குன்றக்குடி அடிகளார் / KUNDRAKUDI ADIGAL TNPSC NOTES

TNPSC PAYILAGAM
By -
0
KUNDRAKUDI ADIGAL TNPSC NOTES

தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :

தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்:


குன்றக்குடி அடிகளார்:

குன்றக்குடி அடிகளார் (ஜூலை 11, 1925 - ஏப்ரல் 14,1995) (திருக்கயிலாய பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசால தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்) தமிழ்ச் சைவ மெய்யியலாளர். துறவி. தமிழறிஞர். சமூகப்பணியாளராகவும் சைவசமயப் பேச்சாளராகவும் புகழ்பெற்றிருந்தார்.


பிறப்பு, கல்வி

  • பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூர் அருகே உள்ள சிறுகிராமமாகிய நடுத்திட்டு (வைத்தீஸ்வரன் கோயி- திருப்பனந்தாள் சாலையில் உள்ளது) என்னும் சிற்றூரில் சீனிவாசம் பிள்ளைக்கும் சொர்ணத்தம்மாளுக்கும் ஜூலை 11, 1925-ல் கடைசிக்குழந்தையாக குன்றக்குடி அடிகளார் பிறந்தார். இயற்பெயர் அரங்கநாதன். அவருக்கு இரண்டு அண்ணன்களும் ஒரு அக்காவும் இருந்தனர்.
  • குன்றக்குடி அடிகளாரின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்ககலையில் படிப்பதற்காக அவர் குடும்பம் சிதம்பரத்திற்கு இடம்பெயர்ந்தது.சிதம்பரம் அருகே திருவேட்களம் என்னும் ஊரில் வாடகைவீட்டில் வசித்தனர். சீனிவாசம் பிள்ளையும் குடும்பத்தினரும் மாடுகளை வளர்த்து பால் வணிகம் செய்தனர். பல்கலை கழகப் பேராசிரியர்களுக்கு பால் கொண்டுசென்று அளித்தபோது அவர்களிடம் அணுக்கமான குன்றக்குடி அடிகளார் ந. மு. வேங்கடசாமி நாட்டார் ,ரா.பி. சேதுப்பிள்ளை , சுவாமி விபுலானந்தர் ஆகியோரிடம் அணுக்கமாகி தமிழார்வத்தை அடைந்தார்.
  • இளமையில் ரா.பி.சேதுப்பிள்ளை குன்றக்குடி அடிகளாருக்கு பொருளுதவி செய்திருக்கிறார். குன்றக்குடி அடிகளாரின் மரபுவழி நிலங்களை சிலர் பறித்துக்கொண்டதை அறிந்து வழக்கறிஞரான சேதுப்பிள்ளை சட்ட உதவியும் பொருளுதவியும் செய்து அந்த நிலங்களை மீட்டு அளித்தார். விபுலானந்தர் சிற்றூர்களில் அந்தியில் ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கச் செல்லும்போது கைவிளக்கு ஏந்தி உடன்செல்வதை குன்றக்குடி அடிகளார் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
  • குன்றக்குடி அடிகளாரின் தமையன் கோபாலகிருஷ்ணன் புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டி என்னும் ஊரில் தமிழாசிரியப் பணியில் சேர்ந்தார். குன்றக்குடி அடிகளார் அங்கேயே தன் பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். தருமபுரம் மடத்தில் துறவியாக ஆனபின் 1945- 1948-ம் ஆண்டில் தமிழ் கற்று வித்வான் பட்டம் பெற்றார். குன்றக்குடி இளைய ஆதீனமாக பதவி ஏற்றபின் து.ச.துரைசாமிக் குருக்களிடம் சம்ஸ்கிருதமும் ஆகமங்களும் கற்றுக்கொண்டார்.


