கட்டடக் கலைக்குப் பல்லவர்களின் பங்களிப்பு-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

கட்டடக் கலைக்குப் பல்லவர்களின் பங்களிப்பு

 

TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL 

கட்டடக் கலைக்குப் பல்லவர்களின் பங்களிப்பு:


  • பல்லவர் காலம் கட்டடக்கலைச் சிறப்புகளுக்குப் பெயர் பெற்ற காலமாகும். 
  • மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்ட கடற்கரைக் கோவிலும், ஏனைய கோவில்களும், வராகர் குகையும் (ஏழாம் நூற்றாண்டு) பல்லவக் கட்டடக் கலையின் ஈடு இணையற்ற அழகிற்கு எடுத்துக்காட்டுகளாகும். 
  • 1984ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது.


பல்லவர் கட்டடக் கலையை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்:


1 பாறைக் குடைவரைக் கோவில்கள் - மகேந்திரவர்மன் பாணி

2. ஒற்றைக்கல் - ரதங்களும் சிற்ப மண்டபங்களும் - மாமல்லன் பாணி

3 கட்டுமானக் கோவில்கள் – ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி


மகேந்திரவர்மன் பாணி:

  • மகேந்திரவர்மன் பாணியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னங்களுக்கு மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், தளவானூர், திருச்சிராப்பள்ளி, வல்லம், திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் ஆகிய இடங்களிலுள்ள குகைக் கோவில்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

மாமல்லன் பாணி:

  • மாமல்லபுரத்திலுள்ள பஞ்சபாண்டவர் ரதங்கள் எனப் பிரபலமாக அழைக்கப்படும் ஐந்து ரதங்கள் ஐந்து வகையான கோவில்கட்டட பாணியை உணர்த்துகின்றன. ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு தனிக் கல்லிலிருந்து செதுக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவை ஒற்றைக்கல் ரதங்கள் என அழைக்கப்படுகின்றன. மகிஷாசுரமர்த்தினி மண்டபம், திருமூர்த்தி மண்டபம், வராகர் மண்டபம் ஆகியவை அவர் கட்டியுள்ள பிரபலமான மண்டபங்களாகும்.
  • மாமல்லனின் கட்டடக்கலைப் பாணியில் அமைந்துள்ளவற்றில் மிகவும் முக்கியமானது மகாபலிபுரத்திலுள்ள திறந்தவெளிக் கலையரங்கம் ஆகும். பெரும் பாறையொன்றின் சுவற்றில், பேன் பார்க்கும் குரங்கு, பெரிய வடிவிலான யானைகள், தவமிருக்கும் பூனை ஆகிய நுண்ணிய சிற்பங்கள் மிகவும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. சிவபெருமானின் தலையிலிருந்து அருவியெனக் கொட்டும் கங்கை நதி, அர்ச்சுனன் தபசு ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. பெருந்தவ வடிவச் சிற்ப வேலைப்பாடு உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளிச் சிற்பங்களில் மிகப்பெரியதாகும்.

ராஜசிம்மன் பாணி

  • ராஜசிம்மன் எனவும் அறியப்பட்ட இரண்டாம் நரசிம்மவர்மன் பெருங்கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டினார். காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் கட்டுமானக் கோவில் கலைப் பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும் இக்கோவில்கள் மிருதுவான மணற் கற்களால் கட்டப்பட்டவையாகும். கைலாசநாதர் கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.

நந்திவர்மன் பாணி:

  • பல்லவ கோவில் கட்டக்கலையின் இறுதிக் கட்டம் பிற்காலப் பல்லவர்களால் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்களால் பிரதிநித்துவப் படுத்தப்படுகின்றன. காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப்பெருமாள் கோவில் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.


சமூகமும் பண்பாடும்:

  • பல்லவ அரசர்கள் பௌத்த, சமண சமயங்களையும் வேத சமயத்தையும் ஆதரித்தனர். 
  • அவர்கள் இசை, ஓவியம், இலக்கியம் ஆகியவற்றின் புரவலர்களாய்த் திகழ்ந்தனர். பக்தி மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆழ்வார்களும் நாயன்மார்களும் புதிய வடிவிலான சைவம், வைணவம் ஆகியவற்றைப் போதித்தனர். 
  • அவர்களைச் சில பல்லவ அரசர்கள் ஆதரித்தனர். அப்பரும், மாணிக்கவாசகரும் சைவ அடியார்களாகவும், நம்மாழ்வாரும், ஆண்டாளும் வைணவ அடியார்களாகவும் விளங்கினர். 
  • பக்தி மார்க்கத்தைப் போதிப்பதை நோக்கமாகக் கொண்ட இவ்வியக்கம் சமஸ்கிருதத்தை விடவும் தமிழுக்கு முன்னுரிமை வழங்கியது. 
  • சமயக் கூட்டங்களில் பங்கேற்க பெண்கள் ஊக்குவிக்கப்பட்டனர். 
  • தமிழ் பக்தி வழிபாடு பௌத்த, சமண சமயங்களுடன் போட்டிபோட்டது. விளைவாகப் இதன் பௌத்தமும் சமணமும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து படிப்படியாக வீழ்ச்சியுற்றன.


கல்வியும் இலக்கியமும்:

  • காஞ்சியிலிருந்த கடிகை (மடாலயம் அல்லது கல்வி மையம்) பல்லவர் காலத்தில் புகழ்பெற்று விளங்கியது. அது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்களைத் தன்பால் ஈர்த்தது. நியாய பாஷ்யா எனும் நூலை எழுதிய வாத்ஸ்யாயர் காஞ்சிக் கடிகையில் ஆசிரியராக இருந்தார்.
  • தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வேடான தட்சிண சித்திரம் முதலாம் மகேந்திரவர்மனின் ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டது.
  • மாபெரும் சமஸ்கிருத அறிஞரானதண்டின் முதலாம் நரமிம்மவர்மனின் அவையை அலங்கரித்தார். அவர் தசகுமார சரிதம் எனும் நூலை எழுதினார்.
  • மற்றொரு சமஸ்கிருத அறிஞரான பாரவி சிம்மவிஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்தார். அவர் கிராதார்ஜீனியம் என்னும் வடமொழிக் காப்பியத்தை வடித்தார்.
  • தமிழ் இலக்கியமும் வளர்ச்சி பெற்றிருந்தது. நாயன்மார்களால் இயற்றப்பட்ட தேவாரமும் ஆழ்வார்களால் படைக்கப்பட்ட நாலாயிரதிவ்விய பிரபந்தமும் பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியங்களாகும். இரண்டாம் நந்திவர்மனால் ஆதரிக்கப்பட்ட பெருந்தேவனார் மகாபாரதத்தை, பாரதவெண்பா எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார்.


பல்லவர்காலக் கலை:

  • பல்லவ அரசர்கள் கவின்கலைகளையும் ஆதரித்தனர். குடுமியான்மலை, திருமயம் ஆகிய இடங்களிலுள்ள கோவில்களில் காணப்படும் இசை குறித்த கல்வெட்டுக்கள் இசையில் பல்லவர் கொண்டிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன. 
  • புகழ்பெற்ற இசைக் கலைஞரான ருத்ராச்சாரியர் முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தில் வாழ்ந்தவர். 
  • இக்காலப்பகுதியைச் சேர்ந்த பல சிற்பங்கள் நடனமாடும் வகையில் வடிக்கப்பட்டுள்ளன.


PALLAVAS-TNPSC EXAM NOTES-IN TAMIL -COMPLETE FREE GUIDE


Post a Comment

0Comments

Post a Comment (0)