TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
தென்னிந்திய அரசுகள்:
இராஷ்டிரகூடர்கள் (கி.பி. 755-975)
இராஷ்டிரகூடர்கள்-நிர்வாகம்-இலக்கியமும்-கல்வியும்-கட்டடக்கலை
ஆட்சிமுறை
- இராஷ்டிரகூட பேரரசு, ராஷ்டிரம் என்ற மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றை ராஷ்டிரபதிகள் நிர்வகித்தனர். ராஷ்டிரம் ஒவ்வொன்றும் பல விஷயங்களாக (மாவட்டங்களாக) பிரிக்கப்பட்டன.
- மாவட்ட நிர்வாகத்திற்கு விஷயபதி பொறுப்பாவார். அடுத்த ஆட்சிப் பிரிவு புக்தி எஎனப்பட்டது.
- இதில் 50 முதல் 70 கிராமங்கள் இருந்தன. புக்தியின் ஆட்சியாளர் போகபதி எனப்பட்டார். இந்த அதிகாரிகள் நேரடியாக மத்திய அரசால் நியமிக்கப்பட்டனர். கிராம நிர்வாகம் கிராமத் தலைவரால் நடத்தப்பட்டது. கிராம நிர்வாகத்தில் கிராம சபைகள் பெரும்பங்கு வகித்தன.
சமூக பொருளாதார நிலைமைகள்
- இந்து சமயப் பிரிவுகளான சைவமும் வைணவமும் இராஷ்டிர கூடர்களின் ஆட்சியில் செழித்து வளர்ந்தன. இருப்பினும், சமண சமயமும் அரசர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆதரவைப் பெற்று வளர்ச்சி கண்டது. தக்காணத்தின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் சமணர்கள்.
- கன்ஹேரி, ஷோலாபூர், தார்வார் போன்ற ஒரு சில இடங்களில் புத்தசமய குடியிருப்புகளும் தழைத்திருந்தன. பல்வேறு சமயங்களுக்குகிடையே நல்லிணக்கம் நிலவியதும் குறிப்பிடத்தக்கது.
- தற்கால பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள சாலடோகி என்ற இடத்தில் ஒரு கல்லூரியும் இக்காலத்தில் செயல்பட்டது. இந்த கல்விக் கூடத்தைப் பற்றி ஒரு கல்வெட்டு விரிவான தகவல்களைத் தருகிறது. செல்வந்தர்கள் அளித்த கொடை மற்றும் விழாக்களின் போதும் திருவிழாக்களின்போதும் கிராம மக்கள் வழங்கிய கொடை ஆகியவற்றின் உதவியோடு இக்கல்வி நிறுவனம் நடத்தப்பட்டது.
- இராஷ்டிராகூடர் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரமும் தழைத்திருந்தது. தக்காணத்திற்கும் அராபியர்களுக்கும் இடையே வாணிபம் செழித்திருந்தது. அவர்களோடு நட்புறவு கொண்ட இராஷ்டிரகூட அரசர்கள் வாணிப வளர்ச்சிக்கும் ஊக்கமளித்தனர்
பண்பாட்டுப் பங்களிப்பு
- இராஷ்டிரகூடர்கள் வடமொழியை பெரிதும் ஆதரித்தனர். இராஷ்டிரகூட அரசவையில் பல அறிஞர்கள் இருந்தனர். நலிசம்பு என்ற நூலை திருவிக்ரமன் எழுதினார்.
- மூன்றாம் கிருஷ்ணரது ஆட்சிக் காலத்தில் ஹளயுதா என்பவர் கவிரஹஸ்யம் என்ற நூலைப் படைத்தார்.
- இராஷ்டிரகூடர்களின் அரவணைப்பினால் சமணசமய இலக்கியங்களும் வளர்ச்சி பெற்றன. சமணரான முதலாம் அமோகவர்ஷர் பல சமண அறிஞர்களை ஆதரித்தார். அவரது ஆசிரியரானஜீனசேனர் பார்சுவநாதரின் வாழ்க்கை வரலாற்றை செய்யுள் நடையில் 'பார்சவபூதயா' என்ற தலைப்பில் எழுதினார்.
