பல்லவர் நிர்வாகம்-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

பல்லவர்  நிர்வாகம்-TNPSC HISTORY



TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL 

பல்லவர்  நிர்வாகம்:

  • பல்லவர் காலத்தில் அரச பதவியானது தெய்வீக உரிமையென்றும், அவ்வுரிமையானது வம்சாவளியாகத் தொடர்வது என்றும் கருதப்பட்டது. பல்லவ அரசர்கள் பெரும் பட்டங்களைச் சூட்டிக்கொண்டனர். அவற்றுள் ‘மகாராஜாதிராஜா’ என்பன போன்ற சில வடஇந்திய மரபிலிருந்து பெறப்பட்டவை. அமைச்சர் குழுவொன்று அரசருக்கு உதவியது. 
  • பிற்காலப் பல்லவர் காலத்தில் இவ்வமைச்சர் குழுவானது அரசின் கொள்கை முடிவுகளில் முக்கியப் பங்காற்றியது. ஒருசில அமைச்சர்கள் ஓரளவுக்கு உயர்ந்த பட்டங்களைச் சூட்டிக் கொண்டனர். இவ்வமைச்சர்களில் பலர் நிலவுடைமையாளர்களிலிருந்து நியமிக்கப்பட்டனர்.
  • அமத்யா என்பவருக்கும் ‘மந்திரி’ என்பவருக்குமிடையே சில வேறுபாடுகளிருந்தன. மந்திரி என்றால் பொதுவாக ராஜதந்திரி எனப் புரிந்துகொள்ளப்படுகிறது. அமத்யா என்பவர் ஆலோசகராவார். ‘மந்திரி மண்டல’ என்பது அமைச்சர் குழுவாகும். 
  • ரகஸ்யதிகிரதா என்பவர் அரசரின் அந்தரங்கச் செயலாளர். மாணிக்கப் பண்டாரம் காப்பான் என்னும் அதிகாரி கருவூலத்தைக் காப்பவராவார். (மாணிக்க - விலைமதிப்பில்லா; பண்டாரம் - கருவூலம்; காப்பான் காவல் புரிபவர்). கொடுக்காப்பிள்ளை என்பவர் நன்கொடைகளுக்கான அதிகாரிகளாவார். அவர்கள் பல்லவ அரசர்களின் கீழ் மைய அதிகாரிகளாகப் பணியாற்றிய அதிகாரிகளாவர். 
  • கோச-அதீயட்சா என்பவர் மாணிக்கப் பண்டாரம் காப்பாளர்களை மேற்பார்வை செய்பவர். 
  • நீதிமன்றங்கள் அதிகர்ண மண்டபம் என்றும், நீதிபதிகள் தர்மாதிகாரி என்றும் அழைக்கப்பட்டனர். நந்திவர்ம பல்லவனின் காசக்குடி செப்பேடுகளில் அபராதங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள் கர்ணதண்டம் ஆகும். கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள் அதிகர்ண தண்டமாகும்.
  • மாநில ஆளுநர்களுக்கு மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உதவிகள் செய்தனர். இவ்வதிகாரிகள் உள்ளூர் அளவிலான தன்னாட்சி பெற்ற அமைப்புகளோடு ஆலோசகர்கள் என்ற நிலையில் இணைந்து செயல்பட்டனர். இவ்வமைப்புகள் உள்ளூர் அளவிலான சாதி, கைவினைஞர், தொழில் குழுக்கள் (நெசவாளர், எண்ணெய் ஆட்டுவோர் போன்றோர்), சேவை செய்வோர், மாணவர், அர்ச்சகர்கள், துறவிகள் ஆகியோர்களின் உறவுகளின் அடிப்படையில் கட்டப்பட்டவையாகும். கிராமங்களில் மக்கள் பங்குபெறும் மன்றங்கள் இருந்தன. 
  • மாவட்டப் பிரதிநிதிகளும் இருந்தனர். இவ்வமைப்புகளின் பொதுக்குழுக் கூட்டங்கள் ஆண்டிற்கு ஒருமுறை கூட்டப்பட்டது. அளவில் சிறியதான குழுக்களின் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட்டன. கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது இச்சிறிய அமைப்புகளின் பொறுப்பாகும்.


