கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்:
- மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் (ஏப். 19) தொடங்கி வைத்தார்.
- கைவினைக் கலைஞர்களுக்காக மத்திய அரசு கொண்டுவந்த விஸ்வகர்மா திட்டம் மாணவர்கள் உயர்கல்வி பயில்வதைத் தடுத்து, குலத் தொழிலை ஊக்குவிப்பதாக குற்றஞ்சாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதற்கு மாற்றாக சமூகப் பாகுபாடு இல்லாமல் அனைத்து கைவினைஞர்களையும் உள்ளடக்கிய 'கலைஞர் கைவினைத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.
- மத்திய அரசின் திட்டத்தில் பெற்றோர் செய்து வரும் தொழிலையே பயனாளி செய்ய வேண்டும் என்றும், கலைஞர் கைவினைத் திட்டத்தில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள கைவினைக் கலைஞர் எந்த ஒரு தொழிலையும் தேர்வு செய்யலாம் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
- மத்திய அரசின் திட்டத்தில் வயது வரம்பு குறைந்தபட்சம் 18-ஆக உள்ள நிலையில், மாநில அரசுத் திட்டத்தில் இளைஞர்களின் உயர்கல்வி பாதிக்காத வகையில் 35 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- விஸ்வகர்மா திட்டத்தில் 18 வகை கைவினைத் தொழில்களுக்கு முதலீட்டு மானியம் இல்லாமல் கடன் வழங்கப்படும் நிலையில், தமிழ்நாடு அரசின் திட்டத்தில் 25 வகை தொழில்களுக்கு 25 சதவீத முதலீட்டு மானியத்துடன் கடன் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
- இந்த திட்டத்தில், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. விஸ்வகர்மா திட்டத்தில் மானியம் கிடையாது
- மத்திய அரசின் திட்டத்தில் கடன் 2 தவணைகளாக வழங்கப்படும் நிலையில் மாநில அரசுத் திட்டத்தில் கடன் ஒரே தவணையாக வழங்கப்படவிருக்கிறது.