ஷாஜகான் - முகலாயப் பேரரசு -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0


TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

முகலாயப் பேரரசு:

ஷாஜகான் (1627-1658)

  • ஷாஜகான் ஆக்ராவில் அரியணை ஏறியபோது அவருடைய நிலை பாதுகாப்பானதாகவும் சவால்களற்றதாகவும் இருந்தது. இருந்தபோதிலும் பேரரசின் நடப்பு நிகழ்வுகள் கவனத்தைக் கோரின. 
  • தெற்குப் பிராந்தியங்களின் ஆளுநராக இருந்த கான்ஜகான் எனும் பட்டப் பெயர் கொண்ட ஆப்கானாகிய பிர்லோடி பகைமை பாராட்டினார். தக்காண அரசிலிருந்து அவரை இடமாற்றம் செய்து ஷாஜகான் ஆணை பிறப்பித்திருந்தும் அவர் அகமதுநகர் சுல்தானான இரண்டாம் மூர்தசா நிஜாம்ஷாவுடன் இணைந்து ஷாஜகானுக்கு எதிராகச் சதிகளில் ஈடுபட்டார். நிலைமை தீவிரமடைந்தததைத் தொடர்ந்து ஷாஜகான் தானே நேரடியாகத் தக்காணத்திற்கு விரைந்தார். புதிதாகப் பதவியில் அமர்த்தப்பட்டத் தக்காண ஆளுநர் ஆசம்கான் எனும் பட்டத்தைப் பெற்ற இராதத்கான் பேரரசின் படைகளுக்குத் தலைமையேற்று பால்காட் பகுதியைத் தாக்கினார். பேரரசின் படைகளால் ஏற்பட்ட அழிவுகளைக் கண்ட மூர்தசா கான்ஜகானுடான தனது போக்கை மாற்றிக் கொண்டார். இதனால் கான்ஜகான் தௌலதாபாத்திலிருந்து தப்பி மாளவம் சென்றார். ஆனால் முடிவில் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். தக்காணத்தில் அமைதி திரும்பியது. 
  • ஷாஜகான் தக்காணத்தை விட்டுச் செல்லும் முன்பாக அப்பகுதியைத் தௌலதாபாத் உள்ளிட்ட அகமதுநகர், காண்டேஷ், பெரார், தெலுங்கானா என நான்கு மாநிலங்களாகப் பிரித்தார். அந்நான்கு மாநிலங்களுக்கும் ஆளுநராகப் பதினெட்டே வயது நிரம்பிய தனது மகன் ஔரங்கசீப்பை நியமித்தார்.
  • தக்காணம் இவ்வாறாக ஷாஜகான் காலத்தில் முகலாயப் பேரரசின் ஆற்றல் மிக்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. முகலாயருக்கு வலுவான போட்டியாளராகத் திகழ்ந்த அகமதுநகர் மாலிக் ஆம்பரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பேரரசோடு இணைக்கப்பட்டது. 
  • 1636இல் ஷாஜகான் மகபத்கானின் உதவியோடு அகமது நகரின் நிஜாம் ஷாஹி அரசர்களைப் பணியச் செய்தார். 
  • ஷியா பிரிவைச் சேர்ந்த கோல்கொண்டாவின் சுல்தான் தன் அமைச்சர் மீர்ஜூம்லாவைச் சிறையில் அடைத்ததைக் காரணம் காட்டி ஔரங்கசீப் கோல்கொண்டாவின் மீது படையெடுத்தார். உடன்படிக்கையொன்றும் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி குதுப்ஷாகி அரசர் முகலாயப் பேரரசுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசரானார்.

தக்காண சுல்தானியம் : மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகியவற்றின் பெரும் பகுதியையும் கர்நாடகத்தின் ஒரு பகுதியையும் கொண்டிருந்த பாமினி சுல்தானியம் ஒரு நூற்றாண்டுக் காலம் செல்வச் செழிப்போடு இருந்து பின்னர் சிதைவுற்றது. வலிமை வாய்ந்த பிரபுக்கள் கோல்கொண்டா (குதுப்ஷாஹி), பீஜப்பூர், (அடில்ஷாஹி), பெரார் (இமஷாஹி) பீடார், (பரித் ஷாஹி) அகமதுநகர், (நிஜாம் ஷாஹி) ஆகிய இடங்களில் புதிய அரசுகளைத் தோற்றுவித்தனர். இவையனைத்தும் கூட்டாகத் தக்காணச் சுல்தானியம் என்றழைக்கப்படுகிறது.

