சிவாஜி ஆட்சியில் மராத்திய நிர்வாகம் |
MARATHAS -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
சிவாஜி ஆட்சியில் மராத்திய நிர்வாகம்
சிவாஜி பெரிய போர்வீரர் மட்டுமல்ல ஒரு நல்ல நிர்வாகியும்கூட. அன்றாட நிர்வாகத்தில் தனக்கு உதவுவதற்காக ஓர் ஆலோசனை சபையை அவர் வைத்திருந்தார்.
சிவாஜி ஆட்சியில் மராத்திய நிர்வாகம்:
மத்திய அரசு:
- சிவாஜி பெரிய போர்வீரர் மட்டுமல்ல ஒரு நல்ல நிர்வாகியும்கூட. அன்றாட நிர்வாகத்தில் தனக்கு உதவுவதற்காக ஓர் ஆலோசனை சபையை அவர் வைத்திருந்தார். “அஷ்டபிரதான்” என அழைக்கப்பட்ட இந்தச் சபையில் எட்டு அமைச்சர்கள் இடம்பெற்று இருந்தனர். அந்தச் சபையின் செயல்பாடு ஆலோசனை கூறுவதாகவே அமைந்திருந்தது.
- முக்கிய பிரதான் அல்லது பேஷ்வா அல்லது பிரதம மந்திரி. நாட்டின் பொது நலன்கள் மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவது இவரது முக்கியக் கடமை.
- அமத்யா அல்லது நிதி அமைச்சர். அரசின் அனைத்துப் பொதுக்கணக்குகளையும் ஆராய்ந்து ஒப்புதல் கையொப்பமிடுவது இவரது வேலை.
- வாக்கிய நாவிஸ் அல்லது மந்திரி, அரசரின் நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆவணங்கள் வடிவில் பராமரித்தார்.
- சுமந்த் அல்லது டாபிர் அல்லது வெளியுறவுச் செயலர், மன்னருக்குப் போர் மற்றும் அமைதி குறித்த அனைத்து விஷயங்களிலும் ஆலோசனைகளை வழங்கினார். பிறநாடுகளின் தூதர்களையும் பிரதிநிதிகளையும் வரவேற்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தார்.
- சச்சிவ் அல்லது சுருநாவிஸ் அல்லது உள்துறை செயலர், அரசரின் அன்றாட கடிதப் போக்குவரத்தை கவனித்துக் கொண்டதோடு வரைவுகளைத் திருத்தும் அதிகாரமும் கொண்டிருந்தார். பர்கானாக்களின் கணக்குகளையும் அவர் சரிபார்த்தார்.
- பண்டிட் ராவ் அல்லது தனத்தியாக்சா அல்லது சதர் அல்லது முதாசிப் அல்லது மதத்தலைவர் என்பவர் மதம் தொடர்பான சடங்குகளுக்கும் தானதர்மங்களுக்கும் பொறுப்பேற்றிருந்தார். சமூகச் சட்டதிட்டங்கள் மற்றும் பொது ஒழுக்க நடைமுறைகளை நெறிப்படுத்துவதற்கு அவர் நீதிபதியாக இருந்தார்.
- நியாயதீஷ் அல்லது தலைமை நீதிபதி குடிமை மற்றும் இராணுவ நீதிக்குப் பொறுப்பேற்றிருந்தார்.
- சாரிநௌபத் அல்லது தலைமைத் தளபதி இராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு, அமைப்பு ரீதியாக பராமரிப்பது, இராணுவத்தை நிர்வகிப்பது ஆகியவற்றைக் கவனித்துக் கொண்டார்.
- நியாயதீஷ் மற்றும் பண்டிட்ராவ் தவிர அமைச்சர்கள் அனைவரும் இராணுவத்தை வழிநடத்துவதற்கு தலைமை ஏற்பதோடு, பயணங்களுக்கும் தலைமை ஏற்க வேண்டும். அனைத்து அரசுக் கடிதங்கள், ஆவணங்கள், ஒப்பந்தங்கள் ஆகியன அரசர், பேஷ்வா ஆகியோரின் இலச்சினையையும் மற்றும் தனத்தியாக்சா, நியாயதிக்சா, சேனாபதி தவிர்த்த நான்கு அமைச்சர்களின் ஒப்புதலையும் பெறவேண்டும். பல அமைச்சர்களின் கீழ் 18 அரசு துறைகள் இருந்தன.
மாகாண அரசு
- நிர்வாக வசதிக்காக சிவாஜி தனது அரசை நான்கு மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு வைஸ்ராய் எனப்படும் அரசப்பிரதி நிதியை அமர்த்தினார்.
- மாகாணங்கள் பிராந்த் (pranths) எனப்படும் பல பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டன. ஜாகீர் வழங்கும் நடைமுறை ஒழிக்கப்பட்டு அனைத்து அதிகாரிகளுக்கும் ரொக்கமாகப் பணம் வழங்கப்பட்டது.
- ஒரு குறிப்பிட்ட பகுதியின் வருவாய் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பும் எந்த ஒரு அதிகாரிக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் சொத்துகள் மூலமாகக் கிடைத்த வருவாய் மட்டுமே அவருக்கு உரியது.
- அதனுடன் தொடர்புடைய மக்களுடன் அந்த அதிகாரிக்கு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை . எந்தப் பதவியும் பரம்பரையானதில்லை . பிராந்தியத்தின் செயல்பாடுகளுக்கான மையமாகக் கோட்டை அமைந்திருந்தது. பாரம்பரியப்படி கிராமம் என்பது நிர்வாக நடைமுறையின் கடைசி அலகாக இருந்தது.
