தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :
தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்:
இரசிகமணி டி. கே. சி. (1881 - 1954):
டி. கே. சிதம்பரநாத முதலியார் (T. K. Chidambaranatha Mudaliar, செப்டம்பர் 11, 1881 - பெப்ரவரி 16, 1954) ரசிகமணி டி.கே.சி. என அறியப்படும் இவர் ஒரு வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் தமிழ் இலக்கிய திறனாய்வு முன்னோடி ஆவார்.
வாழ்க்கை:
- திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை தீத்தாரப்ப முதலியார் - மீனாம்பாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்த இவர் தென்காசியில் ஆரம்ப கல்வியும் திருச்சிராப்பள்ளி உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியும் பயின்றார்.
- சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.
- இவரது தாய் மற்றும் இவரது மனைவி பிச்சம்மாளின் பிறந்த ஊரான திருவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள இல்லத்தில் சிறிது காலமும், குற்றாலத்திலும் வாழ்ந்து இருந்தார்.
- 1930 முதல் 1935 வரை சென்னை மாகாண இந்து அறநிலையத்துறை பாதுகாப்பு ஆணையராக பணியாற்றினார்.
இலக்கியப் பணி:
- திருநெல்வேலியில் வண்ணார்பேட்டை சாலைத்தெருவில் உள்ள இவரது வீட்டின் நடு முற்றமாக இருந்த (தொட்டிக்கட்டு) வட்ட வடிவமான அமைப்பில் இவரது நண்பர்கள் மாலை வேளையிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் கூடுவார்கள்.
- இந்தக் கூட்டத்திற்குத் தான் வட்டத்தொட்டி என்ற பெயர் ஏற்பட்டது.
- இவரின் வட்டத்தொட்டி இலக்கிய அமைப்பில் மீ. ப. சோமு, பி. ஸ்ரீநிவாச்சாரி, கல்கி, ரா. பி. சேதுப்பிள்ளை, இராசகோபாலாச்சாரி, அ. சீனிவாச ராகவன், தொ. மு. பாஸ்கர தொண்டைமான், ச. வையாபுரிப்பிள்ளை, வெ. ப. சுப்பிரமணிய முதலியார் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
அரசியல்:
- 1927 ல் சென்னை மாகாணத்தின் சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாநில முதல்வராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஏற்ற முத்திரைச் சின்னமாக திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் பரிந்துரை செய்தார்.
- தமிழ் ஆர்வலர்களால் 'டி.கே.சி.' என்று சுருக்கமாக அழைக்கப் பெறும் ஆளுமையாளர் டி.கே.சிதம்பரநாத முதலியார் (1881--1954).பி.எல். பட்டம் பெற்ற வழக்கறிஞர், சட்ட மன்ற மேலவை உறுப்பினர், இந்து சமய பரிபாலனக் குழுவின் ஆணையர், 'வட்டத்தொட்டி' என்னும் இலக்கிய அமைப்பின் நிறுவனர் 'இதய ஒலி', 'கம்பர் யார்?' முதலான நுால்களின் ஆசிரியர் 'கம்பர் தரும் ராமாயணம்', 'முத்தொள்ளாயிரம்' ஆகிய நுால்களின் பதிப்பாசிரியர் என பல்வேறு சிறப்புகள்- டி.கே.சி.க்கு உண்டு.
எனினும் டி.கே.சி. என்றதுமே நம் நினைவுக்கு முதலில் வந்து நிற்பது அவரது ரசனை உள்ளமும் இயல்பான நகைச்சுவை உணர்வும் தான்!
பிரதமர் நேரு வீட்டிற்கு விருந்தினராக:
- ஒரு முறை டில்லிக்கு டி.கே.சி. சென்றிருந்த போது, பிரதமர் நேரு வீட்டிற்கு விருந்தினராக வரும்படி அழைத்தார்.
- நேருவின் வீட்டிற்கு ஓட்ஸ் சாதம் பொங்கிக் கொண்டு போனார் டி.கே.சி., அதைப் பார்த்த நேரு, “ஓ! நீங்கள் மிகவும் ஆசாரம் போலிருக்கிறதே?” என்று கேட்டார்.“இல்லை, நான் ஆசாரமே இல்லை. எனக்கு எல்லா வகையான ஆகாரங்களும் சாப்பிட வேண்டும் என்றுதான் ஆசை, ஆனால் என் வயிறு இருக்கிறதே, அது தான் ஆசாரம்!” என்றாராம்.
