தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்-TNPSC HISTORY


TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்:


தமிழ் மறுமலர்ச்சி :


காலனியத்தின் பண்பாட்டு ஆதிக்கமும் மனிதநேயத்தின் எழுச்சியும் இந்தியத் துணைக் கண்டத்தின் சமூகப் - பண்பாட்டு வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. நவீன தமிழ்நாடும் அத்தகைய வரலாற்று மாற்றத்தை அனுபவித்தது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் அவர்களின் அடையாள கட்டுமானத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன. 


அச்சு இயந்திரத்தின் அறிமுகமும், திராவிட மொழிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட மொழியியல் ஆய்வுகளும் மற்றும் பலவும் தமிழ் மறுமலர்ச்சி செயல்பாடுகளுக்கு அடியுரமாய் விளங்கின. 


அச்சு இயந்திரத்தின் வருகைக்குப் பின்னர் வந்த தொடக்க ஆண்டுகளில் சமயம் சார்ந்த நூல்களை வெளியிடும் முயற்சிகளே பெருமளவில் மேற்கொள்ளப்பட்டன. நாளடைவில் படிப்படியாக நிலைமைகள் மாறின. சமயச்சார்பற்ற எனச் சொல்லத்தகுந்த நூல்களும் வெளியிடுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.


அச்சுத் தொழில்நுட்பத்தின் வருகை :

  • ஐரோப்பிய மொழிகள், தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி தமிழ் மொழியாகும். மிக முன்னதாக 1578இல் தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் கோவாவில் வெளியிடப்பட்டது. 1709இல் முழுமையான அச்சகம் சீகன்பால்கு என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது. தொடக்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது. இதன் விளைவாக இக்காலப் பகுதியில் மிகவும் பழமையான செவ்வியல் தமிழ் இலக்கியங்களை வெளியிடுவதில் தமிழ் அறிஞர்களிடையே புத்தெழுச்சி ஏற்பட்டது.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அறிஞர்களான சி.வை. தாமோதரனார் (1832-1901), உ. வே. சாமிநாதர் (1855-1942) போன்றவர்கள் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தனர். சி.வை. தாமோதரனார் பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார். அவர் பதிப்பித்த நூல்களில் தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம், கலித்தொகை மற்றும் சூளாமணி ஆகியவை அடங்கும். தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவரான உ.வே. சாமிநாதர் செவ்வியல் தமிழ் இலக்கிய நூல்களான சீவகசிந்தாமணி (1887), பத்துப்பாட்டு (1889), சிலப்பதிகாரம் (1892), புறநானூறு (1894), புறப்பொருள் வெண்பா மாலை (1895), மணிமேகலை (1898), ஐங்குறுநூறு (1903), பதிற்றுப்பத்து (1904) ஆகியவற்றை வெளியிடும் முயற்சிகளை மேற்கொண்டார்.
  • இவ்வாறு பழம்பெரும் நூல்கள் வெளியிடப்பட்டது தமிழ் மக்களிடையே தங்கள் வரலாறுமரபு, மொழி, இலக்கியம் மற்றும் சமயம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. நவீனத் தமிழர்கள் தங்களது சமூகப் பண்பாட்டு அடையாளங்களை, பண்டைய தமிழ் செவ்வியல் இலக்கியங்கள் வாயிலாக கண்டறிந்தனர். அவை மொத்தத்தில் சங்க இலக்கியங்கள் என்றழைக்கப்படுகின்றன.
  • 1816 இல் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியினை நிறுவிய F.W. எல்லிஸ் (1777-1819), தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக் குடும்பத்தை சார்ந்தவை, அவை இந்தோ - ஆரியக்குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கினார். ராபர்ட் கால்டுவெல் (1814-1891) திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் எனத் தலைப்பிடப்பட்ட நூலில் இக்கோட்பாட்டை 1856இல் விரிவுபடுத்தினார். திராவிட மொழிகளுக்கிடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்துடன் இல்லை என்பதையும் நிறுவினார். மேலும் தமிழின் தொன்மையையும் நிலைநாட்டினார்.
  • இக்காலகட்டத்தைச் சேர்ந்த அறிவார்ந்த தமிழர்கள் தமிழ் / திராவிட / சமத்துவம் மற்றும் சமஸ்கிருதம் / ஆரியம் / பிராமணியம் ஆகிய இரண்டுக்குமிடையேயுள்ள அடிப்படை வேறுபாடுகளை அடையாளம் கண்டுகொண்டனர். அவர்கள் தமிழ் மொழியே திராவிடர்களின் மொழியென்றும் தமிழர்கள் பிராமணர்கள் அல்ல என்றும் அவர்களின் சமூக வாழ்வில் சாதிகளில்லை, பாலின வேறுபாடில்லை, சமத்துவம் நிலவியது எனவும் வாதிட்டனர். தமிழ்நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர்வதற்கு தமிழ் மறுமலர்ச்சி பங்களிப்பைச் செய்தது. இச்சிந்தனைகள் பி. சுந்தரனாரால் (1855-1897) எழுதப்பெற்ற மனோன்மணியம் எனும் நாடக நூலில் இடம் பெற்றுள்ள தமிழ்மொழி வாழ்த்துப் பாடலில் மெய்பிக்கப்பட்டுள்ளது.
  • வள்ளலார் எனப் பிரபலமாக அறியப்பட்ட இராமலிங்க அடிகள் (1823-1874) நடைமுறையிலிருந்த இந்து சமய பழமைவாதத்தை கேள்விக்குள்ளாக்கினார். ஆபிரகாம் பண்டிதர் (1859-1919) தமிழ் இசைக்குச் சிறப்புச் செய்ததோடு தமிழ் இசை வரலாறு குறித்து நூல்களையும் வெளியிட்டார். சி.வை. தாமோதரனார், உவே. சாமிநாதர், திரு.வி. கல்யாண சுந்தரம் (1883-1953), பரிதிமாற் கலைஞர் (18701903), மறைமலையடிகள் (1876-1950), சுப்பிரமணிய பாரதி (1882-1921), ச.வையாபுரி (1891-1956), கவிஞர் பாரதிதாசன் (18911964) ஆகியோர் தங்களுக்கே உரித்தான வழிகளில், தங்களின் எழுத்துக்கள் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்தெழுச்சிக்குப் பங்களிப்பு செய்தனர். இதே சமயத்தில், பௌத்தத்திற்குப் புத்துயிரளித்த ஒரு தொடக்ககால முன்னோடியான M. சிங்காரவேலர் (1860-1946) காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடமைவாதத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தார். பண்டிதர் அயோத்திதாசரும் (1845-1914) பெரியார் ஈ.வெ. ராமசாமியும் (1879-1973) சமூகரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் உரிமைகளுக்காகப் பகுத்தறிவுச் சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்தனர்.


பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி) 

  • வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி (18701903) மதுரை அருகே பிறந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழின் மீது சமஸ்கிருதம் கொண்டிருந்த செல்வாக்கை அடையாளம் கண்ட தொடக்க காலத் தமிழ் அறிஞர்களில் ஒருவர். அதனால் தனக்கே பரிதிமாற் கலைஞர் என தூய. தமிழ்ப் பெயரைச் சூடிக் கொண்டவர். 
  • தமிழ் மொழி ஒரு செம்மொழி என்றும், எனவே சென்னைப் பல்கலைக்கழகம் தமிழை ஒரு வட்டாரமொழியென  அழைக்கக் கூடாதென முதன்முதலாக வாதாடியவர் அவரே. 
  • மேற்கத்திய இலக்கிய மாதிரிகள் மீது இவர் கொண்டிருந்த தாக்கத்தின் விளைவாக 14 வரிச்செய்யுள் வடிவத்தை தமிழுக்கு அறிமுகம் செய்தார். மேலும் இவர் நாவல்களையும் நாடகங்களையும் அதிக எண்ணிக்கையிலான அறிவியல் கட்டுரைகளையும் எழுதினார். 
  • ஆனால் வருந்தத்தக்க முறையில் 33 ஆண்டுகளே நிறைவு பெற்றிருந்த அவர் இளம் வயதில் இயற்கை எய்தினார்.


மறைமலை அடிகள்

  • மறைமலை அடிகள் (1876-1950) தமிழ் மொழியியல் தூய்மைவாதத்தின் தந்தை என்றும் தனித்தமிழ் இயக்கத்தை (தூய தமிழ் இயக்கம்) உருவாக்கியவர் எனவும் கருதப்படுகின்றார். சங்க இலக்கிய நூல்களான பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு ஆகியவற்றிற்கு விளக்கவுரை எழுதியுள்ளார். 
  • அவர் இளைஞராக இருந்த போது சித்தாந்த தீபிகா எனும் பத்திரிகையில் பணிபுரிந்தார். பின்னர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். 
  • பிராமணர் அல்லாதோர் இயக்கத்தின் மீது பற்றுக்கொண்டார். அவருடைய ஆசிரியர்களான பி. சுந்தரனார், சோமசுந்தர நாயகர் ஆகிய இருவரும் அவருடைய வாழ்க்கையில் முக்கியச் செல்வாக்கு செலுத்தியோராவர்.


