரணம்:
பாலைத் திணையையும், காவிரிப்பூம்பட்டினம் நகரின் வளத்தையும் ஒருங்கே கூறுவதால் பட்டினப்பாலை எனப் பெயர் பெற்றது.
பட்டினம்:
துறைமுகத்தை ஒட்டியுள்ள பெரு நகரங்கள் பட்டினம் என அழைக்கப்பட்டன. காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் பழம்பெரும் நகரமாகும். தலைநகரமாக விளங்கிய துறைமுகப்பட்டினம். இது தமிழகத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கீழ்க்கோடியிலே காவிரி நதி கடலோடு கலக்கும் இடத்தில் உள்ளது. இப்போது இது ஒரு சிறிய ஊராகும். ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் கடலிலே மூழ்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஐம்பெருங்காப்பியங்களிலே ஒன்றான மணிமேகலையில் காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கிய செய்தி காணப்படுகிறது.
பாலை:
பாலை என்பது பாலைத்திணை ஆகும். பிரிவைப் பற்றிக் கூறுவது பாலைத்திணையாகும். கணவன் தன் மனைவியை விட்டுப் பிரிந்து போவது - அல்லது பிரிந்து போக நினைப்பது - அல்லது பிரிந்து போக வேண்டுமே என நினைத்து வருந்துவது இவை பாலைத்திணையின்கண் அடங்கும். கணவன் தான் பொருள் தேடப் பிரிந்து செல்வதைத் தன் மனைவிக்கு அறிவிப்பதும், அதை அவள் தடுப்பதும் பாலைத் திணையில் அடங்கும்.
பட்டினப்பாலை என்பது பட்டினம்- பாலை என்ற இரு சொற்களைக் கொண்ட தொடர். "பட்டினத்தின் சிறப்பைக் கூறிப் பிரிவின் துன்பத்தை உணர்த்துவது" என்பது இதன் பொருளாகும்.
வேறு பெயர்கள்:
- வஞ்சி நெடும் பாட்டு(தமிழ் விடு தூது கூறுகிறது)
- பாலைபாட்டு
உரை:
* மறைமலையடிகள் உரை
* ரா.இராகவையங்கார் உரை
கரிகாற்சோழன்:
பட்டினப்பாலையில் குறிப்பிட்டிருக்கும் கரிகாற்சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவன். காவிரிப் பூம்பட்டினமே இவனுடைய தலைநகரமாக இருந்தது. இவன் இளைஞனாய் இருந்தபோது பகைவரால் சிறை பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.எப்படியோ சிறைலிருந்து தப்பித் தனக்குரிய அரசாட்சியையும் கைப்பற்றினான். பிறகு தன் பகைவர்களின் மேல் படை திரட்டிச் சென்று அவர்களையெல்லாம் வீழ்த்தி வெற்றிபெற்றான். இச்செய்தி பட்டினப்பாலையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது.
கரிகால் சோழன் தமிழன்பன். தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவன். இரும்பிடர்த்தலையார் என்னும் புலவர் இவனது தாய்மாமன். பட்டினப்பாலையைப் பாடிய உருத்திரன்கண்ணனாருக்குப் பதினாறு நூறாயிரம் ( 16,00,000-16 லட்சம்) கழஞ்சு (பொன்) பரிசளித்தான் என்ற செய்தி இவனுடைய தமிழ்ப்பற்றை விளக்குவதாகும். இதை உற்றுநோக்கினால் 188 அடிகளுக்கு 16,00,0000 கழஞ்சு பொன் என்றால் ஒரு அடிக்கு 8,510.6 களஞ்சு பொன் கொடுத்தான் என்பதை அறிய முடிகிறது.
KEY POINTS TNPSC EXAMS-PATTINAPALAI
- பட்டினப்பாலை பாடியமைக்காக கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு கரிகாற் சோழன் பதினாறு நூறாயிரம் பொற்காசுகள் பரிசளித்தான் என கலிங்கத்துப்பரணி கூறுகிறது.
- இந்நூலுக்கு வஞ்சிநெடும் பாட்டு என்ற பெயர் இருந்தமையை தமிழ் விடு தூது குறிப்பிடுகிறது
- பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினம் ஆகும்.
- இந்நகரை புகார், பூம்புகார் எனவும் அழைப்பர்.
- இந்நூலில் 163 அடிகள் வஞ்சிப்பாவல் அமைந்துள்ளது.
- இந்நூல் அரகேற்றப்பட்ட இடம் = பதினாறு கால் மண்டபம்
- பிற்காலப் பாண்டிய மன்னன் ஒருவன் சோழநாட்டை வென்று அதன் தலைநகரை அழித்தபோது, அந்நகரில் இந்நூல் அரங்கேற்றப்பட்ட பதினாறு கால் மண்டபத்தை அழிக்காதிருக்க ஆணையிட்டான் என “திருவெள்ளரைக் கல்வெட்டு” கூறுகிறது.
- இந்நூலில் கிளவித் தலைவனின் பெயர் கூறப்படவில்லை.
- சங்க நூலாகிய பத்துப்பாட்டு வரிசையில் ஒன்பதாவது பாட்டு பட்டினப்பாலையாகும். பட்டினப்பாலையின் செய்யுள்கள் இடையிடையே வஞ்சிப்பாவின் அடிகள் விரவி இருந்தாலும் ஆசிரியப்பாவால் இயன்றவை.
- காவிரியாற்றின் சிறப்பு; சோழநாட்டின் நிலவளம்; காவிரிப்பூம்பட்டினத்தின் சுற்றுப்புறங்களின் செழிப்பு; காவிரித்துறையின் காட்சி; செம்படவர்களின் வாழ்க்கை; பொழுதுபோக்கு இவைகளை இந்நூல் விரிவாகக் கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினத்திலே அக்காலத்தில் நடைபெற்ற வாணிகம்; அந்நகரத்திலே குவிந்திருந்த செல்வங்கள்; அங்கு நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி வாணிகம்; வாணிகர்களின் நடுவுநிலைமை; பண்டங்களைப் பாதுகாக்கும் முறை இவைகளையெல்லாம் இந்நூலிலே காணலாம்.
- இந்த நகரத்தின் தலைவனான கரிகாற்சோழனின் பெருமை, வீரம், கொடை முதலியவற்றையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இந்நூல் பாலைத்திணை என்னும் அகப்பொருளைப் பற்றியதாயினும் புறப்பொருள் செய்திகளே இதில் மிகுதியாகக் காணப்படுகின்றன.
- பட்டினப்பாலையை இயற்றிய ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆவார். பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை என்ற நூலினையும் இவர்தான் இயற்றியுள்ளார். பெரும்பாணாற்றுப்படை தொண்டைமான் இளந்திரையன் என்னும் அரசன் மீது பாடப்பட்டது. பட்டினப்பாலை கரிகால்சோழன் மீது பாடப்பட்டது. ஆகவே இவர் கரிகாலன், இளந்திரையன் என்ற இரண்டு மன்னர்களின் அன்புக்குரியவராக வாழ்ந்தார் என்பதை அறியலாம்.
முக்கிய அடிகள்:
- நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
- காலின் வந்த கருங்கறி மூடையும்
- வடமலை பிறந்த மணியும் பொன்னும்
- குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
- தமவும் பிறவும் ஒப்ப நாடி
- கொள்வதுஉம் மிகை கொளாது
- கொடுப்பதூஉம் குறைகொடாது
- பல்பண்டம் பகர்ந்து வீசும்
- முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
- வார் இருங் கூந்தல் வயங்கு இழை ஒழிய
- வாரேன் வாழிய நெஞ்சே