பாதம் பாதுகாப்போம் திட்டம் 2024

TNPSC PAYILAGAM
By -
0


Paadham Paadhukappom Scheme


  • நீரிழிவு நோயாளிகளின் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு பார்வை பயணத்தில் "பாதம் பாதுகாப்போம் திட்டம்" அரசின் ஒரு முன்னோடித் திட்டமாகும். இத்திட்டத்தினை அரசு மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது.

  • இத்திட்டம் நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை தவிர்பதற்கும், நீரிழிவு பாத பாதிப்புகளுக்கான மருத்துவத்தின் மூலமாக, கால் இழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கும் வழிவகை செய்கிறது. தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமாகிய "மக்களைத் தேடி மருத்துவம்" நோய்களை தடுப்பதிலும் சிகிச்சையளிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
  • மாநிலத்தின் முதன்மையான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் இத்திட்டம் கட்டமைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பாத மருத்துவ சேவைகளை 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மூலமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே இது போன்ற முன்னெடுப்பை அரசு மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்
  • பத்து கோடிக்கும் அதிகமான நோயாளிகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ள இந்தியாவில் 25 சதவிகிதத்தினர் பாத பாதிப்புகளால் அவதியுறுவதும், இவர்களில் 85 சதவிகிதத்தினர் கால்களை இழக்க நேரிடுவதும் ஒரு தேசிய பேரிடர் ஆகும். 
  • தமிழ்நாட்டில் 80 லட்சம் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். நீரிழிவு பாத பாதிப்புகள் ஆரம்ப நிலையில் கண்டறியப்படாவிடில் ஆபத்தான பின்விளைவுகளும், கிருமி தொற்று மற்றும் கால்களை இழக்கும் அபாயமும் நேரிடுகிறது. 
  • 85 சதவிகித நீரிழிவு தொடர்பான கால் அகற்றல்கள் காலத்தே கண்டறியப்பட்ட நோய் அறிகுறிகள் மற்றும் இடையீட்டுகளின் மூலம் முற்றிலும் தவிர்க்கக்கூடியவை ஆகும்.பெருகி வரும் இப்பிரச்சினையின் தீவிர தன்மையை கண்டறிந்து இதைக் களைவதற்கான முன்னெடுப்பாக பாதம் பாதுகாப்போம் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 80 லட்சம் நீரிழிவு நோயாளிகள் பாத பரிசோதனைக்கு உட்படுத்த இலக்கு நிர்ணயித்து திட்டமிடப்பட்டுள்ளது. 
  • நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாத உணர்விழப்பு மற்றும் இரத்த நாள அடைப்புகளை கண்டறிந்து மருத்துவ நெறிமுறைகள் அடிப்படையிலான ஆரம்ப நிலை இடையீட்டுகளை மேற்கொண்டு கால் இழப்புகளை தடுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
  • "பாதம் பாதுகாப்போம் திட்டம்" நீரிழிவு பாத மருத்துவத்தின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து தேவையற்ற கால் இழப்புகளை தடுத்து நீரிழிவு நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட விழைகிறது. எந்த ஒரு நீரிழிவு நோயாளியும் பாதிக்கப்படக்கூடாது என்பதே இத்திட்டத்தின் நோக்கம். 
  • தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கென ரூ.26.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 299 அரசு மருத்துவமனைகள் மற்றும் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாத பாதிப்பு கண்டறிதல் மையங்களை நிறுவ உள்ளன.
  • மேலும் 100 அரசு மருத்துவமனைகள், 21 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவப்படும் பாத மருத்துவ மையங்கள் மற்றும் 15 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நீரிழிவு பாத அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான வசதிகளை நிறுவுவதன் மூலமாகவும் இத்திட்டம் பாத பராமரிப்பு, கால் புண் தவிர்த்தல், கால் புண் மருத்துவம், நீரிழிவு பாத அறுவை சிகிச்சைகள் மற்றும் புனர்வாழ்வு அம்சங்களையும் ஒருங்கிணைக்கின்றது. 
  • இத்திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்மாதிரி திட்டத்தினுடைய பலன்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.68 லட்சம் நீரிழிவு நோயாளிகளில் 1.65 லட்சம் நபர்களுக்கு பாத பாதிப்பு கண்டறிதல் மேற்கொள்ளப்பட்டது. 
  • தஞ்சாவூர் மாவட்ட மாதிரி வெற்றியை தொடர்ந்து மாநில முழுமைக்கும் இத்திட்டம் விரிபடுத்தப்படவுள்ளது.
  • இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு கோவை கங்கா மருத்துவமனையோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு நீரிழிவு பாத அறுவை மருத்துவம், கால் புண் மருத்துவம் மற்றும் புனரமைப்பு தளங்களில் மேம்பட்ட சேவைகளை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
  • இந்த முன்னெடுப்பு அரசு மருத்துவக்கல்லூரிகளில் பொது அறுவைதுறை, ஒட்டுறுப்பு அறுவை துறை மற்றும் இரத்தநாள அறுவை துறைகளின் ஒருங்கிணைப்பில் தடையற்ற சேவைகளை வழங்க வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.


Source : dailythanthi

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)