அனைத்து வாகனங்களுக்கும் வரிகள் உயர்த்தும் சட்ட மசோதா:
மோட்டார் சைக்கிள்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரி விதிப்பு சட்டம், 1974ல் வரிகளை உயர்த்தி, புதன்கிழமையன்று மாநில சட்டமன்றம் திருத்தியமைத்ததால், தமிழகத்தில் புதிய மோட்டார் வாகனங்களை பதிவு செய்வதற்கு அதிக செலவாகும்.
சென்னை, சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- வரி உயர்வு போக்குவரத்தில் பல்வேறு வரி விதிப்பு முறைகளை பல்வேறு ஆண்டுகளில் அரசு மேற்கொண்டுள்ளது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு வரிகளை அரசு உயர்த்தவில்லை. தற்போது வாகனங்களின் மீது விதிக்கப்படும் வரிகளில் இருந்து பெறப்படும் வருமானம் குறைவாக உள்ளது. இதனால் அரசுக்கு குறைவான வருவாய்தான் கிடைக்கிறது. எனவே மாநிலத்தின் நிதி வளத்தை உயர்த்துவதற்காக தமிழ்நாடு இயக்கூர்திகள் வரி விதிப்பு சட்டத்தில், நடைமுறையில் உள்ள வரிவிதிப்பு முறைகளை திருத்தம் செய்வது என அரசு முடிவு செய்துள்ளது. அந்த திருத்தங்களை மேற்கொள்ள இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
எந்த வகை வாகனங்கள்?
அதன்படி, சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், 'கேப்'கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி நிர்ணயிக்கப்படுகிறது. சரக்கு வாகனங்களில், சரக்கு ஏற்றிய பிறகு 3 ஆயிரம் கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ.3,600 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதுபோல 3 ஆயிரம் - 5,500 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு காலாண்டு வரியாக ரூ.1,425 முதல் ரூ.3,100 வரை எடைக்கு ஏற்ப வரி உயர்த்தப்பட்டு உள்ளது. வாடகைக்கு இயக்கப்படும் மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில், சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கான (டிரைவர் மற்றும் கண்டக்டர் நீங்கலாக 35 பேர் பயணிக்கும் கொள்ளளவு கொண்ட வாகனம்) காலாண்டு வரி ரூ.4,900; 35-க்கும் அதிகமானோர் பயணிக்கும் வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம்; படுக்கையுடன் கூடிய ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் (இருக்கையும், படுக்கையும் உள்ளவை) வரை வரி உயர்த்தப்படுகிறது.
மேல்வரி :
இழுவை வண்டிகளுக்கு (டிரெய்லர்) ஏற்றப்படும் எடையின் கொள்ளளவுக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.1,800 வரை வரி உயர்த்தப்படுகிறது. சென்னை மற்றும் மதுரை, கோவை நகர சுற்றுப்பகுதிகளில் பிரத்யேகமாக இயக்க அனுமதிக்கப்பட்ட பஸ்களுக்கு மேல்வரி விதிக்கப்படுகிறது. எடையேற்றப்பட்ட நிலையில் 600 கிலோவுக்கு மிகாத, 50 சி.சி. உள்ள வாகனங்களுக்கு ஆண்டு வரி ரூ.135 முதல் ரூ.240 வரை அவற்றின் சி.சி.க்கு ஏற்ப ஆண்டு வரி விதிக்கப்படுகிறது. பயணிகள் போக்குவரத்து மற்றும் வாடகைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு (டிரைவர் அடங்கலாக 4 பேர் பயணிக்கும் வாகனங்கள்) 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6 ஆயிரம் வரை பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வரி உயர்த்தப்படுகிறது. கட்டுமான தளவாட வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ.15 ஆயிரம்; மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் போக்குவரத்திற்கான கல்வி நிறுவன பஸ்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.45; பணியாளர்களின் போக்குவரத்திற்கான பிற நிறுவனங்களின் வாகனங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.100 என்ற வீதத்தில் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.
மோட்டார் சைக்கிள் :
புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாத நிலையில் அதன் விலையில் 10 சதவீதம்; ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் என்றால் 12 சதவீதம் என நிர்ணயிக்கப்படுகிறது. பழைய மோட்டார் சைக்கிள்களில், ஒரு ஆண்டு பழையதாக உள்ளவற்றுக்கு 8.25 சதவீதம் (ஒரு லட்சம் ரூபாய்க்கு உட்பட்டவை) மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டவற்றுக்கு 10.25 சதவீதம்; 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் பழையதாக உள்ளதற்கு (ஒரு லட்சம் ரூபாய்க்கு உட்பட்டவை) 8 சதவீதம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டவற்றுக்கு 10 சதவீதம் என வாழ்நாள் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது. 2 முதல் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி கொண்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, குறைந்தது 6 சதவீதத்தில் இருந்து அதிகபட்சம் 9.75 சதவீதம் வரை (அதன் விலைக்கு ஏற்ப) நிர்ணயிக்கப்படுகிறது. புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, 5 லட்சம் ரூபாய்க்கு மிகாத நிலையில் அதன் விலையில் 12 சதவீதம்; ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை என்றால் 13 சதவீதம்; ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை என்றால் 18 சதவீதம், ரூ.20 லட்சத்திற்கு மேற்பட்டவற்றுக்கு 20 சதவீதம் என நிர்ணயிக்கப்படுகிறது. இந்த 4 வகையிலான விலைகளிலுள்ள வாகனங்களில் ஒரு ஆண்டு முதல் 11 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, அதன் விலையில் 8 சதவீதம் முதல் 18.75 சதவீதம் வரை நிர்ணயிக்கப்படுகிறது.
பசுமை வரி :
மேலும் 15 ஆண்டுகள் நிறைவடையாத மோட்டார் சைக்கிள்களுக்கு 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750; மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ரூ.1,500 என நிர்ணயிக்கப்படுகிறது. புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி, மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்களுக்கு ரூ.2,250, மற்ற வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம் என நிர்ணயிக்கப்படுகிறது. டிரைவர் சேர்த்து 7 முதல் 13 பேர் வரை ஏற்றக்கூடிய புதிய சுற்றுலா வாடகை கார்களுக்கான வாழ்நாள் வரி, அதன் விலையில் 12 சதவீதம் (ரூ.5 லட்சத்துக்கு உட்பட்டவை); 13 சதவீதம் (ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சத்துக்கு உட்பட்டவை); 18 சதவீதம் (ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சத்துக்கு உட்பட்டவை); 20 சதவீதம் (ரூ.20 லட்சத்துக்கும் மேற்பட்டவை) என நிர்ணயிக்கப்படுகிறது. அரசின் கொள்கைப்படி பேட்டரி வாகனங்களுக்கு வரி இல்லை.