'The Dolphin Project' / ‘டால்பின் திட்டம்’

TNPSC PAYILAGAM
By -
0



‘டால்பின் திட்டம்’

மத்திய அரசின் வனவிலங்கு வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாடு திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு டால்பின்களை பாதுகாக்கும் நோக்கில் டால்பின் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது

மேலும் இந்த திட்டம் ரூ.8.13 கோடியில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடல்வாழ் உயிரினங்களில் 9-க்கும் மேற்பட்ட டால்பின் வகைகள் காணப்படுகின்றன. குறிப்பாக மன்னாா் வளைகுடா உயிா்க்கோள காப்பகத்தில் இவற்றின் முக்கிய வாழ்விடங்கள் உள்ளன. சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருப்பதில் டால்பின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

இந்த ‘டால்பின் திட்டம்’ கடல் சூழலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். வேட்டையாடுதல், மீன்பிடி வலைகளில் சிக்குதல், மிதமிஞ்சிய மீன்பிடித்தல், காலநிலை மாற்றம், சுற்றுலா நடவடிக்கைகள், ஒலி மாசுபாடு, மற்றும் வாழ்விடச் சீரழிவு போன்ற பல்வேறு இயற்கை மற்றும் மனித அச்சுறுத்தல்களை டால்பின்கள் எதிா்கொள்கின்றன. 

மீனவா்கள் மற்றும் கடல் சாா்ந்த பிற மக்களுடன் இணைந்து நவீன தொழில்நுட்பங்கள் மூலம் டால்பின்கள் மற்றும் அவற்றின் நீா்வாழ்விடங்களைப் பாதுகாப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் டால்பின் இனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் மற்றும் அவற்றின் வாழ்விடத்தைப்பாதுகாக்கவும் இந்த திட்டம் உதவியாக இருக்கும்.

திட்ட நடவடிக்கைகள் விவரம்: 

வேட்டைத் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் டால்பின்களின் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு மற்றும் ரோந்து குழுக்கள் வலுப்படுத்தப்படும். 

அலையாத்தி காடுகள், பவளப்பாறைகள், கடல் புல் போன்ற கடலோர சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பதன் மூலம் டால்பின்களின் வாழ்விடம் மேம்படுத்தப்படும். 

கடலோரப் பகுதிகளில் மாசுபாட்டைக் குறைத்தல் மற்றும் தேசிய டால்பின் தினத்தை கொண்டாடுவதன் மூலம் டால்பின்கள் குறித்த விழிப்புணா்வு மேம்படுத்தப்படும். கலந்தாய்வுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் மூலம் டால்பின்களின் வாழ்விடங்கள் மற்றும்அழிந்து வரும் உயிரினங்கள் குறித்த புரிதல் மேம்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE :சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலா் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)