அடிகளார் பெரியாருடன்

  • பள்ளிப்படிப்பு முடிந்தபின் பணிக்கு முயன்ற குன்றக்குடி அடிகளார் ராணுவத்தில் சேர முயன்றும் உயரம் இல்லாமையால் வாய்ப்பு கிடைக்கவில்லை. பேருந்து நடத்துநர் உரிமம் பெற்றும் வேலை கிடைக்காமல் இராயவரத்தில் காகித உற்பத்தி குடிசைத்தொழிற்கூடத்தில் பணிசெய்தார். ஊனியூர் என்னும் ஊரில் சிறிதுநாள் ஆசிரியப்பணி புரிந்தார். பதினாறு வயதில் தருமபுரம் ஆதீனம் சுப்ரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் தபால்களை அனுப்பும் உதவியாளராக பணி ஏற்றார்.
  • தருமபுரம் ஆதீனம் குன்றக்குடி அடிகளாரை துறவுபூணும்படி வழிகாட்டினார். தன் பதினேழரை வயதில் 1942 இறுதியில் தருமபுரம் ஆதீனத்திடமிருந்து யாத்திரைக்காஷாயம் என்னும் முதல்நிலைத் துறவை பெற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு கந்தசாமிப் பரதேசி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. துறவின் நெறிப்படி குன்றக்குடி அடிகளார் தெற்கே செல்லும்படி தன் ஆசிரியரிடமிருந்து ஆணைபெற்று மதுரை, திருநெல்வேலி, கன்யாகுமரி வரை 47 நாட்கள் நடந்து பிச்சை எடுத்தபடிச் சென்று திரும்பியபின் குருவிடம் மந்திரகாஷாயம் என்னும் அடுத்தநிலை துறவைப் பெற்றுக்கொண்டார். 1945-ல் தருமபுரி அம் ஆதீனத்தின் கட்டளைத் தம்புரான் என்னும் பதவியை அடைந்தார்.
  • திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி மடத்தின் பொறுப்பை ஏற்கவேண்டும் என குன்றக்குடி மடம் கைலாசத்தம்புரான் கேட்டுக்கொண்டதற்கிணங்க தருமபுரம் ஆதீனம் ஆசியுடன் செப்டெம்பர் 5, 1949-ல் குன்றக்குடி மடத்தின் ஆதீனகர்த்தர் திருப்பெருந்திரு ஆறுமுகதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தன் இளவலாக குன்றக்குடி அடிகளாரை நியமித்தார். அவருக்கு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.
  • குன்றக்குடி மடத்தில் 33 மாதங்கள் இளைய ஆதீனமாக இருந்த குன்றக்குடி அடிகளார் அந்த மடத்தின் 44-வது ஆதீனமர்த்தர் திருப்பெருந்திரு ஆறுமுகதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பரிபூரணம் அடைந்தபின் ஜூன் 16, 1952-ல் அந்த மடத்தின் 45-வது குருமகாசன்னிதானமாக பதவி ஏற்றார். அதன் பின் குன்றக்குடி அடிகளார் என்றே அழைக்கப்படலானார்.


