MARATHAS -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
பேஷ்வாக்களின் கீழ் மராத்திய நிர்வாகம் (1714-1818)
பேஷ்வா (முதன்மை அமைச்சர்) என்பவர் சிவாஜியின் அஷ்டபிரதானக் கட்டமைப்பில் ஒருவர் இது வாரிசு முறையில் மரபுவழியாகக் கிடைப்பது அல்ல. அரசரின் அதிகாரமும் பெருமையும் குறைந்த நிலையில் பேஷ்வாக்கள் முக்கியத்துவம் பெற்றனர். பாலாஜி விஸ்வநாத்தின் புத்திக்கூர்மை (1713-1720) பேஷ்வாவின் பதவியைச் சிறப்புமிக்கதாகவும் மரபுவழி சார்ந்ததாகவும் மாற்றியது. அரசரின் அதிகாரங்களைப் பயன்படுத்தி முழு நிர்வாகத்தையும் பேஷ்வாக்கள் கட்டுப்படுத்தினார்கள். அரசின் மதத் தலைமையாகவும் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.
மத்திய தலைமைச் செயலகம்:
- மராத்திய நிர்வாகத்தின் மையம் பூனாவிலிருந்த பேஷ்வா தலைமைச் செயலகமாகும். அனைத்து மாவட்டங்களின் வரவுசெலவுகளையும் இந்த மையம் கவனித்துக் கொண்டது.
- கிராமம் மற்றும் மாவட்ட அதிகாரிகள் சமர்ப்பித்த கணக்குகளையும் அது ஆராய்ந்தது. அனைத்து நிலைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் உரிமைகள், சிவில், இராணுவம் மற்றும் மதத்தலைவர்களின் வரவு செலவுகளும் கையாளப்பட்டன.
- அனைத்து வருவாய்கள், அனைத்து மான்யங்கள், ஆளுகையின் கீழ் இருந்த வெளிநாட்டுப் பகுதிகளிலிருந்து வசூலிக்கப்பட்ட தொகை அனைத்தும் தினசரி பதிவேட்டில் பராமரிக்கப்பட்டன.
மாகாணங்கள்:
- பேஷ்வாக்களின் கீழ் மாகாணங்கள் பல்வேறு அளவுகளில் இருந்தன. பெரிய மாகாணங்கள் “சர்-சுபாஷ்தார்கள்” என்றழைக்கப்பட்ட மாகாண ஆளுநர்களின் கீழ் இருந்தன. மாகாணங்களின் கீழ் இருந்த மண்டலங்கள் சுபாக்கள் மற்றும் பிராந்துக்கள் என்று அழைக்கப்பட்டன.
- மம்லத்தார், காமாவிஸ்தார் ஆகியோர் மாவட்டங்களில் பேஷ்வாக்களின் பிரதிநிதிகளாக விளங்கினார்கள்.
- ஒவ்வொரு மாவட்டத்தின் நிர்வாகமும் அவர்களின் பொறுப்பில் இருந்தது. தேஷ்முக், தேஷ்பாண்டே ஆகியோர் மாவட்ட அளவில் கணக்குகளைக் கவனித்துக் கொண்ட அதிகாரிகளாகவும், மம்லத்தார்கள், காமவிஸ்தார்கள் ஆகியோரின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பவர்களாகவும் விளங்கினார்கள். கணக்குகளைச் சரிவரக் கண்காணிக்கும் நடைமுறைச் செயல்பாட்டில் இருந்தது.
- பொதுப் பணம் தவறாகக் கையாளப்படுவதைத் தடுக்கும் வகையில் மராத்திய அரசு பெரும் தொகையை ரசத் என்ற பெயரில் முன் பணமாக மம்லத்தார்கள் மற்றும் இதர அதிகாரிகளிடமிருந்து வசூலித்தது.
- மாவட்டத்தில் முதன்முறையாக நியமனம் பெற்ற உடன் இது வசூலிக்கப்பட்டது.
- இரண்டாவது பாஜி ராவின் காலகட்டத்தில் இந்த அலுவலகங்கள் ஏலத்துக்கு விடப்பட்டன. எழுத்தர்களுக்கும் இதர அடிநிலை ஊழியர்களுக்கும் ஆண்டில் 10 அல்லது 11 மாதங்கள் ஊதியம் வழங்கப்பட்டது.