தனித்தமிழ் இயக்கம்:

  • தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் சமஸ்கிருதத்தின் செல்வாக்கு தமிழ் மொழியிலிருந்து அகற்றப்படுவதையும் மறைமலை அடிகள் ஊக்குவித்தார். இவ்வியக்கம் தமிழ்ப் பண்பாட்டின் மீது குறிப்பாக தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை இவ்வியக்கம் உருவாக்கப்பட்டதில் முக்கியப் பங்கு வகித்தார். 
  • வேதாச்சலம் என்ற தனது பெயரை அவர் தூய தமிழில் மறைமலை அடிகள் என மாற்றிக்கொண்டார். அவருடைய ஞானசாகரம் எனும் பத்திரிக்கை அறிவுக்கடல் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 
  • அவருடைய சமரச சன்மார்க்க சங்கம் எனும் நிறுவனம் பொது நிலைக் கழகம் என்று பெயரிடப்பட்டது. 
  • தமிழ் சொற்களுக்குள் புகுந்துவிட்ட சமஸ்கிருதச் சொற்களுக்கு இணையான பொருள் தரக்கூடிய தமிழ் சொற்களடங்கிய அகராதி ஒன்றை நீலாம்பிகை தொகுத்தார்.


திராவிட இயக்கத்தின் எழுச்சி

  • திராவிட இயக்கம் பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராகப் பிராமணர் அல்லாதவர்களைப் பாதுகாக்கும் இயக்கமாக உதயமானது. 1909இல் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 
  • 1912இல் டாக்டர் சி. நடேசனார் எனும் மருத்துவர் மதராஸ் ஐக்கிய கழகம் எனும் அமைப்பை உருவாக்கினார் இது பின்னாளில் மதராஸ் திராவிடர் சங்கம் என்று மாறியபின் திராவிடர்களின் மேம்பாட்டிற்கான உதவிகளைச் செய்தது. 
  • பிராமணர் அல்லாத பட்டதாரிகளுக்கு உதவுவது அவர்களைக் கற்கவைப்பது ஆகியவற்றோடு அவர்களது குறைபாடுகள் குறித்து விவாதிக்க முறையான கூட்டங்களையும் நடத்தியது. 
  • இதே சமயத்தில் நடேசனார் தங்கும் விடுதி வசதியில்லாததால் பிராமணரல்லாத மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதால் அதைச் சரிசெய்யும் வகையில் திருவல்லிக்கேணியில் (சென்னை) ஜூலை 1916இல் திராவிடர் இல்லம் என்ற பெயரில் ஒரு தங்கும் விடுதியை நிறுவினார். மேலும் பிராமணர் அல்லாத மாணவர்களின் நலன் கருதி இவ்வில்லம் ஒரு இலக்கிய அமைப்பையும் கொண்டிருந்தது.


தென்னிந்திய நல உரிமைச்சங்கம் (நீதிக்கட்சி)

  • 1916 நவம்பர் 20இல் டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயாரம்மாள் உட்பட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (South Indian Liberal Federation) உருவாக்க ஒருங்கிணைந்தனர். இதே சமயம் 1916 டிசம்பரில், விக்டோரியா பொது அரங்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் பிராமணரல்லாதோர் அறிக்கை வெளியிடப்பட்டது. இவ்வறிக்கை பிராமணரல்லாத சமூகங்களின் கருத்துக்களைத் தெளிவுபடக்கூறியது.
  • இவ்வமைப்பு தொடங்கி வெளியிட்ட மூன்று செய்தித்தாள்களாவன; கட்சியின் கொள்கைகளைப் பரப்புரை செய்வதற்காகத் தமிழில் திராவிடன் ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா ஆகிய பத்திரிக்கைகளை வெளியிட்டது.
  • மாகாண அரசுகளில் இரட்டையாட்சி முறையை அறிமுகம் செய்த பின்னர் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் 1920இல் முதல் தேர்தல் நடைபெற்றது. நீதிக்கட்சி தேர்தலில் வெற்றிபெற்று இந்தியாவின் முதல் அமைச்சரவையை சென்னையில் அமைத்தது A. சுப்பராயலு சென்னை மாகாணத்தின் முதலமைச்சரானார். மேலும் நீதிக்கட்சி 1920-1923 மற்றும் 1923-1926 ஆகிய ஆண்டுகளில் அரசமைத்தது. 
  • காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்த சூழலில் நீதிக்கட்சி 1937இல் தேர்தல் நடைபெறும் வரை ஆட்சி தொடர்ந்து நீடித்தது. 1937 தேர்தல்களில், முதன் முதலாகப் பங்கேற்ற இந்திய தேசிய காங்கிரஸ் நீதிக்கட்சியை படுதோல்வி அடையச் செய்தது.

