பொதுத் தோ்வுகள் (முறையற்ற செயல்பாடுகளைத் தடுத்தல்) மசோதா, 2024

TNPSC PAYILAGAM
By -
0



பொதுத் தோ்வுகள் (முறையற்ற செயல்பாடுகளைத் தடுத்தல்) மசோதா, 2024-The Public Examinations (Prevention of Unfair Means) Bill, 2024

அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா மக்களவையில்  நிறைவேறியது. 

போட்டித்தேர்வுகளில் முறைகேடு

மத்திய அரசின் பணிகளுக்கு போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இத்தகைய தேர்வுகளை மத்திய அரசும், அதன் நிறுவனங்களும் நடத்துகின்றன. இந்த தேர்வுகள் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டாலும் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற பல்வேறு முறைகேடுகள் நடக்கத்தான் செய்கின்றன. இந்த குற்றங்களை தடுப்பதற்கென குறிப்பிட்ட அடிப்படை சட்டம் எதுவும் இதுவரை இல்லை.

இந்த நிலையில் அரசு ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தண்டனைக்குரிய குற்றங்கள்

'பொதுத்தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதா-2024' என்கிற மசோதாவை மத்திய பணியாளர்களுக்கான இணை மந்திரி ஜிதேந்திர சிங் மக்களவையில் தாக்கல் செய்தார்.

வினாத்தாள் அல்லது விடைத்தாள் கசிவு; பொதுத்தேர்வில் எந்த வகையிலும் விண்ணப்பதாரருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அனுமதியின்றி உதவுதல்; ஏமாற்றுவதற்கு அல்லது பண ஆதாயத்திற்காக போலி இணையதளத்தை உருவாக்குதல்; போலி தேர்வு நடத்துதல்; போலி ஹால்டிக்கெட்டுகள் மற்றும் போலி பணி நியமன ஆணைகளை வழங்குதல் உள்ளிட்டவை தண்டனைக்குரிய குற்றங்கள் என புதிய சட்ட மசோதா கூறுகிறது.

ரூ.1 கோடி வரை அபராதம்

இந்த சட்டத்தின் கீழ் நியாயமற்ற வழிகள் மற்றும் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனையுடன் தண்டிக்கப்படுவார்கள். குற்றத்தின் தன்மையை பொறுத்து இது 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். சிறை தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கு பொதுத்தேர்வு ஆணையத்தால் அங்கீகரிப்பட்ட ஒரு சேவை வழங்குபவர் முறைகேட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட சேவை வழங்குபவர் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார். அதோடு அந்த சேவை வழங்குபவர் 4 ஆண்டுகளுக்கு எந்தவொரு பொதுத்தேர்வையும் நடத்துவதற்கு தடைவிதிக்கப்படுவார் என மசோதா வலியுறுத்துகிறது.

Post a Comment

0Comments

Post a Comment (0)