நிலமானியங்கள்

  • நிலவுடைமை உரிமை அனைத்தும் அரசரிடமே இருந்தது. அவர் அதிகாரிகளுக்கு வருவாய் மானியங்களையும் பிராமணர்களுக்கு நில மானியங்களையும் வழங்கினார் அல்லது நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள் மூலம் நிலத்தை சாகுபடி செய்ய வைத்தார். 
  • இரண்டாவதாகச் சொல்லப்பட்டதே பெரும்பாலும் பின்பற்றப்பட்ட முறையாகும். அரசருக்குச் சொந்தமான நிலங்கள் குடியானவர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டன. குத்தகைக்கான கால அளவைப் பொறுத்து கிராமங்களின் தகுதி நிலைகள் மாறுபடும். பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களைக் கொண்ட கிராமங்கள் நிலவரி செலுத்தின. 
  • பிரம்மதேய கிராமங்கள் ஒரு பிராமணருக்கோ அல்லது சில பிராமணர்களைக் கொண்ட ஒரு குழுவுக்கோ கொடையாக வழங்கப்பட்டன. 
  • வரி செலுத்த வேண்டியதில்லை என்பதால் இக்கிராமங்கள் ஏனைய கிராமங்களைக் காட்டிலும் செழிப்பாக இருந்தன. 
  • கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட கிராமங்கள் தேவதான கிராமங்களாகும். இவற்றின் வருவாயை கோவில் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனரேயன்றி அரசு பெறவில்லை. 
  • கோவில் பணிகளில் வேலைவாய்ப்பு வழங்கி, கோவில்கள் கிராமங்களுக்கு உதவின. 
  • பின்வந்த காலங்களில் கோவில்கள் கிராமம் சார்ந்த வாழ்க்கையின் மையமாக மாறிய போது தேவதான கிராமங்கள் தனி முக்கியத்துவம் பெற்றன. 
  • பல்லவர் ஆட்சியில் முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ள இருவகை கிராமங்களே (தேவதான கிராமங்கள் தவிர) பெரும்பான்மையாய் இருந்தன.
  • 1879இல் புதுச்சேரிக்கு அருகே உருக்காட்டுக்கோட்டம் என்னுமிடத்தில் இருபுறமும் இணைக்கப்பட்டு லிங்கம், நந்தி ஆகியன (பல்லவர்களின் முத்திரை) பொறிக்கப்பட்ட செப்பு வளையத்தில் கோர்க்கப்பட்ட பதினோருசெப்புப்பட்டயங்கள் கண்டறியப்பட்டன. 
  • அரசன் நந்திவர்மனின் (பொ.ஆ 753) இருபத்திரண்டாவது ஆட்சியாண்டில், மானியமாகத் தரப்பட்ட ஒரு கிராமம் குறித்த செய்திகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
  • இதன் உள்ளடக்கம் அரசரைப் பற்றிய சமஸ்கிருத மொழியில் புகழ்வதில் தொடங்கி மானியத்தைப் பற்றிய விவரங்களைத் தமிழில் கூறி இறுதியில் சமஸ்கிருத செய்யுளோடு முடிவடைகிறது.


கிராம வாழ்க்கை

  • கிராம அளவில் அடிப்படையான அமைப்பு ‘சபை’ ஆகும். அறக்கட்டளைகள், நிலம், நீர்ப்பாசனம், வேளாண்மை, குற்றங்களுக்கான தண்டனை, மக்கள் தொகை உள்ளிட்ட தேவைப்படும் ஏனைய ஆவணங்களைப் பாதுகாத்தல் ஆகியன போன்ற கிராமத்தோடு தொடர்புடைய அனைத்து செயல்பாடுகளிலும் சபை அக்கறை செலுத்தியது. 
  • கிராம நீதிமன்றங்கள் சிறிய குற்றவியல் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புகள் வழங்கின. சிறுநகரங்களிலும் நகரங்களிலும் அரசரை மேலான நடுவராகக் கொண்டு அதிகாரிகளின் தலைமையில் நீதிமன்றங்கள் செயல்பட்டன. 
  • சபை என்பது நிர்வாகமுறையைச் சேர்ந்த அமைப்பாகும். கிராமத்தவர் அனைவரும் பங்கேற்கும் நிர்வாக முறை சாராத மக்கள் மன்றமான ‘ஊரார்’ என்ற அமைப்போடு இது இணைந்து செயல்பட்டது. இதற்கு மேலான மாவட்ட குழு ‘நாடு’ அல்லது மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்டது. 
  • பிராமணர்கள் மட்டுமே வாழ்ந்த அல்லது பிராமணர்கள் அதிகமாக வாழ்ந்த கிராமங்கள் இவ்வமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்பான ஆவணங்களைப் பாதுகாத்தன. கிராம அளவிலான இவ்வமைப்புகளுக்கும் அரசு நிர்வாகத்திற்குமிடையே பாலமாக செயல்பட்டவர் கிராமத் தலைவர் ஆவார்.


