காயிதேமில்லத் / KAYITHE MILLATH TNPSC TAMIL NOTES

TNPSC PAYILAGAM
By -
0

 KAYITHE MILLATH TNPSC TAMIL NOTES

(TNPSC TAMIL NEW SYLLABUS STUDY NOTES [ UPDATED ON 2025 ]
தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்)

காயிதேமில்லத் 
.


நாடு முழுவதும் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த காலம் அது. காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்து அதில் இளைஞர்கள் திரளாகக் கலந்து கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது இளைஞர் ஒருவர் திருச்சி தூயவளனார் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தார். காந்தியடிகளின் வேண்டுகோள் அவருக்குள் தீராத விடுதலை வேட்கையை ஏற்படுத்தியது. தமது கல்வியை விட நாட்டின் விடுதலையே மேலானது என்று எண்ணி ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.

எளிமையின் சிகரம்:

அந்த இளைஞர் பிற்காலத்தில் பெரிய அரசியல் தலைவராக வளர்ந்தார். அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்குத் தனி மகிழ்வுந்தில் செல்லமாட்டார். தொடர்வண்டி, பேருந்து போன்ற பொதுப்போக்குவரத்து ஊர்திகளையே பயன்படுத்துவார். அன்பர் ஒருவர் அவருக்கு ஒரு மகிழுந்தைப் பரிசளித்தார். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து எப்போதும்போல் தொடர்வண்டியிலேயே பயணம் செய்தார். அவர் சார்ந்திருந்த இயக்கத்தின் சார்பாக அவருக்கு ஒரு மகிழுந்தும் பெருந்தொகையும் பரிசளிக்கப்பட்டன. அவற்றையும் தாம் தொடங்கி வைத்த கல்லூரியின் பயன்பாட்டிற்கு அளித்துவிட்டார்.

ஆடம்பரம் அற்ற திருமணம்:

அவரது குடும்ப நிகழ்வுகளிலும் எளிமையைக் காணமுடிந்தது. அவர் தம் ஒரே மகனுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தார். அவர் மிகப்பெரிய தலைவர் என்பதால் அவரது இல்லத் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நிகழப்போகிறது என்று எல்லாரும் எண்ணியிருந்தனர். ஆனால் எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாகத் தம் மகனின் திருமணத்தை நடத்தி முடித்தார். பெண் வீட்டாரிடம் மணக்கொடை பெறுவது பெருகியிருந்த அக்காலத்தில் மணக்கொடை பெறாமல் அத்திருமணத்தை நடத்தினார். மேலும் "மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்" என்று வெளிப்படையாக அறிவித்தார்.

நேர்மை :

அந்தத் தலைவர் ஒருமுறை தமது இயக்க அலுவலகத்தில் இருந்த போது அங்கிருந்த பணியாளரை அழைத்தார். அவரிடம் ஓர் உறையையும் பணத்தையும் கொடுத்து, "அஞ்சல்தலை வாங்கி இந்த உறையில் ஒட்டி அஞ்சலில் சேர்த்து விடுங்கள்" என்று கூறினார். அந்தப் பணியாளர் "ஐயா நம் அலுவலகத்திலேயே அஞ்சல்தலைகள் வாங்கி வைத்துள்ளோம், அவற்றிலிருந்து ஒன்றை எடுத்து ஒட்டி விடுகிறேன்" என்றார். அதற்கு அந்தத் தலைவர், "வேண்டாம். இது நான் தனிப்பட்ட முறையில் அனுப்பும் கடிதம். அதற்கு இயக்கப் பணத்தில் இருந்து வாங்கப்பட்ட அஞ்சல்தலைகளைப் பயன்படுத்துவது முறையாகாது" என்று கூறினார்.

