TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
தென்னிந்திய அரசுகள்:
இராஷ்டிரகூடர்கள் (கி.பி. 755-975)
- கன்னட இனத்தைச் சேர்ந்த இராஷ்டிரகூடர்களின் தாய்மொழி கன்னடமொழியாகும்.
- இராஷ்டிரகூட மரபைத் தோற்றுவித்தவர் தந்தி துர்க்கர், கூர்ஜரர்களை முறியடித்து அவர்களிடமிருந்து மாளவத்தை தந்தி துர்க்கர் கைப்பற்றினார். பின்னர், இரண்டாம் கீர்த்தி வர்மனை முறியடித்து சாளுக்கிய நாட்டை அவர் கைப்பற்றினார். இவ்வாறு, இராஷ்டிர கூடர்கள் தக்காணத்தில் முதன்மை அரசை உருவாக்கினர்.
- அடுத்து ஆட்சிக்கு வந்த முதலாம் கிருஷ்ணர் ஒரு பெரும் வெற்றி வீரர். கங்கர்களையும் வெங்கிச் சாளுக்கியரையும் அவர் முறியடித்தார். எல்லோராவில் பெரிய பாறையைக் குடைந்து ஒரே கல்லாலான கைலாசர் ஆலயத்தை அவர் அமைத்தார்.
- இராஷ்டிராகூடர்களின் அடுத்த சிறந்த அரசர் மூன்றாம் கோவிந்தர். வடஇந்திய அரசுகளுக்கெதிராக அவர் பல வெற்றிகளைப் பெற்றார்.
- பின்னர் பதவிக்கு வந்த முதலாம் அமோகவர்ஷர் (கி.பி. 815 - 880) அறுபத்தி நான்கு ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தார். அவரது காலத்தில் மாளவமும், கங்கவாடியும் சுதந்திர அரசுகளாயின. இருப்பினும், பண்பாட்டு வளர்ச்சிக்கு அவரது ஆட்சிக்காலம் சிறப்பு பெற்றது. அவர் சமண சமயத்தை பின்பற்றினார். ஜினசேனர் எனும் சமணத் துறவியால் சமணத்தை தழுவினார்.ஜீனசேனர் அவரது சமயகுரு. கற்றோரை ஆதரிக்கும் பண்புடையவராகவும் அவர் திகழ்ந்தார். கவிராஜ மார்க்கம் என்ற புகழ்வாய்ந்த கன்னட நூலை முதலாம் அமோகவர்ஷர் படைத்தார். இராஷ்டிரகூடர்களின் தலைநகரான மால்கெட் அல்லது மான்யகேதம் என்ற நகரையும் அவர் நிர்மாணித்தார்.
- அமோகவர்ஷரின் வழித் தோன்றல்களில் குறிப்பிடத்தக்கவர் மூன்றாம் கிருஷ்ணர் (கி.பி. 936 - 968). அவரது போர்வெற்றிகள் குறிப்பிடத்தக்கவை. சோழர்களுக்கெதிராக அவர் படையெடுத்து தக்கோலம் என்ற இடத்தில் சோழப்படைகளை முறியடித்தார். மேலும் தெற்கு நோக்கி முன்னேறிய அவர் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். ராமேஸ்வரம் வரை சென்ற அவர் அதனை சிறிது காலம் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தாம் கைப்பற்றிய பகுதிகளில் பல கோயில்களையும் அவர் கட்டுவித்தார். இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரர் ஆலயம் அவரால் கட்டப்பட்டது. காஞ்சி உள்ளிட்ட தொண்டை மண்டலம் அவர் ஆட்சிக் காலம் முழுவதும் இராஷ்டிரகூடர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது மறைவுக்குப் பிறகு இராஷ்டிரகூடர்கள் வீழ்ச்சியடைந்தனர்.
ராஷ்டிரகூட மரபின் எழுச்சி:
- தந்திதுர்கர் தனது நிலையை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர், வாதாபியை ஆண்ட கடைசி சாளுக்கிய அரசன் இரண்டாம் கீர்த்திவர்மனை (பொ.ஆ. 746-753) தோற்கடித்தார். அவர் மகாராஜாதிராஜர், பரமேஷ்வரர், பரமபட்டாரகர் ஆகிய பட்டங்களை ஏற்றார்.
- பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மனுக்குத் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்ததன் மூலம் பல்லவர்களுடன் உறவை வளர்த்துக் கொண்டார்.
- பொ.ஆ. 756ஆம் ஆண்டில் தந்திதுர்கரின் மறைவிற்குப் பின்னர் அவரது சிற்றப்பாவான முதலாம் கிருஷ்ணர் ஆட்சிக்கு வந்தார்.
முதலாம் கிருஷ்ணரும் அவருக்குப் பின் வந்தவர்களும்:
முதலாம் கிருஷ்ணர் (பொ.ஆ. 756-775):
- முதலாம் கிருஷ்ணர் (பொ.ஆ. 756-775) மைசூரை ஆண்ட கங்கர்களைப் போரில் வென்றவர்.
- அவருக்கு அடுத்து அவரது மூத்த மகன் இரண்டாம் கோவிந்தர் பொ.ஆ. 775ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார்.
- அவர் கீழைச் சாளுக்கியர்களைத் தோற்கடித்தார். பின்னர் தனது சகோதரரான துருவரிடம் அரசுப் பொறுப்பை ஒப்படைத்தார்.
துருவர் (பொ.ஆ. 780-794):
- துருவர் (பொ.ஆ. 780-794) தனக்குத்தானே அரசராக முடிசூட்டிக் கொண்டார்.
- அவரது ஆட்சிக்காலத்தில் ராஷ்டிரகூடர்களின் அரசு அதன் சிறப்பின் உச்சத்தை அடைந்தது.
- மேலைக் கங்கர் அரசனை வீழ்த்திய பின்னர் துருவர் பல்லவ அரசரான நந்திவர்மனைத் தோற்கடித்தார்.
- வேங்கியை (தற்கால ஆந்திரம்) ஆண்ட அரசரும் துருவரின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
- தெற்கில் தனது ஆதிக்கத்தை நிறுவிய பிறகு துருவர் கன்னோசியைச் சுற்றியுள்ள பகுதிகளின் மீது தன் கவனத்தைத் திருப்பினார்.
- அந்தப் பகுதியில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டப் போட்டியிட்ட பிரதிகர வம்சத்து அரசரான வாத்சர்யர், பாலர் வம்சத்தின் தர்மபாலர் என இருவரையும் தோற்கடித்தார்.
- வாரிசாக தனது மகன் மூன்றாம் கோவிந்தரை நியமித்தார்.
மூன்றாம் கோவிந்தர் (பொ.ஆ. 794-814):
- மூன்றாம் கோவிந்தர் (பொ.ஆ. 794-814) ஆட்சியில் அமர்ந்த காலம் முன்னெப்போதும் இருந்திராத விதத்தில் வெற்றிகரமான ஆட்சிக்கு வழி அமைத்தது.
- பல்லவ அரசர் தண்டிகர் வீழ்த்தப்பட்டார்.
- வேங்கியை ஆண்ட விஷ்ணுவர்த்தனர் அவரது தாய்வழிப் பாட்டனாக இருந்ததால் அவர் மூன்றாம் கோவிந்தரின் ஆதிக்கத்தை எதிர்க்கவில்லை.
- கோவிந்தர் தக்காணத்தில் தனி ஆதிக்கம் செலுத்துபவராக ஆனார். ராஷ்டிரகூடர்களின் ராஜ்யம் அதன் புகழின் உச்சத்தை அடைந்தது.
அமோகவர்ஷர் (சுமார் கி.பி. (பொ.ஆ) 814 - 878) :
- மூன்றாம் கோவிந்தருக்குப் பின்னர் அவரது மகன் அமோகவர்ஷர் (சுமார் கி.பி. (பொ.ஆ) 814 - 878) ஆட்சிக்கு வந்தார்.