ஏரி நீர்ப்பாசனம்

  • ஏரிப்பட்டி அல்லது ஏரிநிலம் எனும் சிறப்புவகை நிலத்தை தென்னிந்தியாவில் மட்டுமே அறிகிறோம். 
  • தனிப்பட்ட மனிதர்கள் கொடையாகக் கொடுத்த இந்நிலங்களிலிருந்து பெறப்படும் வரி கிராமத்து ஏரிகளைப் பராமரிப்பதற்காகத் தனியாக ஒதுக்கி வைக்கப்படும். 
  • இந்த ஏரிகளில் மழைநீர் சேகரிக்கப்படும். அந்நீரைக் கொண்டு வருடம் முழுவதும் வேளாண்மை செய்ய முடிந்தது. வறட்சியான கால நிலையிலும் வேளாண்மை செய்யலாம். 
  • ஏரிகள் அனைத்தும் கிராம மக்களின் கூட்டுழைப்பில் கற்களாலும் செங்கற்களாலும் கட்டப்பட்டன. 
  • ஏரி நீரை அனைத்து விவசாயிகளும் பகிர்ந்துகொண்டனர். ஏரிகளைப் பராமரிப்பது கிராமத்தின் பொறுப்பாகும். 
  • கிராமம் தொடர்பான செய்திகளைப் பேசுகிற பல்லவர் காலக் கல்வெட்டுகள் அனைத்தும் ஏரிப் பராமரிப்பைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஏரிகளுக்கு அடுத்த நிலையில் கிணறுகள் முக்கியமானவை. வாய்க்கால்கள் வழியாக நீர் விநியோகிக்கப்பட்டது. 
  • நீர் பகிர்வினை முறைப்படுத்தவும், அளவுக்கு அதிகமாகச் சேர்ந்த நீரை வெளியேற்றவும் மதகுகள் அமைக்கப்பட்டிருந்தன. 
  • கிராமத்தாரால் நியமிக்கப்பட்ட ஏரிக்குழு எனும் அமைப்பு நீர் பகிர்வை மேற்பார்வையிட்டது. 
  • ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமான நீரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்வோர் மீது வரி விதிக்கப்பட்டது.