- பல்வேறு சமண முனிவர்களின் வாழ்கை வரலாறுகளைத் தொகுத்து ஆதிபுராணம் என்ற தலைப்பில் குணபத்ரர் என்பவர் எழுதினார்.
- அமோக விருத்தி என்ற இலக்கண நூலை சாகதாயனா என்பவர் படைத்தார்.
- வீராச்சாரியார் என்ற அக்கால கணிதமேதை 'கணிதசாரம்' என்ற நூலை எழுதினார்.
- இராஷ்டிரகூடர்களின் ஆட்சிக்காலத்தில் கன்னட இலக்கியமும் வளர்ச்சி கண்டது. அமோகவர்ஷர் இயற்றிய கவிராஜமார்க்கம் கன்னடமொழியில் எழுதப்பட்ட முதல் கவிதை நூலாகும்.
- பம்பா என்பவர் கன்னடமொழிக் கவிஞர்களில் தலைசிறந்தவர். அவரது புகழ்பெற்ற நூல் 'விக்ரமசேனவிஜயம்'.
- பொன்னா என்ற மற்றொரு கன்னடக் கவிஞர் 'சாந்திபூரணா' என்ற நூலை எழுதினார்.
மதம்
- ராஷ்டிரகூடர்களின் ஆட்சிக் காலத்தில் சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் செல்வாக்குப் பெற்றிருந்தன.
- குடைவரைக் கோவிலாக உருவாக்கப்பட்ட புகழ் பெற்ற எல்லோரா சிவன் கோவில் முதலாம் கிருஷ்ணர் கட்டியதாகும்.
- அரசு முத்திரைகளில் விஷ்ணுவின் வாகனமான கருடன், யோக நிலையில் அமர்ந்த சிவன் மற்றும் விஷ்ணுவின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
- தந்தி துர்கர் உஜ்ஜையினியில் ஹிரண்யகர்ப்ப சடங்கை நடத்தினார்.
- கோவில் தெய்வங்களுக்குத் தராசில் எடைக்கு எடை தங்கம் அளிப்பதான துலா தானத்தைக் குறித்த குறிப்புகள் கிடைத்துள்ளன.
- ஹிரண்யகர்ப்பம் என்றால் தங்கக் கருப்பை என்று பொருள். மதகுருக்கள் விரிவான சடங்குகளை நடத்திய பின்னர் தங்கத்தாலான கருப்பையிலிருந்து வெளிவரும் நபர் மேலுலக ஆற்றல் கொண்ட உடலைப்பெற்றவராக, மறுபடியும் பிறப்பெடுத்தவராக அறிவிக்கப்படுவார். சாதவாகன வம்சத்து அரசரான கௌதமிபுத்ர சதகர்ணி என்பவர் சத்திரிய அந்தஸ்தை அடைவதற்கு ஹிரண்யகர்ப்பச் சடங்கை நடத்தினார்.
- முதலாம் அமோகவர்ஷர், நான்காம் இந்திரர், இரண்டாம் கிருஷ்ணர், மூன்றாம் இந்திரர் போன்ற பிற்கால அரசர்கள் சமண மதத்திற்கு ஆதரவளித்தனர்.
- பௌத்த மதம் வழக்கொழிந்துவிட்ட நிலையில் அதன் முக்கியமான மையம் கன்கேரி என்ற இடத்தில் மட்டுமே இருந்தது.
இலக்கியம்
- ராஷ்டிரகூட ஆட்சியாளர்கள் கல்வியைப் போற்றினார்கள். அவர்களது ஆட்சிக் காலத்தில் கன்னட, சமஸ்கிருத இலக்கியங்கள் பெரும் வளர்ச்சி கண்டன.