கிராம நிர்வாகம்:
- நிர்வாகத்தின் அடிப்படைப் பிரிவாகக் கிராமம் திகழ்ந்தது. அது தன்னிறைவும் சுயசார்பும் உடையதாக இருந்தது. பட்டேல் தலைமை கிராம அதிகாரியாக விளங்கினார்.
- அவர் அரசின் வருவாயை மத்திய அரசுக்கு அனுப்பும் பொறுப்பை ஏற்றிருந்தார். அவருக்கு அரசு ஊதியம் தரவில்லை.
- ஆனால் அவரது பதவி மரபுவழி சார்ந்ததாக இருந்தது.
- பட்டேலுக்கு உதவியாகக் குல்கர்னி அல்லது கணக்காளர் மற்றும் ஆவணக்காப்பாளர் இருந்தார்.
- மதச் சடங்குகளை நடத்த வேண்டிய மரபுவழியாக வந்த கிராம சேவகர்களாக அவர்கள் விளங்கினார்கள்.
- தச்சர், கொல்லர் மற்றும் இதரகிராமத் தொழில் சார்ந்தவர்கள் கட்டாய வேலையைச் (பேகர்) செய்தனர்.
நகர நிர்வாகம்:
- நகரங்களிலும் மாநகரங்களிலும் தலைமை அதிகாரி கொத்வால் என்று அழைக்கப்பட்டார்.
- சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது, சிவில் வழக்குகளைத் தீர்த்துவைப்பது, மாதாந்திரக் கணக்குகளை அரசுக்கு அனுப்புவது ஆகியன அவரது முக்கியப் பணிகளாக இருந்தன.
- நகரக் காவல்துறையின் தலைவராகவும் நீதிபதியாகவும் அவர் செயல்பட்டார்.
வருவாய் ஆதாரங்கள்:
- நில வருவாய்தான் முக்கிய வருவாயாக இருந்தது. சிவாஜியின் ஆட்சியில் பின்பற்றப்பட்ட, விவசாய உற்பத்திப் பொருள்களைப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறையைப் பேஷ்வாக்கள் கைவிட்டனர்.
- நில வரியை வசூலிக்க குத்தகை நடைமுறையைப் பின்பற்றினார்கள். அரசுக்கு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை என்ற வகையில் நிலம் வழங்கப்பட்டிருந்தது.
- நிலத்தின் உற்பத்தித் திறன் சார்ந்து வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டன. காடுகளிலிருந்து வருவாய் கிடைத்தது. கட்டணத்தின் பேரில் மரங்களை வெட்டுவதற்கும், மேய்ச்சல் வெளிகளைப் பயன்படுத்தவும் உரிமங்கள் வழங்கப்பட்டன.
- புல், மூங்கில், எரிபொருள், தேன் போன்ற பொருட்களை விற்பதன் மூலமும் வருவாய் கிடைத்தது.
- சரியான புள்ளி விவரங்கள் அடிப்படையில் கவனத்துடன் வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டது.
- பயிர் வகைகள், நீர்ப்பாசன வசதிகள், நிலத்தின் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிலம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டது. கி
- ராமத்தினர் பூர்வக்குடிகளாக இருந்தனர். அவர்களின் வசம் காடுகள் இருந்தன. அவர்களிடமிருந்து நிலத்தைப் பிரிப்பது முடியாத செயல். உயர் நிர்வாகத்திடம் அவர்களின் உரிமைகளை எடுத்துரைக்கப் பட்டேல் மூலமாக மட்டுமே முடிந்தது.
சௌத் மற்றும் சர்தேஷ்முகி ஆகியன இதர வருவாய் ஆதாரங்களாக விளங்கின. சௌத் என்பது கீழ்க்கண்ட வகையில் பிரிக்கப்பட்டிருந்தது
- ஆட்சியாளருக்கு 25 சதவீதம்
- மராத்திய அதிகாரிகள் மற்றும் படைகளைப் பராமரிப்பதற்காக இராணுவத் தளபதிகளுக்கு 66 சதவீதம்
- பிறப்பில் பிராமணராகவும் தலைவராகவும் உள்ள பண்டிட் சச்சீவுக்கு 6 சதவீதம்
- வரி வசூல் செய்வோருக்கு 3 சதவீதம்
- சுங்கம், கலால் வரி, வனப்பொருட்களின் விற்பனை, ஆகியன மூலமாகவும் வருவாய் கிடைத்தது.
