ஜாகிருதீன் முகமது பாபர் |
TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
முகலாயப் பேரரசு:
ஜாகிருதீன் முகமது பாபர் :
- இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் ஜாகிருதீன் முகமது பாபர் ஆவார். முகல் என்னும் வார்த்தையைப் பாபரின் மூதாதையரிடம் கண்டறியலாம். தம் தந்தையார் வழியில் பாபர் தைமூரின் கொள்ளுப்பேரன் ஆவார். தாய் வழியில் அவருடைய தாத்தா, தாஷ்கண்டைச் சேர்ந்த யூனுஸ்கான் ஆவார்.
- இவர் மாபெரும் மங்கோலிய அரசன் செங்கிஸ்கானின் பதின்மூன்றாவது தலைமுறை வாரிசு ஆவார். பாபர். 1483 பிப்ரவரி 14 இல் பிறந்தார். அவருக்கு ஜாகிருதீன் (நம்பிக்கையைக் காப்பவர்) முகமது எனப் பெயரிடப்பட்டது. தமது பன்னிரண்டாவது வயதில் மத்திய ஆசியாவில் ஒரு சிறிய அரசான பர்கானாவைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றார். ஆனால், மிக விரைவிலேயே அங்கிருந்து உஸ்பெக்குகளால் துரத்தியடிக்கப்பட்டார். துயரம் நிறைந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர், பாபர் காபூலின் ஆட்சிப்பொறுப்பேற்றார்.
- 1526 இல் நடைபெற்ற புகழ்பெற்ற முதலாம் பானிப்பட் போரில் பாபர் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்து டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றினார். இவ்வாறு முகலாய வம்சத்தின் ஆட்சி ஆக்ராவைத் தலைநகராகக் கொண்டு துவங்கியது.
முதலாம் பானிப்பட் போர் (ஏப்ரல் 21,1526):
- இதன் பின்னர் பாபர் லோடியால் ஆளப்பட்ட பஞ்சாப்பை நோக்கித் திரும்பினார். பல படையெடுப்புகளுக்குப் பின்னர் பாபர் இப்ராகிம் லோடியின் பெரும்படையை எண்ணிக்கையில் குறைவான தனது படையைக் கொண்டு பானிப்பட்டில் தோற்கடித்தார்.
- மிகச் சரியாகப் போர்வியூகங்கள் வகுத்துப் படைகளை நிறுத்தியமையும், பீரங்கிப் படையை (Artillery) திறம்படப் பயன்படுத்தியமையும் பாபரின் வெற்றிக்குக் காரணங்களாய் அமைந்தன. இவ்வெற்றி இந்தியாவில் நிரந்தரமாகத் தங்குவதற்கான நம்பிக்கையை பாபருக்கு அளித்தது.
- தில்லியையும் ஆக்ராவையும் பாபர் கைப்பற்றினாலும் ஆப்கானியர்களையும் ரஜபுத்திரர்களையும் அடக்க வேண்டிய அவசியமிருந்தது.
கான்வா போர் (1527) :
- அடுத்தபடியாக பாபர் மேவாரின் அரசனும் ராஜஸ்தான் மாளவம் ஆகிய பகுதிகளில் பெரும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்த சித்தூரின் ராணா சங்காவை போர்க்களத்தில் எதிர்கொள்ளத் தீர்மானித்தார்.
- தவிர்க்கமுடியாத அம்மோதலுக்குச் சாதகமான களமாக ஆக்ராவுக்கு அருகேயுள்ள கான்வா என்னுமிடத்தைத் தேர்வு செய்தார்.
- தன்னுடைய அச்சமூட்டக் கூடிய பெரும்படையோடும் அதற்கு வலுச்சேர்த்த ஆப்கன் முஸ்லீம்கள், இப்ராகிம் லோடியின் சகோதரர் முகமது லோடி, மேவாட்டின் அரசனான ஹசன்கான் மேவாட்டி ஆகியோரின் உதவியோடு ஆவேசமாக அணிவகுத்து வந்த ராணா சங்காவின் படைகள் பாபரின் படைகளை எதிர்கொண்டன.
- மீண்டும் ராணுவ தந்திரத்தாலும், பீரங்கிப்படைகளைத் திறம்பட பயன்படுத்தியதாலும் பாபர் ராணா சங்காவின் படைகளைத் தோற்கடித்தார். இவ்வெற்றியைத் தொடர்ந்து குவாலியர், தோல்பூர் ஆகிய கோட்டைகள் கைப்பற்றப்பட்டன. இது பாபரின் நிலைக்கு மேலும் வலுவூட்டியது.
பீரங்கி படை (Artillery) :
- பீரங்கியைப் பயன்படுத்தும் ராணுவப் படைப்பிரிவு பீரங்கி படை (Artillery) ஆகும். இதை இடம் விட்டு இடம் கொண்டு செல்லலாம்.