அரசியல்

  • பள்ளி நாட்களில் குன்றக்குடி அடிகளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தேவநேசன், இதழாளர் இரா. பத்மநாபன் போன்றவர்கள் முன்னெடுத்த சமபந்தி விருந்து நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த சூ.பழனியப்பா என்பவரிடமிருந்து குடியரசு, விடுதலை இதழ்களை பெற்று வாசிக்கலானர். கடியாப்பட்டியில் இருந்த ஜோதி வாசகசாலையில் நூல்களை வாசித்துவந்த குன்றக்குடி அடிகளார் வ.உ.சி பற்றி பாரதி எழுதிய பாடல்களை அங்கே பாடியமையால் அங்கு நூல்களை வாசிக்கவரக்கூடாதென விலக்கப்பட்டார். ஆகவே நண்பர்களின் உதவியுடன் வினோபா பாவே வாசகசாலை என்ற ஒன்றை ஆரம்பித்தார்.
  • 1948-1949-ல் மாவட்டக் கழகங்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸுக்காக குன்றக்குடி அடிகளார் வாக்கு சேகரித்தார். 1967-ல் நடந்த பொதுத்தேர்தல் வரை நேரடி அரசியல் பணிகளில் ஈடுபட்டார். அதன்பின் விலகிக்கொண்டார்.
  • கம்யூனிஸ்டுக் கட்சித்தலைவர் ப. ஜீவானந்தம் குன்றக்குடி அடிகளாருக்கு அணுக்கமானவராக இருந்தார். 1967-ல் நடைபெற்ற ஜீவானந்தம் மகள் திருமணத்தை ஈ.வெ.ராமசாமிப் பெரியாரும் குன்றக்குடி அடிகளாரும் இணைந்து நடத்திவைத்தனர். அதில் அன்றைய முதலமைச்சர் சி.என்.அண்ணாத்துரை கலந்துகொண்டு வாழ்த்தினார்.
  • 1956-ல் வினோபா பாவே பூதான் இயக்கத்துக்காக தமிழகம் வந்தபோது அவர்களை தமிழக எல்லையில் வரவேற்று அவர்களுடன் இணைந்து குன்றக்குடி அடிகளாரும் பயணம் செய்தார். பூதான இயக்கத்தில் முழுமையாக ஈடுபடும்பொருட்டு குன்றக்குடி ஆதீனப் பொறுப்பை திருநெல்வேலி மாவட்டம் பெருங்குளத்தில் இருந்த செங்கோல் மடத்தின் மடாதிபதியிடம் ஒப்படைத்துவிட்டு செல்ல முடிவுசெய்திருந்தார். ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.


இதழியல்

  • குன்றக்குடி அடிகளார் 1954-ல் மணிமொழி என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை நடத்தினார் . சில ஆண்டுகள் அந்த இதழ் இலக்கிய இதழாக வெளிவந்தது.
  • குன்றக்குடி அடிகளார் 1959 முதல் தமிழகம் என்னும் மாத இதழை தொடங்கினார். இடையில் ஓர் இடைவெளியுடன் அவ்விதழ் 1976 வரை வெளிவந்தது
  • குன்றக்குடி அடிகளார் 1980 முதல் நமது சிந்தனை என்ற இதழை தொடங்கினார். சிந்தனை என அது பெயர் மாற்றம் பெற்றது. மக்கள் சிந்தனை என்ற பெயரில் வெளிவருகிறது
  • தெய்வீகப்பேரவை சார்பில் அருளோசை என்னும் இதழை நடத்தினார்
  • சுதேசி விஞ்ஞான இயக்கம் சார்பில் அறிக அறிவியல் என்னும் இதழை நடத்தினார்


இலக்கியப்பணிகள்

  • 1946-ல் சி.என்.அண்ணாத்துரை திராவிட நாடு இதழில் மா. இராசமாணிக்கனார் எழுதிய பெரியபுராண ஆராய்ச்சி என்னும் நூலுக்கு மறுப்பாக அன்பரது ஆராய்ச்சியும் அறைகூவல்களும் என்னும் கட்டுரை எழுதியிருந்ததை மறுத்து ஜகந்நாதாச்சாரியார் என்பவர் எழுதிய தார்மீக இந்து என்னும் இதழில் அறிஞரின் ஆராய்ச்சியும் விளக்கமும் என்னும் தலைப்பில் தொடர் ஒன்றை எழுதினார். 
  • அதில் பெரியபுராணம் சாதியை வலியுறுத்தும் நூல் என்னும் சி.என்.அண்ணாத்துரையின் கருத்தை மறுத்திருந்தார். தொடர்ச்சியாக பெரியபுராணம், சைவசித்தாந்தம் சார்ந்து ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.