  • 1638இல் ஷாஜகான் பாரசீகப் பேரரசில் அரங்கேறிய அரசியல் சூழ்ச்சிகளைப் பயன்படுத்தி, அக்பரால் கைப்பற்றப்பட்டு ஜஹாங்கீரால் இழக்கப்பட்ட காந்தகாரைக் கைப்பற்றி இணைத்துக்கொண்டார்.
  • போர்த்துகீசியர் கோவாவில் ஒரு ஆளுநரைக் கொண்டிருக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தாலும் வங்காளத்தில் தங்களது குடியிருப்புகளைத் தொலை தூரத்திலிருந்த ஹூக்ளியில் பெற்றிருந்தனர். ஷாஜகான் இப்போர்த்துகீசியரை அவர்களின் குடியிருப்புகளிலிருந்து துரத்தும்படி வங்காள ஆளுநருக்கு உத்தரவிட்டார். ஹூக்ளியிலிருந்த 200 போர்த்துகீசியர் 600 இந்திய அடிமைகளுக்குச் சொந்தக்காரர்களாய் இருந்தனர். அவர்களில் பலரைப் போர்த்துகீசியர் கட்டாய மதமாற்றம் செய்து கிறித்தவர்களாக்கினர். மேலும் கோவாவிலிருந்த போர்த்துகீசியர் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதில் வீரமாகப் போராடினாலும் முகலாயப் படைகளால் எளிதாகத் தோற்கடிக்கப்பட்டனர்.
  • 1641இல் ஷாஜகானின் அமைச்சரும் மாமனாருமான ஆசப்கான் மரணமடைந்தார். ஆசப்கானின் தமக்கையும் ஷாஜகானின் முன்னாள் எதிரியுமான நூர்ஜகான் 1645 டிசம்பர் வரை உயிரோடிருந்தார். ஓய்வு பெற்றபின் அவர் வேறு பிரச்சனைகள் எதையும் ஏற்படுத்தவில்லை.

முகலாயர் காலத்து ஐரோப்பியக் குடியேற்றங்கள்:

  • போர்த்துகீசியர்: 1510இல் அல்புகர்க் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றி அதைக் கீழ்த்திசை போர்த்துகீசியப் பேரரசின் தலைநகராக்கினார். தொடர்ந்து மேற்குக் கடற்கரையில் டாமன், சால்செட், பம்பாய் ஆகிய இடங்களிலும், கிழக்குக் கடற்கரையில் சென்னைக்கு அருகே சாந்தோம், வங்காளத்தில் ஹூக்ளி ஆகிய இடங்களிலும் போர்த்துகீசியர் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.
  • டச்சுக்காரர்: டச்சுக்காரர்கள் மசூலிப்பட்டினம் (1605), புலிக்காட் (பழவேற்காடு 1610), சூரத் (1616), பிமிலிபட்டினம் (1641), காரைக்கால் (1645), சின்சுரா (1653) காசிம்பஜார், பாராநகர், பாட்னா , பாலசோர், நாகப்பட்டினம் (அனைத்தும் 1658), கொச்சி (1663) ஆகிய இடங்களில் தங்களது வணிகநிலையங்களை ஏற்படுத்தினர்.
  • டேனியர்: டென்மார்க் நாட்டினரும் இந்தியாவில் வணிகக் குடியிருப்புகளை ஏற்படுத்தினர். தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் 1620இல் குடியேற்றத்தை நிறுவினர். வங்காளத்தில் செராம்பூர் அவர்களின் தலைமையிடமாக இருந்தது.
  • பிரெஞ்சுக்காரர்: சூரத் (1668), மசூலிப்பட்டினம் (1669), அப்போது சிறுகிராமமாக இருந்த புதுச்சேரி (1673), வங்காளத்தின் சந்தன்நகர் (1690) ஆகியவை பிரெஞ்சுக்காரரின் தொடக்ககாலக் குடியேற்றங்களாகும். பின்னர் மலபாரில் உள்ள மாஹி, சோழமண்டலக் கடற்கரையில் ஏனாம் (இரண்டும் 1725இல்), காரைக்கால் (1739) ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
  • ஆங்கிலேயர்: முதலில் கம்பெனி சூரத்தில் ஒரு வணிகச்சாவடியை நிறுவியது (1612இல் அங்கு ஒரு வணிக நிறுவனம் / பண்டகசாலை அமைக்கப்பட்டது). பின்னர் சென்னை (1639), பம்பாய் (1668), கல்கத்தா (1690) ஆகியவற்றைப் பெற்றது. கம்பெனி பல வணிகக் குடியேற்றங்களைப் பெற்றிருந்தாலும் கல்கத்தா வில்லியம் கோட்டையும், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையும், பம்பாயிலுள்ள மாளிகையும் ஆங்கிலேயரின் மிக முக்கியமான வணிகக் குடியேற்றங்களாகும்.
  • பிரான்ஸ் அரசன் XIV லூயியின் சமகாலத்து அரசனான ஷாஜகான் முப்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவருடைய காலத்தில்தான் அரசருக்காகப் புகழ்பெற்ற மயிலாசனம் செய்யப்பட்டது. பெர்னியர் (பிரெஞ்சு மருத்துவர், பயணி), தாவர்னியர் (பிரெஞ்சு வைர வியாபாரி, பயணி), மான்டெல்சோ (ஜெர்மன் பயணி மற்றும் துணிச்சல் வீரர்), பீட்டர் முன்டி, (இங்கிலாந்து வணிகர்), மனுச்சி (இத்தாலிய எழுத்தாளர் மற்றும் பயணி) ஆகிய ஐரோப்பியர்கள் ஷாஜகானின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வந்தனர். இந்தியா குறித்த விரிவான விவரங்களை எழுதிச் சென்றனர்.
ஷாஜகானின் இறுதி நாட்களில் அவரது நான்கு மகன்களிடையே அரியணைக்கான போட்டி ஏற்பட்டது. மூத்த மகன் தாராஷூகோ அரசனாவதை ஷாஜகான் விரும்பினார். தாராஷூகோ பட்டத்து இளவரசனாக அறிவிக்கப்பட்டதால் மற்ற சகோதரர்கள் வெறுப்புக் கொண்டனர். மூன்றாவது மகனான ஒளரங்கசீப், மனிதர்களையும் சூழ்நிலைகளையும் சரியாக எடை போடுபவராகவும் சிறந்த திட்டமிடல் கொண்டவராகவும் இரக்கமற்றவராகவும் இருந்தார். தாராஷூகோ சன்னி இஸ்லாமியப் பிரிவைச் சேர்ந்தவராயினும் சூபி தத்துவங்களின் மேல் ஆர்வம் கொண்டிருந்தார். ஷாஜகானின் நான்கு மகன்களிடையே நடைபெற்ற வாரிசுரிமைப் போரில் மூன்றாவது மகன் ஔரங்கசீப் வெற்றி பெற்றார்.
  • ஷாஜகானைச் வீட்டுச் சிறையிலடைத்த ஒளரங்கசீப் முகலாயப் பேரரசராக முடிசூட்டிக் கொண்டார். மனம் உடைந்துபோன ஷாஜகான் ஒரு அரண்மனைக் கைதியாகவே 1666 ஜனவரி மாதம் மரணமடைந்தார். தாஜ்மஹாலில் அவரது மனைவியின் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார்.
  • தில்லி அரியணைக்கான வாரிசுரிமைப் போரில் ஔரங்கசீப்பிடம் தோற்றுப்போன தாராஷூகோ தத்துவஞான இளவரசர் என அறியப்பட்டார். பல்வேறு பண்பாடுகளை உரையாடலுக்கு உட்படுத்திய அவர் இந்து மதத்திற்கும் இஸ்லாத்துக்குமிடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதைக் கண்டறிந்தார். சமஸ்கிருத மொழியிலமைந்த உபநிடதங்களைப் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.

