MARATHAS -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
தமிழ்நாட்டில் மராத்தியரின் ஆட்சி
நிறுவப்படுவதற்கான சூழ்நிலைகள்:
- கிருஷ்ணதேவராயர் தனது ஆட்சிக்காலத்தில் (1509-1529) நயங்காரா அமைப்பை உருவாக்கினார். இதன்படி தமிழகம் செஞ்சி, தஞ்சாவூர், மதுரை என மூன்று மிகப்பெரிய நயங்காராக்களாக பிரிக்கப்பட்டது. இந்த புதிய முறைப்படி துணைத் தலைவர்கள் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர். பாளையங்கள் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்தன. சோழ சாம்ராஜ்யத்தின் பகுதியாக முதலிலிருந்த தஞ்சாவூர் பிறகு பாண்டிய அரசின் பகுதியாக உருவானது. பின்னர் இது மதுரை சுல்தானியத்தின் பகுதியாக உருவெடுத்தது. கடைசியில் நாயக்கர் கைகளுக்குச் சென்றது. மதுரை நாயக்கர் மற்றும் தஞ்சாவூர் நாயக்கரிடையே நிலவிய பகை கடைசியில் 1673இல் தஞ்சாவூரில் நாயக்க ஆட்சியை முடிவுறச் செய்தது. தஞ்சாவூரில் 1676இல் மராத்திய தளபதி வெங்கோஜி தன்னை அரசராக அறிவித்தார். இவ்வாறாக மராத்தியர் ஆட்சி தஞ்சாவூரில் துவங்கியது.
- ராஜா தேசிங்கு: மராத்திய அரசர் ராஜாராம் முகலாயப் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக ராய்கரிலிருந்து தப்பியோடி செஞ்சியில் அடைக்கலம் புகுந்தார். படைத்தளபதி சுல்பிகர்கான் தலைமையிலும், பின்னர் தாவுத்கான் தலைமையிலும் அவரைத் தொடர்ந்து சென்ற முகலாயப் படைகள் செஞ்சியைக் கைப்பற்றின. செஞ்சிக்கு எதிரான முகலாயத் தாக்குதலில் பன்டேலா ரஜபுத்திர தலைவர் சுவரூப் சிங் செஞ்சிக்கோட்டையின் (கோட்டை இராணுவத்தின் தலைவர்) கிலாதாராக 1700இல் பணியில் அமர்த்தப்பட்டார். அதன் பிறகு சுவரூப் சிங் செஞ்சி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். 1714 இல் அவர் மறைந்த பிறகு அவரது மகன் தேஜ் சிங் (தேசிங்கு ) செஞ்சியின் ஆளுநராக பொறுப்பேற்றார். முகலாய மன்னருக்குக் கப்பம் கட்டமறுத்ததை அடுத்து நவாப் சதத்-உல்-லா கானின் கோபத்திற்கு ஆளானார். அதனைத் தொடர்ந்து நடந்த சண்டையில் 22 வயதே ஆன ராஜா தேசிங்கு கொல்லப்பட்டார். அவரது இள வயது மனைவி உடன்கட்டை ஏறினார். ராஜா தேசிங்கு நவாபுக்கு எதிராக வெளிப்படுத்திய வீரம் மக்களிடையே கதைப் பாடல்களாக உருவெடுத்தது.
- கர்நாடகத்தின் மீது 1677இல் படையெடுத்த சிவாஜி வெங்கோஜியை அகற்றிவிட்டுத் தனது ஒன்றுவிட்ட சகோதரர் சந்தாஜியை அப்பதவியில் அமர்த்தினார். ஆனால் வெங்கோஜி மீண்டும் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஷாஜி தஞ்சாவூரை ஆண்டார். ஷாஜிக்கு வாரிசு இல்லாததால் அவரது சகோதரர் முதலாம் சரபோஜி அடுத்த ஆட்சியாளராக அமர்ந்தார். 1712 முதல் 1728 வரை 16 ஆண்டுகளுக்கு அவர் ஆட்சியில் இருந்தார். அவருக்குப் பிறகு துக்கோஜி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து 1739 முதல் 1763 வரை பிரதாப் சிங் ஆட்சி புரிந்தார். பின்னர் அவரது மகன் துல்ஜாஜி 1787இல் ஆட்சியில் அமர்ந்தார். அந்த ஆண்டில் பத்து வயதான இரண்டாவது சரபோஜி அரியணை ஏறினார். துல்ஜாஜியின் சகோதரர் அமர் சிங் ஆட்சியை நிர்வகித்தார். இந்த வாரிசு அரசியலை எதிர்த்த ஆங்கிலேயர் இரண்டாவது சரபோஜியின் மீது ஒப்பந்தம் ஒன்றை திணித்தனர். அதன் அடிப்படையில் இரண்டாம் சரபோஜி தனது அரசு நிர்வாகத்தை ஆங்கிலேயர் வசம் ஒப்படைக்க நேரிட்டது. இரண்டாம் சரபோஜி தஞ்சாவூரை ஆண்ட மராத்தியரின் போன்ஸ்லே சாம்ராஜ்யத்தின் கடைசி ஆட்சியாளராவார்.
