டெல்லி சுல்தான் துக்ளக் வம்சம்
டெல்லி சுல்தான் துக்ளக் வம்சம்:ஆட்சியாளர்களின் பட்டியல்
- கியாத் அல்-தின் (கியாசுதீன்) துக்ளக் 1320-1325
- முகமது பின் துக்ளக் 1325-1351 (முஹம்மது ஷா II என்றும் அழைக்கப்படுகிறார்)
- மஹ்மூத் இபின் முஹம்மது 1351 (மார்ச்)
- ஃபிரோஸ் ஷா துக்ளக் 1351-1388 (முகமது பின் துக்ளக்கின் உறவினர்)
- கியாஸ்-உத்-தின் துக்ளக் II 1388-1389
- அபுபக்கர் ஷா 1389-1390
- நசீர் உதின் முஹம்மது ஷா III 1390-1393
- அலா உதின் சிக்கந்தர் ஷா I 1393
- மஹ்மூத் நசீர் உத் தி0ன் 1393-1394 (சுல்தான் மஹ்மூத் II என்றும் அழைக்கப்படுகிறார்
- நசீர்-உத்-தின் நுஸ்ரத் ஷா துக்ளக் 1394-1399 (ஃபிரோஸ் ஷா துக்ளக்கின் பேரன்)
- நசீர் உத் தின் மஹ்மூத் 1399-1412
கியாசுதீன் துக்ளக் (1320-1325)
- கியாசுதீன் துக்ளக், பிரபுக்கள் வகுப்பினருடன் சமரசக் கொள்கையைப் பின்பற்றினார்.
- அவரது ஐந்தாவது ஆட்சி ஆண்டில் (1325) கியாசுதீன் இறந்தார்.
- மூன்று நாள்கள் கழித்து ஜானாகான் என்ற இயற்பெயர் கொண்ட அவரது மகன் ஆட்சிக் கட்டில் ஏறியதோடு முகமது-பின்-துக்ளக் எனும் பட்டத்தை சூட்டிக்கொண்டார்
முகமது-பின்-துக்ளக் (1325-1351)
- முகமது-பின்-துக்ளக், கற்றவர், நற்பண்பு நிறைந்தவர், திறமை வாய்ந்த அரசர் என்றபோதிலும் இரக்கமற்றவர், கொடூரமானவர், நியாயமற்றவர் என்றும் பெயர் பெற்றிருந்தார்.
- தில்லிக்கு அருகே மீரட் வரையிலும் அணிவகுத்து வந்த மங்கோலியப் படையை முகமது பின் துக்ளக் திறமையாகப் பின்வாங்கச் செய்தார். ஆனால், அலாவுதீன் போல் தமது திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் மனவுறுதி முகமதுக்கு இல்லை.
- தலைநகர் மாற்றம் : தில்லியிலிருந்து தென்னிந்தியாவை ஆள்வது கடினம் என்று முகமது-பின்-துக்ளக் கருதினார். எனவே, தலைநகரை தௌலதாபாத்துக்கு மாற்றும் துணிவான முயற்சியை மேற்கொண்டார். மகாராட்டிரத்திலுள்ள தேவகிரிக்கு முகமது-பின்-துக்ளக் சூட்டிய மறுபெயரே தௌலதாபாத் இந்தியாவின் நடுவில் அமைந்திருக்கிறதேவகிரிக்குப், பாறைப்பாங்கான மலையின் உச்சியில் ஒரு வலுவான கோட்டையைக் கொண்டிருக்கிற சாதகமான அம்சமும் இருந்தது. இராணுவ, அரசியல் சாதகங்களை மனத்தில் கொண்டு முக்கியமான அதிகாரிகளையும் சூஃபி துறவிகள் உள்பட பல முன்னணிப் பிரமுகர்களையும் தேவகிரிக்கு இடம் மாறுமாறு சுல்தான் ஆணையிட்டார். ஆயினும் இந்தத் திட்டம் தோல்வியைத் தழுவியது. தௌலதாபாதிலிருந்து வட இந்தியாவை ஆள்வது கடினம் என்று முகமது-பின்-துக்ளக் விரைவிலேயே உணர்ந்தார். எனவே மீண்டும் தலைநகரை தில்லிக்கு மாற்ற உத்தரவிட்டார்.