தொகுப்பு

  • குன்றக்குடி அடிகளார் 52 நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் திருக்குறள் தொடர்பான ஆங்கிலநூல், திருக்குறள் உரை, அருள்நெறி முழக்கம் ஆகியவை தவிர்த்து பிற நூல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை என்ற பெயரில் 16 தொகுதிகளாக 6000 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன. 
  • இவற்றின் முதன்மைப் பதிப்பாசிரியர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். தெ. முருகசாமி, நா.சுப்ரமணியம், குன்றக்குடி பெரிய பெருமாள் , க.கதிரேசன், மரு.பரமகுரு ஆகியோர் பதிப்பாசிரியர் குழுவினர்.
  • இத்தொகுதிகளில் முதல் நான்கு தொகுதிகள் திருக்குறள் சார்ந்தவை. இலக்கியம் தொடர்பாக இரண்டு, சமயம் தொடர்பாக மூன்று, சமய இலக்கியம் தொடர்பாக மூன்று, பொதுவகையில் நான்கு என இந்நூல்கள் பகுக்கப்பட்டுள்ளன.


தன்வரலாறு

  • குன்றக்குடி அடிகளார் 1992-ல் தன் வாழ்க்கை வரலாற்றை ‘மண்ணும் மனிதர்களும்’ என்னும் தலைப்பில் ஆனந்தவிகடனில் எழுதினார். அதற்கு முன் 'நடந்ததும் நடக்கவேண்டியதும்' என்னும் நூலை எழுதியிருக்கிறார்.


திருக்குறள் பேரவை

  • 1973-ல் திருக்குறள் பேரவை என்னும் அமைப்பை உருவாக்கி திருக்குறள் பற்றிய ஆய்வரங்குகளை ஒருங்கிணைத்தார்


பேச்சாளர்

  • கட்டளைத்தம்புரானாக இருக்கையிலேயே குன்றக்குடி அடிகளார் பேச்சாளராக அறியப்பட்டார். புலவர் த.குருசாமி 1971-ல் எழுதிய தமிழகம் என்னும் நூலில், சரோஜினி நாயுடு மறைந்தபோது 1949-ல் குன்றக்குடி அடிகளார் ஆற்றிய பேருரையை நினைவுகூர்ந்து எழுதியிருக்கிறார்.
  • குன்றக்குடி அடிகளார் தருமபுர ஆதீனத்தில் கட்டளைத் தம்புரானாக இருந்த காலத்தில் ’தருமிக்கு பொற்கிழி அளித்த வரலாற்றில் குற்றம் செய்தவர் சிவபெருமானா நக்கீரரா?’ என்னும் தலைப்பில், மு.ஆறுமுக தேசிகர் நடுவராக அமர்ந்திருக்க, நக்கீரரை ஆதரித்து முதல் உரையை ஆற்றினார்.


ஆன்மீகப் பணிகள்


அருள்நெறித் திருக்கூட்டம்

  • ஆகஸ்ட் 2, 1952-ல் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் பிள்ளையார் சிலையை உடைக்கும் போராட்டத்தை அறிவித்தபோது அதற்கு எதிர்வினையாக குன்றக்குடி அடிகளார் 11 ஆகஸ்ட் 1952-ல் சமயத்தலைவர்களையும் அறிஞர்களையும் குன்றக்குடியில் கூட்டி அருள்நெறித் திருக்கூட்டம் என்னும் அமைப்பை தொடங்கினார். 
  • மாநிலச் செயலாளர்களாக சா. கணேசன் , ஈரோடு எஸ். மீனாட்சிசுந்தரம் ஆகியோர் பொறுப்பேற்றனர். இந்த அமைப்பு மாநிலம் முழுக்க கிளைகளுடன் நிறுவப்பட்டது. ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் பிள்ளையார் சிலையுடைப்புக்கு எதிராக மிகக்கடுமையான பிரச்சாரத்தை இந்தாஅமைப்பு முன்னெடுத்தது. 
  • சில இடங்களில் பூசல்களும் நிகழ்ந்தன. மம்சாபுரத்தில் குன்றக்குடி அடிகளார் பேசிய கூட்டத்தில் கற்கள் வீசப்பட்டன. 
  • கரூரில் அவருக்கு எதிராக திராவிடர் கழகத்தவர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • அருள்நெறித் திருக்கூட்டம் முதல் மாநாடு தேவகோட்டையில் ஜூலை 10, 1954-ல் நடைபெற்றது. அதில் சி.ராஜகோபாலாச்சாரியார் கொடியேற்றினார். சி.சுப்ரமணியம், அ.ச.ஞானசம்பந்தன் போன்றவர்கள் பேசினர். அருள்நெறித் திருப்பணி மன்றம் என்னும் அமைப்பு இந்த அமைப்பின் கிளையாக ஜூன் 10, 1955-ல் உருவாக்கப்பட்டது.