இரண்டாம் சரபோஜி
- இரண்டாம் சரபோஜி ஒரு தலைசிறந்த அரசர். ஜெர்மானிய சமய பரப்புக் குழுவை சேர்ந்த ஃப்ரெட்ரிக் ஸ்வார்ட்ஸ் மூலமாகக் கல்வி பயின்றபோதிலும், பலரும் எதிர்பார்த்தபடி, அவர் கிறித்தவ மதத்தை தழுவவில்லை.
- அதேபோல மேற்கத்திய அறிவியல் மற்றும் மருத்துவத்தைக் கையாளும் மருத்துவராக சரபோஜி திகழ்ந்தார். எனினும் இந்தியப் பாரம்பரியத்தை சிரத்தையுடன் அவர் பின்பற்றினார். பல ஐரோப்பிய மொழிகளைக் கற்று நிபுணத்துவம் பெற்ற அவர் அனைத்து துறைகளைச் சார்ந்த புத்தகங்களைக் கொண்ட மிகப் பிரபலமான நூலகத்தை வைத்திருந்தார்.
- ஒரு அச்சகத்தை நிறுவுவது சரபோஜியின் நவீனத் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. (இதுவே மராத்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கான முதலாவது அச்சகமாகும்). சரஸ்வதி மஹால் நூலகத்தை மேம்படுத்துவதும் அவரது திட்டங்களில் ஒன்றாக இருந்தது. அவரது அரசவை மூலம் நவீனப் பொதுப் பள்ளிகளை நிறுவி ஆங்கிலம் மற்றும் பிரதேச மொழிகளில் பாடங்கள் இலவசமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது அதிநவீனத் திட்டமாக இருந்தது.
- சரஸ்வதி மஹால் நூலகம் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டு இரண்டாம் சரபோஜி மன்னரால் செறிவூட்டப்பட்டது. மராத்திய அரசவையின் அன்றாட அலுவல்கள், 18ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு-மராத்தியர் இடையே நடந்த கடிதப்போக்குவரத்து ஆகியன மோடி எழுத்துவடிவ ஆவணங்களாக அமைந்துள்ளன. மராத்தி மொழியில் அமைந்த ஆவணங்கள் மோடி எழுத்து வடிவில் எழுதப்பட்டன.
- அவர் காலத்தில் வாழ்ந்த தரங்கம்பாடி சமய பரப்புக்குழுவைச் சேர்ந்த அறிஞர் சி.எஸ். ஜான் என்பவரைக் கல்வித் துறையின் முன்னோடியாக மன்னர் சரபோஜி கருதினார். ஜான், கல்வித் துறையில் புதிய பரிசோதனைகளையும் சீர்திருத்தங்களையும் மேற்கொண்டார். பாடத்திட்டம் மற்றும் கல்விப்பயிற்றும் முறைகளில் அவர் நவீன முறைகளையும் மாணவர்களுக்கு உறைவிடப்பள்ளி முறையை அறிமுகம் செய்தார்.
- 1812இல் ஆங்கிலேய காலனி அரசுக்கு அவர் சமர்ப்பித்த முக்கியத் திட்டத்தில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இந்திய மாணவர்களுக்கு இலவசப் பள்ளிகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கிறித்தவர் அல்லாத மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி கிடைக்காத சூழல் நிலவிய காலகட்டம் அதுவாகும்.