- அரசுக்குக் காப்புரிமைத் தொகை செலுத்தி அதற்கான உரிமத்தைப் பெற்ற பிறகு பொற்கொல்லர் நாணயங்களை உருவாக்கித் தந்தார்கள்.
- ஒரு குறிப்பிட்ட தரநிலையைப் பராமரித்தனர். தரநிலை பின்பற்றப்படுவதில் முறைகேடுகள் இருந்ததால் அனைத்துத் தனியார் நாணயத் தொழிற்சாலைகளும் 1760இல் மூடப்பட்டு ஒரே ஒரு மத்திய நாணயத் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது.
வேறு வரிகளும் வசூலிக்கப்பட்டன.
- 1. தேஷ்முக்கு, தேஷ்பாண்டே வைத்திருந்த நிலத்தின் மீதான வரி. 2. கிராம மகர்கள் வைத்திருந்த நிலத்தின் மீதான வரி. 3. கிணற்றுப் பாசன வசதி கொண்ட நிலத்தின் மீதான வரி 4. பிராமணர்கள் மற்றும் கிராம அதிகாரிகள் தவிர்த்து மற்றவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வீட்டு வரி. 5. எடைக் கற்கள் மற்றும் அளவைகளைச் சோதிப்பதற்கான வருடாந்திரக் கட்டணம். 6. விதவைகள் மறுமணத்துக்கான வரி. 7. செம்மறி ஆடு, எருமை மாடு மீதான வரி . 8. மேய்ச்சல் நில வரி. 9. நதிக் கரையோரங்களில் பூசணி விவசாயத்துக்கான வரி 10. வாரிசு உரிமை வரி, 11. குதிரைகளை விற்பதற்கான வரி மற்றும் பல.
- மராத்திய அரசு நிதிச்சிக்கலிலிருந்த போது அனைத்து நில உடைமையாளர்களுக்கும் வரி விதித்தது. வரி செலுத்துபவரின் ஒருவருட வருமானத்துக்குச் சமமான வரியாக குர்ஜா பட்டி அல்லது தஸ்தி பட்டி வசூலிக்கப்பட்டது. நீதி பரிபாலனமும் வருவாயை ஈட்டித்தந்தது. பணப்பத்திரங்களின் மீது 25 சதவிகித கட்டணம் வசூலிக்கப்பட்டது. தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அல்லது சந்தேகத்துக்கு உட்பட்ட நபர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. சொந்தப் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான தீர்வையிலிருந்து பிராமணர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
காவல்துறை கட்டமைப்பு:
- ‘மகர்கள்’ காவலர்களாக ஒவ்வொரு கிராமத்திலும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் குற்றங்கள் அதிகரித்த போது ஆயுதங்களைப் பயன்படுத்தி குற்றங்களைக் கட்டுப்படுத்த காலாட்படையை அரசு அனுப்பியது.
- ஆயுதப்படைகளைப் பராமரிப்பதற்கான செலவுகளை மேற்கொள்வதற்காக குடியிருப்பு வாசிகளுக்குக் கூடுதலாக வீட்டு வரி விதிக்கப்பட்டது.
- குற்றவாளிகளைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்வதற்காகக் கூடுதலாகக் காவல் துறை அதிகாரிகளை இரண்டாம் பாஜி ராவ் நியமனம் செய்தார்.
- நகரப் பகுதிகளில் கொத்வாலுக்கு நீதி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
- விலைகளைக் கண்காணிப்பது, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு , சிவில் வழக்குகளை விசாரிப்பது, அரசுக்குத் தொழிலாளர்களை வழங்குவது, காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது நகர்காவுக்கு தங்களது பணிகளை மேற்கொள்ள கட்டணங்களை விதிப்பது ஆகியன கொத்வாலின் கூடுதல் பணிகளாகும்.
நீதித்துறை:
- நீதித்துறை முறைப்படுத்தப்பட்டதாக இல்லை. முறைப்படுத்திய சட்டம் ஏதும் இல்லை. பின்பற்றப்பட வேண்டிய சட்ட வழிமுறைகளும் இல்லை.
- சமரசப் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை தரப்பட்டது. அது தவறினால் அந்த வழக்கு கிராமத்தின் பட்டேல் மற்றும் நகரங்களில் முன்னணி வர்த்தகர்கள் அடங்கிய பஞ்சாயத்தின் முடிவுக்கு விடப்பட்டது.