- அமோகவர்ஷர் அறுபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அதில் முதல் இருபது ஆண்டுகளுக்கு மேலைக் கங்கர்களுடன் போர் நீடித்தது. கங்கர் வம்சத்து இளவரசர் ஒருவருக்கு அமோகவர்ஷர் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்ததின் மூலம் அப்பகுதியில் அமைதி திரும்பியது.
- அமோகவர்ஷர் கலை, இலக்கியத்திற்கு ஆதரவளித்தார். புகழ் பெற்ற திகம்பர ஆச்சார்யரான ஜீனசேனர், சமஸ்கிருத இலக்கண ஆசிரியரான சகடயானர், கணித மேதையான மஹாவீராச்சார்யர் ஆகியோருக்கு ஆதரவளித்தார்.
- அமோகவர்ஷர் சிறந்த கவிஞராக இருந்தார். அவர் இயற்றிய “கவிராஜமார்க்கம்” கவிதையியல் பற்றிக் கன்னட மொழியில் இயற்றப்பட்ட முதல் நூலாகும்.
- அமோகவர்ஷருக்குப் பின்னர் அவரது வாரிசுகள் அரசாண்டனர். அவர்களுள் திறமையானவர் மூன்றாம் கிருஷ்ணர் (பொ.ஆ. 939 - 968) ஆவார்.
மூன்றாம் கிருஷ்ணர் (பொ.ஆ. 939 - 968):
- ராஷ்டிரகூட ஆட்சியாளர்களில் கடைசி அரசர் மூன்றாம் கிருஷ்ணர் (பொ.ஆ. 939 - 968).
- அவர் ஆட்சிக்கு வந்தவுடன் தனது மைத்துனர் புதுங்கரின் துணையுடன் சோழ அரசின் மீது படையெடுத்தார்.
- பொ.ஆ. 943ஆம் ஆண்டில் காஞ்சியும் தஞ்சாவூரும் கைப்பற்றப்பட்டன. ஆற்காடு, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தை அவரது படை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
- பொ.ஆ. 949ஆம் ஆண்டில் தக்கோலம் (தற்கால வேலூர் மாவட்டம்) என்ற இடத்தில் நடந்த போரில் அவர் ராஜாதித்யனின் சோழர் படையைத் தோற்கடித்தார். மூன்றாம் கிருஷ்ணர் தெற்கே ராமேஸ்வரம் வரை படை கொண்டு சென்றார். அங்கு வெற்றியின் சின்னமாக ஒரு தூணை நிறுவினார். இவ்வாறு தக்காணம் முழுவதிலும் தன் ஆதிக்கத்தை நிறுவுவதில் அவர் வெற்றி கண்டார்
- அவரது ஆட்சியின் போதுதான் ராஷ்டிரகூடர்கள் கன்னோசியைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டு வர வட இந்திய ஆட்சியாளர்களுக்கிடையே நடந்த போட்டியில் இணைந்தனர்.
- கன்னோசியைக் கைப்பற்றுவதற்கு அவர்களுக்கிடையே தொடர்ந்து நடந்த மோதலின் காரணமாக அந்தப் பிரதேசத்தின் குறுநில மன்னர்கள் சுயேச்சையாக இயங்கத் தலைப்பட்டனர்.
- அவர்கள் காட்டிய எதிர்ப்பானது கன்னோசியை மையமாகக் கொண்டு வட இந்தியாவை ஆளும் ஒரு அரசு அமைவதி-ன் வாய்ப்பைத் தகர்த்தது.
- வடமேற்கிலிருந்து வந்த படையெடுப்புகள் ஒரு வலுவான அரசை அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தடையாக இருந்தன.
- ஆனால் மூன்றாம் கிருஷ்ணருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் ராஷ்டிரகூட அரசை அதன் வீழ்ச்சியிலிருந்து காக்க முடியாத அளவிற்கு வலுவற்றவர்களாக இருந்தனர்.
RASHTRAKUDAS TNPSC KEY NOTES:
- இராஷ்டிரகூடர்கள்-நிர்வாகம்-இலக்கியமும் கல்வியும்-கட்டடக்கலை
- இராஷ்டிரகூடர்கள்-வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE