TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
தென்னிந்திய அரசுகள்:
சாளுக்கியர்கள் (கி.பி. 543 -755)
சாளுக்கியரின் நிர்வாகம்
அரசு :
- அரசரே நிர்வாகத்தின் தலைவர். ஒரு அரசருக்குப் பிறகு, அவருடைய மூத்த மகனே அரசராக வேண்டும் என்ற மரபு முழுமையாகப் பின்பற்றப்படவில்லை. பொதுவாக ஓர் அரசர் ஆட்சி புரிகையில் அவருடைய மூத்த மகன் ஆளுநராக (யுவராஜாவாக) அமர்த்தப்படுவார். இந்த ஆளுநர் இலக்கியம், சட்டம், தத்துவம், போர்க்கலைகள் முதலானவற்றில் பயிற்சி பெறுவார்.
- சாளுக்கிய அரசர்கள் தர்ம சாஸ்திரம், நீதி சாஸ்திரம் ஆகியவற்றின்படி ஆட்சிபுரிவதாகக் கூறினர். முதலாம் புலிகேசி மனுசாஸ்திரம், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்.
- தொடக்க காலத்தில் சாளுக்கிய அரசர்கள் மகாராஜன், சத்யசிரயன், ஸ்ரீபிருத்திவிவல்லபன் எனும் பட்டங்களைச் சூடிக் கொண்டனர்.
- ஹர்சவர்தனரை வென்ற பின்னர் இரண்டாம் புலிகேசி பரமேஸ்வரன் பத்ரகாரன், மகாராஜாதிராஜன் எனும் பட்டங்களும் பிரபலமாயின.
- பல்லவ அரசில், அரசர்கள், தர்ம மகாராஜாதி ராஜா, மகாராஜாதி ராஜா, தர்ம மகாராஜா, மகாராஜா எனும் உயர்வாக ஒலிக்கும் பட்டங்களைச் சூட்டிக்கொண்டனர்.
- ஹிரகடஹள்ளி செப்புப்பட்டயத்தில், அக்னிஸ்தோம, வாஜ்பேய, அஸ்வமேத வேள்விகளை நடத்தியவர் என்று அரசர் அறிமுகம் செய்யப்படுகிறார்.
- காட்டுப் பன்றியின் உருவமே சாளுக்கியரின் அரசமுத்திரையாகும். இது விஷ்ணுவின் வராக அவதாரத்தைக் குறிப்பதாகும். சிவபெருமானின் வாகனமான காளை (நந்தி) பல்லவர்களின் அரச முத்திரையாகும்.
அரசகுல மகளிர்
- முதலாம் ஜெயசிம்மனின் வழிவந்த சாளுக்கிய வம்சாவளியினர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மாநில ஆளுநர்களாக நியமித்தனர்.
- இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டு : ஐஹோல் (கர்நாடகா) மேகுடி கோவில் ஒரு குன்றின் மேலுள்ளது. இச்சமணக் கோவிலின் கிழக்குச் சுவரில் 19 வரிகளைக் கொண்ட சமஸ்கிருதக் கல்வெட்டு ஒன்று உள்ளது. (சக வருடம் 556: கி.பி. 634-635 காலத்தைச் சார்ந்தது). இக்கல்வெட்டுச் செய்திகளை எழுதியவர் ரவிகீர்த்தி என்ற கவிஞர். இக்கல்வெட்டு சாளுக்கிய அரசர்களைக் குறிக்கும் மெய்கீர்த்தியாகும். குறிப்பாக அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த இரண்டாம் புலிகேசி ‘சத்யஸ்ராய’ (உண்மையின் உறைவிடம்) என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இக்கல்வெட்டு சாளுக்கியரின் அரசவம்ச வரலாற்றை, இரண்டாம் புலிகேசி தன் பகைவர்கள் அனைவரையும் குறிப்பாக ஹர்சவர்தனரைத் தோற்கடித்ததைக் கோடிட்டுக் காட்டுகிறது.
- விஜயபத்திரிகா என்னும் பெயரைக் கொண்ட சாளுக்கிய இளவரசி கல்வெட்டாணைகளைப் பிறப்பித்துள்ளார். பல்லவ அரசிகள் அரசு நிர்வாகத்தில் நேரடியாகப் பங்கேற்கவில்லை. ஆனால் அவர்கள் பல கோவில்களை எழுப்பினர். பல கடவுள்களின் உருவங்களை அங்கே நிறுவினர். கோவில்களுக்குக் கொடை வழங்கினர். ராஜசிம்மனின் அரசி ரங்கபதாகாவின் உருவம், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலிலுள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.