தமிழ்நாடு தெய்வீகப்பேரவை

  • தமிழக ஆலயங்களை பாதுகாக்கவும், சமயம் பரப்பவும் வெவ்வேறு மதத்தலைவர்கள் மற்றும் ஆதீனங்களை பங்கெடுக்கச்செய்து தமிழ்நாடு தெய்வீகப்பேரவை என்னும் அமைப்பை 1966-ல் குன்றக்குடி அடிகளார் உருவாக்கினார்.


சமூகப்பணிகள்


சமூகசீர்திருத்தம்

  • குன்றக்குடி அடிகளார் மானுடநேய சீர்திருத்தங்களை சமூகவாழ்க்கையில் உருவாக்க விரும்பினார். சாதிவேறுபாடுகளையும், தனிப்பந்தி முறையையும் அவர் ஏற்கவில்லை. மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் ஏறியதில்லை.
  • 1956-ல் குன்றக்குடி அடிகளாரும் ஈ.வெ.ராமசாமிப் பெரியாரும் குன்றக்குடி ஆதீனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் நிகழ்த்திய உரையாடலில் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் மதத்தின் சாதியடிப்படையிலான ஒடுக்குமுறையைச் சுட்டிக்காட்ட, குன்றக்குடி அடிகளார் அதை ஏற்றுக்கொண்டார். 
  • அவர்கள் ஒரு பொதுப்புரிதலுக்கு வந்தனர். குன்றக்குடி அடிகளார் மூடநம்பிக்கை, மனிதாபிமானமற்ற ஆசாரங்கள் ஆகியவற்றுக்கு எதிராகவும் சாதிவேற்றுமைக்கு எதிராகவும் போராடுவதாக ஈ.வெ.ராமசாமி பெரியாரிடம் ஒப்புக்கொண்டார்.


குன்றக்குடி மாதிரி கிராமம்

  • 1973-ல் குன்றக்குடி கிராமத்தை தன்னிறைவுக் கிராமமாக ஆக்கும் திட்டத்தை தொடங்கினார். குன்றக்குடி ஆதீனத்தின் கீழிருந்த கிராமங்களில் தீப்பற்றாத வீடுகளை அமைத்தல், குடிசைத்தொழில்களை உருவாக்கி வேலைவாய்ப்பில் தன்னிறைவுபெறச் செய்தல், குடிநீர் வசதி உருவாக்குதல், கிராமநிர்வாக முறையை செம்மையாக்குதல் ஆகியவற்றில் குன்றக்குடி அடிகளார் முன்மாதிரியான பணிகளைச் செய்திருக்கிறார். அதற்காக கூட்டுறவு சங்கங்களை உருவாக்கினார். 1958-ல் குன்றக்குடியில் உயர்நிலைப் பள்ளியை தொடங்கினார்.
  • குன்றக்குடியை முன்மாதிரி கிராமமாக ஆக்க STAR (Science Technology Agriculture Religion) என்னும் கொள்கை வரைவு ஒன்றை உருவாக்கினார். இந்திய அரசின் திட்டக்குழுவினரால் இந்த திட்டத்தின் வெற்றி ஆராயப்பட்டு முன்மாதிரியாகக் கொள்ளப்பட்டது.
  • ஜூலை 7, 8, 1985-ல் நடைபெற்ற குன்றக்குடி அடிகளாரின் மணிவிழாவில் தேசியக்கொடி, அருள்நெறித் திருக்கூட்டக் கொடி, கூட்டுறவுக் கொடி ஆகியவை ஏற்றப்பட்டன. அதை தன் கொள்கை என குன்றக்குடி அடிகளார் அறிவித்தார்.


மத ஒற்றுமை

  • தமிழகத்தில் மத ஒற்றுமைக்காக தெய்வீகப்பேரவை வழியாக பணியாற்றினார். 1981-ல் இராமநாதபுரம் இனக்கலவரம், 1981-ல் புளியங்குடியில் நடந்த கலவரம், 1982-ல் மண்டைக்காட்டில் நடந்த கலவரம் ஆகியவற்றில் அமைதி திரும்புவதற்காக நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார்.


பொறுப்புகள்


வகித்த பதவிகள்

  • தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு இயக்கத் தலைவர்
  • தமிழ்நாடு திருவருட்பேரவை தலைவர்
  • கிராமத் திட்டக்குழு நெறியாளர்
  • தமிழக மேலவை உறுப்பினர்
  • உறுப்பினராக இருந்த குழுக்கள்
  • இந்திய அரசு சமூகநலக்குழு
  • தமிழக அரசு திட்டக்குழு
  • தமிழக அரசு சமூக பண்பாட்டு கல்வி மறுமலர்க்கிச்க்குழு
  • தமிழநாடு இந்து சமய அறநிலைய துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு
  • தமிழ் பல்கலைக்கழ ஆட்சிக்குழு
  • இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பக்குழு
  • தமிழ்நாடு அரசு மதுவிலக்கு பிரச்சாரக்குழு
  • தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தக்குழு
  • தஞ்சை தமிழ்பல்கலைக்கழகப் பாடத்திட்ட ஆலோசனைக்குழு


விருதுகள்

  • 1986 தமிழக அரசின் முதல் திருவள்ளுவர் விருது
  • 1989 அண்ணாமலை பல்கலை கழகம். கௌரவ டாக்டர் பட்டம்
  • 1991 இந்திய அரசிய்ன் அறிவியல் மற்றும் செய்தித்தொடர்புத்துறை தேசியக்குழு விருது
  • நாட்டுடைமை
  • குன்றக்குடி அடிகளாரின் படைப்புகள் 2007-ல் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.


நூல்கள்

  • அறவழிகாட்டி
  • சமய மறுமலர்ச்சி
  • முத்துமொழிகள்
  • அமுதமொழிகள்
  • சொல்லமுதம்
  • மண்ணும் விண்ணும்
  • ஈழத்துச் சொற்பொழிவுகள்
  • திருவள்ளுவர் காட்டும் அரசு
  • பொங்கல் பரிசு
  • குறள் செல்வம்
  • அடிகளார் உவமைநயம்
  • கவியரங்கில் அடிகளார்
  • பெரியபுராணச் சொற்பொழிவுகள்
  • நாயன்மார் அடிச்சுவட்டில்
  • வாழ்க்கை விளக்கு
  • திருவள்ளுவர் காட்டும் அரசியல்
  • புனிதநெறி
  • திருவள்ளுவர்
  • குறட்செல்வம்
  • வானொலியில் அடிகளார்
  • நமது நிலையில் சமயம் சமுதாயம்
  • மொழிவழிச் சிந்தனைகள்
  • திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி விளக்கம்
  • மனம் ஒரு மாளிகை
  • அப்பர் விருந்து
  • சமய இலக்கியங்கள்
  • சிந்தனைச் செல்வம்
  • தமிழும் சமயமும் சமுதாயமும்
  • பாரதி யுகசந்தி
  • திருவருட் சிந்தனை
  • குறள் நூறு பொருளுரை
  • ஆலயங்கள் சமுதாய மையங்கள்
  • வாக்காளர்களுக்கு வள்ளுவர் அறிவுரைகள்
  • தமிழமுது
  • சைவசித்தாந்தமும் சமயமேம்பாடும்
  • பாரதிதாசனின் உலகம்
  • சிந்தனை மலர்கள்
  • திருக்குறள் பேசுகிறது
  • கடவுளைப் போற்று மனிதனை நினை
  • சமுதாய மறுமலர்ச்சி
  • வாழ்க்கை நலம்
  • சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்
  • சிந்தனைச்சொலை
  • சிலம்பு நெறி
  • எங்கே போகிறோம்?
  • கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்
  • திருவாசகத்தேன்
  • மண்ணும் மனிதர்களும்
  • அப்பர் சுந்தரர் மாணிக்க வாசகர்
  • திருக்குறள் உரை
  • அருள்நெறி முழக்கம்