வருவாயும் வரிவிதிப்பும்

  • செப்புப்பட்டயங்களில் பதிவு செய்யப்பட்ட நிலமானியங்களே முக்கியமாக நில வருவாய், வரிவிதிப்பு ஆகியன குறித்தும் விரிவான தகவல்களை முன்வைக்கின்றன. 
  • வருவாயானது முதன்மையாக கிராம ஆதாரங்களிலிருந்தும், வணிக மற்றும் நகரங்களைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்டது. கிராமங்களின் மீது இருவகைப்பட்ட வரிகள் விதிக்கப்பட்டன. 
  • வேளாண் மக்கள் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கில் தொடங்கி பத்தில் ஒரு பங்கு வரை வரியாக அரசுக்குச் செலுத்தினர். இவ்வரியை கிராமமே வசூல் செய்து அரசின் வசூல் அதிகாரியிடம் கட்டியது. 
  • இரண்டாவது வகைப்பட்ட வரிகள் உள்ளூர் அளவில் வசூலிக்கப்பட்ட வரிகளாகும். ஆனால் இவ்வரிகள் அந்தக் கிராமத்தின் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. இவ்வரிப் பணம் நீர்ப்பாசன அமைப்புகளைப் பழுதுபார்த்தல், கோவில்களுக்கு விளக்கேற்றுதல் போன்றவற்றிற்கே செலவிடப்பட்டன. 
  • நிலவரியின் மூலமாகப் பெறப்படும் வருவாய் போதுமானதாக இல்லையெனில் அரசு கால்நடை வளர்ப்போர், கள் இறக்குவோர், திருமண வீட்டார், மட்பாண்டம் செய்வோர், தங்க வேலை செய்வோர், சலவை செய்வோர், துணி நெய்வோர், கடிதங்கள் சுமந்து செல்வோர், நெய் தயாரிப்போர், இடைத் தரகர்கள் ஆகியோரிடம் வரிவசூலித்து பற்றாக்குறையைச் சரிசெய்து கொள்ளும்.
  • போர்களின் போது சூறையாடப்பட்ட பொருள்களும் படைவீரர்களால் கைப்பற்றப்பட்ட செல்வமும் அரசு வருவாயோடு சேர்க்கப்பட்டன. 
  • பல்லவ அரசர்கள் போர்களை மிக முக்கியமானதாகக் கருதினார்கள். காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோவிலில் நந்திவர்மன் காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள், குறிப்பாகப் பல்லவப் படைகள் ஒரு கோட்டையைத் தாக்குவது போன்ற போர்க்களக் காட்சிகள், தொடர் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. 
  • அக்கோட்டை உயரமான மதிற் சுவர்களை கொண்டதாயும், வீரர்கள் அதைத் தாக்குவது போலவும் அருகில் யானைகள் நிற்பது போலவும் அக்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.


பல்லவப் படைகள்

  • அரசர் நிலையான படையொன்றைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டிருந்தார். 
  • அரசு வருவாயில் பெரும்பகுதி படைகளைப் பராமரிப்பதற்கே செலவானது. படைகள் காலாட்படை, குதிரைப்படை, சிறய அளவிலான யானைப்படை ஆகியவற்றைக் கொண்டிருந்தன. 
  • இக்காலத்தில் தேர்ப்படைகள் பெரும்பாலும் பயன்பாட்டிலில்லை. பெரும்பாலுமான போர்கள் குன்றுகள் நிறைந்த நிலப்பரப்புகளில் நடைபெற்றதால் தேர்ப்படைகளால் பயனுள்ள வகையில் செயல்பட இயலவில்லை. 
  • குதிரைப் படைகள் வெற்றிகரமான விளைவுகளை ஏற்படுத்த முடியுமென்றாலும் குதிரைகளை இறக்குமதி செய்யவேண்டியதிருந்ததால் பெருஞ்செலவு பிடிப்பதாக அமைந்தது. 
  • பல்லவர்களிடம் கப்பல் படையும் இருந்தது. அவர்கள் மாமல்லபுரத்திலும் நாகப்பட்டினத்திலும் கப்பல் தளங்களைக் கட்டினர். இருந்தபோதிலும் பின்வந்த சோழர்களின் கப்பற்படை வலிமையோடு ஒப்பிட்டால் பல்லவர்களின் கப்பற்படை சிறியதேயாகும்.


வணிகம்

  • பல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் முக்கியமான வணிக மையாக இருந்தது. வணிகர்கள் தங்கள் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கு அரசிடம் உரிமம் பெற வேண்டும். 
  • பொதுவாகப் பண்டமாற்று முறையே நடைமுறையில் இருந்தது. ஆனால் பின்னர் பல்லவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வெளியிட்டனர். 
  • வணிகர்கள் தங்களுக்கென ‘மணிக்கிராமம்’ போன்ற அமைப்புகளைக் கொண்டிருந்தனர். 
  • வெளிநாட்டு வணிகத்தில் நறுமணப் பொருள்கள், பருத்தி ஆடைகள், விலையுயர்ந்த கற்கள், மூலிகைகள் ஆகியவை ஜாவா, சுமத்ரா, கம்போடியா, இலங்கை, சீனா, பர்மா (மியான்மர்) ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 
  • மாமல்லபுரம் ஒரு முக்கியத் துறைமுகமாக விளங்கியது.
  • வணிகர்கள் தங்களுக்கெனத் தனிக்குழுக்களை (guild) சுதேசி, நானாதேசிகர், ஐநூற்றுவர் என்ற பெயர்களில் அமைத்துக் கொண்டனர். 
  • அவர்களின் முக்கிய அமைப்பு ஐஹோல் நகரினை மையமாகக் கொண்டு செயல்பட்டது. 
  • வெளிநாடுகளோடு வணிகம் மேற்கொண்ட வணிகர்களின் குழு நானாதேசி ஆகும். இவ்வமைப்பு மையப்பகுதியில் காளையின் வடிவத்தைக் கொண்ட தனிக் கொடியைக் கொண்டிருந்தது. வீர சாசனம் என்ற பிரகடனங்களை வெளியிடும் உரிமையையும் பெற்றிருந்தது. 
  • நானாதேசியின் செயல்பாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் விரிந்து பரந்திருந்தது. இதன் தலைவர் பட்டன்சாமி, பட்டணக்கிழார், தண்டநாயகன் என்ற பெயர்களில் கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் உறுப்பினர்கள் ஐஹோல் பரமேஸ்வரியார் என்றழைக்கப்பட்டனர்.