அரசரும் அமைச்சர்களும்:
- சாளுக்கிய அரசில் அதிகாரங்கள் அனைத்தும் அரசரின் கரங்களில் வழங்கப்பட்டிருந்தன. அமைச்சரவை பற்றிக் கல்வெட்டுகளில் குறிப்பாக எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் அவை மகா - சந்தி - விக்கிரகிக என்னும் அதிகாரியை குறிப்பிடுகின்றன.
- நான்கு அமைச்சர்களைக் குறித்து கல்வெட்டுகள் பேசுகின்றன. அவர்கள் பிரதான (முதலமைச்சர்), மகாசந்தி-விக்கிரகிக (வெளிவிவகாரத் துறை அமைச்சர்), அமத்யா (வருவாய்த்துறை அமைச்சர்), சமகர்த்தா (அரசு கருவூல அமைச்சர்) ஆகியோராவர்.
- நிர்வாக வசதிக்காகச் சாளுக்கியர்கள் நாட்டைப் பல பிரிவுகளாகப் பிரித்திருந்தனர். அவை விஷ்யம், ராஷ்ட்ரம், நாடு, கிராமம் என்பவனவாகும்.
- கல்வெட்டுகள் விசயாபதி, சமந்தா, கிராமபோகி, மபத்ரா என்னும் அதிகாரிகள் குறித்துப் பேசுகின்றன. விசயாபதி அரசரின் கட்டளைப்படி அதிகாரங்களைக் கையாண்டார். சமந்தா என்போர் நிலப்பிரபுக்களாவர். இவர்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டனர். கிராம்போகி, கிராமகூடர் ஆகியோர் கிராம அளவிலான அதிகாரிகள். மகாத்ரா என்போர் கிராமத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களாவர்.
மாகாண மற்றும் மாவட்ட நிர்வாகம்
- பொதுவாக அரசர்கள் தங்களின் மகன்களை மாகாண ஆளுநர்களாக அமர்த்தினர்.
- மாகாண ஆளுநர்கள் தங்களை ராஜமார்க்க ராஜன் என்றும், ராஜாதித்ய ராஜ பரமேஸ்வரன் என்றும் அழைத்துக் கொண்டனர். இவர்களில் சிலர் மகா – சமந்தா என்னும் பட்டத்தைப் பெற்றிருந்தனர். இவர்கள் படைகளை வைத்துப் பராமரித்தனர்.
- விஷ்யாவின் தலைவர் விசாயபதியாவார். இவ்விஷயாக்கள் மீண்டும் புக்திகளாகப் பிரிக்கப்பட்டன. புக்தியின் தலைவர் போகபதி ஆவார்.
கிராம நிர்வாகம்
- கிராமங்களில் பாரம்பரியமாக வருவாய் அலுவலர்களாகப் பணியாற்றிவர் நல-கவுண்ட என்றழைக்கப்பட்டனர்.
- அரசரால் நியமிக்கப்பட்ட கமுண்டர் அல்லது போகிகன், கிராம நிர்வாகத்தின் மையப் புள்ளியாக இருந்தார்.
- கிராமக் கணக்கர் கரணா ஆவார். இவர் கிராமணி எனவும் அழைக்கப்பட்டனர்.
- கிராம் அளவில் கிராம மக்களைக் கொண்ட ‘மகாஜனம்’ என்னும் குழுவின் கைகளில் சட்டம் ஒழுங்கு நிர்வாகம் இருந்தது.
- ‘மகாபுருஷ்’ என்னும் சிறப்பு அதிகாரி கிராமத்தில் அமைதியைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டார்.
- நகரபதி, புறபதி ஆகியோர் சிறுநகரங்களின் அதிகாரிகளாவர்.
மதம்
- சைவம் வைணவம் ஆகிய இரு மதங்களையும் சாளுக்கியர் ஆதரித்தனர். சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் கோவில்களை எழுப்பினர். இக்கோவில்களில் முறையான வழிபாடுகளும் சடங்குகளும் விழாக்களும் நடத்தப்படுவதற்காக கங்கைப் பகுதிகளிலிருந்து பிராமணர்கள் அழைத்துவரப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.
- சாளுக்கிய அரசர்களில் குறிப்பிடத்தகுந்த அரசர்களான முதலாம் கீர்த்திவர்மன், மங்களேசன் (597-609), இரண்டாம் புலிகேசி (609-642) ஆகியோர் வேள்விகளை நடத்தினர். அவர்கள் பரம - வைஷ்யண, பரம - மஹேஸ்வர என்னும் பட்டங்களையும் தரித்துக்கொண்டனர். போர்க் கடவுளான கார்த்திகேயனுக்கு முக்கியத்துவம் அளித்தனர். சைவ மடங்கள் சைவத்தைப் பரப்பும் மையங்களாயின.
- சாளுக்கியர் ஆசீவக மதப்பிரிவுகளையும் ஆதரித்தனர்.