- தம்முடைய சக்கரை நோயைப் பற்றி டி.கே.சி. இங்ஙனம் நகைச்சுவையுடன் வெளியிட்ட பாங்கினை நேருவும் மற்ற விருந்தினர்களும் ரசித்து அனுபவித்துச் சிரித்தார்களாம்.
வட்டத்தொட்டி ரசிகமணியின் ரசிக உள்ளத்திற்குக் கட்டியம் கூறும் சுவையான நிகழ்ச்சி:
- ரசிகமணியின் வீட்டில் விருந்தில் பாயசம் பரிமாறப்பட்டது. ரசிகமணியின் அருகில் அமர்ந்து உணவருந்திய நண்பர் ஒருவர் பாயசத்தை இலையில் விடாமல் ஒரு டம்ளரில் ஊற்றித் தரும் படி கேட்டார். உடனே, ரசிகமணி, “நீங்கள் டம்ளரில் விட்டுச் சிரமப்பட வேண்டாம். புனல் இருக்கிறது. கொண்டு வரச் சொல்லுகிறேன். அதை வாயில் வைத்துக் கொண்டு பாயசத்தை ஊற்றினால் சொட்டுக் கூட நாக்கில் விழாமல் நேரே உள்ளே போய் விடும்” என்று கூறினார்.பாயசம் என்பது கையில் எடுத்துச் சுவைத்துச் சாப்பிட வேண்டிய ஒன்று.
- டி.கே.சி.யின் பார்வையில் பாயசத்தை எப்படி ரசித்துச் சாப்பிட வேண்டுமோ - அனுபவித்துச் சாப்பிட வேண்டுமோ - அது போலத் தான் கவிதையையும் ரசித்து, அனுபவித்து, பாடி இன்புற வேண்டும்.
- டி.கே.சி. மேற்கொண்ட திறனாய்வு முறைக்குப் பெயரே, 'ரசனை முறைத் திறனாய்வு' என்பது தான்! இத்தகைய ரசனை முறை உரையாடல்களை டி.கே.சி. தம் நண்பர்கள் குழாத்தோடு நிகழ்த்திய இடத்திற்கு 'வட்டத்தொட்டி' என்று பெயர்.
பதிலளிக்கும் திறமை எதிர்த்துச் சுடச்சுடப் பதிலளிக்கும் கலையிலும் வல்லமை படைத்தவராக விளங்கினார் ரசிகமணி. இதனை மெய்ப்பிக்கும் உண்மை நிகழ்ச்சி:
- கல்லுாரி விழா ஒன்றிற்கு டி.கே.சி.யை அழைத்திருந்தார்கள். கூட்டத்தில் பக்கத்தில் ஒரு ஸ்காட்லாண்ட் பாதிரியார் உட்கார்ந்திருந்தார். அவரிடம் டி.கே.சி.யை அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.
- பாதிரியாரோ இந்தியர்களைப் பற்றி அவ்வளவு நல்ல எண்ணம் கொண்டவர் அல்லர். அவரிடம் பல பொருள்களைப் பற்றி டி.கே.சி. பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், “ஸ்காட்லாண்ட் தேசத்தவர்களாகிய எங்களுக்கு மரங்கள் என்றால் நிரம்பப் பிரியம். இந்தியர்களாகிய உங்களுக்கு எப்படியோ?” என்று கேட்டார் பாதிரியார்.
- டி.கே.சி. உடனடியாகப் பாதிரியாரிடம் சொன்ன பதில் இதுதான்:“மரங்களிடத்தில் எங்களுக்குப் பிரியம் கிடையாது, பக்தியே செலுத்துகிறோம்” இதற்கு மேலும் ஒரு படி சென்று, “எங்கள் தமிழ்நாட்டிலே ஒவ்வொரு கோயிலும் ஒரு மரத்தைச் சுற்றியே எழுந்திருக்கிறது. அதனையே நாங்கள் தல விருட்சம் என்கிறோம்” என்று விளக்கம் கூறியதைக் கேட்ட ஸ்காட்லாண்ட் பாதிரியார் அரண்டே போனார்.
நகைச்சுவை உணர்வு டி.கே.சி. தம் கண்டனத்தைக் கூட நகைச்சுவையோடு தான் வெளிப்படுத்துவார். அதை எல்லோராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது.
