பிற்கால குப்தர்கள்:
- பிற்கால குப்த வம்சம் (Later Gupta dynasty) பண்டைய இந்தியாவின் கிழக்கில் உள்ள மகத நாட்டை குப்தப் பேரரசுக்கு பின்னர் கிபி 490 முதல் 750 முடிய ஆண்டனர். பிற்கால குப்த வம்சத்தினர் தங்களை பாரம்பரிய குப்த வம்சத்தின் வழிவந்தவர்கள் எனக்கூறிக்கொண்டனர்
ஆட்சியாளர்கள்:
- புருகுப்தர் (467 – 473)
- இரண்டாம் குமாரகுப்தர் (473 - 476)
- புத்தகுப்தர் (476 – 495)
- நரசிம்மகுப்தர் (495 –)
- மூன்றாம் குமாரகுப்தர் (530 – 540)
- விஷ்ணுகுப்தர் (540 – 550)
- வைன்யகுப்தர் (550 –)
- பானுகுப்தர் (550 -)
புருகுப்தர் (467 – 473):
- புருகுப்தர் (Purugupta) வட இந்தியாவின் 9-வது குப்தப் பேரரசர் ஆவார். குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் – பேரரசி ஆனந்ததேவி இணையருக்குப் பிறந்த புருகுப்தர், இவரது ஒன்று விட்ட சகோதரர் ஸ்கந்தகுப்தருக்குப் பின் குப்தப் பேரரசின் அரியணை ஏறியவர்.
- புருகுப்தரைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் ஏதும் கிடைக்காத போதும், இவரது பேரன் மூன்றாம் குமாரகுப்தர் வெளியிட்ட பிதாரி வெள்ளி நாணயங்கள் மூலமும் மற்றும் நாளந்தாவில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த, இவரது மகன்களான நரசிம்மகுப்தர், புத்தகுப்தர் மற்றும் மூன்றாம் குமாரகுப்தர் காலத்திய களிமண் முத்திரைகளின் மூலம் புருகுப்தரைப் பற்றிய செய்திகள் ஓரளவு அறிய முடிகிறது.
இரண்டாம் குமாரகுப்தர் (Kumaragupta II) (ஆட்சிக் காலம்:கி பி 473 - 476)
- குப்தப் பேரரசின் 10வது பேரரசர் ஆவார்.
- சாரநாத்தில் உள்ள கௌத புத்தரின் உருவச் சிற்பத்தில் உள்ள குறிப்புகளின் படி, புருகுப்தரின் மகனான இரண்டாம் குமாரகுப்தர், குப்தப் பேரரசின் பத்தாவது பேரரசராக அரியணை ஏறியதாக அறியப்படுகிறது.நான்கு ஆண்டுகளே அரசாண்ட இரண்டாம் குமாரகுப்தருக்குப் பின், அவர் மகன் புத்தகுப்தர் அரியணை ஏறினார்
புத்தகுப்தர் (Budhagupta)(ஆட்சிக்காலம் கி பி 476 – 495)
- இரண்டாம் குமாரகுப்தருக்குப் பின் ஆட்சிக்கு வந்த 11வது குப்தப் பேரரசர் ஆவார். இவர் புருகுப்தரின் மகனாவார்.புத்தகுப்தர் கன்னோசி மன்னருடன் கூட்டணி வைத்துக் கொண்டு, வட இந்தியாவிற்குள் நுழைந்த ஹூணர்களை விரட்டியடித்தார்.
- தாமோதர்பூர் செப்பு பட்டயங்கள், புத்தகுப்தரின் இரண்டு ஆளுநர்களான பிரம்மதத்தன் மற்றும் ஜெயதத்தன், வடக்கு வங்காளத்தை நிர்வகித்தாக கூறுகிறது. மத்தியப் பிரதேசத்தின் பண்டைய நகரமான ஏரணில் கிடைத்த 48 அடி உயர கொடி மரம் போன்ற கல்தூண் குறிப்புகளின் படி, வடக்கே யமுனை ஆறு தெற்கே நர்மதை ஆறு பாயும் பரப்புகளை ஆண்ட சுரேஷ்மிசந்திரன் எனும் அரசன் புத்தகுப்தரை மகாராஜா அழைத்தார் எனக் கூறுகிறது. மதுராவில் கிடைக்கப் பெற்ற, புத்தகுப்தர் ஆட்சிக் காலத்திய கௌதம புத்தரின் சிற்பத்தில் உள்ள குறிப்புகள், புத்தகுப்தர் தனது ஆட்சிப் பரப்பை வடக்கு மதுரா வரை நீட்டித்ததாக கூறுகிறது
நரசிம்மகுப்தர் (495 –)
- நரசிம்மகுப்தர் (Narasimhagupta Baladitya) வட இந்தியாவின் குப்தப் பேரரசின் 12வது பேரரசர் ஆவார். புருகுப்தரின் மகனான நரசிம்மகுப்தர், புத்தகுப்தருக்குப் பின் குப்தப் பேரரசர் ஆனவர். இவருக்கு நரசிம்மகுப்த பாலாதித்தியன் எனும் பட்டப் பெயரும் உண்டு. நரசிம்மகுப்தர், மால்வா மன்னர் யசோதருமனுடன் இணைந்து, ஹெப்தலைட்டுகளின் வழி வந்த வெள்ளை ஹூணர்களை வட இந்தியாவின் சமவெளிகளிலிருந்து விரட்டி அடித்தார்.