- முதலாம் அமோகவர்ஷர் பிரஸ்னோத்ரமாலிகா எனும் சமஸ்கிருத நூலையும், கவிராஜமார்க்கம் எனும் கன்னட நூலையும் இயற்றினார்.
- ஜீனசேனர் சமணர்களின் ஆதிபுராணத்தை எழுதினார்.
- இரண்டாம் கிருஷ்ணரின் ஆன்மிக வழிகாட்டியாக விளங்கிய குணபத்ரர் சமணர்களின் மஹாபுராணத்தை எழுதினார்.
- பழங்காலக் கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்களாக போற்றப்பட்ட கவிச்சக்கரவர்த்தி பொன்னா, ஆதிகவி பம்பா, கவிச்சக்கரவர்த்தி ரன்னா ஆகியோர்
- ராஷ்டிரகூட அரசர் மூன்றாம் கிருஷ்ணராலும், மேலைச் சாளுக்கிய அரசர்களான தைலபா, சத்யஷ்ரேய ஆகியோராலும் ஆதரிக்கப்பட்டனர்.
கட்டடக்கலை
- ராஷ்டிரகூடர்கள் இந்தியச் சிற்பக்கலைக்கு வியத்தகு பங்களிப்பைச் செய்துள்ளனர். தற்கால மஹாராஷ்டிரத்தில் அமைந்துள்ள எல்லோரா, எலிஃபண்டா குடைவரைக் கோவில்கள் அவர்களது ஆட்சிக் காலத்தில் உருவானவையாகும்.
- எல்லோரா குடைவரைக் கோவில் வளாகம் பௌத்த, சமண, இந்து மதச் சின்னங்களுக்கான கலை நுட்பத்தைக் கொண்டுள்ளது.
- முதலாம் அமோகவர்ஷர் சமண மதத்தை ஆதரித்தார். அவரது காலத்தியது எனக் கூறப்படும் ஐந்து சமண குகைக் கோவில்கள் எல்லோராவில் அமைந்துள்ளன.
- எல்லோராவில் நமது கருத்தைக்கவரும் அமைப்பு என்பது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கைலாசநாதர் கோவிலாகும். எட்டாம் நூற்றாண்டில் முதலாம் கிருஷ்ணரின் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோவில் ஒரே பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டதாகும். அது சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்ரமாதித்யன், தான் பல்லவர்களை வெற்றி கொண்டதன் நினைவாக கர்நாடகத்தில் பட்டாடக்கல் என்னும் இடத்தில் எழுப்பிய லோகேஷ்வரர் கோவிலை ஒத்துள்ளது. தசாவதார பைரவர், கைலாச மலையை ராவணன் அசைப்பது, நடனமாடும் சிவன், விஷ்ணுவும் லட்சுமியும் இசையில் லயித்திருப்பது எனக் கற்பலகைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் சிறந்த சான்றுகளாகும்.
- எலிஃபண்டாவின் பிரதான கோவில் எல்லோராவில் அமைந்துள்ள கோவிலை விடவும் சிறந்ததாகும். நடராஜர், சதாசிவம் ஆகிய சிற்பங்கள் அழகிலும் கலை நுட்பத்திலும் எல்லோரா சிற்பங்களை விட மேன்மை கொண்டவையாக விளங்குகின்றன. அர்த்த நாரீஸ்வரர், மகேசமூர்த்தி ஆகியோரின் சிலைகள் புகழ் பெற்ற சிற்பங்களாகும். இவற்றுள் மகேஷமூர்த்தியின் (சிவன்) மூன்று முகங்கள் கொண்ட 25 அடி உயரமுள்ள மார்பளவுச்சிலை இந்தியாவில் உள்ள கவின்மிகு சிற்பங்களுள் ஒன்றாகும். கைலாசநாதர் கோவிலின் வெளித்தாழ்வாரத்திலும், எல்லோராவில் உள்ள கோவிலின் விதானத்திலும் கூரையிலும் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் இன்றளவும் சிறப்புறக் காட்சி தருகின்றன.