- பஞ்சாயத்து என்பது மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனமாகும். மறுவிசாரணையும் நடந்தது. மம்லத்தாரிடம் மேல்முறையீடுகள் செய்யப்பட்டன. கிரிமினல் வழக்குகளில் நீதித்துறை அதிகாரிகளின் படிநிலை இருந்தது.
- ராஜா, சத்ரபதி தலைமைப் பொறுப்பிலும் அவருக்குக் கீழ் பேஷ்வா, துணை சுபாதார், பட்டேல், மம்லதார் ஆகியோர் இருந்தனர். சாட்டையால் அடிப்பது, துன்புறுத்துவது ஆகியவற்றைப் பயன்படுத்தி குற்றம் ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டது
இராணுவம்
- பேஷ்வாக்களின் கீழ் மராத்திய இராணுவ அமைப்பு முகலாய இராணுவ அமைப்பை போன்று அமைக்கப்பட்டது.
- ஆட்சேர்ப்பு, ஊதியம் வழங்குவது, படைவீரர்களின் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவது, குதிரைப்படைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஆகியன முகலாய இராணுவ அமைப்பைப் போன்று இருந்தது.
- சிவாஜி பின்பற்றிய இராணுவ அமைப்பின் முக்கிய அம்சங்களைப் பேஷ்வாக்கள் பின்பற்றவில்லை.
- மராத்திய பகுதிகளிலிருந்து சிவாஜி படைவீரர்களைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் பேஷ்வாக்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அனைத்து வகுப்புகளிலிருந்தும் (பழங்குடியினர் உட்பட) படைவீரர்களைச் சேர்த்தனர். அராபியர், அபிசீனியர், ரஜபுத்திரர், சீக்கியர் ஆகியோர் பேஷ்வாவின் இராணுவத்தில் இடம் பெற்றிருந்தனர்.
- பேஷ்வாக்களின் இராணுவத்தில் பழமையான தலைவர்களின் படைவீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
- எதிரி தலைவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடம் அந்தப் பகுதியிலேயே இருந்ததால் அதிக அளவில் உட்குழப்பங்கள் இருந்தன. இதனால் மராத்திய அரசின் மக்களிடையேயான இறையாண்மை பாதிக்கப்பட்டது.
குதிரைப்படை
- மராத்திய இராணுவத்தின் முக்கிய பலமாகக் குதிரைப்படை இயல்பாகவே அமைந்தது. ஒவ்வொரு ஜாகீர்தாரும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் குதிரைப்படை வீரர்களைப் பொதுச் சேர்க்கைக்குக் கொண்டு வரவேண்டும். அவர்கள் வைத்திருந்த குதிரைகளின் தரத்தை வைத்து மூன்று வகைகளாக அவர்கள் பிரிக்கப்பட்டனர்.
காலாட்படையும் ஆயுதப்படையும்
- குதிரைப்படையில் சேவை புரிய மராத்தியர் அதிக ஆர்வம் காட்டினார்கள். எனவே, காலாட்படைக்கு நாட்டின் இதரப் பகுதிகளிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது.
- மராத்திய வீரர்களுடன் ஒப்பிடுகையில் மராத்திய காலாட்படையிலிருந்த அராபியர், ரோகில்லாக்கள், சீக்கியர், சிந்திக்கள் ஆகியோருக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டது.
- மராத்திய ஆயுதப்படையில் பெரிதும் போர்த்துகீசீயரும் இந்தியக் கிறித்தவர்களும் இடம் பெற்றிருந்தனர். பிறகு ஆங்கிலேயர்களும் இடம் பெற்றனர்.
கடற்படை
- மராத்தியத் துறைமுகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு மராத்திய கடற்படை உருவாக்கப்பட்டது.
- கடற்கொள்ளையைக் கட்டுப்படுத்துவது, கப்பல் போக்குவரத்தில் சுங்க வரிகளை வசூலிப்பது ஆகியனவும் மேற்கொள்ளப்பட்டன.
- பாலாஜி விஸ்வநாத் கொங்கணம், கண்டேரி, விஜயதுர்க் ஆகிய இடங்களில் கடற்படைத் தளங்களைக் கட்டினார். கப்பல் கட்டவும் சீர்செய்யவும் வசதிகள் மேம்படுத்தப்பட்டன.