வீட்டு நுகர்வுப் பொருட்கள் செலவு கணக்கெடுப்பு: 2023-24:
- நாட்டின் முக்கிய மாநிலங்களில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கிடையேயான நுகர்வுப் பொருட்கள் செலவு வேறுபாட்டில் தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டு வருகிறது.
- கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து வித வீடுகளிலும் சராசரியாக மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவு அதிகரித்து வருகிறது.
- நகர்ப்புறம், கிராமப்புறங்களில் இந்தச் சமநிலையற்ற தன்மை குறைந்து வருகிறது.
- மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2022-23, 2023-24 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நடத்த திட்டமிட்டு இருந்த குடும்ப நுகர்வு செலவினங்கள் குறித்த தொடர் கணக்கெடுப்புகளில் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் 2024-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி வெளியிடப்பட்டது.
- முன்னதாக 2022-23-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட விரிவான அறிக்கை 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.
- வீட்டு நுகர்வு செலவுகள் குறித்த கணக்கீடுகள் பொருட்கள் மற்றும் சேவைகளில் குடும்பங்களின் நுகர்வு, செலவு குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணைக் கணக்கிடுவதற்கும் இந்தத் தரவுகள் உதவுகின்றன. சேகரிக்கப்பட்ட தரவுகள் வறுமை, சமத்துவமின்மை, சமூக விலகல் போன்ற அம்சங்களை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது.
2023-24-ம் ஆண்டிற்கான குடும்ப நுகர்வு செலவினம் குறித்த கணக்கெடுப்பின் முக்கிய அம்சங்கள்:
- 2023-24-ம் ஆண்டில் நாட்டில் கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் குடும்ப நுகர்வு மாதாந்திர செலவினத் தொகை சராசரியாக முறையே ரூ.4,122, ரூ.6,996 என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மூலம் குடும்பங்களால் இலவசமாகப் பெறப்பட்ட பொருட்களின் மதிப்புகள் இதில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
- பல்வேறு சமூக நலத் திட்டங்களின் மூலம் இலவசமாகப் பெறப்படும் பொருட்களின் மதிப்புகளைக் கருத்தில் கொண்டு, பார்க்கும்போது இந்த மதிப்பீடுகள் ஊரக, நகர்ப்புறங்களில் முறையே ரூ.4,247, ரூ.7,078 ஆக உள்ளது.
- 2023-24-ம் ஆண்டு மாதாந்திர தனிநபர் குடும்பச் செலவு 9 சதவீதமும், நகர்ப்புறங்களில் 8 சதவீதமும் அதிகரித்துள்ளது.
- மாதாந்திர தனிநபர் குடும்பச் செலவிற்கான நகர்ப்புற-கிராமப்புற இடைவெளி 2011-12-ம் ஆண்டில் 84% ஆக இருந்தது. இது 2022-23-ம் ஆண்டில் 71% ஆகவும், 2023-24-ம் ஆண்டில் 70% ஆகவும் குறைந்துள்ளது.
- 2023-24-ம் ஆண்டில் கிராமப்புற, நகர்ப்புற குடும்பங்களின் உணவுப் பொருட்கள் தொகுப்பில் பானங்கள், சிற்றுண்டிகள், பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவை முக்கிய செலவினமாக உள்ளன.
- போக்குவரத்து வசதி, உடை, படுக்கை, காலணி, இதர பொருட்கள், பொழுதுபோக்கு, நீடித்து உழைக்கும் பொருட்கள் ஆகியவை கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களின் உணவு அல்லாத செலவினங்களில் பெரும்பங்கு வகிக்கின்றன.
- வீட்டு வாடகை, வாகனம் நிறுத்துமிட வாடகை, உணவகம், தங்குமிட கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கிய வாடகைப்பிரிவு சுமார் 7% பங்களிப்புடன் நகர்ப்புற குடும்பங்களின் உணவு அல்லாத செலவினங்களின் மற்றொரு முக்கிய அங்கமாக உள்ளது.
- கிராமப்புற, நகர்ப்புறங்களில் நுகர்வு சமத்துவமின்மை 2022-23-ம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் 2023-24-ம் ஆண்டில் குறைந்துள்ளது.
SOURCE : PIB