National Multidimensional Poverty Index- 2023

TNPSC PAYILAGAM
By -
0
National Multidimensional Poverty Index- 2023


நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தேசிய பல பரிமாண வறுமைக் குறியீட்டு (National Multidimensional Poverty Index) அறிக்கை மதிப்பிட்டுள்ளது:

  • வறுமை ஒழிப்பு என்பது சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து கொள்கை வகுப்பாளர்களிடையே பெரும் சவாலாகத் தொடர்கிறது. ஏராளமான வறுமை ஒழிப்புத் திட்டங்களை அரசு அறிமுகப்படுத்திய பிறகும், பெரும்பான்மையான மக்களிடம் வறுமை தொடர்ந்தது. ஆனால், 2015-16 மற்றும் 2019-21க்கு இடையில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் வறுமையின் பிடியிலிருந்து தப்பியவர்களின் எண்ணிக்கை 13.55 கோடி என 2023இல் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தேசிய பல பரிமாண வறுமைக் குறியீட்டு (National Multidimensional Poverty Index) அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
  • அதாவது, 2015-16இல் 24.85%ஆக இருந்த வறுமையில் வாடும் மக்களின் ஒட்டுமொத்த அளவு, 2019-21இல் 14.96%ஆகக் குறைந்துள்ளது; கிராமப்புறங்களில் 32.59%இலிருந்து 19.28%ஆகக் குறைந்துள்ளது. எந்தெந்த மாநிலங்கள் அதிக மக்களை வறுமையிலிருந்து வெளியேற்றியுள்ளன, மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் வறுமைக் குறைவுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

முறையியலில் மாற்றம்:

  • 1971இல் பொருளாதார அறிஞர்களான வி.எம்.தண்டேகர், என்.ராத் ஆகியோரால் இந்தியாவில் முதல் முறையாக வறுமை மதிப்பீடு நடத்தப்பட்டது. 2011-12ஆம் ஆண்டு வரையில், மாதாந்திரத் தனிநபர் நுகர்வுச் செலவினங்கள் வறுமையை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு வெளியிடும் நுகர்வுச் செலவுத் தரவுகளைப் பயன்படுத்தி, 1972-73 முதல் 2011-12 வரை, ஐந்தாண்டுக்கு ஒருமுறை என்கிற அடிப்படையில், அனைத்து மாநிலங்களுக்கும், மொத்த இந்தியாவுக்கும் கிராமப்புற - நகர்ப்புறங்களுக்கும் தனித்தனியாக வறுமையின் அளவு மதிப்பிடப்பட்டது.
  • குடும்பங்களின் நுகர்வுச் செலவினங்களின் அடிப்படையில் மட்டும் வறுமையை அளவிடுவதில் உள்ள குறைபாடுகளைப் புரிந்துகொண்டு - முதல் முறையாகப் பல்வேறு வளர்ச்சிக் காரணிகளை உள்ளடக்கி வறுமையை அளவிடுவதற்குப் ‘பல பரிமாண வறுமைக் குறியீடு’ என்ற ஒரு புதிய விரிவான வழிமுறையை நிதி ஆயோக் உருவாக்கியுள்ளது. அதாவது சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று முக்கியக் காரணிகளின் கீழ், 12 குறியீடுகளைக் கொண்டு, 2015-16 மற்றும் 2019-21 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தேசியக் குடும்ப நல ஆய்வின் தரவுகளைப் பயன்படுத்தி, 28 மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகள், 707 மாவட்டங்களுக்குத் தற்போது பல பரிமாண வறுமைத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

வறுமை அளவில் குறைவு:

  • புதிய மதிப்பீட்டின்படி, வறுமையின் அளவு மிக வேகமாகக் குறைந்துள்ளது. 2015-16 முதல் 2019-21 வரையிலான ஐந்து ஆண்டுகளில், வறுமையின்கீழ் வாழும் மக்களின் அளவு ஆண்டுக்குச் சராசரியாக 2.70 கோடி எனக் குறைந்துள்ளது. ஆனால், நுகர்வுச் செலவினங்களின் அடிப்படையில் 2004-05 மற்றும் 2011-12 வரையிலான ஏழு ஆண்டுகளில், மதிப்பிடப்பட்ட வறுமைக் குறைப்பின் அளவு ஆண்டுக்குச் சராசரியாக 1.96 கோடி மட்டுமே. அதாவது, நுகர்வுச் செலவினங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள வறுமை அளவைக் காட்டிலும், பல பரிமாண மதிப்பீட்டின்படி, ஒவ்வோர் ஆண்டிலும் சராசரியாக 74 லட்சம் பேர் வறுமையின் பிடியிலிருந்து அதிகமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.
  • வறுமைக் குறைவின் வேகத்தை இரண்டு வழிகளில் கண்டறியலாம். ஒன்று, 2015-16 மற்றும் 2019-21க்கு இடையில் வறுமை அளவின் சதவீத எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள புள்ளி மாற்றம். இரண்டு, இந்தக் காலகட்டத்தில் வறுமையிலிருந்து மீட்கப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை. அதிக மக்கள்தொகை வளர்ச்சி, குறைந்த கல்வியறிவு, குறைந்த தனிநபர் வருமானம், மோசமான உள்கட்டமைப்பு, அதிக அளவு தாய் இறப்பு விகிதம் போன்ற காரணங்களால், பிமாரு (BIMARU) என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற பிஹார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பல ஆண்டுகளாக வறுமைக் குறைவின் வேகம் மெதுவாக இருந்தது உண்மை.
  • ஆனால், 2015-16 மற்றும் 2019-21க்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் மிகவும் வளர்ந்த மாநிலங்களைவிடவும் பிமாரு மாநிலங்களில் வறுமையின் அளவு சதவீதப் புள்ளி மாற்றத்தின் அடிப்படையில் வேகமாகக் குறைந்துள்ளது. மொத்தம் உள்ள 28 மாநிலங்களில், பிமாரு மாநிலங்கள் வறுமைக் குறைப்பில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன. மிகவும் அதிகமாக, பிஹாரில் சதவீதப் புள்ளி மாற்றத்தின்படி வறுமையின் அளவு 18.13ஆகக் குறைந்துள்ளது. அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (15.94), உத்தரப் பிரதேசம் (14.75), ஒடிஷா (13.65), ராஜஸ்தான் (13.56) ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் வறுமைக் குறைப்பு நடந்துள்ளது.
  • பிமாரு மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மேற்கு வங்கம் சற்று உயரிய வளர்ச்சிக் குறியீடுகளைக் கொண்டிருந்தாலும், அதனால் வறுமையை 9.41 சதவீதப் புள்ளிகள் மட்டுமே குறைக்க முடிந்துள்ளது. மறுபுறம், ஒப்பீட்டளவில் வளர்ந்த மாநிலங்களான மகாராஷ்டிரம் (6.99), குஜராத் (6.81), ஆந்திரப் பிரதேசம் (5.71), கர்நாடகம் (5.20) போன்றவை பிமாரு மாநிலங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த வேகத்தில் வறுமையைக் குறைத்துள்ளன. பல ஆண்டுகளாக அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக் கொள்கையைப் பின்பற்றுகின்ற தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் சதவீதப் புள்ளி மாற்றத்தின் அடிப்படையில் வறுமைக் குறைப்பு மிகவும் குறைவாக உள்ளது.

மக்கள் எண்ணிக்கை அளவு:

  • சதவீதப் புள்ளி மாற்றத்தின் அடிப்படையில் மட்டுமல்லாமல், வறுமையிலிருந்து மீட்கப்பட்ட மக்களின் முழு எண்ணிக்கையிலும், பிமாரு மாநிலங்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் 2015-16 முதல் 2019-21 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 13.55 கோடி பேர் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர். உத்தரப் பிரதேசம் மட்டும் 3.43 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, பிற பிமாரு மாநிலங்களான பிஹார் (2.55 கோடி), மத்தியப் பிரதேசம் (1.36 கோடி), ராஜஸ்தான் (1.08 கோடி) போன்ற மாநிலங்களும் பெரிய அளவில் வறுமையைக் குறைத்துள்ளன. வளர்ச்சியடைந்த தென் மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் (30.20 லட்சம்), கர்நாடகம் (34.87 லட்சம்), தெலங்கானா (27.61 லட்சம்), தமிழ்நாடு (19.58 லட்சம்), கேரளம் (53,239) ஆகியவை குறைந்த அளவிலான மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளன.
  • இதையே வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், இந்தியாவில் 38.05% மக்கள்தொகைப் பங்கைக் கொண்டுள்ள பிமாரு மாநிலங்கள், 8.12 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளன. இது அகில இந்திய அளவில் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்ட மொத்த மக்களின் எண்ணிக்கையில் 59.92% ஆகும். ஆனால், வளர்ச்சியடைந்த தென் மாநிலங்களின் பங்கு இந்தியாவின் மக்கள்தொகையில் 19.71%ஆக இருந்தபோதும், அகில இந்திய அளவில் வறுமையிலிருந்து மீட்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் இம்மாநிலங்களின் பங்கு வெறும் 8.33% (1.13 கோடி) மட்டுமே. கிழக்கு இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், ஜார்க்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்கத்தின் மொத்தப் பங்கோடு (15.93%) ஒப்பிடுகையில், அதிகமான மக்களை (18.72%) இம்மாநிலங்கள் வறுமையிலிருந்து விடுவித்துள்ளன. இருந்தபோதும், பிமாரு மாநிலங்களின் சாதனைகளுடன் ஒப்பிடுகையில், இது குறைவே.
  • பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தியதோடு கல்வி, ஊட்டச்சத்து, நீர், சுகாதாரம், சமையல் எரிபொருள், மின்சாரம், வீட்டுவசதி போன்ற முக்கியமான துறைகளில் முதலீடு செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்திய காரணத்தால், மக்களின் வறுமையைப் பெருமளவில் குறைக்க முடிந்ததாக, நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பல பரிமாண வறுமைக் குறியீட்டு அறிக்கை கூறியுள்ளது. எது எப்படியிருந்தாலும், பிமாரு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வேகமான வறுமைக் குறைவு, அதிகப் பொருளாதார வளர்ச்சியின்றி வறுமையைக் குறைக்க முடியாது என்கிற வழக்கமான சிந்தனையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. அரசால் கொண்டுவரப்படும் வளர்ச்சித் திட்டங்களைச் சரியான முறையில் தொகுத்து, வரிசைப்படுத்தி நடைமுறைப்படுத்தினால், குறைந்த பொருளாதார வளர்ச்சி உள்ள மாநிலங்களிலும் வறுமையை வேகமாகக் குறைக்க முடியும் என்பதை பிமாரு மாநிலங்களின் அனுபவம் சொல்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 06 – 2024)

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)