7TH EDITION OF THE INDIA MOBILE CONGRESS (IMC) 2023) / டெல்லி: 7-வது இந்திய மொபைல் மாநாடு 2023

TNPSC PAYILAGAM
By -
0



டெல்லி: 7-வது இந்திய மொபைல் மாநாடு 2023 (7th Edition of the India Mobile Congress (IMC) 2023) 

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 7-வது இந்தியா மொபைல் மாநாடு 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (27.10.2023) தொடங்கி வைத்தார். இந்திய மொபைல் மாநாடு (ஐஎம்சி) என்பது ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பாகும். இந்த மாநாடு 2023 அக்டோபர் 27 முதல் 29 வரை 'உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு' என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது. ஐஎம்சி 2023 முக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 '5ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை பிரதமர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, 21 ஆம் நூற்றாண்டின் மாறிவரும் காலங்களில், இந்த நிகழ்வு கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது என்றார். தொழில்நுட்பத்தின் வேகத்தில் "எதிர்காலம் இங்கேயே இப்போதே உள்ளது என்று அவர் கூறினார். தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம் மற்றும்  இணைப்புத் துறையில் எதிர்காலம் குறித்த பார்வைகளை வழங்குவதற்காக இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியை அவர் பாராட்டினார். 6 ஜி, செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, குறைக்கடத்திகள், ட்ரோன், விண்வெளித் துறைகள், ஆழ்கடல், பசுமை தொழில்நுட்பம் உட்பட பல்வேறு  துறைகளைக் குறிப்பிட்ட அவர், எதிர்காலம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் எனவும்  நமது இளைய தலைமுறை தொழில்நுட்பப் புரட்சியை வழிநடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூறினார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 5ஜி அறிமுகம் உலக நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதை திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். 5 ஜி வெற்றிக்குப் பிறகு இந்தியா அத்துடன் நிற்கவில்லை என்றும், அதை ஒவ்வொரு தனிநபரிடமும் கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டது என்றும் அவர் கூறினார். இந்தியா 5 ஜி அறிமுக கட்டத்திலிருந்து 5 ஜி சென்றடையும் கட்டத்திற்கு நகர்ந்தது என்று அவர் கூறினார். 5 ஜி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள், 97 சதவீதத்திற்கும் அதிகமான நகரங்கள் மற்றும் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்களை உள்ளடக்கிய 4 லட்சம் 5 ஜி அடிப்படை நிலையங்களின் வளர்ச்சி குறித்து பிரதமர் குறிப்பிட்டார். சராசரி மொபைல் பிராட்பேண்ட் வேகத்தின் வேகம் ஒரு வருடத்தில் 3 மடங்கு அதிகரித்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். பிராட்பேண்ட் வேகத்தில் இந்தியா 118-வது இடத்தில் இருந்து 43-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று அவர் கூறினார். நாட்டில் 5 ஜி கட்டமைப்பை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், 6 ஜி-யில் தலைமைத்துவ நாடாக மாறுவதற்கும் இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழலைச் சுட்டிக்காட்டிய பிரதமர், தற்போதைய அரசின் ஆட்சிக்காலத்தில் நடந்த 4ஜி ஸ்பெக்ட்ரம்  ஒதுக்கீடு ஊழல் ஏதுமின்றி,  நடைபெற்றதாக அவர் கூறினார். 6ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை வகிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

KEY POINTS :

  1. 100 ‘5 ஜி ஆய்வகங்கள் முன்முயற்சி', இந்தியாவின் தனித்துவமான தேவைகள், உலகளாவிய தேவைகள் ஆகிய இரண்டையும் பூர்த்தி செய்யும் 5 ஜி பயன்பாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் 5ஜி தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய வாய்ப்புகளை அடைவதற்கான ஒரு முயற்சியாகும். இந்த தனித்துவமான முயற்சி கல்வி, வேளாண்மை, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து போன்ற பல்வேறு சமூக பொருளாதாரத் துறைகளில் புதுமைகளை ஊக்குவிக்கும் மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் நாட்டை முன்னணியில் கொண்டு செல்லும்.
  2. நாட்டில் 6 ஜி-யில் கல்வி மற்றும் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் இந்த முன்முயற்சி ஒரு முக்கிய படியாகும். மிக முக்கியமாக, இந்த முன்முயற்சி தேசிய பாதுகாப்புக்கு முக்கியமான உள்நாட்டு தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஒரு படியாகும்.
  3. இந்தியா மொபைல் மாநாடு ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்ப அமைப்பாகும். இதன் மாநாடு 2023 அக்டோபர் 27 முதல் 29 வரை நடைபெறுகிறது. தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தில் நாட்டின் சிறப்பான முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்தவும், குறிப்பிடத்தக்க அறிவிப்புகளைக் கொண்டு வரவும், புத்தொழில்கள் தங்கள் புதுமையான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளைக் காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கவும் இந்த நிகழ்வு ஒரு தளமாக செயல்படும்.
  4. 'உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு' என்ற கருப்பொருளுடன், இந்திய மொபைல் மாநாடு 2023 முக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாட்டாளர், உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக நாட்டின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மூன்று நாள் மாநாடு 5 ஜி, 6 ஜி, செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை முன்னிலைப்படுத்தும், குறைக்கடத்தி தொழில்துறை, பசுமை தொழில்நுட்பம், இணையதள பாதுகாப்பு போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கும்.
  5. இந்த ஆண்டு, இந்திய மொபைல் மாநாடு 'ஆஸ்பயர்' என்ற புத்தொழில் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.   இது புதிய தொழில்முனைவோர் முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்புகளை ஏற்படுத்தும் நோக்கத்துடன் புத்தொழில்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவப்பட்ட வணிகங்களுக்கு இடையிலான தொடர்புகளை வளர்க்கும்.
  6. இம்மாநாட்டில் சுமார் 5000 தலைமைச் செயல் அதிகாரிகள்  நிலையிலான பிரதிநிதிகள், 230 கண்காட்சியாளர்கள், 400 புத்தொழில் நிறுவனத்தினர், துறை சார்ந்தோர் உட்பட சுமார் 22 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.


Post a Comment

0Comments

Post a Comment (0)