கடல்வழி வாணிபம்

  • வேளாண்மை செய்வதற்கேற்ற விரிந்து பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்த கங்கைச் சமவெளியைப் போலல்லாமல் பல்லவர், சாளுக்கியர் ஆகியோர் குறைந்த அளவிலான வேளாண்மை நிலத்தையே கொண்டிருந்ததால் நிலத்தின் மூலம் அரசு பெற்ற வருவாயும் குறைவாகவே இருந்தது. 
  • நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக வருவாயைத் தேடித்தரும் வகையில் வணிகப் பொருளாதாரமும் வளர்ந்திருக்கவில்லை. தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு கடல் கடந்த வணிகத்தில் பல்லவர் ஈடுபட்டிருந்தனர். 
  • அப்பகுதியில் இக்காலத்தில் காம்போஜா (கம்போடியா), சம்பா (ஆனம்), ஸ்ரீவிஜயா (தெற்கு மலேசிய தீபகற்பமும் சுமத்ராவும்) மூன்று முக்கிய அரசுகள் இருந்தன.
  • மேற்குக் கடற்கரையில் மேலை நாடுகளுடனான வணிகத் தொடர்பில் இந்திய வணிகரைக் காட்டிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த வணிகர்களே, குறிப்பாக அராபிய வணிகர்களே முன்னிலை வகித்தனர். 
  • அயல்நாடுகளுக்குச் சரக்குகளைச் சுமந்து சென்ற இந்திய வணிகர்கள் நாளடைவில் ஏனைய வெளிநாட்டு வணிகர்களுக்குச் சரக்குகளை வழங்குபவர்களாக மாறினர். 
  • மேலை நாடுகளுடனான செய்தித் தொடர்பு நேரடியாக இல்லாமல் அராபியாவின் வழியாக அமைந்தது. அத்தொடர்புகளும் வணிகத்தோடு மட்டுமே நின்றுவிட்டன.


சமூகம்:

  • இலக்கியம், வானியல், சட்டம் முதலான துறைகளில் கற்றறிந்த அறிஞர்களாய் இருந்ததால் பிராமணர்கள் அரசின் ஆலோசகர்களாகச் செயல்பட்டனர். 
  • ஆசிரியப் பணி மட்டுமல்லாமல் வேளாண்மை, வணிகம், போரிடுதல் ஆகிய பணிகளையும் அவர்கள் மேற்கொண்டனர். 
  • வரி கொடுப்பதிலிருந்தும், மரண தண்டனையிலிருந்தும் அவர்களுக்கு விலக்கு வழங்கப்பட்டிருந்தது. அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த சமூகப்பிரிவினர் நாட்டையாண்ட சத் - சத்திரியர்களாவர். 
  • அனைத்துச் சத்திரியர்களும் போர் செய்பவர்களாக இல்லை. அவர்களில் சிலர் வணிகத்திலும் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் வேதங்களைப்படிப்பதற்கான உரிமையைப் பெற்றிருந்தார்கள். அவ்வுரிமை சமூகத்தின் அடித்தளத்திலிருந்த மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. 
  • வணிகர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வீரர்களைப் பராமரித்தனர். வணிகக் குழுக்களையும் உருவாக்கிக் கொண்டனர். 
  • சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருந்தவர்கள் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கைவினைப் பொருள் உற்பத்தி போன்ற தொழில்களை மேற்கொண்டனர். 
  • தூய்மைப் பணி, மீன்பிடி தொழில், சலவைத் தொழில், மூங்கில் பொருள்கள் செய்தல், தோல் பொருள் செய்தல் ஆகிய தொழில்களில் ஈடுபட்ட மக்கள் வர்ண அமைப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டனர்.
  • பல்லவர் காலத்தில் ஆரியமயமாதலும் வடஇந்திய கருத்துப் போக்குகளின் செல்வாக்கும் தென்னிந்தியாவில் மிகுந்தது என்று பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். 
  • நிலக்கொடை வழங்கிய போது அரசர்கள் வெளியிட்ட ஆணைகளே அதற்குச் சான்றாகும். 
  • சாதியமைப்பு வலுவாக நிறுவப்பட்டது. சமஸ்கிருதம் பெரும் முக்கியத்துவம் பெற்றது.
  • காஞ்சிபுரம் முக்கியம் வாய்ந்த கல்வி மையமாயிற்று. வேத மதங்களைப் பின்பற்றுவோர் சிவனை வழிபட்டனர். மகேந்திரவர்மனே முதன் முதலாக தனது ஆட்சிக் காலத்தின் இடைப்பகுதியில் சமண மதத்திலிருந்து விலகி சைவத்தைத் தழுவினார். சமணத்தின் மீது சகிப்புத்தன்மை அற்றவராய் அவர் சில சமண மடாலயங்களை அழித்தார். 
  • பௌத்தமும் சமணமும் தங்கள் செல்வாக்கை இழந்தன. யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் நூறு பௌத்த மடாலயங்களையும் மகாயான பௌத்தத்தைச் சேர்ந்த 10,000 குருமார்களையும் தான் கண்டதாகப் பதிவு செய்துள்ளார். ம
  • திப்புமிக்க கவிஞர்களாயிருந்த அடியார்களான நாயன்மார்களும் ஆழ்வார்களும் இக்காலத்தில் வாழ்ந்தனர்.


பிராமணியத்தின் வளர்ந்து வந்த செல்வாக்கு

  • தென்னிந்தியப் பகுதிகளில் ஆரியப் பண்பாடு செல்வாக்குப் பெற்றுவிட்டதைத் தெளிவாகக் காட்டும் அடையாளம் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒப்புயர்வற்ற இடமாகும். 
  • அளவில் அதிகமான நிலங்களைக் கொடையாகப் பெற்றதால் அவர்கள் செல்வச் செழிப்படைந்தனர். பல்லவ நாட்டில் கல்வி நிலையங்களின் தோற்றமும் ஆரியமயமாகிவிட்டதின் ஓர் அடையாளமாகும். 
  • இக்காலகட்டத்தின் தொடக்கத்தில் கல்வி பெளத்தர்கள் மற்றும் சமணர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்தது. ஆனால் படிப்படியாக பிராமணர்கள் அவர்களைப் புறந்தள்ளி விட்டு அவ்விடத்தை கைப்பற்றிக் கொண்டனர். 
  • சமஸ்கிருத, பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட மத நூல்களைக் கொண்டு வந்த சமணர்கள் நாளடைவில் தமிழைப் பயன்படுத்தத் தொடங்கினர். 
  • சமணமதம் பெரிய அளவில் பிரபலமான மதமாக இருந்தது. ஆனால் பின்னர் வந்த நூற்றாண்டுகளில் சைவ, வைணவ மதங்களின் போட்டியினால் சமண மதத்தை ஆதரிப்போரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. 
  • இதோடு மகேந்திரவர்மனும் சமண மதத்தின் மீது கொண்டிருந்த பற்றை இழந்து சைவ மதத்தைப் பின்பற்றத் தொடங்கினார். அதனால் சமணர்கள் அரச ஆதரவை இழந்தனர். 
  • காஞ்சியிலும் மதுரையிலும் சமணர்கள் சில கல்வி நிலையங்களையும் கர்நாடகாவிலுள்ள சரவணபெலகொலாவில் உள்ளதைப் போன்று சமணமத மையங்களையும் நிறுவினர். 
  • ஆனால் சமணத் துறவிகளில் பெரும்பாலோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு காடுகளிலும் குன்றுகளிலும் உள்ள குகைகளில் வாழவே விருப்பம் கொண்டனர்.


