TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
UNITY IN DIVERSITY
இந்தியாபன்முகத்தன்மை நிறைந்தநாடாக இருப்பினும் "நாட்டுப்பற்று" என்ற உணர்வால் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். நம் நாட்டின் சின்னங்களான தேசியக்கொடி, தேசிய கீதம் ஆகியவை நமது தாய்நாட்டையும், அதற்காக நாம் ஒன்று பட்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாட்கள் தேசிய விழாக்களாக நம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றன. இவையே நாம் அனைவரும் ஒரே நாட்டினர் என்ற உணர்வையும் நம் நாட்டுப்பற்றினையும் உயிர்ப்பிக்கச் செய்து கொண்டு இருக்கின்றன.
இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" உள்ள நாடாக விளங்குகிறது. இச்சொற்றொடரானது நமது சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் "டிஸ்கவரி ஆஃப் இந்தியா" என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
இந்தியா ஒரு பன்முக பண்பாட்டு சமுதாயத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பொதுவான நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், பண்பாட்டு மையங்கள் போன்றவற்றின் வாயிலாக நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வால், ஓரே தேசத்தால் ஒன்றுபட்டு உள்ளோம். நமது விடுதலைப்போராட்டங்களும், இந்திய அரசியலமைப்புச் சட்டமும் இந்தியாவின் ஒற்றுமைக்கு சான்றாக திகழ்கின்றன.
இந்தியாவில் பல்வேறு இன மக்கள் காணப்படுவதால், இந்தியாவை "இனங்களின் அருங்காட்சியகம் என வரலாற்றாசிரியர் வி.ஏ. ஸ்மித் அவர்கள் கூறியுள்ளார்.
இந்தியாவில் பன்முகத்தன்மை:
- இந்தியா ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரிகத்தின் தாயகமாக விளங்குகிறது. இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு வளங்களால் ஈர்க்கப்பட்டு உலகின் பல்வேறுபகுதிகளிலிருந்து, பல்வேறு இன மக்கள் வந்தனர்.
- சிலர் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து வணிகம் செய்யவும், மற்றவர்கள் படையெடுப்பு காரணமாகவும் இந்தியாவிற்கு வருகை தந்தனர். நில வழியாகவும் கடல் வழியாகவும் பல்வேறு இன மக்கள் இந்தியாவிற்குள் இடம் பெயர்ந்தனர்.
- ஆகையால் திராவிடர்கள், நீக்ரிட்டோக்கள், ஆரியர்கள், ஆல்பைன்கள் மங்கோலியர்கள் போன்றோர் நவீன இந்திய இனத்தவரின் ஒருபகுதியாக உள்ளனர். மேலும் இந்தியாவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று தங்கினர். இவ்வாறு இடம்பெயர்ந்து தங்கியதே இந்தியாவில் பன்முகத்தன்மை மேலோங்கி இருக்க காரணமாக உள்ளது.
1. நில அமைப்புகள் மற்றும் வாழ்வியல் முறைகளில் பன்முகத்தன்மை
- கண்டம் எனப்படுவது மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல்கள், பள்ளத்தாக்கு போன்ற பல்வேறு இயற்கைப் பிரிவுகள் மற்றும் கால நிலைகளை கொண்ட மிகப் பரந்த நிலப்பரப்பாகும். இவ்வனைத்தையும் இந்தியா பெற்றிருப்பதால், இந்தியா "துணைக்கண்டம்" என்று அழைக்கப்படுகிறது. இக்காரணிகளேநாட்டின் பல்வேறு நில அமைப்புகளில் வாழும் மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
- ஒரு பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளை அதன் நிலவியல் மற்றும் காலநிலை கூறுகள் தான் தீர்மானிக்கின்றன. கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்றால் சமவெளிகளில் வாழும் மக்கள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுகின்றனர். மலைப் பகுதிகளில் வாழும் மக்கள் மேய்த்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர் மேலும் மலைப்பகுதிகளில் நிலவும் காலநிலையானது காபி, தேயிலை போன்ற தோட்டப்பயிர்த் தொழிலுக்கு உகந்ததாக உள்ளது.
- நில அமைப்பில் காணப்படும். பன்முகத்தன்மை அப்பகுதியில் வளரும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு பகுதியின் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வளம் என்பது அப்பகுதியில் நிலவும் இயற்கை மற்றும் காலநிலையைப் பொறுத்து மாறுபடுகின்றது. மக்களின் உணவு, உடை, தொழில் மற்றும் வாழ்க்கைத் தரம் போன்றவை அப்பகுதியின் இயற்கை நிலை மற்றும் காலநிலையை பெரிதும் சார்ந்துள்ளன.