திட்டங்களும் செயல்பாடுகளும் :

  • நீதிக்கட்சியே நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மூலாதாரமாய் விளங்கிற்று. நீதிக்கட்சி அரசாங்கம் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுப்படுத்தி அரசியல் தளத்தில் அவர்களுக்கென இடத்தை உருவாக்கியது.
  • சாதி மறுப்புத் திருமணங்களைக் கட்டுப்படுத்திய சட்டச் சிக்கல்களை நீதிக் கட்சியினர் அகற்றியதோடு பொதுக் கிணறுகளையும் நீர் நிலைகளையும் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள் பயன்படுத்துவதை தடுத்த தடைகளைத் தகர்த்தனர் ஒடுக்கப்பட்ட பிரிவு குழந்தைகள் பொதுப்பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென நீதிக்கட்சியின் அரசு ஆணை பிறப்பித்தது. இச்சமூகக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென 1923இல் தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன. நீதிக்கட்சியின் கீழிருந்த சட்டமன்றம்தான் முதன் முதலாக தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை 1921இல் அங்கீகரித்தது. இத்தீர்மானம் பெண்களுக்கென இடத்தை ஏற்படுத்தியதால் 1926இல் முத்துலட்சுமி அம்மையார் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக முடிந்தது.
  • பல்வேறு சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நீதிக்கட்சி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டங்களை இயற்றும் பணிகளை மேற்கொண்டது. சமூக நீதியை நிலைநாட்டுவதின் ஒரு பகுதியாக பல்வேறு சாதிகளையும் சமூகங்களையும் சார்ந்தவர்களுக்கு அரசுப்பணிகளில் சேர்வதற்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் பொருட்டு இரண்டு வகுப்புவாரி அரசாணைகள் (1921 செப்டம்பர் 16 மற்றும் 1922 ஆகஸ்ட் 15) இயற்றப்பட்டன. நிர்வாக அதிகாரங்களை அனைத்து சமூகத்தினரும் பங்கிட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வண்ணம், அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய 1924இல் பணியாளர் தேர்வு வாரியத்தை நீதிக்கட்சி அமைத்தது. இம்முறையைப் பின்பற்றி பிரிட்டிஷ் இந்திய அரசு 1929இல் பொதுப் பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்கியது.
  • இவைகள் தவிர சமய நிறுவனங்களை சீர்திருத்துவதிலும் நீதிக்கட்சி கவனம் செலுத்தியது. நீதிக்கட்சி 1926இல் இந்து சமய அறநிலையச் சட்டத்தை இயற்றியது. அதன்படி எந்தவொரு தனிநபரும், சாதி வேறுபாடின்றி கோவில்களின் நிர்வாகக் குழுக்களில் உறுப்பினராகவும் கோவிலின் சொத்துக்களை நிர்வகிக்கவும் வழிவகை செய்யப்பட்டது. 


சுயமரியாதை இயக்கம்

  • சுயமரியாதை இயக்கம் (Self Respect Movement) சடங்குகளும் சம்பிரதாயங்களும் இல்லாத சாதிகளற்ற பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடற்ற ஒரு சமூகத்தை இவ்வியக்கம் ஆதரித்தது. 
  • பகுத்தறிவும் சுயமரியாதையும் அனைத்து மனிதர்களின் பிறப்புரிமை எனப் பிரகடனம் செய்த இவ்வியக்கம் சுயாட்சியைக் காட்டிலும் இவை முக்கியமானவை எனும் கருத்தை உயர்த்திப் பிடித்தது. பெண்களின் தாழ்வான நிலைக்கு எழுத்தறிவின்மையே காரணம் என அறிவித்த அவ்வியக்கம் அனைவருக்கும் கட்டாயத் தொடக்கக் கல்வியை வழங்கும் பணிகளை மேற்கொண்டது.
  • இவ்வியக்கம் பெண் விடுதலை கோருதல், மூடநம்பிக்கைகளை நீக்குதல் மற்றும் பகுத்தறிவை வலியுறுத்துதல் போன்ற கோரிக்கைகளை கோரியது. மேலும் இவ்வியக்கம் சீர்திருத்தத் திருமணம் அல்லது சுயமரியாதைத் திருமணங்களை ஆதரித்தது.
  • சுயமரியாதை இயக்கம் பிராமணர் அல்லாத இந்துக்களின் நலன்களுக்காக மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களின் நலனுக்காகவும் போராடியது. இஸ்லாமின் மேன்மை மிகுந்த கோட்பாடுகளான சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை சுயமரியாதை இயக்கம் பாராட்டியது.