மடங்களும் மடாலயங்களும்

  • காஞ்சிப் பகுதியிலும் கிருஷ்ணா கோதாவரி நதிகளுக்கிடைப்பட்ட பகுதிகளிலும் பௌத்தத் துறவி மடாலயங்கள் அமைந்திருந்தன. 
  • இவையே பௌத்தக் கல்வி முறையின் மையமாக இருந்தன. இக்காலகட்டத்தில் வேத வைதீகப் பிரிவினருக்கும், அவைதிக பிரிவுகளுக்குமிடையே தீவிர மோதல்கள் நடந்து கொண்டிருந்ததால் பெளத்த மையங்கள் பௌத்த மதத்தைக் கற்பதில் அக்கரைக்காட்டின. வேதமதங்களுக்கு கிடைத்த அரச ஆதரவு, பௌத்த மதத்திற்கு இல்லாத நிலை, வேத மதங்களின் வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுத்தது.
  • நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு இணையான புகழைப் பெற்றிருந்த காஞ்சி பல்கலைக்கழகத்தைத் தவிர வேறு சில சமஸ்கிருதக் கல்லூரிகளும் செயல்பட்டு வந்தன. 
  • சமஸ்கிருதம் அங்கீகரிக்கப்பட்ட ஊடக மொழியாகவும், அரச்சபையின் அலுவலக மொழியாகவும் இருந்ததால் இலக்கிய வட்டாரங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எட்டாம் நூற்றாண்டில் மடங்கள் பிரபலமாயின. 
  • மடங்கள் ஓய்வில்லங்களாவும், உணவுச் சாலைகளாகவும், கல்வி கற்பதற்கான இடமாகவும் ஒரே நேரத்தில் செயல்பட்டன. 
  • இவ்வியல்பு இம்மடங்களோடு தொடர்புடைய பிரிவினருக்கு மறைமுகமாக விளம்பரத்தைத் தேடித்தருவதாயும் அமைந்தது.


சமஸ்கிருத மொழி பிரபலமாதல்

  • இக்காலத்தில் சமஸ்கிருத மொழிக்குப் பெரும் அரச ஆதரவு இருந்தது. முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாசபிரகசனம் என்ற நூலை சமஸ்கிருதத்தில் எழுதினார். 
  • தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வியக்கத்தக்க இரு நூல்கள் சமஸ்கிருத இலக்கியத்திற்கான தர அளவுகளை உருவாக்கின. அவை பாரவியின் கீர்த்தர்ஜூன்யம், தண்டியின் தசகுமாரசரிதம் ஆகிய நூல்களாகும். 
  • மிகச் சிறந்த அணி இலக்கணமாகிய ‘காவிய தர்சா’ என்னும் நூலை இயற்றிய தண்டி பல்லவ அரசவையை சில ஆண்டுகள் அலங்கரித்ததாகத் தெரிகிறது.


பல்லவரின் குடைவரைக் கோவில்கள்

  • பல்லவர் பகுதிகளில் குடைவரைக் கோவில்களை அறிமுகம் செய்த பெருமை முதலாம் மகேந்திரவர்மனைச் சேரும். 
  • பிரம்மா, ஈஸ்வரா, விஷ்ணு ஆகியோர்க்கு, தான் கட்டிய கோவில்கள், கோவில் கட்டுவதற்குப் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் செங்கல், மரம், உலோகம், சாந்து ஆகியன கொண்டு கட்டப்படவில்லை என முதலாம் மகேந்திரவர்மன் தனது மண்டகப்பட்டுக் கல்வெட்டில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். 
  • மகேந்திரவர்மனின் குடைவரைக் கோவில்கள் வழக்கமாக மண்டப பாணியில் தூண்களைக் கொண்ட ஒரு மண்டபத்தைக் கொண்டிருக்கும்; அல்லது முதலில் ஒரு மண்டபத்தையும் அதற்குப்பின் புறமோ, பக்கவாட்டிலோ ஒரு கருவறையைக் கொண்டிருக்கும்.


PALLAVAS-TNPSC EXAM NOTES-IN TAMIL -COMPLETE FREE GUIDE


Post a Comment

0Comments

Post a Comment (0)