வக்ஃப் என்றால் என்ன?
- 'வக்ஃப்' என்ற கருத்து இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் மரபுகளில் அமைந்ததாகும். இது மசூதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் அல்லது பிற பொது நிறுவனங்களைக் கட்டுவது போன்ற தொண்டு அல்லது மத நோக்கங்களுக்காக ஒரு இஸ்லாமியர் தொடங்கிய அறக்கட்டளையைக் குறிக்கிறது.
- ஒரு வக்ஃபின் மற்றொரு வரையறுக்கும் அம்சம் என்னவென்றால், அது பிரிக்க முடியாதது - அதாவது அதை விற்கவோ, பரிசளிக்கவோ, பரம்பரை அல்லது வில்லங்கம் செய்யவோ முடியாது.
வக்ஃப் (திருத்த) மசோதா, 2024:
- வக்ஃப் (திருத்த) மசோதா, 2024, ஆகஸ்ட் 8, 2024 அன்று இந்திய மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.இது முசல்மான் வக்ஃப் சட்டம், 1923 ஐ ரத்து செய்யவும், வக்ஃப் சட்டம், 1995 ஐ திருத்தவும் முயல்கிறது.
நாடாளுமன்றக் கூட்டு குழு (Joint Parliamentary Committee):
- வக்ஃப் (திருத்தம்) மசோதா, 2024ஐ மறுஆய்வு செய்ய 31 உறுப்பினர்களைக் கொண்ட ஜேபிசி நிறுவப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் லோக்சபாவில் இருந்து 21 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் இருந்து 10 உறுப்பினர்களும் இருப்பார்கள். குழுவின் உருவாக்கம் 9 ஆகஸ்ட் 2024 அன்று கிரண் ரிஜிஜுவால்(சிறுபான்மை விவகார அமைச்சர் ) அறிவிக்கப்பட்டது.
- மக்களவையில் கடந்த ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை பாஜக எம்.பி. ஜக தாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தது.
வக்பு திருத்த மசோதா நிறைவேறியது :
- மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். 03.04.2025 அதிகாலை 2 மணியளவில் இந்த மசோதா நிறைவேறியது.
- மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையில் 03.04.2025 தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை நீடித்த விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து வக்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
- இந்த மசோதா ‘உமீது’ மசோதா என பெயர் மாற்றப்படும். (Unified Waqf Management Empowerment, Efficiency and Development (UMEED) Bill).
வக்ஃப் (திருத்த) மசோதாவின் (2025) திருத்தங்கள் என்ன?
- மத்திய வக்பு கவுன்சிலில் உள்ள 22 உறுப்பினர்களில் 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்களை சேர்க்க வேண்டும். மாநில வக்பு கவுன்சிலில் உள்ள 11 உறுப்பினர்களில் 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
- தொடர்ந்து 5 ஆண்டுகளாக முஸ்லிம்களாக உள்ளவர்கள் மட்டுமே தங்கள் சொத்துகளை வக்பு வாரியத்துக்கு தானமாக வழங்க முடியும். 2013-க்கு முன்பு இருந்த நிலை மீட்கப்படும். வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் தொடர்பான புகார்களை வருவாய் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களும் விசாரணை நடத்த முடியும்.
- வக்பு தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும். வக்பு வாரியத்துக்கு நிலம் தானமாக அளிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்த நிலம் சட்டப்பூர்வமானது. வேறு இடத்தில் மசூதி கட்டப்பட்டிருந்தால், அந்த இடம் வக்பு வாரிய சொத்தாக கருதப்படாது.
- வக்பு வாரியத்தில் 2 பெண்கள் மற்றும் இதர மதங்களைச் சேர்ந்த 2 பேர் உறுப்பினராக இணைக்கப்படுவர். தாவூதி போரா உள்ளிட்ட பிரிவினருக்காக தனி வக்பு வாரியம் அமைக்கப்படும். வக்பு சொத்துகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். வக்பு சொத்து விவரங்கள் மாவட்ட வருவாய் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்
- வக்ஃப் தீா்ப்பாயங்கள் வலுப்படுத்தப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட தோ்வு நடைமுறை பராமரிக்கப்படும். வக்ஃப் வாரியங்களுக்கு வக்ஃப் அமைப்புகளால் வழங்கப்படும் கட்டாய பங்களிப்பு 7 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும். ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் வக்ஃப் அமைப்புகள், அரசால் நியமிக்கப்படும் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்படும்.
- மத்திய-மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் இடம்பெறுவா் ஆகிய அம்சங்கள் மசோதாக்களில் இடம்பெற்றுள்ளன.
THE WAQF (AMENDMENT) BILL, 2025: https://www.minorityaffairs.gov.in/WriteReadData/RTF1984/1743661280.pdf