வருவாய் நிர்வாக அமைப்பு
- சிவாஜியின் வருவாய் நிர்வாகம் நியாயமானதாக, உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாக அமைந்திருந்தது. நிலம் அளவீடு செய்யப்பட்டு மதிப்பிடப்பட்டது. மொத்த உற்பத்தியில் அரசின் உரிமையாக 30 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு அது பணமாகவோ பொருளாகவோ செலுத்தப்பட்டது.
- பின்னர் இந்த வரி 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. செலுத்த வேண்டிய வரித் தொகை தெளிவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
- பஞ்சகாலத்தில் அரசு பணத்தையும் உணவுதானியங்களையும் உழவர்களுக்கு முன்பணம் அல்லது முன்பொருளாகக் கொடுத்தது. பின்னர் அவற்றை அவர்கள் தவணைகளில் திரும்பச் செலுத்த வேண்டும். விவசாயிகள் கால்நடை வாங்க, விதைப்புக்காக, இன்னபிற தேவைகளுக்காகக் கடன்கள் வழங்கப்பட்டன.
சௌத் மற்றும் சர்தேஷ்முகி
- அரசு வசூலிக்கும் வருவாய், தேவைகளுக்குப் போதுமானதாக இல்லாத நிலையில் சௌத், சர்தேஷ்முகி என இரண்டு வரிகளைத் தனது
- சாம்ராஜ்யத்தின் அண்டை பகுதிகளான முகலாய மாகாணங்களிடமிருந்தும் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளிலிருந்தும் சிவாஜி வசூலித்தார்.
- மராத்தியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில் நான்கில் ஒரு பங்கு ‘சௌத்’ என வசூலிக்கப்பட்டது.
- சர்தேஷ்முக் என்ற தகுதியின் காரணமாக சிவாஜி தனது கூடுதல் வருவாயில் 10%-ஐ சர்தேஷ்முகி என்னும் வரிமூலம் பெற்றார். தேசாய்கள், தேஷ்முக்குகளின் பிரதம தலைமையாக சர்தேஷ்முக் திகழ்ந்தார். மரபுவழியாகத் தனது நாட்டின் சர்தேஷ்முக் ஆக சிவாஜி விளங்கினார்.
இராணுவ அமைப்பு
- சிவாஜி நிலையான இராணுவத்தைக் கொண்டிருந்தார். ஜாகீர்களை வழங்குவதையும் மரபுவழியாகச் செய்யப்படும் நியமனங்களையும் அவர் ஊக்கப்படுத்தவில்லை. படைவீரர்களுக்கு வீடு வழங்கப்பட்டது. அவர்களுக்கு முறைப்படி ஊதியமும் வழங்கப்பட்டது.
- காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, ஆயுதப்படை என இராணுவத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன. கொரில்லா போர்முறையில் வீரர்கள் சிறந்து விளங்கிய போதிலும் பாரம்பரியப் போர்முறையிலும் அவர்கள் பயிற்சி பெற்றனர்.
- காலாட்படை ரெஜிமெண்டுகள், பிரிகேடுகள் எனப் பிரிக்கப்பட்டது. ஒன்பது வீரர்களைக் கொண்ட சிறிய படைப்பிரிவுக்கு நாயக் (கார்ப்பரல்) தலைமை வகித்தார். ஒவ்வொரு படைப்பிரிவிலும் 25 குதிரைப் படை வீரர்கள் சார்ஜண்ட் தகுதிக்கு இணையான தகுதியில் ஹவில்தார் தலைமையின் கீழ் செயல்பட்டனர்.
- ஒரு ஜமால்தாரின் கீழ் ஐந்து ஹவில்தார் செயல்பட்டனர். பத்து ஜமால்தார்களின் தலைவராக ஒரு ஹஜாரி திகழ்ந்தார்.
- சாரிநௌபத் குதிரைப்படையின் தலைமைத்தளபதி ஆவார். ஒவ்வொரு குதிரைப்படையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அரசு மூலமாகக் குதிரைகள் வழங்கப்பட்ட படைவீரர்கள் பர்கிர்கள் என்றும், தாங்களாகவே குதிரைகளை ஏற்பாடு செய்து கூலிக்கு வேலை செய்யும் வீரர்கள் ஷைலேதார்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
- இதுதவிர நீர் கொண்டு செல்லும் குதிரைப்படைவீரர்களும் குதிரைகளுக்கு லாடம் கட்டுபவர்களும் இருந்தனர்.
நீதி:
- நீதி நிர்வாகம் மரபுவழிப்பட்டதாக இருந்தது. நிரந்தரமான நீதிமன்றங்களோ, நீதி வழிமுறைகளோ இல்லை, விசாரணைமுறை அனைவருக்கும் பொதுவாக இருந்தது. கிராமங்களில் பஞ்சாயத்து நடைமுறை இருந்தது.
- கிரிமினல் வழக்குகளை பட்டேல்கள் விசாரித்தனர். சிவில், கிரிமினல் வழக்குகளுக்கான மேல்முறையீடுகளைத் தலைமை நீதிபதி நியாயதிஷ், ஸ்மிருதிகளின் ஆலோசனையோடு விசாரித்தார். ஹாஜிர்மஜ்லிம் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாக இருந்தது.