- பொதுவாக ஒருவருக்கும் மேற்பட்ட நபர்களால் இவை இயக்கப்படும். வெடிமருந்து முதன்முதலில் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கி.பி. 13ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவை அடைந்தது.
- பதினான்காம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து இது துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் பயன்படுத்தப்பட்டது.
- பாபருக்கு முன்பாக இந்தியாவில் போர்களில் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.
சந்தேரிப் போர் (1528) :
- அடுத்து சிறப்பு வாய்ந்த மாளவப் பகுதியின் மீது பாபரின் மேலாதிக்கத்தை உறுதி செய்தது சந்தேரியில் மேதினிராய் என்பவருக்கு எதிராகச் செய்யப்பட்ட போராகும்.
- இவ்வெற்றியைத் தொடர்ந்து பாபர் ஆப்கானியரின் வளர்ந்துவரும் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு எதிராகத் திரும்பினார்.
காக்ரா போர் (1529) :
- ஆப்கானியர்களுக்கு எதிராக பாபர் மேற்கொண்ட இறுதிப்போர் இதுவாகும்.
- சுல்தான் இப்ராகிம் லோடியின் சகோதரனான முகம்மது லோடியும் அவரது மருமகனான சுல்தான் நஸ்ரத்ஷாவும் பாபருக்கு எதிராகச் சதி செய்தனர்.
- ஆபத்தை உணர்ந்த பாபர் அவர்களுக்கு எதிராகப் படையெடுத்தார். கங்கை நதியின் துணை நதியான காக்ரா ஆற்றின் கரையில் இறுதியாக நடைபெற்ற போரில் பாபர் ஆப்கானியரைத் தோற்கடித்தார்.
- ஆனால் ஆக்ராவிலிருந்து திரும்பி லாகூர் செல்லும் வழியில் பாபர் 1530இல் காலமானார்.
- பாபரின் இறப்பைப் பற்றி ஒரு கதையுள்ளது. அவருடைய மகன் ஹூமாயூன் நோய் வாய்ப்பட்டிருந்தார். மகன் மீது கொண்டிருந்த பாசத்தால் மகன் உடல்நலம் பெற்றால் தனதுயிரை ஈவதாக பாபர் பிராத்தனை செய்தார். ஹூமாயூன் நோயிலிருந்து மீண்டார்
பாபரைப் பற்றிய மதிப்பீடு :
- முகலாயப் பேரரசை நிறுவிய பாபர் பாரசீக அராபிய மொழிகளில் புலமை பெற்றவராவார். தனது வாழ்க்கையைப் பற்றிய பாபரின் நினைவுக் குறிப்புகளான துசுக்-இ-பாபுரி (பாபர் நாமா) உலகச் செவ்வியல் இலக்கியமாகக் கருதப்படுகிறது.
- இந்தியா எதைப் பெற்றிருந்தது என்பதை பாபர் பின்வருமாறு விவரிக்கிறார்: இந்துஸ்தானத்தின் தலையாய மேன்மை எதுவெனில் இது ஒரு மிகப் பெரிய நாடு. பெருமளவிலான தங்கத்தையும் வெள்ளியையும் கொண்டுள்ளது. இந்துஸ்தானத்தின் மற்றொரு வசதி யாதெனில் இங்குள்ள தொழிலாளர்கள், ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் முடிவே இல்லாத வகையில் கடுமையாக உழைத்தனர்.
- காந்தகாரில் தொடங்கி வங்காளத்தின் எல்லை வரையிலான பாபருக்குச் சொந்தமான பகுதிகள் தற்போது பாதுகாப்பாய் இருந்தன. இருந்தபோதிலும் ரஜபுத்திரர்களின் விரிந்து பரந்த பாலைவனப் பகுதிகளிலும் ராந்தம்பூர், குவாலியர், சந்தேரி ஆகியவற்றிலும், ரஜபுத்திரத் தலைவர்கள் தங்களிடையே சண்டைகளிட்டுக் கொண்டிருந்ததால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிர்வாகம் என்பதில்லை. பாபர் தனது மகன் ஹூமாயூனுக்கு இடர்பாடுகள் நிறைந்த பணியை விட்டுச் சென்றார்.
- பாபர் துருக்கிய, பாரசீக மொழிகளில் புலமை பெற்றவராவார். துசுக்-இ-பாபரி என்ற தம் சுயசரிதையில் இந்துஸ்தான் பற்றிய தமது கருத்துகளையும், விலங்குகள், செடிகள், மரங்கள், மலர்கள், கனிகள் குறித்தும் பதிவு செய்துள்ளார். செங்கிஸ்கான் தம்முடைய மகன்களில் யார் தகுதியுடையவரோ அவரைத் தமது வாரிசாக அறிவித்திருந்தார். அம்மரபைப் பின்பற்றிப் பாபரும் தமக்குப் பிடித்த தன் மூத்த மகன் ஹுமாயுனைத் தம் வாரிசாக அறிவித்தார்.
முகலாயப் பேரரசு: