தரமான உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பிணையில்லா கல்வி கடனும் மூன்று சதவீத வட்டி தள்ளுபடி அளிக்கும் 'பிரதமர் வித்ய லட்சுமி' திட்டத்திற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரதமர் வித்ய லட்சுமி திட்டம்:
- தரமான அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் (Quality Higher Education Institutions - QHEIs) சேர்ந்து உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் திட்டமே பிரதமர் வித்ய லட்சுமி திட்டம் ஆகும். இதன்படி, வங்கிகள், நிதி நிறுவனங்கள் இந்த மாணவர்களுக்கு பிணையம் இல்லாத, உத்தரவாதம் இல்லாத கடனை அளிக்கும்.
- ஒரு மாணவருக்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதன்மூலம் மொத்த கல்விக் கட்டணமும் படிப்புக்கான பிற செலவுகளும் அளிக்கப்படும்.
- என்ஐஆர்எஃப் எனப்படும் தேசிய தரவரிசைப் பட்டியலில் (NIRF முதல் 100 இடங்களைப் பிடிக்கும் அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த கல்விக் கடன் அளிக்கப்படும். ) ஒட்டுமொத்த தரவரிசையில், பிரிவு வாரியான, துறை வாரியான தரவரிசையில் 100 இடங்களைப் பிடித்த கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.
- அதேபோல என்ஐஆர்எஃப் தரவரிசையில் 101-200 வரை பிடித்த மாநிலக் கல்வி நிறுவனங்களில் படிப்போருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். அதேபோல அனைத்து மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெறலாம்.
- ஆண்டுதோறும் தரவரிசை பட்டியல் மாற்றி அமைக்கப்படும். முதல் கட்டமாக 860 தரமான உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் 22 இலட்சம் மாணவர்கள் இத்திட்டத்தில் பலன்களைப் பெறலாம்.
- மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சத்துக்குள் இருக்கும் மாணவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரையிலான கல்வி கடனுக்கு 3 சதவீத வட்டி தள்ளுபடி அளிக்கப்படும்.
- 2024-2025 கல்வி ஆண்டு முதல் 2030-2031 கல்வி ஆண்டு வரை இத்திட்டம் அமல்படுத்தப்படும். இதற்காக ரூபாய் 3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழு ஆண்டுகளில் 7 லட்சம் மாணவர்கள் வட்டி தள்ளுபடி சலுகை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.