மொழிக்கொள்கை:

இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் ஆட்சிமொழியைத் தேர்வு செய்வது தொடர்பான கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. மிகுதியான மக்கள் பேசும் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றனர் சிலர். பழமை வாய்ந்த மொழியை ஆட்சிமொழியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர் வேறு சிலர். ஆனால் அந்தத் தலைவர் "பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழிதான் என்று நான் உறுதியாகச் சொல்வேன். இன்னமும் விரிவாகச் சொல்ல வேண்டும் என்றால் திராவிட மொழிகள்தாம் இந்த மண்ணிலே முதன்முதலாகப் பேசப்பட்ட மொழிகள். அவற்றுள் மிகவும் இலக்கியச் செறிவுகொண்ட தமிழ்மொழி தான் மிகப் பழமையான மொழி. எனவே, தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

நாட்டுப்பற்று:

அந்தத் தலைவரின் உள்ளத்தில் எப்போதும் நாட்டுப்பற்று மேலோங்கி இருந்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 1962 ஆம் ஆண்டு போர் மூண்டது. அப்போது தனது ஒரே மகனைப் போர்முனைக்கு அனுப்ப ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்து அந்தத் தலைவர் அப்போதைய முதன்மை அமைச்சர் ஜவகர்லால் நேருவுக்குக் கடிதம் எழுதினார்.

இத்தகைய சிறப்புகளுக்கெல்லாம் உரிய தலைவர் யார் தெரியுமா?

அவர்தான் கண்ணியமிகு காயிதே மில்லத். அவரது இயற்பெயர் முகம்மது இசுமாயில். ஆனால் மக்கள் அவரை அன்போடு காயிதே மில்லத் என்று அழைத்தனர். 'காயிதே மில்லத்' என்னும் அரபுச் சொல்லுக்குச் சமுதாய வழிகாட்டி என்று பொருள். அப்பெயருக்கேற்ப மக்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தார் அவர்.

தெரிந்து தெளிவோம்:

தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார். 
-- அறிஞர் அண்ணா 

இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்
- தந்தை பெரியார்

அரசியல் பொறுப்புகள்:

காயிதே மில்லத் 1946 முதல் 1952 வரை அப்போதைய சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணியாற்றினார். இந்திய அரசியலமைப்பு உருவாக்கக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். இந்தியா விடுதலை பெற்றபின் மாநிலங்களவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர் எனப் பல பொறுப்புகளில் இருந்து மக்களுக்காகத் தொண்டு செய்தார்.

கல்விப்பணி:

கல்வி ஒன்றுதான் ஒட்டுமொத்தச் சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எண்ணினார் காயிதே மில்லத். "கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை" என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தார். திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி, கேரளாவில் ஃபரூக் கல்லூரி ஆகியவற்றைத் தொடங்க அவரே காரணமாக இருந்தார்.

தொழில்துறை:

அவர் மிகச் சிறந்த தொழில்துறை அறிவுபெற்றிருந்தார். இந்திய நாட்டின் கனிம வளங்களைப் பற்றிப் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார். இதனால் இந்திய அரசு கனிம வளங்களைப் பயன்படுத்தும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. அதன் மூலம் தொழில்துறை வளர்ச்சி அடைந்தது. மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினைப் பெற்றனர்.
தலைவர்கள் பலராலும் பாராட்டப்பட்ட பண்பாளர் அவர். எல்லாரிடமும் வேறுபாடு இல்லாமல் எளிமையாகப் பழகும் தன்மை கொண்டவராக விளங்கினார். தம் வாழ்நாள் முழுவதும் சமய நல்லிணக்கத்தைப் பேணிவந்தார். இத்தகைய சிறப்பு மிக்க தலைவர்களின் பெருமைகளை அறிந்து போற்றுவது நமது கடமையாகும்.



சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காயிதேமில்லத் --------- பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.