- சென்னை ஆளுநர் தாமஸ் மன்றோ 1820ஆம் ஆண்டில் தொடக்கப் பொதுப்பள்ளிகளுக்கான ஒரு திட்டத்தை யோசனையாக கூறினார். ஆனால் கம்பெனி அரசு 1841ஆம் ஆண்டு வரை நவீனப் பள்ளிகளை உள்ளூர் குழந்தைகளுக்காகச் சென்னையில் ஏற்படுத்தவேவில்லை. இதற்கு மாறாக ஜெர்மானிய சமயப்பரப்புக்குழு ஆங்கில வழி மற்றும் வட்டார மொழிப்பள்ளிகள் பலவற்றைத் தெற்கு மாகாணங்களில் 1707ஆம் ஆண்டு முதல் நடத்தியுள்ளனர்.
- இரண்டாம் சரபோஜி, சமயபரப்புக்குழு மற்றும் காலனி அரசுக்கு முன்னோடியாக 1803ஆம் ஆண்டிலேயே தஞ்சாவூரில் கிறித்தவர்கள் அல்லாத உள்ளூர் குழந்தைகளின் கல்விக்காக முதலாவது நவீனப் பொதுப்பள்ளிகளை நிறுவினார். உயர் கல்வி நிறுவனங்களை இந்திய அரசர்கள் நடத்திய போதிலும் அவர்கள் தொடக்கப் பள்ளிகளை நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
- ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு எனத் தஞ்சாவூர் மற்றும் இதர அண்டை இடங்களில் இலவச தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை நிறுவி நிர்வகித்தது மன்னர் சரபோஜியின் மிக முக்கியமான முன்முயற்சியாகும். அனைத்து நிலைகளிலான பள்ளிகள், நன்கொடைப் பள்ளிகள், கல்லூரிகள், சமஸ்கிருத உயர் கல்விக்கான பாடசாலைகள் ஆகியன அவற்றில் அடங்கும்.
- அரசவை மேன்மக்கள், வேத அறிஞர்கள், ஆதரவற்றோர், ஏழைகள் ஆக அனைவருக்கும் இந்தப் பள்ளிகள் சேவை புரிந்தன. புதிய அல்லது நவீன கல்வி முறைக்காக ‘நவவித்யா’ முறையை அரசவை நடத்திய இந்தப் பள்ளிகளில் அறிமுகம் செய்தது மற்றொரு முக்கிய முன்முயற்சியாகும்.
- 1803ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட முக்தாம்பாள் சத்திரம் அரசரின் விருப்பமான அன்ன சத்திரமாகும். அங்கு 1822 ஆம் ஆண்டில் இரண்டு வகுப்பறைகளில் காலையும் மாலையும் 15 ஆசிரியர்கள் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மொத்தம் 464 மாணவர்களுக்குக் கற்பித்தனர். மதப்பரப்பாளர்கள் கண்ணந்தன்குடியில் நடத்திய ஏழைக் கிறித்தவ மாணவர்களுக்கான பள்ளியையும் சரபோஜி ஆதரித்தார். அவரது வள்ளல் தன்மைக்குச் சான்றாக ஆதரவற்றோருக்கான பள்ளி விளங்கியது.
- மனிதர்களுக்காகவும் விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்துகளைத் தயாரித்த ‘தன்வந்தரி மஹால்’ என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை சரபோஜி நிறுவினார். நோயாளிகளின் ஆவணங்களைப் பராமரிக்கும் முறையும் அறிமுகம் செய்யப்பட்டது. நவீன மருத்துவர்கள், ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் ஆகியவற்றின் மருத்துவர்கள் மருத்துவச் சிகிச்சைக்கான மருந்துகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். 18 தொகுதிகள் அடங்கிய ஆராய்ச்சி புத்தகத்தையும் சரபோஜி மன்னர் உருவாக்கினார். பிரத்யேகமான கை ஓவியங்கள் மூலமாக முக்கிய மூலிகைகள் பற்றியத் தகவல்களை சரபோஜி பட்டியலிட்டுப் பாதுகாத்தார்.