பெரியார் ஈ.வெ.ரா

  • பெரியார் ஈ.வெ.ராமசாமி (1879-1973) சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் ஆவார். 
  • இவர் ஈரோட்டை சேர்ந்த செல்வந்தரும் வணிகருமான வெங்கடப்பர், சின்னத்தாயம்மாள் ஆகியோரின் மகனாவார். ஓரளவு முறையான கல்வியைக் கற்றிருந்தாலும் தன் தந்தையால் ஆதரிக்கப்பட்ட அறிஞர்களுடன் விவாதங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இளைஞராக இருந்தபோது ஒருமுறை வீட்டைவிட்டு வெளியேறிய அவர் பல மாதங்கள் வாரணாசியிலும் ஏனைய சமயம் சார்ந்த மையங்களிலும் தங்கியிருந்தார். வைதீக இந்து சமயத்துடன் ஏற்பட்ட நேரடி அனுபவங்கள் இந்து சமயத்தின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கைகளைத் தகர்த்தன. வீடு திரும்பிய அவர் சில காலம் குடும்பத் தொழிலான வணிகத்தை கவனித்து வந்தார். அவருடைய சுயநலமற்ற பொதுச் சேவைகளும், தொலைநோக்குப் பார்வையும் அவரை புகழ்பெற்ற ஆளுமை ஆக்கின. ஈரோட்டின் நகரசபைத் தலைவர் பதவி (1918-1919) உட்பட பல பதவிகளையும் அவர் வகித்தார்.
  • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பெரியார் பதவி வகித்தபோது ஒடுக்கப்பட்ட மக்களின் கோவில் நுழைவு உரிமை குறித்த தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். சாதி தர்மம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள வீதிகளிளும் நுழைவது மறுக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட நடைமுறையினை வைக்கம் (திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு சுதேசி அரசு, தற்போதைய கேரள மாநிலத்திலுள்ள ஒரு நகரம்) மக்கள் எதிர்த்தனர். எதிர்ப்பின் தொடக்கக் கட்டங்களில் மதுரையைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் பெரும்பங்கு வகித்தார். உள்ளூர் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் பெரியார் இந்த இயக்கத்திற்கு தலைமையேற்றதால் சிறையிலடைக்கப்பட்டார். மக்கள் அவரை 'வைக்கம் வீரர்' எனப் பாராட்டினர். இதே சமயத்தில் சேரன்மாதேவி குருகுலப் பள்ளியில், உணவு உண்ணும் அறையில் சாதி அடிப்படையிலான பாகுபாடு நிலவுவதைக் கேள்வியுற்று மனவருத்தமடைந்தார். இக்குருகுலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிதியுதவியில் வ.வே. சுப்பிரமணியம் எனும் காங்கிரஸ் தலைவரால் நடத்தப் பெற்றது. இதனைப் பெரியார் கண்டித்து எதிர்த்த பின்னரும், குருகுலத்தில் நடைபெறும் சாதிப்பாகுபாட்டை காங்கிரஸ் தொடர்ந்து ஆதரித்ததால் மனமுடைந்தார்.
  • பெரியார் 1925 இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடையே பரப்புவதில் மக்கள் தொடர்புச் சாதனங்களின் முக்கியத்துவத்தைப் பெரியார் புரிந்து கொண்டார். குடிஅரசு (1925) ரிவோல்ட் (1928), புரட்சி (1933), பகுத்தறிவு (1934), விடுதலை (1935) போன்ற பல செய்தித்தாள்களையும் இதழ்களையும் பெரியார் தொடங்கினார். சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் குடி அரசு ஆகும். ஒவ்வொரு இதழிலும் சமூகம் பிரச்சனைகள் தொடர்பான தனது கருத்துகளைப் பெரியார் வழக்கமான கட்டுரையாக எழுதினார். அவ்வப்போது சித்திரபுத்திரன் எனும் புனைப் பெயரில் கட்டுரைகளை எழுதினார்.
  • பௌத்த சமய முன்னோடியும், தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதியுமான சிங்காரவேலருடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். B.R. அம்பேத்கார் எழுதிய சாதி ஒழிப்பு (Annihilation of caste) எனும் நூலை, அந்நூல் வெளிவந்தவுடன் 1936இல் தமிழில் பதிப்பித்தார். B.R. அம்பேத்கார் அவர்களின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித்தேர்தல் தொகுதிக் கோரிக்கையை பெரியாரும் ஆதரித்தார்.
  • 1937இல் இராஜாஜியின் தலைமையிலான அரசின் செயல்பாட்டினை எதிர்க்கும் விதமாக, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்ததற்கு எதிராகப் பெரியார் மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கத்தை நடத்தினார். இந்தி எதிர்ப்புப் போராட்டமானது (1937-39) தமிழ்நாட்டு அரசியலில் மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்துக்காக பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் சிறையில் இருந்தபோதே நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இதன் பின்னர் நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்தது. அதற்கு 1944இல் திராவிடர் கழகம் (திக) எனப் புதுப்பெயர் சூட்டப்பெற்றது.
  • சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த இராஜாஜி (1952-54) பள்ளிக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய தொழில் கல்வி பயிற்சித் திட்டமானது, மாணவர்களுக்கு அவர்களின் தந்தையர்கள் செய்து வந்த தொழில்களில் பயிற்சியளிப்பதாக அமைந்தது. இதை குலக்கல்வித் திட்டம் (சாதியை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை) என விமர்சித்த பெரியார் இத்திட்டத்தை முழுமையாக எதிர்த்தார். இதற்கு எதிராக பெரியார் மேற்கொண்ட போராட்டங்கள் இராஜாஜியின் பதவி விலகலுக்கு இட்டுச் சென்றது. கு. காமராஜ் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார். பெரியார் தன்னுடைய தொண்ணூற்று நான்காவது வயதில் (1973) இயற்கை எய்தினார். அவரது உடல் சென்னையில் பெரியார் திடலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பெரியார், ஒரு பெண்ணியவாதி