தாஜ்மஹால் : 

  • தாஜ்மஹால் முகலாயக் கட்டடக் கலையின் சிறப்புமிக்க வடிவமாகும். அது இந்தியப்பாரசீக இஸ்லாமியக் கட்டடக் கலைகளின் கூட்டுக் கலவையாகும்.
  • 1612இல் திருமணமானதில் தொடங்கி 1631இல் குழந்தைப்பேறின் போது மரணமடையும் வரை இணைபிரியாமல் உற்ற துணையாய் இருந்த தனது மனைவி மும்தாஜுக்கு அழியாப் புகழை அளிப்பதற்காக ஷாஜகான் தாஜ்மஹாலைக் கட்டினார். 
  • பாரசீக வம்சாவளியைச் சேர்ந்த இந்தியராகிய உஸ்தத் அகமத் லஹாவ்ரி என்பவர் தலைமைக் கட்டடக்கலை நிபுணராக இருந்தாலும் இவ்வளாகத்திற்கான வரைபடத்தைத் தயாரித்த பெருமை இக்காலகட்டத்தைச் சேர்ந்த கட்டடக்கலை நிபுணர்களைச் சாரும். 
  • இவ்வளாகம் தலைவாயில், தோட்டம், மசூதி, கல்லறைமாடம் (மினார் என்றழைக்கப்படும் நான்கு கோபுரங்கள்) ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுத் தனித்தன்மை வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டது. 
  • 1632இல் கட்டிட வேலைகள் தொடங்கின. இந்தியா, பாரசீகம், உதுமானியப் பேரரசு, ஐரோப்பா ஆகியவற்றிலிருந்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கல்லறை மாடப்பணியை 1638-39இல் முடிப்பதற்காகப் பணியமர்த்தப்பட்டனர். அருகிலுள்ள ஏனைய கட்டடங்கள் 1643இல் முடிவடைந்தன. அலங்கார வேலைகள் குறைந்தபட்சம் 1647 வரை தொடர்ந்தது. 


முகலாயப் பேரரசு:

Post a Comment

0Comments

Post a Comment (0)