- அடையாள நாணயங்கள் : முகமது-பின்-துக்ளக் மேற்கொண்ட அடுத்த முக்கியமான பரிசோதனை அடையாள நாணயங்களை அறிமுகப்படுத்தியதாகும். இந்த நாணய முறை ஏற்கெனவே சீனாவிலும் ஈரானிலும் நடைமுறையிலிருந்தது. இந்தியாவில் நாணயங்களின் மதிப்பு அதிலிருந்த வெள்ளி உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஆனால் துக்ளக்கின் முயற்சி காலத்திற்கு முன் எடுத்த முயற்சியாகிவிட்டது. வெண்கல நாணயங்களைப் போலியாக அடிப்பது எளிதாயிருந்தது; அரசாங்கம் அதைத் தடுக்க முடியவில்லை. வெண்கல நாணயங்களைத் திரும்பப்பெற வேண்டிய அளவுக்குப் புதிய நாணயங்கள் மதிப்பிழக்கத் தொடங்கின. இதனால் மீண்டும் வெள்ளி நாணயங்களை அரசாங்கம் வெளியிட்டு அதை ஈடுசெய்ய வேண்டியதாயிற்று.
- சுல்தான் மேற்கொண்ட புதுமை நடவடிக்கைகள் : வேளாண்மையை விரிவாக்குகிற முகமது-பின்-துக்ளக்கின் திட்டம் புதுமையானது என்றாலும் அதுவும் துயரகரமாகத் தோற்றது. தோவாப் சமவெளிப் பகுதியில் ஒரு நீண்டகாலக் கடும் பஞ்சம் ஏற்பட்டிருந்த நேரத்தில் இம்முயற்சி எடுக்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கடுமையாக நடத்தப்பட்டனர்; கொடூரமாகத் தண்டிக்கப்பட்டனர். இந்தப் பஞ்சம், தாங்கமுடியாத முறையற்ற நில வரி வசூலுடன் இனங்காணப்பட்டது. வேளாண்மையைக் கவனித்துக்கொள்ள ஒரு தனித் துறையை (திவான்-இ-அமிர் கோஹி) சுல்தான் ஏற்படுத்தினார். கால்நடைகளையும் விதைகளையும் வாங்க, கிணறுகள் வெட்ட விவசாயிகளுக்குக் கடன் தரப்பட்டது என்றாலும் இது பயன்தரவில்லை. பயிர்களைக் கண்காணிக்கப் பணியமர்த்தப்பட்ட அலுவலர்கள் திறம்படச் செயல்படவில்லை
- தொலைவிலுள்ள பகுதிகளை பயனளிக்கும் வகையில் நிர்வகிக்க இயலாது என்பதை நன்கறிந்த அலாவுதீன் அவற்றை இணைத்துக் கொள்ளவில்லை. அவற்றின் மீது தமது மேலாண்மையை நிறுவுவதையே அவர் விரும்பினார். ஆனால், முகமது பின் - துக்ளக், தான் வென்ற அனைத்து பகுதிகளையும் இணைத்துக்கொண்டார். எனவே, அவரது இறுதி காலத்தில் அடுத்தடுத்து கிளர்ச்சிகளை சந்தித்தார்; அவரது ஒடுக்குதல் நடவடிக்கைகள் மக்களை மேலும் அவரிடமிருந்து அந்நியப்படுத்தின. வங்கம், மதுரை, வாரங்கல், ஆவாத், குஜராத், சிந்து ஆகிய தொலைதூரப் பகுதிகள் ஒன்றுக்கு பின் ஒன்றாக கிளர்த்தெழுந்தன. கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிடுவதிலேயே முகமது தமது கடைசி நாட்களைக் கழித்தார். குஜராத்தில் ஒரு கிளர்ச்சித் தலைவரை விரட்டிச் செல்வதில் ஈடுபட்டிருந்தபோது உடல் நலம் கெட்டு, தனது 26வது ஆட்சியாண்டின் (1351) முடிவில் முகமது பின் துக்ளக் இறந்தார்.
ஃபெரோஸ் ஷா துக்ளக் (1351-1388)
- ஃபெரோஸின் தந்தை ரஜப், கியாசுதீன் துக்ளகின் தம்பி ஆவார்.
- இருவருமே அலாவுதீன் கில்ஜியின் ஆட்சிக் காலத்தில் குரசனிலிருந்து வந்தவர்கள்.
- ரஜப், ஒரு ஜாட் இளவரசியை மணந்திருந்தார்.
- ஃபெரோஸுக்கு ஏழு வயதான போது அவர் இறந்துவிட்டார்.
- கியாசுதீன் ஆட்சிக்கு வந்த போது, ஃபெரோஸை, 12,000 குதிரை வீரர்களைக் கொண்ட சிறப்புப் படைக்குத் தளபதியாக்கினார்.
- பின்னர், சுல்தானியத்தின் நான்கு பிரிவுகளில் ஒன்றின் பொறுப்பு ஃபெரோஸிடம் கொடுக்கப்பட்டது.
- முகமது-பின்-துக்ளக், தனது வாரிசை அறிவிக்காமலேயே இறந்திருந்தார். முகமதுவின் சகோதரி, தனது மகனுக்கு ஆட்சி உரிமை கோரியதைப் பிரபுக்கள் ஆதரிக்கவில்லை .
- முகமதுவின் வாழ்நாள் நண்பர் கான்-இ-ஜஹன் பரிந்துரைத்த முகமதுவின் மகன் ஒரு குழந்தையாக இருந்தார். எனவே ஃபெரோஸ் ஆட்சியில் அமர்ந்தார்.
- ஃபெரோஸ் துக்ளக்கிடம் ஓர் உயரதிகாரியாக இருந்த புகழ் பெற்ற கான்-இ-ஜஹான், இஸ்லாமுக்கு மாறிய ஒரு பிராமணர்.
- ஆதியில், கண்ணு என்று அறியப்பட்ட அவர், (தற்போதைய தெலங்கானாவின்) வாரங்கல்லில் நிகழ்ந்த சுல்தானியப் படையெடுப்பு ஒன்றின் போது சிறைப் பிடிக்கப்பட்டவர்.
- பிரபுக்களுடன் சமரசக் கொள்கை :பிரபுக்கள் வகுப்பினரிடமும் மதத் தலைவர்களிடமும் ஃபெரோஸ் துக்ளக், சமரசக் கொள்கையைக் கடைப்பிடித்தார். அலாவுதீன் ஆட்சியில் பறிக்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. அலாவுதீன் ஆதரிக்காத ஒரு நடைமுறையான, அலுவலர்களைப் பரம்பரையாகப் பணியமர்த்துகிற முறையை ஃபெரோஸ் மீண்டும் அறிமுகப்படுத்தினார். அரசாங்க அலுவலர்களின் ஊதியத்தை அதிகப்படுத்தினார். வருவாய் நிர்வாகத்தை ஒழுங்கு செய்கிற போது, பல வரிகளைக் குறைத்தார். அதே நேரத்தில் அரசு நிதி வீணாகச் செலவழிக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்துகொண்டார். அவருக்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர் செயல்படுத்திய பல்வேறு சித்திரவதை முறைகளை ஒழித்தார். அடிமைகள் குறித்து ஃபெரோஸுக்கு ஒரு மெய்யான அக்கறை இருந்தது. அவர்களது நலன்களைக் கவனிப்பதற்காகத் தனியே ஓர் அரசுத்துறையை ஏற்படுத்தினார். 1,80,000 அடிமைகளின் நல்வாழ்க்கையில் அடிமைகள் நலத்துறை, அக்கறை செலுத்தியது. கைவினைத் தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, அரசாங்கத்தின் தொழில் கூடங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
- போர்கள் வேண்டாம் என்ற ஃபெரோஸின் கொள்கை : ஃபெரோஸ் துக்ளக், போர்கள் எதுவும் தொடுக்கவில்லை. இருப்பினும், கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அவரது வங்கப் படையெடுப்பு ஒரு விதிவிலக்காகும். அவரது படை வங்கத்திலிருந்து திரும்புகிற வழியில் திடீரென்று ஒரிசாவுக்குள் நுழைந்தது; திறை செலுத்த ஒப்புக்கொள்ளும் வாக்குறுதியை அப்பகுதி அரசரிடமிருந்து பெறுவதற்கு இது உதவியது. அவரது காலத்தில் இரண்டு மங்கோலிய தாக்குதல்களே நிகழ்ந்தன; அவ்விரண்டுமே வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. அவரது காலத்திய ஒரே பெரிய இராணுவப் படையெடுப்பு, சிந்துவின் மீது தொடுக்கப்பட்டதாகும் (1362). எதிரிகளை வழியிலேயே நிலைகுலைய வைத்து ஃபெரோஸ் வெற்றிபெற்றார். எனினும் அவரது எதிரிகளும் அப்போது ஏற்பட்ட ஒரு பஞ்சமும் சுல்தானுக்கும் அவரது படைக்கும் ஒரு கடுமையான சோதனையை ஏற்படுத்தின. இருப்பினும் ஃபெரோஸின் இராணுவம் சமாளித்து சிந்துவை அடைந்தது. சிந்துவின் அரசர், சுல்தானிடம் சரணடையவும் திறை செலுத்தவும் இணங்கினார்.