அ) தண்மை 
ஆ) எளிமை 
இ) ஆடம்பரம் 
ஈ) பெருமை 
[விடை : ஆ. எளிமை] 

2. 'காயிதேமில்லத்' என்னும் அரபுச்சொல்லுக்குச் --------- என்பது பொருள். 
அ) சுற்றுலா வழிகாட்டி
ஆ) சமுதாய வழிகாட்டி 

இ) சிந்தனையாளர்
ஈ) சட்டவல்லுநர்
[விடை : ஆ. சமுதாய வழிகாட்டி] 

3. விடுதலைப் போராட்டத்தின் போது காயிதேமில்லத் --------- இயக்கத்தில் கலந்து கொண்டார். 
அ) வெள்ளையனே வெளியேறு 
ஆ) உப்புக்காய்ச்சும் 
இ) சுதேசி
ஈ) ஒத்துழையாமை

[விடை : ஈ. ஒத்துழையாமை]

4. காயிதேமில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் ---------- 
அ) சட்டமன்றம்
ஆ) நாடாளுமன்றம் 
இ) ஊராட்சி மன்றம்
ஈ) நகர்மன்றம்
[விடை : ஆ. நாடாளுமன்றம்


KAYITHE MILLATH TNPSC TAMIL NOTES :

1. கண்ணியமிகு தலைவர் யார்? முகமது இஸ்மாயில்
2. காயிதே மில்லத் காந்தியடிகளின் எந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்? ஒத்துழையாமை இயக்கம்
3. காயிதே மில்லத் எந்தக் கல்லூரியில் படித்தார்? திருச்சி தூயவளனார் கல்லூரி
4. காயிதே மில்லத் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு எதைப் பயன்படுத்தினார்? பேருந்து மற்றும் தொடர் வண்டி
5. "மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்" என்று கூறியவர் யார்? காயிதே மில்லத்
6. "பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழிதான் என்று உறுதியாக சொல்வேன்" என்று கூறியவர் யார்? காயிதே மில்லத்
7. இந்தியா விடுதலை பெற்ற பிறகு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று கூறியவர் யார்? காயிதே மில்லத்
8. இந்தியா, சீனா போர் எந்த ஆண்டு நடைபெற்ற ஆண்டு எது? 1962
9. இந்தியா, சீனா போரின் போது இந்தியா பிரதமராக இருந்தவர் யார்? ஜவஹர்லால் நேரு
10. தன் ஒரு மகனை போருக்கு அனுப்ப நேருவுக்கு கடிதம் எழுதியவர் யார்? காயிதே மில்லத்
11. காயிதே மில்லத்தின் இயற்பெயர் என்ன? முகம்மது இசுமாயில்
12. முகமது இஸ்மாயிலை மக்கள் எவ்வாறு அன்புடன் அழைத்தனர்? காயிதே மில்லத்
13. காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லின் பொருள் என்ன? சமுதாய வழிகாட்டி
14. காயிதே மில்லத் சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலம் எது? 1946 முதல் 1952 வரை
15. இந்திய அரசியலமைப்பு உருவாக்க குழுவின் உறுப்பினராக இருந்தவர் யார்? காயிதே மில்லத்
16. தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார் என கூறியவர் யார்? அறிஞர் அண்ணா
17. இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது, அவர் நல்ல உத்தமமான மனிதர் என காயிதே மில்லத்தை பாராட்டியவர் யார்? தந்தை பெரியார்
18. "கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை" என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தவர் யார்? காயிதே மில்லத்
19. திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி, கேரளாவில் ஃபரூக் கல்லூரி ஆகியவற்றை தொடங்க காரணமாக இருந்தவர் யார்? காயிதே மில்லத்
20. காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்குச் ----- என்பது பொருள்? சமுதாய வழிகாட்டி
21. விடுதலைப் போராட்டத்தின்போது காயிதே மில்லத் ----- இயக்கத்தில் கலந்து கொண்டார்? ஒத்துழையாமை
22. காயிதே மில்லத் தமிழ்மொழியை அட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் எது? நாடாளுமன்றம்
23. 'எதிரொலித்தது 'என்னும் சொல்லைப் பிரித்து எழுததுக? எதிர் + ஒலித்தது
24. முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதுக? முதுமொழி



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)