  • பெரியார் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தார். குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் கண்டனம் செய்தார். 1929 முதல் சுயமரியாதை மாநாடுகளில், பெண்களின் மோசமான நிலை குறித்து குரல் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து, பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கும் சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு என ஆணித்தரமாக வலியுறுத்தினார். “திருமணம் செய்து கொடுப்பது” எனும் வார்த்தைகளை மறுத்த அவர் அவை பெண்களைப் பொருட்களாக நடத்துகின்றன என்றார். அவைகளுக்கு மாற்றாக திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டினார். பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் பெண் ஏன் அடிமையானாள்? என்பதாகும்.
  • பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்படுவது அவர்களுக்குச் சமூகத்தில் நன்மதிப்பையும், பாதுகாப்பையும் வழங்கும் என பெரியார் நம்பினார்.
  • 1989இல் தமிழக அரசு, மாற்றங்களை விரும்பிய சீர்த்திருத்தவாதிகளின் கனவை நனவாக்கும் வகையில் 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து வாரிசுரிமைச் சீர்திருத்தச் சட்டத்தை அறிமுகம் செய்தது. அச்சட்டம் முன்னோர்களின் சொத்துக்களை உடைமையாகப் பெறுவதில் பெண்களுக்குச் சம உரிமை உண்டென்பதை உறுதிப்படுத்தியது. முன்மாதிரியாக அமைந்த இந்தச் சட்டம் தேசிய அளவிலும் இது போன்ற சட்டங்கள் இயற்றப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தது.


இரட்டைமலை சீனிவாசன்

  • இரட்டைமலை சீனிவாசன் (1859-1945) 1859ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்தார். சாதிப்படி நிலைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி, சமத்துவம், சமூக உரிமைகள் ஆகியவற்றுக்காகப் போராடினார். அவருடைய தன்னலமற்ற சேவைக்காக ராவ்சாகிப் (1926), ராவ் பகதூர் (1930), திவான் பகதூர் (1936) ஆகிய பட்டங்களால் அவர் சிறப்புச் செய்யப்பட்டார். அவரது சுயசரிதையான ஜீவிய சரித சுருக்கம் 1939இல் வெளியிடப்பட்டது.) இந்நூல் முதன் முதலாக எழுதப்பெற்ற சுயசரிதை நூல்களில் ஒன்றாகும்.
  • தீண்டாமையின் கொடுமைகளை அனுபவித்த இரட்டைமலை சீனிவாசன் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். 1893இல் ஆதிதிராவிட மகாஜன சபை எனும் அமைப்பை உருவாக்கினார். ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டமைப்பு மற்றும் சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் தலைவராகப் பணியாற்றினார்.
  • B.R. அம்பேத்காரின் நெருக்கமானவரான அவர், லண்டனில் (1930 மற்றும் 1931) நடைபெற்ற முதல், இரண்டாம் வட்டமேஜை மாநாடுகளில் கலந்து கொண்டு சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் கருத்துக்களுக்காகக் குரல் கொடுத்தார். 1932இல் செய்துகொள்ளப்பட்ட பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களுள் அவரும் ஒருவர்.


மயிலை சின்னதம்பி ராஜா

  • மயிலை சின்னதம்பி ராஜா (1883-1943) மக்களால் எம்.சி. ராஜா என அழைக்கப்பட்ட அவர் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்களில் முக்கியமானவர். ஒரு ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிய அவர் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கான பல்வேறு பாடப்புத்தகங்களை எழுதினார். தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (நீதிக்கட்சி) உருவாக்கியவர்களில் ஒருவராவார். சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து சட்ட மேலவைக்கு தேர்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினராவார் (1920-1926) சென்னை சட்ட சபையில் நீதிக்கட்சியின் துணைத் தலைவராகச் செயல்பட்டார்.
  • 1928இல் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் எனும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக நீண்டகாலம் பணியாற்றினார். 


தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள்

  • இந்தியாவில் தொழில்கள் வளர முதல் உலகப்போர் (1914-1918) உத்வேகம் அளித்தது. போர்க்காலத்தேவைகளை நிறைவு செய்துவந்த இத்தொழிற்சாலைகள் மிக அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியிருந்தன. போர் முடிவடைந்ததால் போர்காலத் தேவைகளும் குறைந்தன. எனவே, அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆட்குறைப்பு செய்யப்பட்டன. இத்துடன் ஏற்பட்ட விலைவாசி ஏற்றமும் தொழிலாளர் இயக்கங்கள் தோன்றுவதற்கு உந்து சக்தியாக அமைந்தன. சென்னை மாகாணத்தில் பி.பி. வாடியா, ம. சிங்காரவேலர், திரு.வி. கல்யாணசுந்தரம் போன்றவர்கள் தொழிலாளர் சங்கங்களை அமைப்பதில் முன்முயற்சி மேற்கொண்டனர். 1918இல் இந்தியாவின் முதல் தொழில் சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் (Madras Labour Union) உருவாக்கப்பட்டது.
  • அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு 1920 அக்டோபர் 31இல் பம்பாயில் நடைபெற்றது. பல தீர்மானங்கள் குறித்து பிரதிநிதிகள் விவாதித்தனர். தொழிலாளர்களின் பிரச்சனைகளில் காவல்துறை தலையிடுவதிலிருந்து பாதுகாப்பு, வேலையில்லாதவர்களுக்கென ஒரு பதிவேட்டைப் பராமரித்தல், உணவுப் பண்டங்களின் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடு, காயமடைந்தோர்க்கு ஈட்டுத்தொகை மற்றும் உடல் நலக் காப்பீடு ஆகியவை இவற்றில் அடங்கும்.
  • சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் ம. சிங்காரவேலர் (1860-1946) ஆவார். சென்னையில் பிறந்த அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். இளமைக் காலத்தில் பௌத்தத்தைப் பரிந்துரை செய்தார். அவர் தமிழ், ஆங்கிலம், உருது, இந்தி, ஜெர்மன், பிரெஞ்ச் மற்றும் ரஷ்யன் என பலமொழிகள் அறிந்திருந்ததோடு காரல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஹெர்பர்ட் ஸ்பென்சர், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஆகியோரின் கருத்துக்களைத் தமிழில் வடித்தவர். 1923இல் முதல் முதலாக மே தின விழாவை ஏற்பாடு செய்தவரும் அவரே. அவர் இந்திய பொதுவுடைமை (கம்யூனிஸ்ட்) கட்சியின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவராக இருந்தார். தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனைகளைப் தொழிலாளன் (Worker) என்ற பத்திரிக்கையை வெளியிட்டார். பெரியாரோடும் சுயமரியாதை இயக்கத்தோடும் நெருக்கமாக இருந்தார்.


இந்திய விடுதலைக்கு முன்பு மொழிப் போராட்டம்

  • பொதுவாக, மொழி என்பது அடையாளத்தின் வலிமையான குறியீடாகும், மேலும் இது ஒரு சமூகத்தின் பண்பாடு மற்றும் உணர்வுகளுடன் இயைந்து நிற்பது. தமிழ்மொழி பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தனது மேன்மையை மீட்டுப் பெற்றது. 
  • மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கம், பெரியாரின் மொழிச் சீர்திருத்தம் மற்றும் தமிழிசை இயக்கம் ஆகியவை தமிழுக்கு வலுச்சேர்த்தன. 
  • திராவிட உணர்வுக்கு இட்டுச் சென்ற தமிழ் மறுமலர்ச்சி நவீனத் தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் அதன் கலை வடிவங்களுடைய வளர்ச்சியிலும் பெரும் பங்களிப்பைச் செய்தது. ஆகம கோவில்களில் செய்யப்படும் சடங்குகள் தமிழில் செய்யப்படுவதில்லை. 
  • இசை நிகழ்ச்சிகளிலும் தமிழ் பாடல்கள் ஓரளவிலான இடத்தையே பெற்றிருந்தன. ஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசை வரலாற்றை முறையாகக் கற்றாய்ந்து, பழந்தமிழர் இசை முறையை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றார். 
  • 1912இல் தஞ்சாவூர் ‘சங்கீத வித்யா மகாஜன சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதுவே தமிழிசை இயக்கத்தின் கருமூலமானது. இசை நிகழ்வுகளில் தமிழில் பாடல்கள் பாடப்படுவதற்கு இவ்வியக்கம் முக்கியத்துவம் வழங்கியது. 
  • தமிழிசையின் நிலை குறித்து விவாதிக்க 1943இல் முதல் தமிழிசை மாநாடு நடத்தப்பட்டது.
  • தமிழ்நாட்டில் வெவ்வேறு காலப்பகுதிகளில் இந்தி கட்டாயமொழியாக நடைமுறைப்படுத்தப்பட்டது தமிழ்மொழிக்கும், பண்பாட்டிற்குமான அச்சுறுத்தலாகவே கருதப்பட்டது. தமிழுக்கு மேலாக இந்தியை அறிமுகம் செய்வது திராவிடர்களுக்கான வேலைவாய்ப்புகளை மறுப்பதாக அமையுமென பெரியார் அறிவித்தார். 
  • இந்திமொழி அறிமுகம் செய்யப்பட்டால் தமிழ்மொழி பாதிப்புக்குள்ளாகும் என மறைமலை அடிகள் சுட்டிக் காட்டினார். இந்தி எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் போராட்டத்தை பிராமணியத்திற்கும் தமிழின் மீதான சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்திற்கும் எதிரான கருத்தியல் போராகவே கருதினர்.


