வினைச்சொல்
எந்த ஒரு மொழியிலும் ஒரு தொடருக்கு இன்றியமையாத உறுப்பாகத் திகழ்வது வினைச் சொல்லே. தமிழில் வந்தான். வந்தாள், வந்தார் போன்ற பால்காட்டும் வினைமுற்றுச் சொற்கள் தனியே நின்று தொடர்களாகவும் அமைகின்றன. அத்தோடன்றி இத்தகு சொற்கள், பல இலக்கணக் கூறுகளை உணர்த்தும் ஆற்றல் வாய்ந்தவையாகவும் உள்ளன. சான்றாக, வந்தான் என்பது வருதல் என்ற தொழிலையும், தொழில் செய்தவனையும், தொழில் நிகழ்ந்த காலத்தையும் ஒருசேர உணர்த்தும் சொல்லாகத் திகழ்கின்றது. இவ்வாறு ஒரே வினைச்சொல் பல்வேறு இலக்கணக் கூறுகளை விளக்கி நிற்பதால் சொல் பாகுபாட்டில் அது முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
வினைச்சொல் இலக்கணம்
வினைச்சொல் வேற்றுமை உருபுகளை ஏற்காது; காலம் காட்டும் என்கிறார் தொல்காப்பியர். (தொல். சொல். 200)
வினைச்சொற்களில் காலத்தை வெளிப்படையாகக் காட்டும் சொற்களே அல்லாமல், காலத்தைக் குறிப்பாகக் காட்டும் சொற்களும் வழங்கின.
வினைச்சொல் வகைகள்
வினைச்சொல்லானது வினை, குறிப்பு என இரு வகைப்படும். இவ்விரு சொற்களும் காலம் காட்டும் என்கிறார் தொல்காப்பியர். (தொல். சொல். 203)
வினை, குறிப்பு என்று தொல்காப்பியர் குறிப்பிட்ட இருவகை வினைச்சொற்களைப் பிற்கால இலக்கண ஆசிரியர்கள் முறையே தெரிநிலை வினை, குறிப்பு வினை என்று தெளிவாகக் குறிப்பிடலாயினர். காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை வினை.
(எ.டு) உண்டான் - இறந்தகாலம்
உண்ணாநின்றான் - நிகழ்காலம்
உண்பான் - எதிர்காலம்
பொருளை உணர்த்தும் பெயர், பண்பை உணர்த்தும் பெயர் முதலியவற்றின் அடியாகத் தோன்றிக் காலத்தைக் குறிப்பாகக் காட்டுவது குறிப்பு வினை எனப்படும்.
(எ.டு) பொன் + அன் = பொன்னன்
நல் + அன் = நல்லன்
நல்லன் என்ற குறிப்பு வினை நேற்று நல்லன், இன்று நல்லன், நாளை நல்லன் என்று மூன்று காலத்தையும் குறிப்பாகக் காட்டுவதைக் காணலாம்.
பொருளையோ பண்பையோ உணர்த்தாத அல்லன், இலன், இலர் போன்ற குறிப்பு வினைமுற்றுகளும் உண்டு.