- ஒருமுறை டி.கே.சி. திடீரென்று அருகில் இருந்தவரைப் பார்த்து, “மதுரை எங்கிருக்கிறது தெரியுமா?” என்று கேட்டார்.நண்பர் புரியாமல் விழித்தார்
- அப்பொழுது டி.கே.சி.யே கேள்விக்கான பதிலைச் சொன்னார் “மதுரை லண்டனில் இருக்கிறது!” என்று ஓங்கிய குரலில் சொன்னார்சூழ்ந்திருந்த அனைவரும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருந்த போது, டி.கே.சி.யே அந்த நகைச்சுவைப் புதிரைத் தமக்கே உரிய பாணியில் அவிழ்த்தார்
- “கொஞ்ச நாளைக்கு முன்பாக, மதுரையில் நம்முடைய தமிழ்ப் பெரும் புலவர்கள் ஒன்று கூடினார்கள். கம்பரைப் பற்றியும், கம்ப ராமாயணக் கவிதைகளைப் பற்றியும் பேசினார்கள்...” இப்படிச் சொல்லிச் சிறிது இடைவெளி விட்டு, “அங்குப் பேசியவர்கள் அனைவரும் இங்கிலீஷில் பேசினார்கள்” என்று முடித்தார்.
கடித இலக்கியம்:
- டி.கே.சி.யின் நண்பர் ஒருவரின் மகள், மேற்படிப்புக்கு அமெரிக்கா புறப்படுவதற்கு முன்னால், டி.கே.சி.,யிடம் ஆசி பெற வந்தாள்.
- டி.கே.சி. அவளை இப்படிச் சொல்லி வாழ்த்தினார் “அமெரிக்கா போவது பற்றி ரொம்ப சந்தோஷம். அங்கே உள்ளவற்றை எல்லாம் 'பார்த்து' விட்டு வா; 'படித்து'க் கொண்டு வந்து விடாதே!” கடித இலக்கியம் தமிழ் உலகத்தில் கடித இலக்கியத்தை வளர்த்த பெருமக்களின் வரிசையில் டி.கே.சி.க்கும் ஓர் இன்றியமையாத இடம் உண்டு.
- தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், 'ரஸிகமணி டி.கே.சி.யின் கடிதங்கள்' என்னும் தலைப்பில் 1961-ல் தொகுப்பு நுாலை வெளியிட்டுள்ளார்.
- டி.கே.சி.யின் கடிதங்களில் ஆங்காங்கே மெல்லிய நகைச்சுவை உணர்வு களிநடம் புரிந்து நிற்கும் இடங்கள் உண்டு.
- அருமை நண்பர் ஏ.கே.கோபால பிள்ளைக்கு டி.கே.சி. 01.11.46-ல் எழுதிய கடிதத்தில் ஒரு பகுதி:“பம்பாயில் நான் இருப்பது அதிசயமாய் இருக்கலாம் தங்களுக்கு. உண்மையில் அதிசயந்தான். நானாக இங்கு வரவில்லை. ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரி திருச்சியில் 20.10.46 அன்று நடந்தது. அதற்காக என்னை அழைத்தார்கள். நானும் போனேன். கச்சேரி முடிந்ததும் ரயிலில் துாக்கிப் போட்டார்கள் எம்.எஸ்.ஸும் சதா சிவமும். மறுநாள் காலை 7 மணிக்கு சென்னை சென்றோம். அப்படியே 10 மணிக்கு ஆகாய விமானத்தில் துாக்கிப் போட்டார்கள். சாயங்காலம் 4 மணிக்கு பம்பாயில் இறக்கினார்கள். இதுதான் பம்பாய்க்கு வந்த கதை...”
- மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 'மாந்தருள் ஒரு அன்னப் பறவை' என்னும் நுாலில் டி.கே.சி.யைக் குறித்து எழுதி இருக்கும் வைர வரிகள் இவை:“கவிதைகளை மட்டுமல்ல, வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறது, அனுபவிக்கிறது என்று கற்றுத் தந்தார் அது தான் ரொம்ப விசேஷமாகப் படுகிறது எனக்கு... என்னுடைய சின்ன வயசில் அன்னப் பறவையைப் பற்றிச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
- தண்ணீர் கலந்த பாலில் பாலை மட்டும் உறிஞ்சி உண்டுவிட்டு தண்ணீரை அப்படியே விட்டுவிடுமாம். டி.கே.சி.யும் ஒரு அன்னப் பறவையே. நல்லதுகளையும் சிறந்ததுகளையும் எடுத்துக்கொண்டார். அதைப் பற்றியே பேசினார் பாராட்டினார் தமிழகத்துக்கு இப்படி இன்னொரு அன்னப் பறவை கிடைக்குமா?”ஒன்று மட்டும் உண்மை. உலகில் ரசனையும் நகைச்சுவையும் இருக்கும் வரை 'மாந்தருள் ஒரு அன்னப் பறவை'யாம் டி.கே.சி.யும் நிலைத்து இருப்பார்.