கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைக்கான விதிகள் 1994-ல் முக்கிய திருத்தங்களை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் அறிமுகப்படுத்துகிறது
- உள்ளூர் கேபிள் சேவை வழங்குநர்களின் பதிவு நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைக்கான விதிகள் 1994-ல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி, உள்ளூர் கேபிள் ஒளிபரப்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் பதிவுகள் இந்த அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முற்றிலும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும்.
- ஆதார், நிரந்தர கணக்கு எண், நிறுவன அடையாள எண், இயக்குநர் அடையாள எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, உள்ளூர் கேபிள் ஒளிபரப்பு சேவை வழங்குபவர்களுக்கு பதிவு சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்படும். மேலும், உள்ளூர் கேபிள் ஒளிபரப்பு சேவை வழங்குபவர்களின் பதிவுக்கான விண்ணப்பங்களை நிராகரித்தலுக்கு அல்லது புதுப்பித்தலுக்கு எதிரான மேல்முறையீடு செய்வதற்கான வசதிகளும் இந்த இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- முன்னதாக, உள்ளூர் கேபிள் சேவை வழங்குநர்களின் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள உள்ளூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் அவர்களுக்கான பதிவு நடைமுறைகள் தலைமை அஞ்சலக அதிகாரியின் தலைமையில் நேரடியாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
- கையேடு பதிவு நடைமுறைகள் சிக்கல் நிறைந்தததாகவும், கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்வதாகவும் இருந்தது. மேலும், பதிவுச் சான்றிதழ்கள் குறிப்பிட்ட பகுதிகளில் கேபிள் சேவைகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகவும் இருந்தது.
உள்ளூர் கேபிள் சேவை வழங்குநர்களுக்கான பதிவு தொடர்பான திருத்தப்பட்ட விதிகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
- மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணையதளமான www.new.broadcastseva.gov.in-ல் உள்ள ஒளிபரப்பு சேவைக்கான பக்கத்தில் உள்ளூர் கேபிள் சேவை வழங்குநர்களுக்கான புதிய பதிவு அல்லது புதுப்பிப்பத்தற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். பதிவுச் சான்றிதழ் ஆன்லைன் வாயிலாக வழங்கப்படும்.
- உள்ளூர் கேபிள் சேவை வழங்குநர்களுக்கான பதிவுகள் ஐந்து ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும்;
- பதிவு அல்லது புதுப்பித்தலுக்கான செயலாக்கக் கட்டணமாக ஐந்தாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
- உள்ளூர் கேபிள் சேவை வழங்குநர்களுக்கான பதிவு, நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் முழுமைக்கும் செல்லத்தக்கவையாகும்.
- பதிவை புதுப்பிப்பதற்கு அது காலாவதியாகும் தேதிக்கு குறைந்தது 90 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.
- பதிவு அதிகாரியின் முடிவுக்கு எதிராக உள்ளூர் கேபிள் சேவை வழங்குநர்கள் மேல்முறையீட்டு அதிகாரியிடம் பதிவு மறுக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
- ஏற்கனவே உள்ளூர் கேபிள் சேவை வழங்குநர்களுக்கு வழங்கப்பட்ட பதிவு சான்றிதழ்கள் குறிப்பிட்ட காலம் வரை செல்லத்தக்கவையாகும். இந்தப் பதிவுச் சான்றிதழ்கள் 90 நாட்களுக்கும் குறைவான காலத்திற்கு செல்லத்தக்கவையாக இருக்கும் பட்சத்தில், அதனைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- பதிவு சான்றிதழ், புதுப்பித்தல் தொடர்பாக அஞ்சலகங்களுக்கு அனுப்பப்பட்டு இன்றுவரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை திரும்பப் பெற்றுக் கொள்வதுடன் புதியதாக இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- ஏதேனும் உதவி தேவைப்பட்டால், இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள உதவி தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டோ அல்லது lco.das[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது கோரிக்கைகளை அனுப்பி உதவிகளைப் பெற முடியும்.
- விண்ணப்பதாரர்களின் விவரங்கள் ஆன்லைன் வாயிலாக சரிபார்க்கப்பட்டு பதிவுகள் அல்லது புதுப்பித்தலுக்கான சான்றிதழ்கள் உடனடியாக உருவாக்கப்படும் என்பதால், பதிவு மற்றும் புதுப்பித்தல் நடைமுறைகள் வர்த்தகம் புரிதலை எளிதாக்கும் வகையிலான மத்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப அமைந்துள்ளது.
SOURCE : PIB