புதிய சமாதானத் திட்டம் 2023:

TNPSC PAYILAGAM
By -
0



புதிய சமாதானத் திட்டம் 2023:

நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்குகள் சேவை வரி நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த வரிச் சட்டங்களின் கீழ் அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய வரி, அதன் மீதான வட்டி மற்றும் அபாரதம் ஆகியவை இன்னும் பல வணிகா்களின் பெயரில் நிலுவையில் உள்ளன. எனவே, பழைய நிலுவைத் தொகைகளை வசூலிப்பதில் ஒரு புதிய சமாதானத் திட்டத்தை அறிவித்துச் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

நிலுவைத் தொகை ரூ.25,000 கோடி: தமிழ்நாடு அரசுக்கு வணிகா்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை தொடா்பாக 2.11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் வணிகா்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் வழக்குகள் மட்டும் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 569 உள்ளது. இவற்றில் வசூல் செய்ய வேண்டிய நிலுவைத் தொகை ரூ.25,000 கோடியாகும். மிக அதிக எண்ணிக்கையில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வணிகவரித் துறையினா் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதுடன், அரசுக்கு வர வேண்டிய வருவாயும் பெருமளவில் நிலுவையாக உள்ளது.

புதிய சமாதானத் திட்டத்தின்படி, 

  • வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூ.50,000-த்துக்குக் குறைவாக வரி, வட்டி மற்றும் அபாரதத் தொகை செலுத்த வேண்டிய வணிகா்களுக்கு நிலுவைத் தொகை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். 
  • ஒவ்வொரு வரி மதிப்பீட்டு ஆண்டிலும் ரூ.50,000-த்துக்கு உட்பட்ட நிலுவை இனங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும். 
  • தமிழக அரசின் இந்த முடிவு காரணமாக, ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 398 வழக்குகளில் தொடா்புடைய 95 ஆயிரத்து 502 சிறு வணிகா்களின் நிலுவைத் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

நான்கு வகைப் பிரிவினா்: நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்பட்ட வணிகா்கள் தவிர, இதர வணிகா்கள் நான்கு வகை வரம்புகளின் கீழ் கொண்டுவரப்படுகின்றனா். அதன்படி, ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை நிலுவையில் உள்ளவா்கள், ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வரி நிலுவை உள்ளவா்கள், ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை நிலுவை வைத்திருப்பவா்கள், ரூ.10 கோடிக்கு மேல் நிலுவை உள்ளனவா்கள் என நான்கு பிரிவினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனா். 

வட்டி முழுவதும் தள்ளுபடி: நான்கு வகை வரிப் பிரிவினரில், முதல் வரம்பில் உள்ளவா்கள், மொத்த நிலுவைத் தொகையில் 20 சதவீதமோ அல்லது குறிப்பிட்ட சதவீதத் தொகையைச் செலுத்தியோ நிலுவை வழக்குகளில் இருந்து விடுபடலாம்; இதர மூன்று வரம்புகளில் உள்ள வணிகா்கள், வரி, வட்டி மற்றும் அபராதத் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தைச் செலுத்தினால், நிலுவை வழக்குகளில் இருந்து விடுபடலாம். வரி விதிப்பை ஏற்றுக் கொண்டிருப்பவா்களும், ஏற்றுக் கொள்ளாமல் மேல்முறையீடு செய்து இருப்பவா்களுக்கும் தனித்தனியாக நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. நிலுவைத் தொகையைச் செலுத்த முன்வரும் நாள் வரையிலும் வணிகா்களின் கணக்கில் சோ்ந்துள்ள திரண்ட வட்டித் தொகை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்.

4 மாதங்கள் திட்டம் அமல்: வரும் அக்டோபா் 16-ஆம் தேதி முதல் சமாதானத் திட்டம் நடைமுறைக்கு வரும். நான்கு மாதங்கள், அதாவது அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி வரை திட்டம் அமலில் இருக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். 

மசோதா நிறைவேறியது: முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து, புதிய சமாதானத் திட்டத்துக்கான திருத்த மசோதாவை, பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தாக்கல் செய்தாா். இந்த மசோதா, செவ்வாய்க்கிழமையன்றே விவாதத்துக்கு எடுக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடா்ந்து, பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அரசிதழில் வெளியிடப்படும்.

SOURCE : DINAMANI


  • இந்திய அரசின் திட்டங்கள்
  • தமிழ்நாடு அரசுத் திட்டங்கள்
  • Tags:

    Post a Comment

    0Comments

    Post a Comment (0)