- சமண மத மையங்களுக்கு மிகத் தாராளமாக நிலங்களை வழங்கினர். கவிஞர் என இரண்டாம் புலிகேசியால் புகழ்மாலை சூட்டப்பட்ட ரவிகீர்த்தி ஒரு சமண அறிஞர் ஆவார்.
- இரண்டாம் கீர்த்திவர்மனின் ஆட்சியின்போது சமண மதத்தைச் சேர்ந்த கிராம அதிகாரி ஒருவர் அனெகெரி என்ற இடத்தில் ஒரு சமணக் கோவிலைக் கட்டினார்.
- இளவரசர் கிருஷ்ணா குணபத்ரா என்ற சமணத் துறவியை தனது ஆசிரியராகக் கொண்டிருந்தார்.
- சீனப் பயணி யுவான் சுவாங் சாளுக்கியப் பகுதிகளில் பல பௌத்த மையங்கள் இருந்ததாகவும் அவற்றில் மகாயான, ஹீனயான பிரிவுகளைப் பின்பற்றும் 5000 பௌத்தர்கள் வாழ்ந்ததாகவும் கூறுகிறார்.
இலக்கியமும் கல்வியும்
- ஐஹோல், மகாகூடம் தூண் கல்வெட்டுக்களைச் சாளுக்கியர் சமஸ்கிருதத்தில் பொறித்துள்ளனர்.
- வாதாபியிலுள்ள ஒரு சாளுக்கிய அரசனின் ஏழாம் நூற்றாண்டுக் கல்வெட்டு கன்னட மொழியை உள்ளூர் பிராகிருதம் அதாவது மக்களின் மொழியென்றும், சமஸ்கிருதத்தைப் பண்பாட்டின் மொழி என்றும் குறிக்கின்றது.
- இரண்டாம் புலிகேசியின் தளபதி ஒருவன் ‘சப்தாவதாரம்’ எனும் இலக்கண நூலை சமஸ்கிருத மொழியில் எழுதினார்.
சாளுக்கியரின் கட்டடக்கலை
- வரலாற்று ரீதியில் தக்காணத்தில் சாளுக்கியர்களே முதன்முறையாக, சற்றே மிருதுவான மணற்கல் (sand stone) பயன்படுத்திக் கோவில்களை எழுப்பினர்.
- வாதாபியில் நான்கு விதமான கோவில்கள் காணப்படுகின்றன. இரண்டு கோவில்கள் விஷ்ணுவுக்கும் ஒரு கோவில் சிவனுக்கும் மற்றொன்று சமண தீர்த்தங்கரர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
- இவர்களின் கோவில்களைக் குடைவரை குகைக்கோவில்கள், கட்டுமானக் கோவில்கள் எனப் பிரிக்கலாம். வாதாபி, குடைவரைக் குகைக் கோவில்கள், கட்டுமானக் கோவில்கள் ஆகிய இரண்டுக்கும் பெயர்பெற்றது. பட்டாடக்கல், ஐஹோல் ஆகியவை கட்டுமானக் கோவில்களுக்குப் பெயர்பெற்றவையாகும்.
ஐஹோல்
- 634 இல் உருவாக்கப்பட்ட ஐஹோல் இடைக்காலத்தில் புகழ் பெற்றிருந்த ஐயாவொளே எனும் வணிகக் குழுமத்தின் தலைமையிடமும், முக்கியமான வணிக மையமுமாகும்.
- ஐஹோலில் ஏறத்தாழ எழுபது கோவில்கள் உள்ளன. காலத்தால் முந்தைய கற்கோவில் லட்கான் கோவிலாகும். இதனுடைய தனித்தன்மை இங்குள்ள வட இந்திய பாணியிலிருந்து வேறுபட்ட சிகரத்தைக் கொண்ட, அழகான, நேர்த்தியான மென்சாந்து மேற்பூச்சைக் கொண்ட தூணாகும்.
- துர்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு கோவில், புத்த சைத்ய பாணியில் அமைந்துள்ளது. சற்றே மேடான தளத்தின் மேல் அரை வட்டவடிவில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று துர்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட குசிமல்லிகுடி எனும் மற்றொரு துர்க்கைக் கோவில் செவ்வக வடிவத்தில் அமைந்துள்ளது.
- சாளுக்கியர் சமணக் கோவில்களையும் கட்டினர். மேகுடியிலுள்ள சமணக்கோவில், சாளுக்கியர் காலத்திய கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
- மண்டப பாணியில் அமைக்கப்பட்டுள்ள குகைகள் ஐஹோலில் பாதுகாக்கப்படுகின்றன.