பெண்கள் இயக்கங்கள்

  • இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சென்னை மாகாணத்தில் பெண்களை வலிமையுள்ளவர்களாக மாற்றுதல் எனும் நோக்கத்துடன் பல பெண்ணிய இயக்கங்கள் நிறுவப்பெற்றன. 
  • அவைகளுள் தமிழ் நாட்டில் உருவான இந்தியப் பெண்கள் சங்கம் (Women's India Association - WIA), அகில இந்தியப் பெண்கள் மாநாடு (All India Women's conference - ALWC) ஆகியவை முக்கியமானவையாகும். 
  • இந்தியப் பெண்கள் சங்கம் (WIA) என்பது 1917இல் அன்னிபெசன்ட், டோரதி ஜினராஜதாசா, மார்கரெட் கசின்ஸ் ஆகியோர்களால் சென்னை அடையாறு பகுதியில் தொடங்கப்பெற்றது. இவ்வமைப்பு தனிநபர் சுகாதாரம், திருமணச் சட்டங்கள், வாக்குரிமை, குழந்தை வளர்ப்பு மற்றும் பொது வாழ்வில் பெண்களின் பங்கு ஆகியவை குறித்து பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்களையும் செய்தி மடல்களையும் வெளியிட்டன. 
  • இதே சமயத்தில் இந்தியப் பெண்கள் சங்கம், பெண்கல்வி குறித்த பிரச்சனைகளைக் கையாள்வதற்காக 1927இல் அகில இந்திய பெண்கள் மாநாட்டை நிறுவியது. 
  • மேலும் அரசு பெண்களின் மேம்பாட்டிற்காகப் பல கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமெனப் பரிந்துரை செய்தது.
  • பெண்களின் விடுதலை என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தோர், பாலின சமத்துவம் மற்றும் பாலினம் குறித்த சமூகத்தின் உணர்வுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காகப் பணியாற்றினர். 
  • தங்களுடைய கருத்துகளைப் பங்கிட்டு கொள்வதற்கான ஒரு இடத்தை பெண்களுக்கு இவ்வியக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. இவ்வியக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிய பெண்கள் பலர் இருந்தனர். 
  • முத்துலட்சுமி அம்மையார், நாகம்மை, கண்ணம்மா, நீலாவதி, மூவலூர் இராமாமிர்தம், ருக்மணி அம்மாள், அலமேலு மங்கை தாயாரம்மாள், நீலாம்பிகை மற்றும் சிவகாமி சிதம்பரனார் ஆகியோர் அவர்களுள் முக்கியமானவர்கள் ஆவர்.
  • கடவுளுக்கு இறைப்பணி செய்யும் சேவகர்களாக இளம் பெண்களை இந்து கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்தது அவ்வாறு அர்ப்பணிக்கப்பட்டோர் தேவதாசி என்று அறியப்பட்டனர். கடவுளுக்குச் செய்யப்படும் சேவை எனும் நோக்கில் அமைந்திருந்தாலும் நாளடைவில் இம்முறை பெரும் ஒழுக்கக்கேட்டிற்கும் பெண்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும் இட்டுச்சென்றது. இத்தேவதாசி முறையை ஒழிப்பதற்காகச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதற்காக நடைபெற்ற இயக்கத்தில் டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் முதலிடம் வகித்தார். ‘மதராஸ் (அர்பணிப்பைத் தடுத்தல்) தேவதாசி சட்டம் 1947’ எனும் சட்டம் அரசால் இயற்றப்பட்டது.
  • 1930இல் சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் “சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்குப் பெண்கள் அர்பணிக்கப்படுவதை தடுப்பது” எனும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். பின்னர் தேவதாசி ஒழிப்புச் சட்டமாக மாறிய இம் மசோதா, இந்து கோவில் வளாகங்களிலோ அல்லது வேறு வழிபாட்டு இடங்களிலோ “பொட்டுக் கட்டும் சடங்கு” நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானதாகும் என அறிவித்தது தேவதாசிகள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டபூர்வமான அனுமதியை வழங்கிய முறைக்கு உதவிசெய்கிற தூண்டிவிடுகிற குற்றத்தை செய்வோர்க்கு குறைந்த பட்சம் ஐந்தாண்டு சிறை தண்டனை என ஆணையிட்டது. இம்மசோதா சட்டமாக மாறுவதற்கு 15 ஆண்டுகள் காத்திருந்தது.


Post a Comment

0Comments

Post a Comment (0)