ONE NATION ONE ELECTION RAMNATHKOVIND LED PANEL RECOMMENDS

TNPSC PAYILAGAM
By -
0

One Nation One Election RamNathKovind Led Panel Recommends
ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகள்


ஒரே நாடு ஓரே தேர்தல் அறிக்கை:ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகள்


நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு கடந்த ஆண்டு 2023 செப்டம்பர் 2ம் தேதி அமைக்கப்பட்டது. 


இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதிக்குழு தலைவர் என்.கே. சிங், முன்னாள் மக்களவை பொதுச் செயலாளர் குபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு அழைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.


தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து இக்குழு ஆலோசனைகளை பெற்றது. 191 நாட்கள் இதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் 14.03.2024 வழங்கியது.


2024-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் குறித்த உயர்மட்டக் குழுவின் அறிக்கை, இந்தத் தொலைநோக்கை செயல்படுத்துவதற்கான விரிவான வரைபடத்தை வழங்கியது. அதன் பரிந்துரைகள் 2024, செப்டம்பர் 18 அன்று மத்திய அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 


ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகள் :

  • 18,626 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வறிக்கை 191 நாட்கள் முயற்சிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 
  • அதில் ஒரே நாடு ஓரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் அது வளர்ச்சியையும், சமூக இணக்கத்தையும் மேம்படுத்தும். 
  • இந்தியாவின் கனவு நனவாக வழிவகுக்கும் என்று ராம்நாத் கோவிந்த் குழு தெரிவித்துள்ளது.
  • அதேபோல் இந்தக் குழுவானது ஒரே வாக்காளர் பட்டியல் மற்றும் ஒரே மாதிரியான வாக்காளர் அட்டையும் தயாரிக்க தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரைத்துள்ளது. 
  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்படுவது அவசியம் என பரிந்துரைத்துள்ள ராம்நாத் கோவிந்த் குழு, அவ்வாறு அரசியலமைப்பில் திருத்தம் செய்ய மாநில அரசின் அனுமதி தேவை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
  • ஆனால் அதேவேளையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு 50 சதவீத மாநிலங்களின் சட்ட ஒப்புதல் அவசியம் என அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. 
  • மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த இந்திய அரசியலமைப்பின் 82 ஏ மற்றும் 324 ஏ பிரிவுகளில் திருத்தங்களை குழு முன்மொழிந்தது.
  • அமலாக்கத்திற்கு படிப்படியான அணுகுமுறை: ஒரே நேரத்தில் தேர்தலை இரண்டு கட்டங்களாக அமல்படுத்த குழு பரிந்துரைத்தது:
  • முதல் கட்டம்: மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒருங்கிணைத்தல்.
  • இரண்டாம் கட்டம்: நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான தேர்தலை மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப்பின் 100 நாட்களுக்குள் ஒருங்கிணைத்தல்.
  • வாக்காளர் பட்டியல் ஒத்திசைவு: மாநில தேர்தல் ஆணையங்களால் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் உள்ள திறமையின்மைகளை குழு சுட்டிக்காட்டியது. மூன்று அடுக்கு அரசுக்கும் ஒற்றை வாக்காளர் பட்டியல் மற்றும் ஒற்றை வாக்காளர் அடையாளத்தை உருவாக்க பரிந்துரைத்தது. இது போலி மற்றும் தவறுகளைக் குறைத்து, வாக்காளர் உரிமைகளைப் பாதுகாக்கும்.
  • மக்களவை,சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி முடித்தாலும் அது முடிந்த பின்னர் 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் எனப் பரிந்துரைத்துள்ளது.

Post a Comment

0Comments

Post a Comment (0)