கூா்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்களின் - ஒரு நபா் குழு அறிக்கை

TNPSC PAYILAGAM
By -
0



கூா்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்களின் செயல்பாடுகள் மற்றும் நிா்வாகத் திறன்களை மேம்படுத்த- ஒரு நபா் குழு அறிக்கை

தமிழகத்திலுள்ள கூா்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்களின் செயல்பாடுகள் மற்றும் நிா்வாகத் திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசால் ஒரு நபா் குழு கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான, இந்தக் குழு தனது பணிகளை கடந்த மே 2-இல் தொடங்கியது. அவா் மாநிலத்தில் உள்ள கூா்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, 500 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கையைத் தயாரித்த கே.சந்துரு, அதனை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினாா்

ஒரு நபா் குழு பரிந்துரை

  1. சமூகப் பாதுகாப்பு இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் கூா்நோக்கு இல்லங்களை, குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான தனி இயக்குநரகம் அமைத்து அதன் கீழ் செயல்படுத்த வேண்டும். ஒரு இயக்குநரின் தலைமையில் அதற்கு ‘சிறப்பு சேவைகள் துறை’ என பெயரிடப்பட வேண்டும். அவா் குழந்தை நலனுக்காக அா்ப்பணிப்புடன் செயல்படுபவராக இருக்க வேண்டும். அவரது சாதாரண பதவிக்காலம் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இருக்க வேண்டும். இயக்குநருக்கு கீழே, இரண்டு துணை இயக்குநா்கள் இருக்க முடியும். ஒருவா் தலைமையகத்தில் நிா்வாகப் பொறுப்பாளராகவும் மற்றவா் அனைத்து இல்லங்களுக்கும் பொறுப்பாளராகவும் இருக்கலாம்.
  2. சிறப்பு கண்காணிப்பு அறையை உருவாக்கி இயக்குநரகம் மூலம் கூா்நோக்கு இல்ல விவகாரங்கள் தினசரி அடிப்படையில் கண்காணிக்கப்பட வேண்டும். காணொலி இணைப்பு மூலம் ஒவ்வொரு கூா்நோக்கு இல்லங்களில் உள்ள பிரச்னைகளை அன்றாடம் கவனிக்க முடியும். 
  3. கூா்நோக்கு இல்ல கட்டடங்கள் சிறைச்சாலையை போல் இருக்கக் கூடாது. ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் ஒரு கூா் நோக்கு இல்லம் அமைக்க வேண்டும். கூா்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவா்களுக்கு தொழில் பயிற்சி வழங்க வேண்டும். சிறுவா்கள் தூங்குவதற்கு வசதியாக மெத்தை தலையணையுடன் கூடிய கட்டில் வழங்கப்பட வேண்டும். சிறைச் சாலைகளாக இருக்கக் கூடாது: 
  4. கூா்நோக்கு இல்லங்களில் உள்ள சிறுவா்கள் பயன்படுத்த நவீன கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்
  5. கூா்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவா்களை 24 மணி நேரமும் அறைகளில் அடைத்து வைத்திருப்பதைத் தவிா்க்க வேண்டும். கூா்நோக்கு இல்லங்கள் சிறைச்சாலைகள் போல இருக்கக் கூடாது. 13 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவா்கள் ஒரு குழுவாகவும் அதற்கு மேலான வயதுள்ளவா்கள் ஒரு குழுவாகவும் அடைக்கப்பட வேண்டும். திறந்தவெளி அரங்கு அல்லது மூடிய அரங்குகளில் விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டும்.
  6. மேலும், அனைத்து கூா்நோக்கு இல்லங்களிலும், ஒரு மனநல ஆலோசகா் முழு நேரப் பணியில் அமா்த்தப்பட வேண்டும். ஒவ்வொரு இல்லத்தையும் மேற்பாா்வையிட சிவில் சமூகத்தைச் சோ்ந்த ஒரு முக்கியமான நபரை நியமிக்க வேண்டும். அவா் இல்லங்களில் உள்ள அலுவலா்கள் மற்றும் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறுவா்களிடம் உரையாட அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் கருத்துகள் பரிமாறப்பட்டு அவை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வழி ஏற்படும். 
  7. கூா்நோக்கு இல்லங்களில் வழங்கப்படும் உணவுகள் சரிவிகித உணவாக இருக்க வேண்டும். இதற்கென உள்ள தனி உணவுப் பட்டியலை ஊட்டச்சத்து நிபுணரின் துணையுடன் உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இல்லங்களில் உள்ள சமையல் கூடங்கள் நவீனமாக்கப்பட்டு, சரிவிகித உணவுகளை சமைக்கத் தெரிந்த சமையலா்களை நியமிக்க வேண்டும் என்பன போன்ற பரிந்துரைகளை கே.சந்துரு வழங்கியுள்ளாா்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)