- பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகமானது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து, தேசிய பழங்குடியினர் சுகாதார மாநாடு 2025-ஐ புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜனவரி 20 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த மைல்கல் நிகழ்வு இந்தியாவின் பழங்குடி சமூகங்கள் எதிர்கொள்ளும் முக்கியமான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டதாக இந்த மாநாடு அமைந்திருந்தது. இது தார்த்தி ஆபா பழங்குடி கிராம வளர்ச்சி இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சியாகும்.
- புவியியல்ரீதியில் தனிமைப்பட்டிருத்தல், சமூக-பொருளாதார பாதிப்புகள் மற்றும் ஆழமாக வேரூன்றிய கலாச்சார மரபுகள் காரணமாக இந்தியாவின் பழங்குடி சமூகங்கள் பெரும்பாலும் பிரத்யேகமான சுகாதார சவால்களை எதிர்கொள்கின்றன. இந்தக் காரணிகள் சுகாதார அணுகல் மற்றும் விளைவுகளில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகின்றன. இதற்கு சிறப்பு கவனம் மற்றும் தீர்வுகள் தேவைப்படுகின்றன.
- இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு பல்வேறு மாற்றத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2047-க்குள் அரிவாள் செல் ரத்த சோகை நோயை ஒழிப்பதை இலக்காகக் கொண்டு பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட தேசிய அரிவாள் செல் நோய் ஒழிப்பு இயக்கமும் இவற்றில் ஒன்றாகும். இந்த இயக்கத்தை நிறைவு செய்யும் வகையில், பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகமானது பழங்குடியினர் பகுதிகளில் முழுமையான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக இத்திட்டத்தின் கீழ் பல முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
- பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், எய்ம்ஸ் மற்றும் இதர பங்குதாரர்களுடன் இணைந்து பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது:
- பகவான் பிர்சா முண்டா பழங்குடியினர் சுகாதாரம் மற்றும் ரத்தவியல் இருக்கை: தில்லி எய்ம்ஸில் நிறுவப்பட்டுள்ள இந்த இருக்கை, பழங்குடியினர் சுகாதாரம் குறித்த ஆராய்ச்சி மற்றும் தரவு சேகரிப்புக்கான பல்துறை தளமாக செயல்படுகிறது.
- திறன் மையங்கள்: பழங்குடி மக்களிடையே நிலவும் மரபணு நிலைமையான அரிவாள் செல் ரத்த சோகையை நவீன முறையிலும் மற்றும் பிறப்புக்கு முந்தைய நிலையிலும் கண்டறிவதற்காக 14 மாநிலங்களில் 15 திறன் மையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
- கூட்டு அணுகுமுறை: சுகாதார சேவையைத் திறம்பட வழங்குவதை உறுதி செய்வதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் விவசாய அமைச்சகம், மத்திய ஆயுஷ் அமைச்சகம், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், எய்ம்ஸ், சிஓசி, ஐசிஎம்ஆர், ஐநா முகமைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநில பழங்குடியினர் நலத் துறைகள் இணைந்து நெருக்கமாக பணியாற்றி வருகின்றன.
- தேசிய பழங்குடியினர் சுகாதார மாநாடு 2025 - இல் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஆயுஷ், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் ஆகிய அமைச்சகங்களின் அதிகாரிகள், மூத்த மாநில அரசு அதிகாரிகள், என்எச்எம் பிரதிநிதிகள், எய்ம்ஸ் இயக்குநர்கள், பழங்குடி சுகாதார நிபுணர்கள், முதன்மை நிறுவனங்கள், ஐ.நா ஏஜென்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பலவற்றின் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். பழங்குடியினர் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கான கொள்கை தலையீடு, செயல் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பாடத்திட்டத்தை திருத்தும் முயற்சிகளுக்கான முன்னுரிமை பகுதிகளை அடையாளம் காண்பதில் இந்த மாநாடு கவனம் செலுத்தியுள்ளது.
மாநாட்டின் நோக்கங்கள்:
- பழங்குடியினர் பகுதிகளுக்கான புதுமையான சுகாதார சேவை வழங்கல் மாதிரிகளை ஆராய விவாதங்களுக்கு வழிவகை செய்தல்.
- கொள்கை தலையீடுகள் மற்றும் ஆராய்ச்சிக்கான முன்னுரிமை பகுதிகளை அடையாளம் காணுதல்.
- ஆரோக்கியத்தைத் தேடும் நடத்தையை மேம்படுத்த கலாச்சார ரீதியாக பொருத்தமான சுகாதார உத்திகளை உருவாக்குதல்.
- திறன் மேம்பாடு, சமூக ஈடுபாடு மற்றும் கண்காணிப்பு வழிமுறைகள் மூலம் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துதல்.
- பழங்குடியினர் பகுதிகளில் சுகாதார அணுகல் மற்றும் விளைவுகளை மேம்படுத்த ஒரு விரிவான செயல் திட்டத்தை உருவாக்குதல்.
இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில்
- மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சர் திரு ஜுவல் ஓரம், மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் இணையமைச்சர் திரு துர்காதாஸ், பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு விபு நாயர் மற்றும் தில்லி எய்ம்ஸ் இயக்குநர் பேராசிரியர் (டாக்டர்) எம். சீனிவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
SOURCE : PIB