இந்திய வன நிலை அறிக்கை 2023:
மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் (21.12.2024) டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் (Forest Research Institute, Dehradun) 'இந்திய வன நிலை அறிக்கை 2023-ஐ (ISFR 2023) வெளியிட்டார்.
1987 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய வன கணக்கெடுப்புப் பணி, (Forest Survey of India (FSI)) மூலம் வெளியிடப்படுகிறது. தொலையுணர்வு செயற்கைக்கோள் தரவு, கள அடிப்படையிலான தேசிய வன நிலை (NFI -National Forest Inventory ) ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டின் வனம், மர வளங்களின் ஆழமான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இந்திய வன நிலை அறிக்கை 2023, 18 வது அறிக்கையாகும்.
இந்த அறிக்கையில் வனப்பகுதி, மரங்களின் அடர்த்தி, சதுப்புநிலக் காடுகள், வளரும் இருப்பு, இந்தியாவின் காடுகளில் கார்பன் இருப்பு, காட்டுத்தீ நிகழ்வுகள், வேளாண் காடுகள் போன்றவை பற்றிய தகவல்கள் உள்ளன.
ஐஎஸ்எஃப்ஆர் தற்போதைய மதிப்பீட்டின்படி, மொத்த வனம் மற்றும் மர அடர்த்திப் பரப்பு 8,27,357 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 25.17 சதவீதமாகும். வனப்பகுதி சுமார் 7,15,343 சதுர கிமீ (21.76%) பரப்பளவைக் கொண்டுள்ளது. அதேசமயம் மரங்களின் அடர்த்திப் பகுதி 1,12,014 சதுர கிமீ (3.41%) பரப்பளவைக் கொண்டுள்ளது.
2021-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, நாட்டின் மொத்த வனம், மரங்களின் பரப்பளவு 1445 சதுர கிலோ மீட்டர் அதிகரித்துள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எஃப்எஸ்ஐ வழங்கிய நிகழ்நேர தீ எச்சரிக்கைகள், காட்டுத் தீ தடுப்பு சேவைகள் ஆகியவை இதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
இந்திய வன நிலை அறிக்கை 2023 ல் வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்:
- நாட்டின் வனம், மரங்களின் பரப்பு 8,27,357 சதுர கிலோ மீட்டர் ஆகும், இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 25.17 சதவீதமாகும். இதில் 7,15,343 சதுர கி.மீ (21.76%) வனப்பகுதி. 1,12,014 சதுர கி.மீ (3.41%) மரங்களின் அடர்த்தி உள்ளது.
- 2021 ஆம் ஆண்டின் மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது, நாட்டின் காடு, மரங்களின் பரப்பளவு 1445 சதுர கி.மீ அதிகரித்துள்ளது. இதில் வனப்பகுதி 156 சதுர கி.மீ அதிகரித்துள்ளது. மரங்களின் அடர்த்தி 1289 சதுர கி.மீ அதிகரித்துள்ளது.
- சத்தீஸ்கர் (684 சதுர கி.மீ), உத்தரபிரதேசம் (559 சதுர கி.மீ), ஒடிசா (559 சதுர கி.மீ), ராஜஸ்தான் (394 சதுர கி.மீ) ஆகியவை காடு, மரங்களின் அடர்த்தியில் அதிகபட்ச உயர்வைக் கொண்ட முதல் நான்கு மாநிலங்கள்.
- மிசோரம் (242 சதுர கி.மீ), குஜராத் (180 சதுர கி.மீ), ஒடிசா (152 சதுர கி.மீ) ஆகியவை வனப்பகுதியில் அதிகபட்ச அதிகரிப்பைக் கொண்ட முதல் மூன்று மாநிலங்கள்.
- பரப்பளவில், மிகப்பெரிய காடு, மரங்களைக் கொண்ட முதல் மூன்று மாநிலங்கள் மத்தியப் பிரதேசம் (85,724 சதுர கி.மீ), அருணாச்சல பிரதேசம் (67,083 சதுர கி.மீ), மகாராஷ்டிரா (65,383 சதுர கி.மீ).
- பரப்பளவு வாரியாக மிகப்பெரிய வனப்பகுதியைக் கொண்ட முதல் மூன்று மாநிலங்கள் மத்தியப் பிரதேசம் (77,073 சதுர கி.மீ), அருணாச்சல பிரதேசம் (65,882 சதுர கி.மீ), சத்தீஸ்கர் (55,812 சதுர கி.மீ).
- மொத்த புவியியல் பரப்பளவைப் பொறுத்தவரை, லட்சத்தீவு (91.33 சதவீதம்) அதிக வனப்பகுதியைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து மிசோரம் (85.34 சதவீதம்), அந்தமான் - நிக்கோபார் தீவுகள் (81.62 சதவீதம்) உள்ளன.
- தற்போதைய மதிப்பீடு 19 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமான வனப்பகுதி உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. இவற்றில், மிசோரம், லட்சத்தீவு, அந்தமான் - நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய எட்டு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான வனப்பகுதி உள்ளது.
- நாட்டில் மொத்த சதுப்புநிலக் காடுகள் 4,992 சதுர கி.மீ : நாட்டின் வனம், மர வளங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய தகவல்களை வழங்குவதைத் தவிர, ஐஎஸ்எஃப்ஆர்-ல் கொடுக்கப்பட்டுள்ள தரவுகள் போன்றவை, கொள்கை வகுப்பாளர்கள், திட்டமிடுபவர்கள், மாநில வனத் துறைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ள முகமைகள், கல்வியாளர்கள், சிவில் சமூகம், இயற்கை வள பாதுகாப்பு மேலாண்மையில் ஆர்வமுள்ள மற்றவர்கள் போன்ற பல தரப்பினருக்குப் பயனுள்ள தகவல் ஆதாரமாக செயல்படுகிறது.
SOURCE : PIB