வாழ்க்கை வரலாறுகள்

  • அருள்நெறித்தந்தை அடிகளார் - பா.சுந்தர்
  • குன்றக்குடி அடிகளாரின் திருக்குறட் பணி - இரா. இளங்குமரனார்
  • குன்றக்குடி அடிகளார் பணிகள் - பா.சுந்தர்
  • அற்புதத்துறவி அடிகளார் - சேதுபதி
  • தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் - சி.நடராசன்
  • அடிகளார் ஓர் உறவுப்பாலம் - நோயல் மி. டாக்டர் பரமகுரு
  • அறிவியல் அடிகளார் - நோயல்.மி
  • தவத்திரு குன்றக்குடி அடிகளார்- தமிழகத்தின் ஆன்மிக வழிகாட்டி; - பொன்னீலன்
  • தவத்திரு குன்றக்குடி அடிகளார் முதலாம் ஆண்டு குருபூசை மலர்
  • குன்றக்குடி அடிகளார் - கிருங்கை சேதுபதி, சாகித்ய அக்காதமி வெளியீடு
  • தவத்திரு குன்றக்குடி அடிகளார் - வன்மீக வெங்கடாசலம்


வரலாற்று இடம்

  • தமிழ் ஆன்மிக வரலாற்றில் தொன்மையான மடம் ஒன்றில் இருந்து அதன் மரபுகளையும் ஆசாரங்களையும் மீறி பொதுத்தொண்டுக்கு வந்த முதல் துறவி என குன்றக்குடி அடிகளார் கருதப்படுகிறார். கடவுள் மறுப்புக்கொள்கை, மார்க்ஸியம் ஆகியவற்றுடன் திறந்த உரையாடலுக்கு முன்வந்தவர். 
  • அவர்களிடமிருந்து சமூகசீர்திருத்த நோக்குகளையும் மனிதாபிமான நோக்கையும் எடுத்துக்கொண்டவர். சமூகசீர்திருத்தம், மதச்சீர்திருத்தம், மத ஒற்றுமை ஆகியவற்றிற்காக களப்பணிகளில் ஈடுபட்டார்.
  • குன்றக்குடி அடிகளாரின் கிராமத்தன்னிறைவு திட்டம் இந்திய அளவில் கவனிக்கப்பட்ட ஒரு முன்மாதிரி முயற்சி.
  • தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராக குன்றக்குடி அடிகளார் கருதப்படுகிறார். ஆன்மிக உரைகளுடன் மரபிலக்கிய பேருரைகளையும் ஆற்றினார். திருக்குறளை சமூகப்பொதுநூலாக முன்னிறுத்துவதில் பெரும் பங்காற்றினார்.


மறைவு

ஏப்ரல் 14, 1995-ல் குன்றக்குடி அடிகளார் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மறைந்தார். அவருக்குப்பின் பொன்னம்பல அடிகளார் குன்றக்குடி மடத்தின் தலைவராக ஆனார்.


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)