- ஆளுநர் மன்றோவின் கல்விக் கணக்கெடுப்புக்காக உருவாக்கப்பட்ட 1823ஆம் ஆண்டின் அறிக்கைப்படி தஞ்சாவூர் முழுவதும் இருந்த 44 பள்ளிகளில் அரசவை மூலமாக 21 இலவச பள்ளிகள் நடத்தப்பட்டன. சமயப் பரப்பாளர்கள் 19 பள்ளிகளையும், ஆலய நிர்வாகம் ஒரு பள்ளியையும் நடத்தின. ஆசிரியர்கள் தாங்களாகவே இலவசமாக மூன்று பள்ளிகளை நடத்தினார்கள். மிக முக்கியமான புனிதத்தல வழித்தடங்களில் அமைந்திருந்த பதிமூன்று சத்திரங்கள் மூலமாக யாத்ரிகர்களுக்கும் ஏழைகளுக்கும் உணவும் உறைவிட வசதியும் செய்து கொடுக்கப்பட்டது.
- நவீனக் கல்வி முறை தொடர்பான சரபோஜியின் புதிய முன்முயற்சிகள் தஞ்சாவூர் மேன்மக்களுக்கு அப்போதைய காலனி ஆதிக்கச் சமூக மற்றும் பொருளாதார முறைமைக்குள் நுழையவும் பயன்பெறவும் வழி செய்தன. அரசவை அதிகாரிகள் பெரும்பாலும் பிராமணர்களுக்கு ஐரோப்பிய பயன்பாட்டு அறிவு, தொழில்நுட்பங்கள், கலைகள், ஆகியவற்றில் பயிற்சி கிடைத்து அவர்கள் காலனி கால நவீனத்துவத்தின் முன்னணி முகவர்களாக மாறினார்கள். ஆங்கிலக் கல்வி கற்ற துபாஷிகள், எழுத்தர்கள், ஐரோப்பிய மற்றும் இந்திய அரசவைகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்த இந்து மற்றும் கிறித்தவ மொழிபெயர்ப்பாளர்கள் பல பொறுப்புக்களை ஏற்க முடிந்தது. சரபோஜி அரசவையின் இரண்டு பண்டிதர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியில் மொழிபெயர்ப்பு மற்றும் அச்சுக் கலாச்சாரத்தின் தலைவர்களாகத் திகழ்ந்தார்கள். சரபோஜி, ஜான் ஆகியோரின் வாழ்வியல் திட்டங்கள் காலனியாதிக்கத் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் வரலாற்றில் தனிநபர்களும், டேனிய- தமிழ் மீன்பிடி கிராமங்களைப் போன்ற இடங்களும், மராத்திய - தமிழ் இளவரசர் ஆட்சிப்பகுதியும் வகித்த பாத்திரத்தை படம்பிடித்துக் காட்டுகின்றன.
- பாரம்பரிய இந்தியக் கலைகளான நடனம் மற்றும் இசையை ஆதரிப்பதில் பெரும் கொடையாளராக சரபோஜி விளங்கினார். குமாரசம்பவ சம்பு, தேவேந்திர குறவஞ்சி, முத்ரராக்சஸ்யா ஆகிய புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார். கர்நாடக இசையில் மேற்கத்திய இசைக்கருவிகளான கிளாரினட், வயலின் ஆகிய கருவிகளை அவர் அறிமுகம் செய்தார். தஞ்சாவூர் ஓவியத்தைப் பிரபலப்படுத்தும் பணிகளை அவர் செய்தார். ஓவியம் வரைதல், தோட்டமிடுவது, நாணயங்களைச் சேகரிப்பது, தற்காப்புக் கலைகள், ரதப் போட்டிகள், வேட்டை, எருதுச் சண்டை ஆகியவற்றைப் பிரபலப்படுத்துவதில் சரபோஜி ஆர்வம் கொண்டிருந்தார். தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தமிழ்நாட்டின் முதலாவது வன உயிரியல் பூங்காவை அவர் அமைத்தார்.
- 1832இல் மார்ச் 7ஆம் தேதி ஏறக்குறைய 40 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு சரபோஜி மரணமடைந்தார். அவரது அரசு சார்ந்த அனைத்து பகுதிகளிலும் அவரது மறைவு குறித்து துக்கம் அனுசரிக்கப்பட்டது. அவரது இறுதி யாத்திரையில் 90 ஆயிரம் பேருக்கும் அதிகமாக கலந்துகொண்டனர். அவரது இறுதி ஊர்வலத்தில் சமயப்பரப்பாளரான அருட்தந்தை பிஷப் ஹீபர் இவ்வாறு கூறினார்,
- “முடிசூடிய பல தலைவர்களைப் நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் இவர் தவிர எவரிடமும் அது இளவரசத் தன்மையோடு அலங்கரித்ததில்லை."