2. சமூக பன்முகத்தன்மை
சார்ந்து வாழ்தல் மற்றும் சக வாழ்வு :
- சமூகம் என்பது ஒரு பொது நலத்திற்காக மக்கள் இணைந்து வாழும் இடமாகும். சமுதாயம் என்பது விவசாயிகள், நமது தொழிலாளர்கள், கைவினைஞர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணாக்கர் போன்ற பலரையும் உள்ளடக்கியது ஆகும். மக்களின் மேம்பட்ட வாழ்க்கை முறைக்கு சமுதாயங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளன.
- மேகாலயாவில் உள்ள மௌசின்ராம் அதிக மழை பொழியும் பகுதி ஆகும். ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் குறைவான மழைப்பொழியும் பகுதி ஆகும்.
குடும்பம் மற்றும் சமூகம் :
- ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் ஆகும். குடும்பம் என்பது இருவகைப்படும்: அவை கூட்டுக்குடும்பம் மற்றும் தனிக்குடும்பம் ஆகும். பல குடும்பங்கள் சேர்ந்து இணக்கமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் பல குடும்பங்கள் இணைந்து கிராமங்களாகவும், பல கிராமங்கள் இணைந்து நகரங்களாகவும் உருவாகின்றன.
- குடிநீர், உணவு, மின்சாரம், கல்வி, வீட்டுவசதி போன்ற பல தேவைகளே மக்களை ஒன்றுபடுத்தி சமூக நல்லிணக்கத்துடன் வாழச் செய்கின்றன. நமது பண்பாட்டு நடைமுறைகள் அல்லது வாழ்வியல் அமைப்புகள் வேறுபட்டு இருப்பினும் அடிப்படையில் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகிறோம்.
3. மத பன்முகத்தன்மை
- இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு ஆகும். இந்திய அரசு எந்தவொரு மதத்தையும் அரசு மதமாக அங்கீகரிக்கவில்லை எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்பது அடிப்படை உரிமையாகும். இந்தியா பல மதங்களின் தாயகமாகவும், பல மதங்களின் புகலிடமாகவும் விளங்குகிறது. இந்து மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், சமண மதம், ஜொராஸ்டிரிய மதம் போன்ற எண்ணற்ற மதங்கள் இந்தியாவில் தழைத்தோங்கி உள்ளன.
- இந்தியா பல்வேறு விழாக்களின் தாயகம் ஆகும். இந்தியாவில் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் பல்வேறு விழாக்களை நாட்டின் பல பகுதிகளிலும் ஒன்றுபட்டு, ஒற்றுமையாக கொண்டாடுகின்றனர். இதுவே இந்தியா ஒரு உயர்ந்தபாரம்பரியமிக்க கலாச்சார நாடு என்பதை பறைசாற்றுகிறது. மேலும் இந்திய விழாக்களான பொங்கல், தீபாவளி, ஹோலி, விஜயதசமி, ஆயுத பூஜை, நவராத்திரி, துர்கா பூஜை, தசரா, விநாயகர் சதுர்த்தி, பிஹு, கும்பமேளா, ஓணம், மிலாது நபி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், புத்த பூர்ணிமா, மகாவீர் ஜெயந்தி, குருநானக் ஜெயந்தி மற்றும் ரக்சாபந்தன் போன்ற விழாக்கள் இந்தியாவின் பண்பாட்டுப் பன்முகத்தன்மைக்கான ஆதாரமாக விளங்குகிறது.
2011-இன்படி இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 121.09 கோடி,இதில்
- 79.80% இந்துக்கள்
- 14.23% இஸ்லாமியர்கள்
- 2.30% கிருத்துவர்கள்
- 1.72% சீக்கியர்கள்
- 0.07% பௌத்தர்கள்
- 0.37% சமணர்கள்
4. மொழிசார் பன்முகத்தன்மை
- இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியா 122 முக்கிய மொழிகளையும், 1599 பிற மொழிகளையும் கொண்டுள்ளது. இந்தோ- ஆரியன், திராவிடன், ஆஸ்ட்ரோஆஸ்டிக், சீனதிபெத்தியன் ஆகிய நான்கும் முக்கிய மொழி குடும்பமாகும். தமிழ் மொழியானது பழமையான திராவிட மொழி ஆகும்.
