கேரளாவின் வயநாட்டில் 572 செ.மீ. அளவிற்கு பெய்த மழைப்பொழிவால் ஏற்பட்ட நிலச்சரிவிற்கு டெப்ரிஸ்ஃப்லொ என பெயரிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் செம்மண் நிறைந்து காணப்படுகிறது:
- கேரளா மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக கடந்த ஜூலை 30 அதிகாலை முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய ஊர்களில் கோர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், அதன் மீட்பு பணிகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
- நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்துள்ள நிலையில், இதுவரை 270க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கபட்டுள்ளன. மேலும், மாயமான 240 பேரை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு கு உள்ளூர் தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் மனித உடல்களாக இருப்பது காண்போர் நெஞ்சை உருகுலைய வைத்துள்ளது. மேலும், நிவாரண முகாம்களில் 8,000க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர் பொறுப்பேற்றுள்ளார்:
- லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர், ஆகஸ்ட் 01, 2024 அன்று, ராணுவத்தின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைமை இயக்குநராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த மதிப்புமிக்க பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இதற்கு முன்பு, ஏர் மார்ஷல் நிலையில் மருத்துவமனை சேவைகள் (ஆயுதப்படை) பிரிவின் தலைமை இயக்குநராக பதவி வகித்த முதல் பெண் இவர் ஆவார்.
- லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர் புனேயின் ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். டிசம்பர் 1985-இல் ராணுவ மருத்துவப் படையில் நியமிக்கப்பட்டார். குடும்ப மருத்துவத்தில் முதுநிலை பட்டம், தாய் சேய் நலம் மற்றும் சுகாதார மேலாண்மையில் டிப்ளோமா மற்றும் புதுடெல்லி எய்ம்ஸில் மருத்துவ தகவலியலில் இரண்டு ஆண்டு பயிற்சி திட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை" என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது:
- பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் அரசு சட்டம் கொண்டுவந்தது. அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதமாக பஞ்சாப் மாநில அரசு கொண்டு வந்தது. இதேபோல் தமிழக அரசு 2009ல் அருந்ததியின மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து சட்டம் இயற்றியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் வழக்கு விசாரணைக்கு நடைபெற்றுவருகிறது.
- இந்நிலையில் பஞ்சாப் அரசின் வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். அதேநேரம், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அதன்படி, 6 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், “பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை. பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும். அரசியல் சாசன சட்டத்தின் 14வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை. பட்டியலின உட்பிரிவுகள் எதுவும் பட்டியலின வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம்.
- எனினும், மாநிலங்கள் அதன் சொந்த விருப்பம் அல்லது அரசியல் தேவைக்காக செயல்பட முடியாது. மாநிலங்களின் முடிவு நீதித்துறை மறுஆய்வுக்கு ஏற்றது. பட்டியலின, பழங்குடியினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும். உள் இடஒதுக்கீடு தொடர்பான மாநில அரசுகள் கொண்டுவந்த சட்டம் செல்லும்.” என்று ஒருமித்த தீர்ப்பளித்தனர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக மனோஜ் சோனி இருந்தார். இவரது பதவிக் காலம் 2029-ல் தான் முடிகிறது. ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- இதையடுத்து, மத்திய அரசின் சுகாதாரத் துறை செயலராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதனை, யுபிஎஸ்சி தலைவராக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமனம் செய்துள்ளார். இவர் யுபிஎஸ்சி தலைவராக இன்று பொறுப்பேற்கிறார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு முதல் யுபிஎஸ்சி உறுப்பினராக இருந்தார். தற்போது அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவருக்கு 2025 ஏப்ரல் மாதம் 65 வயது நிறைவடைகிறது. அதுவரை இவர் பதவியில் இருப்பார். அரசியல் சாசனத்தின் 316 ஏ பிரிவின்படி அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் மத்திய அரசு பணியில் 37 ஆண்டு அனுபவம் மிக்கவர். உலக வங்கியின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆக.9-ம் தேதி தொடக்கம்:
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தில் 2.73 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது:
- தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருது கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, சங்கரய்யா, நல்லகண்ணு, கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது, குமரி அனந்தனுக்கு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில் இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த குமரி அனந்தன், காந்தியப் பேரவைத் தலைவர் மட்டுமின்றி இலக்கியச் செல்வராகவும், இலக்கிய கடலாகவும், பண்பாட்டுச் செம்மலாகவும் விளங்கியவர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
எழுத்தாளர் சிவசங்கரிக்கு இலக்கிய விருதினை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வழங்கி கவுரவித்துள்ளார்:
- தமிழகத்தின் பிரபல எழுத்தாளரான சிவசங்கரி, சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள், கட்டுரை தொகுப்புகள் மற்றும் வாழ்க்கை சரிதங்களை எழுதி உள்ளார். இவர் எழுதிய ஆயுள் தண்டனை எனும் நாவல் கண்ணீர் பூக்கள் எனும் பெயரில் திரைப்படமாக வெளியானது.
- இதேபோன்று, அவன்.. அவள்.. அது, ஒரு மனிதனின் கதை, திரிவேணி சங்கமம், நண்டு, பெருமை, 47 நாட்கள் ஆகியவை திரைப்படங்களாக இவரது நாவலை தழுவி எடுக்கப்பட்டன.
- இவரது ‘பாரத இலக்கியம்’ எனும் நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது கடந்த 2010-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
- இலக்கியம் மற்றும் இந்திய இணைப்பு எனும் நூலுக்கு கனடா நாட்டின் இலக்கிய ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்புக்கான விருது 2022-ல் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
- சூர்ய வம்சம் எனும் நூலுக்காக 2023-ல் சரஸ்வதி சம்மான் விருதையும் எழுத்தாளர் சிவசங்கரி பெற்றுள்ளார்.