- மதக் கொள்கை : வைதீக இஸ்லாமை ஃபெரோஸ் ஆதரித்தார். மதத் தலைவர்களை மன நிறைவுறச் செய்வதற்காக தமது அரசை இஸ்லாமிய அரசாக அறிவித்தார். மதவிரோதிகள் கொடுமை செய்யப்பட்டனர்; மேலும் இஸ்லாமிய விரோத நடைமுறைகள் என கருதப்பட்டவை தடை செய்யப்பட்டன. இஸ்லாமியர் அல்லாதவருக்கு ‘ஜிஸியா’ எனும் வரியை விதித்தார். பிராமணர்களும் அதைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். இருப்பினும் புதிய இந்துக் கோவில்கள் கட்டுவதை ஃபெரோஸ் தடை செய்யவில்லை. அவரது பண்பாட்டு ஆர்வம், மதம், மருத்துவம், இசை தொடர்பான பல சமஸ்கிருத நூல்களை மொழிபெயர்ப்பதற்கு வித்திட்டது. பல்வகைப் பண்புகள் நிறைந்த ஓர் அறிஞரான ஃபெரோஸ், இஸ்லாமியர் - அல்லாதார் உள்படக் கற்றிந்தவர்களை மனத்தடையின்றி ஆதரித்தார். இசையில் விருப்பம் கொண்டிருந்தார். பல கல்வி நிறுவனங்களையும், மசூதிகளையும் அரண்மனைகளையும் கோட்டைகளையும் நிறுவினார்.
- ஜிஸியா என்பது இஸ்லாமிய அரசுகளால் அவர்களின் நிலத்தில் வாழும் இஸ்லாமியர் அல்லாத குடிமக்களின் தலைக்கு இவ்வளவு என விதித்து வசூலிக்கப்பட்ட ஒரு வரியாகும். இதன் மூலம் அவர்கள் உரிமைகள் உறுதி செய்யப்பட்டன. இந்தியாவில் முதன்முறையாக இஸ்லாமியர் அல்லாதார் மீது ஜிஸியா விதித்தவர் குத்புதீன் ஐபக். முகலாய அரசர் அக்பர், பதினாறாம் நூற்றாண்டில் ஜிஸியாவை ஒழித்தார் என்றாலும், பதினேழாம் நூற்றாண்டில் ஒளரங்கசீப் அவ்வரியை மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
- பொதுப் பணிகள் : பல பாசனத் திட்டங்களை ஃபெரோஸ் மேற்கொண்டார். சட்லெஜ் நதியிலிருந்து ஹன்ஸிக்கு வெட்டிய கால்வாயும் யமுனையில் வெட்டிய மற்றொரு கால்வாயும் அவரது வலுவான பொதுப் பணி வளர்ச்சிக் கொள்கையைச் சுட்டுகின்றன.
- தனது மகன் பதே கானையும் பேரன் கியாசுதீனையும் தில்லி சுல்தானியத்தின் இணை ஆட்சியாளர்களாக ஆக்கிய பிறகு, 1388இல் ஃபெரோஸ் இறந்தார்.
- பிரபுக்கள் வகுப்பினருக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பரம்பரை உரிமை, இராணுவத்திலும் செயல்படுத்தப்பட்டது. இது தில்லி சுல்தானியத்தை வலுவிழக்கச் செய்தது. அதிகாரத்தை மீண்டும் பெற்ற பிரபுக்களின் அரசியல் தலையீடுகள் அரசு நிலைகுலையும் அளவுக்கு இட்டுச்சென்றது. ஃபெரோஸ் துக்ளக் இறந்த ஆறு ஆண்டுகளுக்குள் அவரைத் தொடர்ந்து நால்வர் ஆட்சி புரிந்தனர்.
கடைசி துக்ளக் அரசர் நசுருதீன் முகமது ஷா (1394-1412) :
- இவரது ஆட்சியின் போதுதான் மத்திய ஆசியாவிலிருந்து தைமூரின் படையெடுப்பு நிகழ்ந்தது.
- தைமூர், பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாபெரும் மங்கோலிய அரசர் செங்கிஸ்கானுடன் இரத்த உறவு இருப்பதாகக் கூறத்தக்க துருக்கியர். உள்ளபடியே எந்த எதிர்ப்புமின்றித் தைமூர் தில்லியைச் சூறையாடினார்.
- தைமூர் வந்து சேர்ந்த செய்தியைக் கேட்ட சுல்தான் நசுருதீன் தில்லியை விட்டுத் தப்பி ஓடிவிட்டார். கொல்லர், கல்தச்சர், தச்சர் போன்ற இந்திய கைவினைஞர்களைச் சிறைபிடித்துச் சென்ற தைமூர், தனது தலைநகர் சாமர்கண்டில் கட்டடங்களை எழுப்புவதில் அவர்களை ஈடுபடுத்தினார். நசுருதீன் 1412 வரையிலும் சமாளித்து ஆட்சி செய்யமுடிந்தது. பிறகு வீழ்ந்து கொண்டிருந்த பேரரசை சையது லோடி வம்சங்கள் 1526 வரையிலும் தில்லியிலிருந்து ஆண்டனர்.