- வரலாற்று ரீதியாக, இந்தியாவிற்கு வணிகம் செய்வதற்காக வருகை போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், டேனியர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் இந்தியாவிலேயே தங்கி இருந்ததால் மக்களின் மொழி மற்றும் பண்பாடுகள் ஏற்படுத்தினர். மீது பெரும் தாக்கத்தை ஏனெனில் 1947-ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், ஏறத்தாழ 300 ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இருந்தது. இதன் காரணமாக இந்தியாவில் ஆங்கிலம் ஒரு முக்கிய மொழியாக எழுச்சிபெற்று பள்ளிகள், கல்லூரிகளில் பயிற்று மொழியாகவும், அலுவலக மொழியாகவும் மற்றும் அன்றாட வாழ்விலும் ஆங்கிலம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையின்படி 22 மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக "தமிழ் மொழி" அறிவிக்கப்பட்டது. தற்போது 6 மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் 2005 ஆம் ஆண்டும் தெலுங்கு மற்றும் கன்னடம் 2008 ஆம் ஆண்டும் மலையாளம் 2013 ஆம் ஆண்டும் ஒரியா 2016 ஆம் ஆண்டும் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டன
தென்திராவிடமொழிகள் | நடுத்திராவிடமொழிகள் | வடதிராவிடமொழிகள் |
---|---|---|
தமிழ், | தெலுங்கு, | குரூக், |
மலையாளம், | கோண்டி, | மால்தோ, |
கன்னடம், | கோயா, | பிராக |
குடகு, துளு, | கூயி, கூவி, | |
தோடா, | கோலாமி, | |
கோத்தா, | பர்ஜி, கதபா, | |
கொரகா, | கோண்டா, | |
இருளா. | நாயக்கி, | |
பெங்கோ, | ||
முண்டா. |
5. பண்பாட்டு பன்முகத்தன்மை
- பண்பாடு என்ற சொல்லானது, மக்களின் மொழி, உடை, உணவு முறை, மதம், சமூகப் பழக்க வழக்கங்கள், இசை, கலை மற்றும் கட்டிடக் கலைகளின் பாரம்பரியத்தை குறிக்கிறது.
- ஒரு குறிப்பிட்ட மக்களின் பண்பாடு அவர்களின் சமூக நடத்தையிலும் மற்றும் சமூக தொடர்புகளிலும் வெளிப்படுகிறது. இது சமூக வடிவமைப்புகளால் முன்னிறுத்தப்படும் குழு அடையாளத்தின் வளர்ச்சி நிலை ஆகும். மேலும் இவை ஒரு குழுவிற்கு மட்டுமேயான தனித்த அடையாளங்கள் ஆகும்.
- கலை மற்றும் கட்டிடக்கலை என்பது ஒவ்வொரு சமுதாயத்தின் ஒருங்கிணைந்த அங்கம் ஆகும். ஒரு சமுதாயத்தின் மரபு மற்றும் பண்பாட்டின் ஒரு பகுதியாக கலை வளர்ச்சி அடைகிறது. இந்தியாவில் 28 மாநிலங்களும் 9 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. ஒவ்வொரு மாநிலமும் அவற்றிற்கான உயர்ந்த மரபையும் மற்றும் நுண்ணிய கலை வெளிப்பாட்டு வடிவங்களை பெற்றிருக்கின்றன.
- இந்திய தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் 60% தமிழ்நாட்டில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டவை ஆகும். அவற்றில் பெரும்பாலானவை தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.
இந்தியாவில் புகழ்பெற்ற நடனங்கள் மற்றும் இசைகள்
- பண்டைய காலங்களில் நடனம் என்பது வழிபாடு மற்றும் கொண்டாட்டத்திற்கான வழியாகவும், மகிழ்ச்சி மற்றும் நன்றியை வெளிப்படுத்துவதற்கான பாவனையாகவும் கருதப்படுகிறது. இந்திய நடனங்கள் மூலம் நமது உயர்ந்த பண்பாடு வெளிப்படுகிறது.
- இசையும் நடனமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது. இந்தியாவில் பல்வேறு வகையான இசை வடிவங்கள் பின்பற்றப்படுகின்றன. அவை இந்துஸ்தானி இசை, கர்நாடக இசை, தமிழ் செவ்வியல் இசை, நாட்டுப்புற இசை, லாவணி இசை மற்றும் கஜல் இசையாகும். இந்த இசை வடிவங்களில் சேர்க்கப்பட்ட ஏராளமான பாடல்கள், பல மொழிகளிலும் காணக் கிடைக்கின்றன.
ஒற்றுமைக் கூறுகள்:
- ‘ஹிந்த்‘ என்ற பெயர் ‘சிந்து‘ என்ற நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது.
- சிந்து என்பதை அவர்கள் 'ஹிந்து' என்று உச்சரித்தார்கள். இதனைத் தொடர்ந்து இடைக்காலத்தில் வந்த அரேபியர்களும் நமது நாட்டை ‘ஹிந்துஸ்தான்’ என்று அழைத்தனர் .
- வடஇந்தியாவையும், தென்னிந்தியாவையும் விந்திய சாத்பூரா மலைத்தொடர்கள் பிரித்தாலும் இந்தியாவைப் பாரதக் கண்டம் என்றே வழங்குகிறோம்.