வாதாபி (பாதாமி)
- வாதாபியில் நான்கு குகைகள் உள்ளன. மங்களேசன் கட்டிய மிகப் பெரிய குகைக்கோவில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- பாம்புப் படுக்கையில் சயனக் கோலத்திலுள்ள விஷ்ணு, நரசிம்மர் சிற்பங்கள் சாளுக்கியரின் கலை மேன்மைக்கு நேர்த்திமிகுந்த எடுத்துக்காட்டுகளாகும்.
- மதவேறுபாடுகளின்றிக் கட்டடக்கலை அமைப்புகள் ஒரே பொதுவான பாணியைக் கொண்டுள்ளன. இது தொழில்நுட்பத்தையும், புரவலர், கட்டடக் கலைஞர்களின் மதச்சார்பற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது.
பட்டாடக்கல்
- கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்திலுள்ள பட்டாடக்கல் எனும் அமைதியான சிறிய கிராமம், கலையழகும் நேர்த்தியும் மிக்க கோவில்களுக்குப் பெயர்பெற்றதாகும். பட்டாடக்கல் அரச சடங்குகள் நடத்துவதற்கான இடமாகும்.
- இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியதன் நினைவாக அவனுடைய மனைவி லோகமாதேவியின் ஆணைப்படி விருப்பாக்சர் கோவில் கட்டப்பட்டது.பல்லவ அரசன் ராஜசிம்மன் மாமல்லபுரத்தில் எழுப்பிய கட்டுமானக் கோவில்களின் தனித்தன்மைகளைத் தழுவி இக்கோவில் அமைந்துள்ளது. பொதுவாக நினைவுச் சின்னங்கள் அவற்றைக் கட்டிய அரசர்களோடு தொடர்புடையனவாக இருக்கும். சிற்பிகளின் பெயர் அறியப்படாமல் போய் விடும். ஆனால் இங்கே இக்கோவிலின் வடிவத்தைத் திட்டமிட்ட கட்டடக் கலைஞர் அதை உருவாக்கிய நிபுணத்துவம் பெற்ற கலைஞர்கள் ஆகியோரின் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளன. விருப்பாக்சர் கோவிலின் கிழக்கு வாசலில் இடம் பெற்றுள்ள ஒரு கன்னடக் கல்வெட்டு இக்கோவிலை வடிவமைத்த கட்டடக் கலைஞரை வெகுவாகப் பாராட்டுகின்றது. அக்கட்டடக்கலைஞருக்குத் திரிபுவாசாரியா (மூன்று உலகையும் உருவாக்கியவன்) என்ற பட்டமும் சூட்டப்பட்டது. கோவில் சுவரில் இடம் பெற்றுள்ள பல சிற்பங்கள் அவற்றைச் செதுக்கிய சிற்பிகளின் கையொப்பத்தையும் கொண்டுள்ளன.
- இக்கிராமத்தின் தென்கிழக்கு மூலையில் பாபநாத கோவில் அமைந்துள்ளது. விருப்பாக்சர் கோவிலைப் போன்ற அடித்தள கட்டுமானத் திட்டத்தின்படி கட்டப்பட்ட இக்கோவில் வட இந்திய பாணியிலான சிகரத்தைக் கொண்டுள்ளது. வெளிப்புறச் சுவர்கள் ராமாயணக் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் சித்தரிக்கும் தொடர் சிற்பங்களால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோவிலின் கிழக்குச் சுவரிலுள்ள ஒரு சிறிய கன்னடக் கல்வெட்டு கருவறையை வடிவமைத்தவரின் பெயர் ‘ரேவதி ஓவஜா’ எனக் குறிப்பிடுகின்றது. பட்டாடக்கல்லில் சாளுக்கியர் பத்துக்கும் மேற்பட்ட கோவில்களை எழுப்பியுள்ளார்கள். இவை சாளுக்கியக் கட்டடக் கலையின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகின்றன. கட்டப்பட்ட பாணியின் அடிப்படையில் இக்கோவில்களை இந்தோ-ஆரியன், திராவிட கட்டடக் கலை என இரண்டாகப் பிரிக்கலாம்.
ஓவியம்
- வாதாபியில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குகைக்கோவிலில் சில ஓவியங்கள் காணப்படுகின்றன.
- ஓவியக்கலையில் சாளுக்கியர் வாகடகர்களின் பாணியைப் பின்பற்றினர். அவ்வாறான ஓவியங்களில் பெரும்பாலானவை விஷ்ணுவின் அவதாரங்களைப் பற்றியதாகும்.
- சாளுக்கிய ஓவியங்களில் மிகப் பிரபலமானது. அரசன் மங்களேசனால் (597-609) கட்டப்பட்ட அரண்மனையில் உள்ளது. அக்காட்சி நடன நிகழ்ச்சி ஒன்றை அரச குடும்ப உறுப்பினர்களும் மற்றவரும் கண்டுகளிப்பதாய் அமைந்துள்ளது.