- நாளந்தாவில் கிடைக்கப் பெற்ற நரசிம்மகுப்தரின் களிமண் முத்திரைகள் வாயிலாக, நரசிம்மகுப்தரின் பட்டத்து ராணியின் பெயர் ஸ்ரீமித்ராதேவி எனவும், நரசிம்மகுப்தருக்குப் பின் மூன்றாம் குமாரகுப்தர் அரியணை ஏறியதாக அறியப்படுகிறது.
- நரசிம்மகுப்தர், கங்கைச் சமவெளியை ஆக்கிரமித்த ஹூணர்களின் தலைவர் மிகிரகுலனை வென்றதாகவும் அறியமுடியகிறது.
மூன்றாம் குமாரகுப்தர் (530 – 540)
- மூன்றாம் குமாரகுப்தர் (Kumaragupta III) பிற்கால குப்தப் பேரரசர் ஆவார். இவரது தந்தை நரசிம்மகுப்தருக்குப் பின் கி பி 530-இல் குப்தப் பேரரசின் அரியணை ஏறிய மூன்றாம் குமாரகுப்தர், கி பி 540 முடிய ஆட்சி புரிந்தார். கி பி ஐந்தாம் நூற்றாண்டின் நடுவில் ஹெப்தலைட்டுகள் எனும் வெள்ளை ஹூணர்கள், குப்தப் பேரரசை வடமேற்கிலிருந்து தொடர்ந்து தாக்கினர். மால்வா மன்னர் யசோதர்மனும், மூன்றாம் குமாரகுப்தரும் இணைந்து, ஹூணர்களின் தலைவன் மிகிரகுலனை கி பி 528-இல் தோற்கடித்தனர்.
- 1889-இல் பிதாரியில் கிடைத்த இவரது வெள்ளி நாணயங்கள் மற்றும் செப்பு மற்றும் வெள்ளி முத்திரைகள் மூலம், இவரது தந்தை நரசிம்மகுப்தர் மற்றும் பாட்டன் புருகுப்தர் என அறிய முடிகிறது.மேலும் நாளந்தாவில் கிடைத்த களிமண் முத்திரைகள் மூலம், முதலாம் குமாரகுப்தன் – ஆனந்ததேவிக்கும் பிறந்தவரே புருகுப்தர் எனக் குறிப்பிடுகிறது. இவருக்குப் பின் இவரது மகன் விஷ்ணுகுப்தர் அரியணை ஏறினார்.
- குப்தப் பேரரசு, இவரது ஆட்சிக் காலத்தில் ஹூணர்களின் தொடர் தாக்குதல்களால் வீழ்ச்சிப் பாதையில் சென்றது.
விஷ்ணுகுப்தர் (540 – 550):
- விஷ்ணுகுப்தர் (Vishnugupta) குப்தப் பேரரசர்களில் குறைவாக அறியப்பட்டவரும், இறுதி குப்தப் பேரரசரும் ஆவார். பகைவர்களின் தொடர் தாக்குதல்களால், வட இந்தியா முழுவதும் பரந்திருந்த குப்தப் பேரரசு விஷ்ணுகுப்தர் காலத்தில், மகத நாட்டளவில் சுருங்கியது.
- நரசிம்ம குப்தரின் பேரனும், மூன்றாம் குமாரகுப்தரின் மகனுமான விஷ்ணுகுப்தர், குப்த பேரரசை கி பி 540 – 550 முடிய ஆண்டதாக நாளந்தாவில் 1927-28-இல் அகழ்வாய்வின் போது கிடைத்த களிமண் முத்திரைகள் மூலம் அறியப்படுகிறது
பானுகுப்தர் (550 -)
- பானுகுப்தர் (Bhanugupta) பிற்கால குப்த ஆட்சியாளர்களில் மிகவும் குறைவாக அறியப்பட்டவர். பானுகுப்தர் கி பி 550-இல் ஹூணர்களின் தலைவர் தோரமணனை வென்றார்.
- மத்தியப் பிரதேசத்தின் ஏரணில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் பானுகுப்தரைப் பற்றிய செய்திகள் ஓரளவு கிடைக்கப் பெறுகிறது. பானுகுப்தரின் காலத்தில் குப்தப் பேரரசின் மேற்கு பகுதிகள் ஹூணர்களின் ஆக்கிரமிப்பிற்கு ஆளாயின.